தலித் மக்களை அடக்க முயலாதீர் என்று பிற்படுத்தப்பட்டோருக்கு வேண்டுகோள் விடுத்து, கழகத்தின் பரப்புரை இயக்கம் தொடருகிறது: 15.4.2012 அன்று மேலூர், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், 16.4.2012 அன்று செக் கானூரணி, சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளிலும், 17.4.2012 அன்று தேனி, பெரியகுளம், வத்தலகுண்டு, ஆத்தூர் ஆகிய பகுதிகளிலும் பரப்புரை நடத்தப்பட்டது. 18.4.2012 அன்று சின்னாளப்பட்டி, கோபால்பட்டி, நத்தம் ஆகிய பகுதிகளிலும், 1.4.2012 அன்று திருவெறும்பூர், காட்டூர் ஆகிய பகுதிகளிலும், 20.4.2012 அன்று இலால்குடி, பூவாளூர், கீழப்பளூர், அரியலூர் ஆகிய பகுதிகளிலும், 21.4.2012 அன்று குன்னம், பேரளி, பெரம்பலூர் காந்தி சிலை, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளிலும் பரப் புரைகள் நடைபெற்றன. திருச்சி மாவட்டத்தில் பரப்புரை நடந்த இரண்டு நாட்கள் மூத்த பெரியார் தொண்டர் ஆசிட் தியாகராசன், பயணக் குழுவின ரோடு பயணம் செய்து, பரப்புரையை பாராட்டினார். அதேபோல் இலால்குடி முத்துச்செழியன், பயணக் குழுவை சந்தித்து, தனது பாராட்டுகளையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டார்.

பரப்புரை வாகனத்தில் சுற்றிலும், இசையில் சாதி, வாழ்விடங்களில் சாதி, சுடுகாட்டில் சாதி, உணவில் சாதி, நடனத்தில் சாதி என்று பிரித்து வைத்திருப்பதை படங்கள் மூலமாக பார்க்கும் பொது மக்கள் எளிதாக புரிந்து கொண்டு, சிறப்பான பணியை செய்கிறீர்கள் என்று பாராட்டிச் செல்கிறார்கள். பயணக் குழு தோழர்களிடம் பெரியார் இல்லாவிட்டால் நாங்கள் இந்த அளவிற்கு முன்னேறி இருக்க முடியாது என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். தேனி, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் கழகத் தோழர்கள் பயணக் குழுவை வரவேற்று தேவையான உதவிகளை செய்தனர். அரியலூர் பேருந்து நிலையம் அருகே கழகத் தோழர்கள் தனியாக, ஒலி பெருக்கி மற்றும் மின் விளக்குகள் அமைத்து பொதுக் கூட்ட நிகழ்வாக ஏற்பாடு செய்தனர். இப்பொதுக் கூட்டத்தில், அரியலூர் மாவட்ட கழகத் தலைவர் பகுத்தறி வாளன், ராஜ்குமார், அரியலூர் பகுதி சாதியத்திற்கு எதிரான அமைப்பைச் சார்ந்த செங்கொடி, பரப்புரை குழுவில் இருக்கும் கோவை மாவட்ட செயலாளர் வெள்ளமடை நாகராசு, தலைமை ஆலோசனைக் குழு உறுப்பினர் தூத்துக்குடி பால். பிரபாகரன் ஆகியோர் உரை ஆற்றினர்.

சைக்கிள் ஓட்டத் தடை

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர்ஒன்றியத்திற்கு உட்பட்ட பேரளி என்ற கிராமத்தில் உடையார் சாதி மக்கள் இருக்கும் வீதிகளில், தாழ்த்தப்பட்டவர்கள் சைக்கிள் ஏறி செல்ல முடியாத நிலை இதுவரை அங்கு உள்ளது. இது குறித்து பெரம்பலூர்மாவட்ட கழகம் கவனம் செலுத்தி வருவதால் இந்த பகுதிகளில், கழகப் பரப்புரையின்போது காவல் துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. சுமார் இருபதுக்கும் மேற்பட்ட காவலர்கள் இந்தப் பகுதிகளில் பயணக் குழுவை தொடர்ந்து வந்தார்கள். இந்தப் பகுதியில் உரையாற்றிய மாவட்டத் தலைவர் துரை. தாமோதரன், “இந்தப் பகுதியில் தாழ்த்தப் பட்டவர்கள் சைக்கிள் ஓட்டி செல்ல முடியாத நிலை இன்னும் இருக்கிறது. தபால்காரர்கூட தாழ்த்தப் பட்டவர் என்பதால், உடையார் தெருவில் நடந்து தான் செல்கிறார். இந்த கொடுமையை வீடியோ ஆதாரத்துடன் எங்கள் கழக மாவட்ட அமைப்பாளர் இலட்சுமணன், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரது கவனத்திற்கு எடுத்துச் சென்றார். மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுத்தார். காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு, தாழ்த்தப் பட்டவர்கள் சைக்கிள் ஏறி செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் பழைய நிலையே நீடிக்கிறது. இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், கழகம் சார்பாக, ஆயிரம் சைக்கிள்களுடன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்” என்று அறிவித்தார்.

