நவீனத் தமிழாய்வுச் செல்நெறியில் மடைமாற்றத்தை ஏற்படுத்தியோருள் பேராசிரியர் கா. சிவத்தம்பி முக்கியமானவர். பண்டைய காலம் முதல் நவீன காலம் வரையிலான தமிழ்ச் சமூகம் பற்றிய அவரது ஆய்வுகள் அரைநூற்றாண்டு காலத் தொடர்செயல்பாட்டின் விளைசேலாக அமைகின்றன. தமிழாய்வின் திசையறி கருவியாகத் திகழும் பேராசிரியரின் ஆய்வுகளுள் இலக்கிய விமர்சனம் குறித்தமைவன மட்டும் இங்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. கல்விப்புல ஆய்வாளர்களைவிடவும் கல்விப்புலத்திற்கு அப்பாற்பட்ட குழுவினராலேயே தமிழ் இலக்கிய விமர்சனத் துறையானது வளர்த்தெடுக்கப்பட்டது. தொடக்கத்தில் அப்படிப்பட்ட குழுவில் செயல்பட்டுப்பின், கல்விப்புலத்தில் இயங்கிய பேராசிரியர் சிவத்தம்பியின் எழுத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இலங்கையில் முற்போக்கு இலக்கிய அணி யினரின் முதன்மையான விமர்சகர் என்பதிலிருந்தே அவரின் புலமைச்செயல்பாடு தொடங்கியது. எனினும், பண்டைய இலக்கியம் பற்றிய சமூகவியல் நிலைப்பட்ட ஆய்வுகளே தமிழகத்தில் கவனம் பெற்றன. விமர்சனம் பற்றிய அவரது சிந்தனைகளைத் தொகுத்துக் கொள்வதற்கு இதுவும் முக்கியக் காரணமாகும்.

ஆளுமை உருவாக்கம்

ka sivathambi பேராசிரியர் கா. சிவத்தம்பி (1932 - 2011) இலங்கை கரவெட்டியைச் சேர்ந்தவர். பட்டப்படிப்பிற்குத் தமிழ், வரலாறு, பொருளியல் பாடங்களைப் படித்த பொதுப் பட்டதாரி. இலங்கைப் பாராளுமன்றத்தில் சமநேர மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியவர். இங்கிலாந்து பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஜார்ஜ் தாம்சனின் நெறியாளுகையில், "பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்" என்னும் தலைப்பில் கலாநிதி (முனைவர்) பட்ட ஆய்வை மேற்கொண்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் தமிழ், நுண்கலை ஆகிய துறைகளின் தலைவராகப் பணியாற்றியுள்ளார். சென்னை, தஞ்சாவூர், கலிபோர்னியா, இங்கிலாந்து, நார்வே, சுவீடன் பகுதிகளின் பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகவும், முதுநிலை ஆய்வாளராகவும் பணியாற்றியுள்ளார். பேராசிரியரின் ஆளுமை உருவாக்கத்தில் இவை யாவற்றுக்கும் பங்கு உண்டு. எனினும், மார்க்சியத்தின் மீதான அவரது ஈடுபாடு தனித்துக் குறிக்கப்பட வேண்டியதாகும்.

பேராசிரியர் சிவத்தம்பியின் முதன்மையான ஆய்வுத் துறைகள் தமிழ்ச் சமூக இலக்கிய வரலாறு, தமிழ்ப் பண்பாடு, நாடகம், இலக்கிய விமர்சனம் என்பன. இவர் தம்முடைய ஆய்வுமுறையைப் பல்துறைச் சங்கம் ஆய்வு (Multidisciplinary Approach) எனக் குறிக்கிறார். இவ்வணுகுமுறை காரணமாகவே பலராலும் ஈர்க்கப் பெற்றார்.

