படிப்பது ஒரு இனிமையான அனுபவம்

பெற்றோர் தூண்டுதலாலும், ஆசிரியர்களின் தூண்டுதலாலும் படிக்கும் ஆர்வம் ஒருவருக்கு ஏற்படுவது நல்ல விஷயம் தான். ஆனால் அது தூண்டுதல், வழிகாட்டுதல் என்ற எல்லைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டுமே ஒழிய, எல்லை தாண்டி நிர்பந்தம் என்றாகி விடக்கூடாது. குழந்தைகளை நிர்பந்தப்படுத்தி புத்தகத்தை படிக்க வைப்பதற்கும் பட்டாம் பூச்சியைப் பிடித்து தேனுக்குள் முக்கியெடுப்பதற்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை.

அது அவர்களுக்கு இயல்பான சுவையான அனுபவமாக இருக்க வேண்டும். ஒரு சிட்டுக் குருவியைப் பார்ப்பது போல, விளையாட்டைப் போல குதூகலம் தரும் அனுபவமாக புத்தகம் படிப்பது இருக்க வேண்டும்.

நமக்குப் பிடித்தமான விஷயங்களைச் செய்யும் போது அது மிக விரைவிலேயே பழக்கமாகிவிடுகிறது, அதே போல சுவையான புத்தகங்களைப் படிக்கும் போது படிப்பது விரைவிலேயே பழக்கமாகிவிடும். பின், எந்த சூழ்நிலையிலும் இனிமையோடு படிப்பது இயல்பாகிவிடும். செய்து கொண்டிருக்கும் வேலையிலிருந்து ஓய்வு தேவைப்படும் போது படிப்பதே ஓய்வு தரும் ஒன்றாக ஆகிவிடும். தனிமையில் துணையாகவும் தனிமை விரும்பிகளுக்கு அந்தத் தனிமையை அர்த்தப்படுத்தும் ஒன்றாகவும் புத்தகங்கள் உள்ளன.

எந்தப் புத்தகங்களைப் படிக்க வேண்டும்?

புத்தகங்கள் வாசகனை புதியதொரு உலகத்துள் உலவ விடுகிறது. அதில் தான் அறிந்துணர்ந்த, அனுபவத்தில் உணர்ந்த சேதிகளை அக்கறையோடு அறிமுகம் செய்யவும் அதனோடு உறவாடவும் வைக்கிறது. சில சமயம் அது வாசகனின் மனதில் ஒரு கேள்வியை விதைத்து அதில் பதிலை விளைவிக்கச் செய்து அதிலிருந்து இன்னொரு கேள்வியை முளைக்கச் செய்து அதற்கு பதில் காண வைத்து என்று ஒரு தொடர் தேடலுக்கு வழிகாணச் செய்கிறது.

புத்தகங்கள் ஒருவனுக்குத்தான் வாழும் உலகை அறிமுகம் செய்கிறது. தன்னோடு தன்னை விட்டு மிகத் தொலைவில் வாழும் மனிதர்களை அவர்கள் புறவுலகை, அகவுலகை படம்பிடித்து விழிமுன் உலவ விடுகிறது.

புதுமைப்பித்தன் ‘நமது இலக்கியம்’ எனும் நூலின் முன்னுரையில் எழுதியதை இங்கு கூறுவது பொருத்தமாக இருக்கும்.

"மனிதனுக்கும் புறவுலகுக்கும் உள்ள தொடர்பை அல்லது தொடர்பின்மையை மனிதக் கண்கொண்டு பார்ப்பது இலக்கியம்''. புதுமைப்பித்தனின் இந்த வார்த்தைகள் இலக்கியத்தின் அடிப்படையை முன் வைக்கிறது. அதுவே இலக்கியங்கள், என்ன விதமான அனுபவங்களை அறிவை வாசகனுக்குத் தருகிறது என்பதையும், ஏன் இலக்கியங்களை, புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்பதற்கான விடையாக அமைந்து விடுகிறது.

புத்தகங்கள் பலவிதம்

தினமும் உலகில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வெளியாகின்றன. அவற்றில் பிரபலமாகப் பேசப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை குறைவு. பிரபலமான இந்த புத்தகங்கள் லட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைகின்றன. இவற்றின் ஆயுளும் அதிகம். ஒரு பாக்கெட் நாவலின் ஆயுள் ஒருவாரமென்றால் பிரபலான புத்தகங்கள் பல ஆண்கள் வாசகர்கள் மனதை கவர்ந்து வருகின்றன.

இன்றும் சில புத்தகங்கள் உள்ளன. அவை உலகின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உலகின் போக்கையே மாற்றியமைத்து விடுகின்றன. உதாரணமாக காரல் மார்க்ஸின் மூலதனம் எனும் நூல் வெளியான பின் உலகில் கம்யூனிசம் எனும் புதிய அரசியல் போக்கே தொடங்கியது. இந்த வகையில் இவற்றை உலகை மாற்றிய புத்தகங்கள் என்று சொல்லலாம். இவற்றில் பெரும்பான்மையானவை அக்கருத்துக்களின் சொந்தக்காரர்களான சிந்தனையாளர்களே எழுதியவை என்பது குறிப்பிடத்தக்கது. சில நூல்கள் மட்டுமே சிந்தனையாளர்களின் கருத்துக்களை தொகுத்து பிறர் எழுதியது. 

ஏப்ரல் 23 புத்தக தினம்.
Pin It