(கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மார்ச் 31 ஆம் தேதி நடந்த கழகக் கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து:)

எம்.ஆர்.இராதா நாடக உலகில் முழுக்க முழுக்க பெரியார் கருத்துகளைப் பற்றி மட்டுமே பேசியவர். சினிமாவை விரும்பியவர் அல்ல. 1937 முதல் 1942 வரை சினிமாவில் நடித்து, சினிமா வேண்டாம் என்று நாடகம் நடிக்க வந்தவர்.

பன்னிரண்டு ஆண்டு களுக்குப் பிறகு, ‘இரத்தக் கண்ணீர்’ நாடகத்தை சினிமாவாக எடுக்க வேண்டும் என்று, பி.ஏ. பெருமாள் கேட்ட பிறகு சினிமாவில் நடிக்க வருகிறார். அப்போதுகூட, “நான் தினமும் நாடகம் நடிப்பேன், நேரம் இருக்கும்போது மட்டும் தான் படப்பிடிப்பிற்கு வருவேன், என்னை தொல்லை கொடுக்கக் கூடாது” என்று சொல்வாராம். இன்னொன்று ‘இரத்தக் கண்ணீர்’ நாடகத்தில் தன் மனைவியை நண்பனுக்கு திருமணம் செய்து வைக்கும் காட்சியை எந்த காரணத்தைக் கொண்டும் நீக்கிவிடக் கூடாது என்பது எம்.ஆர்.இராதாவின் மற்றொரு கோரிக்கை. அவர் நாடகத்தை துவக்கும் போதெல் லாம் பெரியார் படத்தையும், திராவிடர் கழகக் கொடியையும் காண்பித்துவிட்டு, “வளமார் திராவிட நாடு” என்ற பாடலை பாடிவிட்டு, துவங்குவதும், அரிவாள் சுத்தியலோடு பெண்கள் நிற்கும் காட்சி, உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்ற முழக்கங்களோடும் தான் அவர் நாடகங்களை நடத்தினார். விதவை மறுமணத்தை வைத்து, பல நாடகங்கள் நடத்தி வந்த இவர், முழுமையாக இயக்கத்திற்கு வந்து இணைந்த பின்னால் நடித்த முதல் நாடகம் சி.பி. சிற்றரசு எழுதிய ‘போர்வாள்’. அதன் பின்னால் கலைஞர் எழுதிய ‘தூக்குமேடை’. அதன் பிறகு திருவாரூர் தங்கராசு எழுதிய ‘இரத்தக் கண்ணீர்’. இவருக்கு மிகவும் புகழ் வாங்கிக் கொடுத்த நாடகம் ‘இரத்தக் கண்ணீர் (சுமார் மூன்றாயிரத் திற்கும் அதிகமான முறை நடத்தப்பட்டுள்ளது.

அதன் பின்னர், பெரியார் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவுடன், திருவாரூர் தங்கராசு, இராமாயண நாடகம் என்ற நாடகத்தை எழுதினார். 1954 நவம்பர் மாதத்தில் நாடகத்தை அரங்கேற்று கிறார். நிறைய எதிர்ப்புகள் உண்டாகி, டிசம்பர் மாதத் தில் நாடக கட்டுப்பாட்டு சட்டத்தைக் கொண்டு வந்து விட்டார்கள். (குறிப்பு: இந்த சட்டத்தை எதிர்த்துத்தான் கடந்த வாரம் எழுத்தாளர் ஞாநி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்-ஆர்.) இந்தச் சட்டம் கொண்டு வந்தவுடன், பெரியார் மேலும் தீவிரமாக, சென்னையில் மட்டுமே முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் இராமாயணம் பற்றி மட்டுமே பிரச்சாரம் செய்கிறார். இந்த சட்டம் வந்தவுடன் ஜீவானந்தம் சட்டசபையில் பேசினார். ஆனால், பெரியார் இயக்கத்தில் இருந்து விலகிய வர்கள் எல்லாம் எப்படி மாறிப் போனார்கள் தெரியுமா? பாலசுப்ரமணியம், திருவாசக மணி யானார். பெரியார் கத்தி வைத்துக் கொள்ளுங்கள் என்ற போது, அண்ணா, ‘கத்தியைத் தீட்டாதே! தம்பி! புத்தியைத் தீட்டு!’ என்றார்.