 சிவத்தம்பியின் இலக்கியமும் கருத்துநிலையும், விமர்சனச் சிந்தனைகள், நவீனத்துவம் - தமிழ் - பின்நவீனத்துவம், தமிழ்ப் பண்பாடும் இலக்கியமும், தமிழில் இலக்கியவரலாறு, நாவலும் வாழ்க்கையும், தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் ஆகிய நூல்களிலிருந்து விமர்சனம் பற்றிய அவரது சிந்தனைகள் விவாதத்திற்கு உட்படுத்தப்படுகின்றன. விமர்சனம் என்பது பற்றிய அவரது கருத்து, அவரது விமர்சன முறை, நவீனத்துவம், யதார்த்தவாதம் ஆகியவற்றைப் பற்றிய அவரது பார்வை என்பன இக்கட்டுரையில் விவாதிக்கப்படுகின்றன.

இலக்கிய விமர்சனம்

 இலக்கிய விமர்சனத்தைப் பற்றிய பேராசிரியரது கருத்தினைக் காணும்முன் அவருடைய சொல்தேர்வு பற்றிக் குறித்துக் கொள்ள வேண்டியுள்ளது. இலக்கிய விமர்சனம் என்ற தொடரைக் கையாளும் அவர், இலக்கியத் திறனாய்வு எனும் தொடராட்சியை மறுக்கிறார். இலக்கியத்தின் மேன்மையை அறிந்து கொள்ளுதல் என்ற பொருளே திறனாய்வு என்ற சொல்லாட்சியில் முதன்மை பெறுகிறது. இத்தகைய முன்முடிவு இத்துறையின் அடிப்படைக்கு மாறானது என அவர் கருதுகிறார்.

ஒப்பீடு, பகுப்பாய்வு, விளக்கம், மதிப்பீடு என்பன இத்துறையின் முதன்மையான செயல்பாடு எனும் நிலையில், திறனாய்வை விடவும் விமர்சனமே பொருத்தமானது எனக் கருதுகிறார். இனி, விமர்சனம் பற்றிய அவரது கருத்தைக் காண்போம்.

விமர்சனம் என்பது அபிப்பிராயம் கூறுவது அன்று என்பதை மிக வன்மையாகவே எடுத்துரைக்கிறார். இலக்கியம் என்பது வாழ்க்கையை அறிய உதவுவது எனில், விமர்சனம் என்பது இலக்கியத்தை அறிய உதவுவது. அதாவது, மனித வாழ்வின் நிலையை இலக்கியம் எந்த அளவிற்குத் தெளிவாகக் காட்டியுள்ளது என்று மதிப்பிடுவது ஆகும். மேலும், குறிப்பிட்ட படைப்பின் தனித்தன்மைகளை மதிப்பிட்டு, இலக்கிய வரலாற்றில் அப்படைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதும் விமர்சனத்தின் பணியாகும்.

இத்தகைய பணியை மேற்கொள்ளும் விமர்சகருக்கான புலமைத்தேவையாக சிவத்தம்பி கருதுவது கருத்துநிலைத் தெளிவு என்பதாகும். கருத்துநிலையே ஒருவரது உலக நோக்கைக் காட்டுவதும் தீர்மானிப்பதும் ஆகும். எனவே, விமர்சகரின் இயக்கத்துக்கான அடிப்படையாக அது அமைகிறது.

மேலே காட்டப்பட்ட இலக்கியம், விமர்சனம் என்பவை பற்றிய சிவத்தம்பியின் விளக்கம் அவரது கருத்துநிலையைக் காட்டுகின்றன. அவை கலை கலைக்காகவே என்ற மகிழ்வுவாதப் போக்கிற்கு எதிரானதாக அமைவதாகும்.

