Eezhamவெடிக்கிறது
அழுகை
இயலாமையின் எல்லாவகை
வெளிப்படுத்தல்களுடனும்

கனவின் கூர்மை கருகி
தீயுமிழ்ந்த கணத்தில்
வற்றிப்போன ஆறாய்
வெறுமையுற்று நிற்கிறோம்

புகைந்து கிளம்பிய
துயரநெடி பரவும்
காற்றின் அடுக்குகளில்
புதைந்து இருக்கும்
உயிர்களின் இருப்பில்
வாழ்கின்றன பதுங்கு குழிகள்
ஆயுதங்கள் ஏதுமற்ற குழந்தைகளின்
ஓலங்களில் கருகும் பூக்களில்
வாசனை என்றேதும் புலப்படாது

சிதறடிக்கப்பட்ட
தசைத்துணுக்குகள் நிறைந்த
நிலமெங்கும் வெயிலில் வீசப்பட்ட மீனாய்
முடிவுறாத் துயரத்தின் பெருங்கற்கள்
உருள உருள கிடக்கிறது வாழ்க்கை

குண்டுகளில் சிதைந்த
பென்சில்களையும் ஓவியங்களையும்
தீ தின்ற பின்
காயத்தின் வெம்மை தகிக்கும் கைகளில்
வரைய காத்திருக்கின்றனர் அவர்கள்
விடுதலையை

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.