ஜீவா, சுயமரியாதை இயக்கத்திலிருந்து விலகியவுடன், கம்ப இராமா யணச் சுவைகளைப் பற்றிப் பேசத் தொடங்கினார். பெரியார் மீது உள்ள கோபத்தை இயக்கத்தின் மீது, கொள்கைகள் மீது காட்டினார்கள். ஜீவா இராமாயண பிரச்சாரத்தை செய்தார் என்றாலும், நாடக தடை சட்டம் வந்தபோது, “நீ போய் கண்ணாடியில் பார்க்கும்போது, உன் முகம் அசிங்கமாக இருந்தால் கண்ணாடியை உடைப்பது என்ன நியாயம்? அதுபோலவே இராமாயணத்தில் இருப்பதை இராதா நாடகமாக காட்டுகிறார். அதை எதற்கு தடை செய்கிறீர்கள்” என்று இராதாவிற்கு ஆதரவாக ஜீவா ஒருவர் மட்டும் பேசினார். ஆனாலும் சட்டம் கொண்டு வந்தார்கள். அதன் பின்னரே பெரியாரும், திராவிடர் கழகமும் மிக வேகமாக இராமாயணத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார்கள். இதன் தொடர்ச்சியாகத்தான் 1956 இல் இராமாயணத்தை – இராமன் படத்தை எரிப்பேன் என்று பெரியார் சொன்னார். அப்போதுதான் குன்றக்குடி அடிகள், வரதராஜுலு நாயுடு போன்றவர்கள் எல்லாம் பெரியாருக்கு கடிதம் எழுதினார்கள், எரிக்காதீர்கள் என்று.

பெரியார் நடத்திய பல போராட்டங்களில், இரண்டு போராட்டங்கள் மட்டும்தான் நாத்திக போராட்டம். அதில் ஒன்று பிள்ளையார் சிலை உடைப்பு. மற்றொன்று இராமர் பட எரிப்பு. கடைசியாக அவர் அறிவித்த போராட்டம் பக்தர்களுக்கு மட்டுமேயான போராட்டம் அது. அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகராகும் உரிமை கோரும் கோவில் கருவறை நுழைவு போராட்டம். மற்ற அனைத்துப் போராட்டங்களும் அனைத்து மக்களுக்கான போராட்டங்களே!

புத்தர் பிறந்த நாள் அன்று விநாயகர் சிலையை உடையுங்கள் என்று சொன்னார். ஒன்றுக்கு மாற்றாக இன்னொன்றை சொன்னார். புத்தர் அரச மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தபோது, அறிவு தெளிவு பெற்றார். இதை போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றார் என்று சொல்கிறார்கள். அரச மரம் என்பது புத்தருக்கு அடையாள சின்னம். இலங்கையில் இன்றுகூட அரச மரங்கள் தான் தேசிய மரங்களாக பாதுகாக்கப்படு கின்றன. அனுராதாபுரத்தில் ஒரு வெள்ளரச மரம் இருக்கின்றது. அந்த மரத்தடிக்கு தான் புத்தர் வந்தார். என்று ஒரு கதையை வைத்துக் கொண்டு, (புத்தர் அங்கு போகவே இல்லை. அசோகனின் மகள் சங்கமித்திரை இலங்கைக்கு புத்த மதத்தைப் பரப்ப சென்றிருந்தபோது நட்டதாய் இருக்கலாம்) அந்த இடத்தை பாதுகாத்து வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். இந்து மதத்திற்கு எதிரான மதம்தான் புத்த மதம். புத்தரை மறக்கடிப்பதற்காக, அரசமரத்தடியில் எல்லாம் விநாயகர் சிலையை வைத்தார்கள். (வி-நாயகர் என்றால் நல்ல தலைவர் எனறு பொருள். புத்தருக்கு இப்படி ஒரு பெயரும் உண்டு) எனவே புத்தர் பிறந்த நாளில் விநாயகர் சிலையை உடைப்பதாக பெரியார் சொன்னார்.

