மென்புகாருள் காடொரு 

கனவெனப் பொலிய 

அன்றைய காலையும் அழகொளிர்ந்தது 

குன்றுகுடை வளைவினில் 

துரத்திவந்த அரிவாள்கள் மீதில் 

சூரியனும் குருதியும் தகதகப்பதைப் பார்த்தபடி தப்பித்தேன். 

மரணம் திரைச்சீலைகளாய் 

உள்ளும் புறமும் உலாஞ்ச 

சீறிவரும் தோட்டாக்களின் திசையறியாது 

திகைப்பிருள் சூழ அமர்ந்திருந்தேன் 

நான்கு யன்னல்களிலும் 

மாற்றி மாற்றி 

விழி பதைத்த அவ்விரவுகளில்  

இனிய உயிர் 

விடமாகத் திரிந்தே போயிற்று. 

விசாரணைச் சாவடிகளில்  

மார்பின் கனபரிமாணத்தை 

அளக்கக் கொடுத்து நிற்கையில் 

புழுக்கள் ஊர்ந்து திரிந்த 

எனது பிணத்தை நீயுணராயோ தோழி! 

போகுமிடங்களெல்லாம் 

கடலலைகள் நினைவூட்டுகின்றன 

சுற்றிவளைப்பொன்றில்  

சயனைட் அருந்தி உறைந்த  

என் பள்ளித்தோழர் நால்வரின் 

கடைவாய் நுரையை. 

சொற்களை உண்டு வாழும் 

நமது அறிவுஜீவிகளின் 

புத்தக அலமாரிகளிலிருந்து 

இப்போதும்கூட 

மணம் வீசுகிறது மலர்க்காடு. 

துப்பாக்கிகள் எப்போதும்  

மரணத்தையே நினைவூட்டுவதில்லை. 

 

சுய பலிபீடம்

அடர் பச்சையில் கரைசெழித்த ஆறொன்று 

என்னைக் குடித்து நகர்கிறது 

கனவுகளில். 

பாறை மீதமர்ந்து 

கூழாங்கற்கள் காலில் குறுகுறுக்க 

குரலெடுத்துப் பாடுகிறேன் 

காத்திருப்பில் இழந்த காலங்களை. 

நூற்றாண்டுகளாய்ப் பாறைகளில்  

மோதியலைகிறது 

உப்புக் கரிக்கும் 

என் குரல். 

தேர்ந்த புத்தகங்களுடன் 

இம்முறையும் திரும்பேன் என்று சூளுரைத்து 

தொலைதூரம் பயணித்து 

விடுதியறையன்றில் நானாகிறேன் 

மதுவும் நானும் 

மாறி மாறி அருந்தி முடியவில்லை 

கொண்டுவந்த பெட்டியினுள்ளிருந்து 

ஓரிரு நாட்களிலேயே 

விழித்தெழுந்துவிடுகிறது வீடு. 

நத்தையாகி மீள்கிறேன் 

சுயபலி பீடத்திற்கு. 

உறவு நங்கூரத்தை 

கரையில் துணித்துவிட்டு 

விரியும் கடல் மீதில் 

நெடும்பயணம் போகிறேன் 

பாய்மரத்தில் வந்தமரும் பறவைகளும் 

மிதக்கும் தாழங்காய்களும்  

கறுத்த நீர்ப்பரப்பும் 

கேட்டிருந்தன என் பாடல்களை. 

ஆண்டாண்டு வெம்மையை 

கடலுறிஞ்சிக் குளிர்த்தும்போது 

ஒரு தேநீருக்காக உறக்கம் கலைக்கிறார்கள். 

இப்போதுதான் ஒரு கவிதையைக் 

குழம்பில் அழித்தேன். 

 

- தமிழ்நதி

Pin It