 விமர்சனம் என்பது விமர்சகர் தன்னுடைய கருத்துநிலை படைப்பில் உள்ளதா? என்று தேடுவதன்று. மாறாக, படைப்பாளியின் கருத்துநிலை யாது? என்பதை அடையாளம் காண்பதாகும். படைப்பின் அமைப்பொழுங்கும் முழுமையும் படைப்பாளியின் கருத்துநிலையால் பாதிக்கப்பட்டுள்ள (தாக்கம் பெற்றுள்ள) தன்மையைக் காட்டவேண்டும். படைப்பு பற்றிய மதிப்பீடு இதன் வழியாக மேற்கொள்ளப்பட வேண்டும். மேனிதனைச் சமூகநிலைப் படுத்துவதனாலும் சமூகத்தை மனிதநிலைப் படுத்துவதனாலுமே 'நான்' சமூகத்துடன் இணைய முடிகிறது. படைப்பாளியின் 'நான்' (அவனது உயிர்நிலை) இந்தப் பணியை எவ்வாறு நிகழ்த்திவிடுகின்றது என்பதை நுண்ணிதாக ஆராய்ந்து கூறுவது விமர்சனத்தின் பணியாகும்" என அவர் குறிப்பிடுவது மனங்கொள்ளத் தக்கது. விமர்சனம் பற்றிய சிவத்தம்பியின் விளக்கத்தைப் பார்த்த நாம், இனி அவரது விமர்சன முறையைக் காண்போம்.

சிவத்தம்பியின் இலக்கிய விமர்சனம்

 இலக்கிய விமர்சனத்தைப் பற்றிய சிவத்தம்பியின் எழுத்துகளுள் குறிப்பிட்ட இலக்கியத்தின் மீதான விமர்சனத்தை விடவும் தமிழ் இலக்கியத்தின் பெரும்பரப்பைப் பற்றிய ஆய்வே அதிகமாகக் காணப்படுகின்றன. எனவே, அவையே இங்கு முதன்மையாகக் கொள்ளப்படுகின்றன.

 சிவத்தம்பி எந்த ஒன்றையும் அதன் தோற்றப் பின்னணியில் இருந்து தொடங்கி முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற முனைப்பு கொண்டவர். இதனை ஜார்ஜ் தாம்சனிடமிருந்து தான் கற்றுக் கொண்டதாகப் பதிவு செய்கிறார். மேலும், ஒன்றன் தனித்துவத்தைத் திட்டவட்டமாக உறுதி செய்துகொள்ள வேண்டும் என்ற பார்வை கொண்டவர்.

 புனைகதை, விமர்சனம், இலக்கிய வரலாறு என்பவற்றைப் பற்றிய அவரது உரையாடல் தமிழில் சிறுகதை, தமிழில் இலக்கிய விமர்சனம், தமிழில் இலக்கிய வரலாறு என அமைவதை யாவரும் அறிவர். இவை தமிழில் முகிழ்த்த அறிவுத்துறைகள் அல்ல. தமிழுக்கு வந்து சேர்ந்த துறைகள். எனவே, அவை இப்பண்பாட்டினுள் வந்து இணைந்த முறை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதே அவரது கருத்து.

 இக்கால இலக்கியம் என்பதை விடவும் நவீன இலக்கியம் என்ற தொடர் ஏன் முக்கியப்படுகிறது? என்ற வினாவை எழுப்பும் சிவத்தம்பி, இலக்கிய வடிவமும் அதன் பொருண்மையுமே அவற்றின் தனித்தன்மைகளாக அமைகின்றன. அதாவது சிறுகதை, நாவல், புதுக்கவிதை என்பவற்றின் அமைப்பு அதற்கு முந்தைய இலக்கியங்களின் அமைப்பிலிருந்து வேறுபட்டது. அரசியல், சாதி, பால்நிலைப்பட்ட சிக்கல்கள் இவ்விலக்கியங்களில் இடம்பெறுகின்றன. காப்பியம் முதலான இலக்கியங்களில் இதனைக் காண முடியாது. மேலும், இவ்விலக்கியங்களின் சமகாலத்தில் சிற்றிலக்கியங்களும் பிரபந்தங்களும் இயற்றப்பட்டாலும், அவை நவீன இலக்கியமாகக் கொள்ளப்படா.

 மேற்கண்டவை முழுமை, தனித்தன்மை பற்றிய அவரது பார்வைக்கு உதாரணங்களாக அமைகின்றன.