இதுவரை நடைபெற்ற பரப்புரைகளில், வெள்ளமடை நாகராசு, திருச்சி புதியவன், சூலூர் வீரமணி, பொள்ளாச்சி கா.சு.நாகராசு, பழனி நல்லத்தம்பி, தூத்துக்குடி பால். பிரபாகரன் ஆகி யோர் உரையாற்றினர். பரப்புரையில் பிற்படுத்தப் பட்டவர்களை பார்த்து சொற்பொழிவாளர்கள் வைக்கும் கருத்துகளில் சில……

சாதியால் உங்கள் பொருளாதாரத்தை இழந்துள்ளீர்கள். உயிரை இழந்திருக்கிறீர்கள், எந்த பயனும் இல்லாத சாதியத்தை நீங்கள் உயர்த்திப் பிடிப்பது நியாயம் தானா? சாக்கடை சுத்தம் செய்தல், செருப்பு தைத்தல், முடிவெட்டுதல், துணி வெளுத்தல் ஆகிய நமக்கு தேவையான அடிப்படை வேலைகளை செய்கிறவர்களை கீழ் சாதி என்றும், தீண்டத்தகாதவன் என்றும் சொல்லி அவர்களை ஒருமையில் திட்டுகிறீர்களே! நமக்கு எந்த வகையிலும் பயன்படாத பார்ப்பனர்களைப் பார்த்து உயர்ந்த சாதி என்று சொல்லி, சாமி என்று அழைக்கின்றீர்களே நியாயம் தானா? மிகச் சிறந்த இசை அமைப்பாளரான இளையராசா, ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தங்க கூரை அமைப்பதற்கு பெருந் தொகையை கொடுத்தும், கும்பாபிசேகத்தின்போது, பார்ப்பனரல்லாதார் என்பதால் ஆகம விதிபடி உள்ளே வரக்கூடாது என்று பார்ப்பனர்கள் தடுத்தார்களே அதற்குக் காரணம் சாதியம் அல்லவா? குற்றாலம் அருகே தென்காசியில் ஒரு ராஜகோபுரம் பழுதடைந்துவிட்டது, அதை புதுப்பிக்க வேண்டும் என்று கேட்ட போது, ‘தினந்தந்தி’ நாளிதழின் உரிமையாளர் சிவந்தி ஆதித்தனார் தன் சொந்த செலவில் கட்டிக் கொடுத்தார்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயலாளர், மிகப் பெரும் செல்வந்தர் சிவந்தி ஆதித்தனாரை நாடார் என்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்பதால் பார்ப்பனர்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி மறுத்தார்களே! இந்த சாதியத்தை தூக்கிப் பிடிப்பது நியாயம் தானா? இதே சாதி ஆதிக்கத்தை நீங்கள் உங்களுக்கு கீழானவர்கள் என்று சமூக அமைப்பு வைத்துள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஏன் திணிக்கிறீர்கள்? ஒரு எண்பது ஆண்டுகளுக்கு முன்னாள் திருவாங்கூர் சம°தானத்தில், நாடார் இனப் பெண்கள் மேலாடை அணியக் கூடாது என்ற நிலை இருந்ததே! மேலாடை அணிந்த காரணத் தினால் மார்பகங்களை அறுத்த வரலாறு இருக்கிறதே, பார்ப்பனர் நம் மீது சுமத்திய இந்த சாதியத்தை இன்றும் நாம் தூக்கிப் பிடிப்பது நியாயம் தானா?

ஒருவர் விபத்தில் அடிபட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டால், அவருக்கு இரத்தம் அதிக அளவில் வெளியேறிவிட்டால் அவர் செட்டியாரா? கவுண்டரா? எந்த சாதியைச் சார்ந்தவர் என்று பார்த்து அந்த சாதி இரத்தம் வேண்டும் என்று மருத்துவர் கேட்பதில்லையே! ஏ, பி, ஓ வகை ரத்தம் வேண்டும் என்று தானே கேட்கிறார்கள். தாழ்த்தப்பட்டவன் பிற்படுத்தப்பட்டவன் என்று எந்த சாதியை சார்ந்தவரின் ரத்தமும் பயன்படுகிறதே! அப்படி இருக்கும்போது இரத்தத்தை பரிமாறிக் கொண்டு உயிர்வாழ வேண்டிய நாம் இரத்தத்தை வீதியிலே சிந்தி நாம் உயிரை பழிவாங்கிக் கொண்டிருப்பது நியாயம் தானா? நம்மை வேசி மகன் என்று இழிவுபடுத்தும் பார்ப்பனர்களைப் பார்த்துக் கோபப்படாமல், நம்முடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் பார்ப்பனரைப் பார்த்துக் கோபப்படா மல், ஒரு காலத்தில் நாம் அனுபவித்த சாதிக் கொடுமைகளை தாழ்த்தப்பட்ட வர்கள் மீது இன்றும் அதே கொடுமை களை செய்வது நியாயம் தானா? நாங்கள் பெரியார் தொண்டர்கள்; சாதிகளைக் கடந்து நிற்கும் மனிதர்களாக சாதி அடையாளங்களை உதறிவிட்டு உங்கள் முன் நியாயம் கேட்கிறோம் என்ற கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள்.

Pin It