இடையில் ஓய்ந்து போயிருந்த, ‘கற்பு’ பிரச்சினை மீண்டும் சூடு பிடித்திருக்கிறது. பெண்கள் கற்புக்கரசிகளாகவே வாழ வேண்டும். அதுவே தமிழர் பண்பாடு என்று ‘கற்புக்கரசர்கள்’ பலரும் போர்க்கொடி உயர்த்துகிறார்கள். ஆண்களும் கற்புக்கரசர்களாக வாழ்வதே தமிழர் பண்பாடு என்று, பெண்கள் எவரும் போர்க்கொடி தூக்கவில்லை; தூக்கவும் முடியாது; அதற்கு ஊடகங்களிலும் விளம்பரம் கிடைக்காது.

“பெண் ஏன் அடிமையானாள்?” என்ற பெரியாரின் பெண் விடுதலைக்கான நூலுக்கு, பெரியாரே எழுதியுள்ள ‘முகவுரை’யில் ‘கற்பு’ என்று தாம் எழுதியுள்ள அத்தியாயத்தின் நோக்கத்தை, இவ்வாறு தெளிவுபடுத்துகிறார்.

“இப்புத்தகத்தின் முதலாவது அத்தியாமாகிய கற்பு என்னும் விஷயத்தின் முக்கிய கருத்தெல்லாம், மக்கள் ஆண்-பெண் என்ற இரு சாராரில் பெண்களுக்கு மாத்திரமே அது (கற்பு) வலியுறுத்தப்பட்டிருக்கிறது என்றும், இவ் வலியுறுத்தலே பெண்ணை அடிமையாக்குவதற்குப் பெரிதும் காரணமாய் வந்திருக்கிறது என்றும், ஆண்-பெண் இருவரும் சரிசமமான சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என்கிற நிலைமை ஏற்பட வேண்டுமானால், மேற்கண்ட கற்பு என்பதன் அடிப்படையான லட்சியமும், கொள்கையும் மாற்றப்பட்டு அது விஷயத்தில், ஆண்-பெண் இருவருக்கும் ஒன்று போன்ற நீதி ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகும்” - என்று தெளிவாக விளக்கு கிறார்.

இன்றைய சமூக வாழ்வில் ‘ஒருத்திக்கு ஒருவன்’ என்ற கோட்பாட்டை சமூகம் பொதுவாக இயல்பாக ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், எல்லா ‘ஒழுக்க நெறிகளிலும்’ நடக்கும் ‘மீறல்கள்’ இதிலும் நடக்கவே செய்கின்றன. அத்தகைய மீறல்களை அறிவார்ந்த முறையில் அணுக வேண்டும் என்பதே நடிகை குஷ்வு - ‘இந்தியா டுடே’ ஏட்டுக்கு அளித்த பேட்டியின் உள்ளடக்கம்! ‘கற்பொழுக்கத்தை’ இருபாலாருக்கும் பொதுவாக்காமல், பெண்கள் மீது மட்டுமே திணிக்கும் போது, அது பெண்களுக்கு எதிரான அடக்குமுறை ஆயுதமாக, ஆண்களாலும், சமூகத்தாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் ‘கற்பு’ பற்றிய கருதுகோள்களை கேள்விக்குள்ளாக்க வேண்டிய அவசியம், வந்து சேருகிறது. சில தலைவர்கள் கூறி வருவது போல், கையில் ஆணுறையை வைத்துக் கொண்டு ‘எல்லோரும் எவருடனும் உறவு வைத்துக் கொள்ளுங்கள்’ என்று, இங்கு எவரும் பேசவில்லை. பெரியாரே அப்படிக் கூறியதாக, சில துண்டுப் பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதுகூட, தவறான கருத்தாகும்.