இராஜாஜி, புதிய கல்வி (குலக் கல்வி) திட்டத்தைக் கொண்டு வந்தபோது, அதை எதிர்த்து ஈரோட்டில் பெரியார், குலக் கல்வி எதிர்ப்பு மாநாடு நடத்தினார். அந்த மாநாட்டின் இரண்டாம் நாள் புத்தர் மாநாடு. ஆரியருக்கும், ஆரியர்கள் செய்கிற குழப்பங்களுக்கும் எதிராக, பெரியார் ஒவ்வொரு முறை போராடுகிற போதும்கூட புத்தரை நினைவூட்டியது போலத்தான். புத்தரின் 2500 ஆவது பிறந்த நாள் அன்று (1956) இராமர் படஎரிப்பை அறிவிக்கிறார். அப்போது தான் குன்றக்குடி அடிகள், வரதராஜுலு நாயுடு போன்றவர்கள் எல்லாம் பெரியாருக்கு கடிதம் எழுது கிறார்கள். அதற்கு பெரியார் பதில் எழுதுகிறார்… “நீங்கள் எரிக்க வேண்டாம் என்கிறீர்கள் சரி, நட்பை யும், பழக்கத்தையும் காட்டி எரிக்க வேண்டாம் என்று சொல்கிறீர்களே தவிர, நான் சொன்ன காரணம் தவறு என்று சொல்லுங்கள். அன்போடு சொல்லாமல், அறிவோடு ஆதாரத்தோடு சொல் லுங்கள். எரிக்காமல் விட்டுவிடுகிறேன். இல்லை என்றால் என்னை மன்னித்துவிடுங்கள். நான் எரிப் பேன்” என்று. (எரிக்காமல் நிறுத்திக் கொண்டதாக, கலைஞர் பேசி உள்ளார், உண்மையில் பெரியார் எரித்தார்) பெரியார் போராட்டத்திற்கு எடுத்த அந்த இராமன் மற்றும் விநாயகர் ஆகிய இரண்டு கடவுள்கள்தான் இந்தியாவில் வரும் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம்.

1938 இல் ஆட்சியை விட்டு இறங்கியதும் இராஜ கோபாலாச்சாரியார் மகாபாரதத்தை ‘வியாசர் விருந்து’ என்றும் எழுதினார். 1953 இல் இராஜாஜி ஆட்சியை விட்டுப் போனார். (பார்ப்பனர்களே நமக்கு ஆபத்து வருகிற போதெல்லாம் இராமா யணத்தைப் புரட்டிப் பாருங்கள், வழி கிடைக்கும் என்று அடிக்கடிக் கூறுவார்) அதன் பிறகு, இராமாயணத்தை ‘சக்ரவர்த்தி திருமகன்’ என்றும் எழுதினார். இராஜாஜி என்பதற்குப் போட்டியாக ‘மூக்காஜி’என்ற புனை பெயரில், ‘சக்ரவர்த்தியின் திருமகன்’ என்ற தலைப்பில், கருணாநிதி அவர்கள் கட்டுரை எழுதினார். (10.8.1954, 28.5.1954 ஆகிய தேதிகளில் கலைஞர் எழுதிய இரண்டு கட்டுரைகள், நம் கழகம் சார்பாக வெளியிடப்பட்ட ‘சங்பரிவாரின் சதி வரலாறு’ என்ற நூலில்கூட இடம் பெற்றுள்ளது. திராவிடர் கழகத்தை விட்டுப் போனபின்புகூட தி.மு.க.வினர் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தார்கள் என்பதற்காக சொல்கிறேன். (தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் வரை) ‘முரசொலி’யில் வந்த அந்த கட்டுரைகள் 1956 இல் வேலூர் திராவிடன் பதிப்பகம் சார்பாக புத்தகமாக வெளிவந்துள்ளது.

திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கிய தொடக்க விழாவின்போது, “நாங்கள் ஆரியர், திராவிடரென்றெல்லாம் பிரித்து பார்ப்பவர்கள் அல்ல. ‘திராவிட’ என்ற சொல்லில் ‘ர்’ இல்லை. எனவே இது மக்களை குறிக்கும் சொல் அல்ல. மண்ணைக் குறிக்கும் சொல்” என்று சொன்னார்கள். பெரியார் பார்ப்பன எதிர்ப்பு பேசியதற்கு பதிலாக அண்ணா அவர்கள், வடவர் எதிர்ப்பு பேசினார். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று முழக்கத்தை மாற்றினார். அதன் பிறகு நாங்கள் பார்ப்பனர்களை எதிர்க்கவில்லை. பார்ப்பனி யத்தைத்தான் எதிர்க்கிறோம். எனவே பார்ப்பனர் களும் சேரலாம் என்று 52-53 வாக்கில், தி.மு.க.வில் சேரும் விதியில் ஒரு திருத்தம் கொண்டு வந்தார்கள். (தலைமை செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது)

‘தனியரசு’ என்ற நாளேட்டை ஏ.வி.பி. ஆசைத் தம்பி (தி.மு.க.வின் முன்னணித் தலைவர், சுயமரி யாதை இயக்க உணர்வாளர்) நடத்தி வந்தார். “பார்ப் பனர்களை கட்சியில் உறுப்பினராக சேர்க்கலாம். தி.மு.க. செயற்குழுவில் முடிவு, அண்ணா அறிக்கை என்று செய்தியை அப்படியே போட்டு அண்ணா அவர்களின் படத்தை தலைகீழாக வெளியிட்டார். அதற்காக அவர் கட்சியில் இருந்து ஒரு வருடத்திற்கு நீக்கி வைக்கப்பட்டார். (தொடரும்)

Pin It