சென்ற இடமெல்லாம் தீ மூட்டி எரித்து விட்டு
அந்த இராமன் கூட அயோத்தி திரும்பினான்.
திலீபனே நீயேன் திரும்பி வரவில்லை.
வழி நிறைய எம்முற்றம் பூத்த வீரியக் கொடியை
அழியா முதலென்றல்லவா அழகு பார்த்தோம்!
அதை வேரோடிழுத்து வெய்யிலில் போட்டது
இமயம் உயரமெனும் அகம்பாவம்.
'கந்தன் கருணை' யிலிருந்துன் கால் நடந்த போது
கோயில் வீதியே குளிர்ந்து போனது.
கூட்டி வந்து கொலுவிருத்தினோம்.
சாட்சியாக எல்லாவற்றையும் பார்த்தபடி
வீற்றிருந்தாள் முத்துமாரி.
பன்னிரண்டு நாட்களாக உள்ளொடுங்கி
நீ உருகியபோது
வெள்ளை மணல் வீதி விம்மியது.
உன்னெதிரே நின்று எச்சில் விழுங்கியபோது
குற்றவுணர்வு எம்மைக் குதறியது.
வறண்டவுடன் நாவு அண்ணத்தில் ஒட்டியபோது
திரண்டிருந்த சுற்றம் தேம்பியது.
- கவிஞர் புதுவை இரத்தினதுரை