 இலக்கிய விமர்சனமானது இலக்கியத்துக்கும் பிற கலைகளுக்கும் இடையிலான ஊடாட்டத்தைக் கருத்தில் கொள்வதாக அமைய வேண்டும் என்பதைப் பேராசிரியர் பல இடங்களில் வற்புறுத்தியுள்ளார். இப்பொருண்மை தொடர்பாகத் தமிழர் கலைகள் நூலில், 'தமிழர் இலக்கிய வரலாறு: நுண்கலையாக இலக்கியம்' என்ற கட்டுரையை எழுதியுள்ளார். ஓவியம், சிற்பம், கட்டடம், இசை ஆகிய நுண்கலைகளின் பொதுவான அம்சங்களை விவரித்து அதேபோல இலக்கியத்தையும் ஆராய்ந்துள்ளார். தமிழர் அழகியலின் பொதுத்தன்மையை அடையாளம் காண்பதில் இக்கட்டுரைக்கு முக்கியப்பங்கு உண்டு. கவிஞர் இந்திரன், முனைவர் சா. பாலுசாமி (பாரதிபுத்திரன்) இருவரும் கலைகளுக்கிடையிலான ஊடாட்டங்களைக் காணும் விமர்சகர்கள் என்று பேராசிரியர் சிவத்தம்பியின் புலமைப்பாராட்டைப் பெற்றுள்ளனர் என்பது மனம் கொள்ளத்தக்கது.

 தமிழ் விமர்சன மரபில் பாட விமர்சனம் (Textual Criticism), வாழ்க்கை வரலாற்று விமர்சனம் (Biographical Criticism) என்பன பற்றிய ஆய்வுகள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என சிவத்தம்பி கருதுகிறார். பாட விமர்சனம் (மூலபாட விமர்சனம்) என்பது பண்டைய - இடைக்காலத் தமிழ் இலக்கியங்களுக்கு மட்டுமே உரியது எனக் கொள்வது அது பற்றிய ஆய்வின் வளர்ச்சியைத் தடுக்கிறது. படைப்பாளியின் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை மறைக்க வேண்டும் என்ற எண்ணத்தால் வாழ்க்கை வரலாற்று விமர்சனம் மேற்கொள்ளப்படுவதில்லை. மதமும் கவிதையும் நூலில் இடம்பெறும் 'திருவாசகம் காட்டும் மணிவாசகர்' கட்டுரை இலக்கியத்தைப் புரிந்து கொள்வதற்குப் படைப்பாளியின் வாழ்க்கை வரலாறு உதவுவதைக் காட்டுவதாகும்.

மேலும், புதுமைப்பித்தனின் அனைத்து ஆக்கங்களையும் வெளிக்கொணரும் ஆ.இரா. வேங்கடாசலபதி, ஆவணங்களின் வழியாக மகாகவி பாரதியின் வாழ்க்கை வரலாற்றைத் துலங்கச் செய்யும் ய. மணிகண்டன் போன்றோரது செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை இதன் வழியாகப் புரிந்து கொள்ளலாம்.

 விமர்சனத்துறையில் கைலாசபதிடேன் இணைந்து செயல்பட்ட சிவத்தம்பி விமர்சனவியலுக்குத் தங்களின் பங்களிப்பாகக் குறிப்பவை:

 ( 1 ) பண்டைக் கால இலக்கியங்களையும் நவீன இலக்கியங்களையும் இரண்டு தனித்தனி தொகுதிகளாகப் பிரித்துப் பார்க்கும் பார்வையை உடைத்து இரண்டையும் ஒருங்கிணைந்த பகுதியாகப் பார்த்து அவற்றின் தொடர்ச்சியை வலிற்றுத்தியது.

 (2) நவீன இலக்கியங்கள் மட்டுமின்றி பண்டைய இலக்கியங்களையும் சமூக விமர்சனத்திற்கு (Social Criticism) உட்படுத்தியது.

