‘இந்து’ ஏட்டில் பார்ப்பனக் குடும்பத்தில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. ஏற்கனவே ஒரு முறை மோதல் உருவாகி, பிறகு, தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தலையிட்டு, சமரசம் செய்து வைத்தார். அதன்படி ‘இந்து’ ஏட்டின் தலைமை நிர்வாகப் பொறுப்பு என்.ராமிடம் வந்து சேர்ந்தது. இப்போது ‘இந்து’ ராமுக்கு எதிராக, ‘இந்து’ ஏட்டின் ஆசிரியராக இருக்கும் என். ரவி போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இவர் இந்து ராமின் சொந்த தம்பி ஆவார். (இவரது மகள்தான் தி.மு.க. அமைச்சர் தயாநிதிமாறனின் மனைவி) என். இரவி

அவரது இணையதளத்தில் ‘இந்து’ ராம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 18 ஆம் தேதி ‘இந்து’ ஏட்டின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து என். ரவியை ‘இந்து’ ராம் நீக்கி விட்டார். அதேபோல் மேலாண்மை இயக்குனராக இருந்த என். ரவியின் தம்பி என். முரளி, இணை ஆசிரியராக இருந்த நிர்மலா லட்சுமணன், என். இராமின் சித்தி மகளான - நிர்வாக ஆசிரியராக இருந்த மாலினி பார்த்தசாரதி ஆகியோரையும் ராம் அதிரடியாக நீக்கியுள்ளார். இவர்கள் அனைவருமே இந்து பார்ப்பன அய்யங்கார் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். குடும்ப உறுப்பினர்களின் பொறுப்பு நிர்வாகத்தில், இனி இல்லாத அளவுக்கு ‘இந்து’ ராம் அனைவரையும் வெளியேற்றி பத்திரிகையை முழுமையாக தனது பொறுப்பாக்கிக் கொண்டு விட்டார் என்றும், இது ‘இந்து’வின் பதிவுசெய்யப்பட்ட விதிகளுக்கு எதிரான நடவடிக்கை என்றும் கூறும் என். இரவி, ராம் மீது பல குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார். சீனாவின் ஏஜென்டாகவும், எல்லை மீறி கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுப் பத்திரிகையாகவும், நேர்மையான பத்திரிகை தர்மத்துக்கு எதிராக தன்னைப் பற்றிய சுயதம்பட்டத்துக்கு பத்திரிகையைப் பயன்படுத்தி வருவதாகவும் என். ரவி குற்றம்சாட்டியுள்hர். ‘இந்து’வின் தலையங்கங்கள் நேர்மையின்றி நடுநிலைத் தவறி எழுதப்படுவதாகவும், அதில் சார்பு நிலை மேலோங்கி நிற்பதாகவும் கண்டித்துள்ள என். ரவி, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ. இராசாவின் பேட்டியை வெளியிட்டு, அவரை குற்றமற்றவர் என்று காட்ட முயன்று, அதற்கான பலனாக தொலை தொடர்புத் துறையின் முழு விளம்பரத்தையும், ‘இந்து’ ராம் பெற்று வெளியிட்டார் என்று, என். ரவியின் குற்றச்சாட்டு பட்டியல் நீளுகிறது.

ஊழல் வழக்கில் ஆ. இராசா கைது செய்யப்பட்ட பிறகு ‘இந்து’ எழுதிய தலையங்கத்தில் அவர் அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தாதது ஏன்? என்ற கேள்வியை என். ரவி எழுப்புகிறார். ரவி எழுதிய இந்த கடிதத்தை ‘இந்து’ ஏடு வெளியிடவில்லை. ஆனால், ரவிக்கு பதிலளித்து, ‘இந்து’ ராம் டெல்லியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்ததை மட்டும் ‘இந்து’ ஏட்டில் பெரிய அளவில் வெளியிட்டுக் கொண்டார். நேர்மையான பத்திரிகையாளராக இருந்தால் ரவியின் குற்றச்சாட்டு கடிதத்தையும் வெளியிட்டு, அதற்குப் பிறகு தானே தனது பதிலை வெளியிட்டிருக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். தொலை தொடர்புத் துறை விளம்பரம் ‘இந்து’வில் வெளி வந்ததற்கும், ஆ. ராசா பேட்டிக்கும் தொடர்பில்லை என்று மறுத்துள்ள இராம், ‘இந்து’வைத் தவிர வேறு சில ஏடுகளிலும் அந்த விளம்பரம் வந்துள்ளது என்று பதில் கூறுகிறார். ஆனால், ஆ. இராசா பதவி விலக வேண்டும் என்று, ஏன் தலையங்கத்தில் குறிப்பிடவில்லை என்ற கேள்விக்கு - ‘இந்து’ ராம் - அது ஆசிரியர் குழு அந்த நேரத்தில் எடுத்த கருத்து என்று சமாதானம் கூறியுள்ளார்.

இடதுசாரி போல தன்னைக் காட்டிக் கொள்ளும் ‘இந்து’ ராம் பார்ப்பன உணர்விலிருந்து விடுபட்டவர் அல்ல. பெரியார் திராவிடர் கழகத்தின் செய்திகள் ‘இந்து’வில் இடம் பெற அவர் அனுமதிப்பதே இல்லை! ஜெயேந்திர சரசுவதி கொலைக் குற்றத்தில் கைது செய்யப்பட்டபோது, ‘கைது செய்தது மனித உரிமை மீறல்’ என்று மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினரும், தனது நெருக்கமான நண்பருமான சீத்தாராம் எச்சூரியிடமிருந்து அறிக்கை வாங்கி வெளியிட்டவர் ‘இந்து’ ராம். அப்போது ஜூனியர் சங்கராச்சாரி விஜயேந்திரன், கொலைக் குற்றத்தில் கைது செய்யப்பட இருந்த நிலையில், தனது சொந்தக் காரில் ஆந்திர எல்லையிலிருந்து தமிழ் நாட்டுக்கு நேரில் சென்று வரவேற்று, தானே காரை ஓட்டி பத்திரமாக அழைத்து வந்தவர் ‘இந்து’ ராம்.

மேட்டூரில் ‘கெம் பிளாஸ்ட்’ என்ற சுற்றுப்புற சூழலைக் கெடுக்கும் ஆபத்தான அமிலம் தயாரிக் கும் நிறுவனத்துக்கு பெரியார் திராவிடர் கழகம் உட்பட சுற்றுப்புற சூழல் பாதுகாப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள். இந்நிறுவன உரிமையாளர்கள் ‘இந்து’ ராமின் உறவினர்கள் என்பதால், மக்களை பாதிக்கும் இந்த ஆபத்தான தொழிற்சாலைக்கு பாதுகாப்பும், ஆதரவும் கேட்டு, முதல்வர் கலைஞர் கருணாநிதி யிடம் நிறுவன உரிமையாளர்களுடன் தூதுபோய், அதை படத்துடன், தனது பத்திரிகையிலும் வெளியிட்டுக் கொண்டவர்தான் ‘இந்து’ ராம்

Pin It