“பெண் ஏன் அடிமையானாள்?” எனும் மிகச் சிறந்த ஆய்வு நூலில் ‘கற்பு’ எனும் சொல் பற்றி ஒரு விரிவான ஆய்வையே பெரியார் நடத்தியுள்ளார். ‘கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை’ என்ற விளக்கத்தின்படி, அந்தச் சொல், சொல் தவறாது இருத்தல், நாணயத்தோடும், உண்மையோடும் இருத்தல் என்பதையே குறிக்கிறது என்று கூறும் பெரியார், கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே உரியது என்பதற்கு, என்ன ஆதாரமிருக்கிறது என்ற வினாவை எழுப்புகிறார்.

கற்புக்கு நிகராக ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஆணுக்காகவோ, பெண்ணுக்காகவோ சொல்லப்படாமல், மனித சமூகத்திற்கான பொதுவான வார்த்தைகள் என்று பெரியார் சுட்டிக் காட்டுகிறார். கற்பைப் பெண்ணுக்கு மட்டும் ஏற்றி, அதைப் பொதுவாக்காமல் போனதற்குக் காரணம், வள்ளுவர் உட்பட, பல பழந்தமிழ் இலக்கியங்களை எழுதியவர்கள் எல்லாம் ஆண்களாக இருந்தது தான் என்ற உறுதியான முடிவுக்கு பெரியார் வருகிறார்.

பார்ப்பனியம் தெளிவாக, ‘பதிபக்தி’ கோட்பாட்டை முன்னிறுத்தி, ‘பதிகள்’ ஆண்களின் அடிமைகள் என்று உறுதிப்படுத்திவிட்டது என்று கூறும் பெரியார், ஆண்கள் கற்புடையவர்கள் என்பதைச் சுட்டுவதற்கு நமது மொழியில் தனி வார்த்தைகள் காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்குக் காரணம் ஆண்களின் ஆதிக்கம் தானே என்ற கேள்வியையும் எழுப்புகிறார். பெரியாரின் இந்த சிந்தனைகள் குறித்து - அப்போதே மறுப்புக் கருத்துகள் வந்தன. அந்த மறுப்புக் கருத்துகளை விவாதப் பொருளாக்கி, அதற்கான தனது விளக்கங்களையும் பெரியார் முன் வைத்திருக்கிறார். “பெண் ஏன் அடிமையானாள்?” நூலின் இரண்டாவது அத்தியாயம், முழுதும் இந்த விவாதங்களுக்கான விளக்கமாகவே இருக்கிறது.

சமூகத்தின் வாழ்க்கைப் போக்கு களில் - வாழ்வியலில் மாற்றங்களும் புதிய சிந்தனைகளும் வரத்தான் செய்யும். இளம் விதவைகள் வீட்டின் மூலைகளில் உட்கார வைக்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது. கணவனை தாசி வீட்டுக்குச் சுமந்து சென்ற பத்தினிகளின் கதைகள் ‘புனிதமாக’ முன்மொழியப்பட்டன. மணவிலக்கு பெறுதல் என்பது சமூக அவமானமாகக் கருதப்பட்டது.

இன்று, சமூகம், அந்த சிந்தனைகளை படிப்படியாகப் புறந்தள்ளி வருகிறது. விதவை மறுமணம் - மணவிலக்கு பெற்றவர் மீண்டும் திருமணம் - என்பதெல்லாம், சட்டப்படி செல்லும் என்றாகிவிட்ட பிறகு, ‘ஒருவனுக்கு ஒருத்தி’ ‘கற்பு’ என்ற கருத்தாக்கத்தின் இறுக்கம் தளரத் தொடங்கிவிட்டது. இதைத் தான், திருப்பூர் தமிழர் எழுச்சி விழாவில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