இலக்கிய வரலாறு

 கலைப் படைப்புகளின் வரலாறு என்பது அக்கலைகளைப் பற்றிய விமர்சனங்களின் வரலாறு ஆகும் என்பது சிவத்தம்பியின் நிலைப்பாடு. இலக்கிய வரலாறு என்பது ஏதோவொரு வகையில் இலக்கிய விமர்சனக் கருத்து ஒன்றினை அடித்தளமாகக் கொண்டு இலக்கியத்தின் வரலாற்றை எடுத்துக் கூறும் முயற்சியே எனக் குறிப்பிடுகிறார். அந்தவகையில், தமிழில் இலக்கிய வரலாறு நூலைக் குறித்து விவாதிக்க வேண்டியது அவசியமாகிறது.

தமிழில் இலக்கிய வரலாறு நூலானது தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு. அதுவரை தமிழில் மேற்கொள்ளப்பட்ட இலக்கிய வரலாற்று முயற்சிகளை மதிப்பிடும் அவ்வாய்வு, இலக்கிய வரலாறு என்பது இலக்கியத்தின் வரலாறு அன்று; இலக்கிய வழி வரலாறு எனக் குறிக்கிறது. இலக்கியமும் வரலாறும் இணைந்து செல்வதைக் காட்டுவது அவ்வாய்வின் முதன்மை நோக்கமாக அமைகிறது.

 தமிழரின் நாட்டார் இலக்கியங்கள் (பாடல்கள், கதைகள் முதலானவை), தமிழரின் இலக்கியம் அல்லாத பிற ஆக்கங்கள் (தத்துவம், விஞ்ஞானம் முதலானவை), பிற மொழியில் எழுதப்பட்ட தமிழரின் ஆக்கங்கள், தமிழ்நாடு, இலங்கை மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள தமிழரின் இலக்கியங்கள் என யாவற்றையும் உள்ளடக்கியதாகத் தமிழ் இலக்கிய வரலாறு இருக்க வேண்டும் என்பதற்கான தேவையை இந்நூல் கவனப்படுத்துகிறது. தமிழ் இலக்கிய வரலாறு தமிழரின் சிந்தனை வரலாற்றைக் காட்ட வேண்டும் என இந்நூல் வலியுறுத்துகிறது.

 தமிழரின் சிந்தனை வரலாற்றைக் காணும் முயற்சியில் ஈடுபட்ட சிவத்தம்பி, 'நவீன காலத்துக்கு முன்னர் தமிழரிடையே நிலவிய அறிவு முறைமை பற்றிய சில குறிப்புகள்' என்ற கட்டுரையை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் இலக்கண இலக்கியம், தத்துவம் என்பன மட்டுமே தமிழ்ச் சூழலில் முதன்மையான அறிவாகக் கொள்ளப்படுவதை விளக்கியுள்ளார்.

நுட்பமான அறிவும் பாரம்பரியக் கையளிப்பும் உள்ள மருத்துவம், சோதிடம், கட்டடம், கப்பலோட்டம் முதலான துறைகள் அறிவுத்துறையாகக் கொள்ளப்படுவதில்லை என்பதைக் காட்டியுள்ளார். அதேநேரத்தில் இத்துறைகள், குறிப்பாக மருத்துவமும் சோதிடமும் தம்முள் தாம் மூடுண்டு கிடப்பதையும் காட்டுகிறார். இவை அவற்றின் மீதான ஆய்வுக்குத் தடையாக அமைந்துள்ளன.

 பேராசிரியர் இரா. சீனிவாசன், அவரது மாணவர் தமிழ் காமராசன் இருவரும் இலக்கிய வரலாற்றைப் பற்றிய பேராசிரியர் சிவத்தம்பியின் சிந்தனைகளை உள்வாங்கித் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாகத் தமிழ் காமராசனின் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வு தமிழில் இலக்கிய வரலாறு நூலைப் பற்றியது ஆகும்.

சிவத்தம்பியின் இலக்கிய விமர்சனச் சிந்தனைகளைக் குறித்துக் கொண்ட நாம் நவீனத்துவம், யதார்த்தவாதம் பற்றிய அவரது சிந்தனைகளை இனிக் காண்போம்.

நவீனத்துவம்

 நவீனத்துவத்தைப் பற்றிய விவாதத்தில் Modern, Modernity, Modernism எனும் சொற்கள் முதன்மை பெறுகின்றன. Modern என்பது தமிழில் நவீனம் என வழங்கப்படுகிறது. இதற்குப் புதியது என்று பொருள். Modernity என்பது சமத்துவம், தாராளவாதம் முதலானவற்றை உள்ளடக்கிய அரசியல் எண்ணக் கருவைக் குறிக்கும். இதனைச் சிவத்தம்பி நவீனமாம் தன்மை எனக் குறிக்கிறார். Modernism என்பது கலை இலக்கிய வெளிப்பாட்டில் ஏற்படும் மாற்றத்தைக் குறிப்பதாகும். இது நவீனத்துவம் என வழங்கப்படுகிறது. ஆனால், நவீனத்துவம் என்பது Modernism அல்ல Modernity என்பது சிவத்தம்பியின் கருத்து. எனினும், இச்சொல்லாக்கம் நிலைபெற்று விட்டதால் Modernity என்பதை நவீனமாம் தன்மை எனக் குறிப்பிட்டார்.

 தமிழ்ச் சமூகத்தின் நவீனமயவாக்கம் என்பது அதன் சமூக அழுத்தத்தால் ஏற்பட்ட வளர்ச்சி அன்று. காலனியத்தின் வருகையால் ஏற்பட்ட விளைவு ஆகும். தமிழ்ச் சமூகம் நவீனமயப்பட்டதால் இலக்கிய ஆக்க நுகர்வில் ஏற்பட்ட முதன்மையான மாற்றங்களாவன:

(1) புலவர் எழுத்தாளர் ஆனார்

(2) புரவலரின் இடத்தை ஊடகம் பிடித்துக் கொண்டது

(3) பாரம்பரியத் தமிழ் இலக்கியத்தின் நுகர்வாளரான

கேட்குநர் இப்போது வாசகர் ஆனார்.

 இலக்கியங்களை எழுத்துகள் எனக் குறிப்பதும் கவனிக்கத்தக்க மாற்றமாகும். சனநாயகத் தன்மை, மதசோர்பின்மை ஆகியன நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான அம்சங்கள் எனச் சிவத்தம்பி குறிப்பிடுகிறார்.

 இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் பற்றிய அவரது முடிவு பின்வருமாறு அமைகிறது.

 தமிழ், உலகை அறிந்து கொண்டுள்ள அளவிற்கு உலகும் (புலமைலேகு) தமிழை அறிந்துள்ளது... ஆனால் எந்தளவிற்கு இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் உலகநிலையில் ஆக்க இலக்கிய சாதனைகளை ஏற்படுத்தியது என்பது முக்கியக் கேள்வியாகும். இதனை இன்னொரு வகையில் கேட்கலாம்.

எதாவது குறிப்பிட்ட ஆக்கம் தமிழிலே இருக்கின்றதென்பதற்காக அந்த மூலமொழியினைப் படிக்க வேண்டுமென்றளவிற்கு யாராவது ஒரு வாசகனைத் தமிழுக்கு வரச் செய்யும் ஒரு தனிப்படைப்பு இருபதாம் நூற்றாண்டில் உள்ளதா? பாரதி புதுமைப்பித்தன் பற்றிய உலகநிலை அறிமுகமே இன்னும் போதாமல் இருக்கிறது"

யதார்த்தவாதம்

 சிவத்தம்பியின் உலக நோக்கு, கருத்துநிலை பற்றிய கருத்துகளைத் தொகுத்துக் கொண்டு இக்கட்டுரையை நிறைவு செய்யலாம். இலக்கியம் சமூகத்தின் விளைபொருள். எனவே, இலக்கியத்திற்கென சமூகக் கடமை உண்டு என்பது அவரது நிலைப்பாடு. அவர் கலை கலைக்காகவே என்ற மகிழ்வுவாதப்

போக்கிற்கு எதிரானவர் என்பது முன்னரே காட்டப்பட்டது. அதேநேரத்தில், மார்க்சியர்கள் பரவலாகக் கைக்கொண்ட பிரதிபலிப்புக் கொள்கையையும் அவர் ஏற்கவில்லை. அக்கொள்கை, 'இலக்கியம் காலத்தைக் காட்டும் கண்ணாடி' என வாய்பாட்டுமயமாகிவிடுகிறது என்று விமர்சிக்கிறார்.