சமூகத்தில் - இவையெல்லாம் ஆரோக்கியமான விவாதங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டிய பிரச்சினைகள். இதற்கு உணர்ச்சி முலாம் பூசி, வீதிகளில் செருப்பையும், துடைப்பத்தையும் ஏந்திப் போவதும், ‘புனிதங்களுக்கு’ எதிரான கருத்துகளையே பேசக் கூடாது என்பதும், சமூக பாசிசத்துக்கு வித்தூன்றுவதாகிவிடும். ஒரு வழியாக முடிவுக்கு வந்த ‘குஷ்பு’ பிரச்சினையை மீண்டும் உணர்ச்சிப் பொருளாக்கியதில் நடிகை சுகாசினிக்குப் பங்கு உண்டு. குஷ்புப் பிரச்சனை இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே என்று ஏமாற்றமடைந்து போன ‘ஊடக உலகம்’ சுகாசினிப் பேச்சுக்குப் பிறகு “சிலிர்த்தெழுந்து” மீண்டும் தங்கள் வியாபாரத்தை சுறுசுறுப்புடன் ஆரம்பித்துவிட்டன!

“வேலைக்குப் போகும் பெண்கள் எல்லாம், ஒழுக்கமில்லாதவர்கள்” என்று, காஞ்சி ஜெயேந்திரன் கூறியபோது, இந்தப் பத்திரிகைகள் அதைக் கண்டித்து, ஒரு வார்த்தை எழுதவில்லையே! துடைப்பங்களும், செருப்புகளும், வீதிக்கு வரவில்லையே! டென்னிஸ் வீராங்கனை சானியாவின் குட்டைப் பாவாடை மேலே எப்போது உயரும் என்று காத்திருந்து, ‘கிளிக்’ செய்து அதைப் படங்களாக வெளியிடும் பத்திரிகைகள், இப்போது ‘கலாச்சாரக் காவலர்களாக’ தங்களை அடையாளம் காட்டமுன் வந்திருப்பது தான் வேடிக்கை; வெட்கக் கேடு!

சுகாசினி  ஒட்டு மொத்த தமிழர்களின் பிரதிநிதியாக  தன்னை முன்னிறுத்திக் கொண்டு ‘குஷ்பு’வைக் காப்பாற்றப் போய், அவரையும் சிக்கலில் சிக்க வைத்து, தானும் மாட்டிக் கொண்டுவிட்டதைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். “அவன் போனால் தகராறு செய்வான்; அவன் வேண்டாம் நான் போய் செருப்பாலடித்துவிட்டு வருகிறேன்” என்று பெரியார் சொன்ன உதாரணம் தான் இப்போது நினைவுக்கு வருகிறது. சுகாசினிகள் - இதுவரை தமிழர்களுக்காக எந்தக் களத்திலும் தமிழர் உரிமைக்குக்குக் குரல் கொடுத்ததாகப் பதிவுகள் இல்லை. தமிழ்நாட்டில் பிறந்து விட்டதாலேயே அவர் தமிழர்களின் பிரதிநிதியாகிவிட்டார் போலும்! “தமிழர்கள் என்றால், அவர்களுக்குக் கொம்பு முளைத்திருக்கிறதா?” என்பதும், ‘என்னைக் கேட்டால் கிழித்தெறிந்திருப்பேன்’ என்பதும் பொறுப்பற்ற கண்டிக்கத்தக்க வீண் சவாடல்கள். கருத்துரிமை என்பது வேறு, மற்றவர்களைப் புண்படுத்திப் பேசுவது என்பது வேறு!

நாட்டில் இப்போது ‘சினிமாக்காரர்கள்’ பேசுவதைத்தான், ஊடகங்கள் கருத்துகளாகவே அங்கிகரிக்கத் துவங்கியிருக்கின்றன. திரைப்படம் என்ற வட்டத்துக்குள்ளேயே தமிழர் பிரச்சினைகள் பண்பாடுகள் கருத்துரிமைப் போர்க்களங்கள் எல்லாவற்றையுமே அடக்கப் பார்ப்பது மக்களுக்கு இழைக்கும் மகத்தான துரோகம்! ஊடகங்களின் இந்த சதியை மக்கள் புரிந்து கொண்டு விழித்துக் கொள்ள வேண்டும்; தமிழ் அமைப்புகளுக்கும் சேர்த்தே கூறுகிறோம்.