 இலக்கியம் காலத்தின் உற்பத்தி என்பது மட்டுமின்றி அது காலத்தை உருவாக்கவும் வல்லது எனக் குறிப்பிடும் சிவத்தம்பி, இத்தகைய நெகிழ்ச்சிமிக்க பார்வைக்கு இடமளிப்பதும் மார்க்சியத்தின் பொருள்முதல் வாதத்திற்குச் சார்பானதுமான கொள்கை யதார்த்தவாதமே எனக் கருதுகிறார். சமூகத்தில் உள்ள சிக்கல்களைத் தெளிவாகக் காட்டி, அசேமூகம் முன்னேறுவதற்கான வழியை உணர்த்த யதார்த்தவாத இலக்கியங்களாலேயே முடியும் என்பது அவரது கருத்து.

 இந்திய, இலங்கை இலக்கியங்களில் சோசலிச யதார்த்தவாதமே வற்புறுத்தப்பெற்றது. ஆனால் வர்க்கப் புரட்சியை சாத்தியப்படுத்தி, சோசலிசத்தை நடைமுறைப்படுத்தும் சமூகத்தின் வளர்ச்சிக்கே சோசலிச யதார்த்தவாத இலக்கியம் பயன்படும். அத்தகைய புரட்சி நடைபெறாத சமூகத்திற்கு விமர்சன யதார்த்தவாத இலக்கியங்களே பொருத்தமானது என்று சிவத்தம்பி கருதுகிறார்.

 யதார்த்தவாதம் உள்ளதை உள்ளபடி எழுதுவது அன்று. உள்ளதன் உண்மையை, அதாவது அது ஏன் அவ்வாறு உள்ளது என்ற காரண காரியத்தோடு எழுதுவது என சிவத்தம்பியின் விளக்கம் அமைகிறது. இத்தகைய கொள்கை நிலைப்பட்ட முற்போக்கு இலக்கியம் ஊக்குவிக்கப்பட வேண்டும். முற்போக்கு இலக்கிய இயக்கம் மார்க்சிய இலக்கியத்தை மலரச் செய்யவேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பு.

முடிவுரை

 சிவத்தம்பியின் விமர்சன முறைமை தமிழ் இலக்கியத்தைப் பற்றிய எத்தகைய பார்வையை நமக்கு வழங்குகிறது என்பதை ஆதார எடுகோளாகக் கொண்டு அவரது கருத்துகள் இங்கு தொகுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. சிவத்தம்பியின் விமர்சன முறை குறித்த விவாதத்தில் மார்க்சியம், பின்-நவீனத்துவம் பற்றிய விரிவான விவாதம் மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாதது என்ற போதும் கட்டுரையின் விரிவு கருதி அவை இங்கு இடம்பெறவில்லை. தமிழ் இனி 2000 மாநாட்டுச் சிறப்புரையில், தமிழால் வளம் பெற்ற நீங்கள் தமிழை மேலும் வளம்படுத்தச் சிந்தியுங்கள். எழுதுங்கள். விமர்சியுங்கள்" என்றார்

பேராசிரியர் சிவத்தம்பி. அவரது அறிவுரையின்படி தமிழைச் செழுமைப்படுத்துவது நமது கடமை.

குறிப்பு: இக்கட்டுரையாக்கம் குறித்து என்னோடு விவாதித்த முனைவர்பட்ட ஆய்வாளர் அ. குணசேகரன், கட்டுரை குறித்து விவாதித்து திருத்தம் செய்த முனைவர் பட்ட ஆய்வாளர் க. தேன்மொழி இருவருக்கும் நன்றி.

- ச.ந. விக்னேஷ், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஈரோடு - 638004.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.