மெய்யியல் என்பது உண்மைகளை அறியச் செய்யும் சிந்தனை முறைக்கு வழி காட்டுவது. உண்மை எது? பொய் எது? என்பதை அறிய வைக்கும் அறிவுச் செயல் அது என்பதெல்லாம் ஒரு புறம் உண்மையாக இருப்பினும், அது மிகவும் ஆபத்தானது, உயிரையே எடுத்து விடும் என்பதற்கான எடுத்துக்காட்டுகளில் ஒன்றுதான் சாக்ரடீஸ் அவர்களின் வரலாறு. விஷம் கொடுத்துக் கொல்லப்பட்ட நேரத்திலும் மெய்யியல் முறைமை பற்றிப் பேசியவர்தான் மேற்கத்திய மெய்யியல் மரபின் மூத்தகுடி என்று பரவலாக அறியப்பட்ட சாக்ரடீஸ். கிட்டத்தட்ட 2500 ஆண்டுகள் ஆகிவிட்ட பின்னும் பேசப்படும் மெய்யியலாளராக அவர் இருப்பது ஏன் என்ற ஆச்சரியம் நமக்கு எழுவது இயல்பு. இத்தனைக்கும் அவர் எந்தப் படைப்பையும் எழுதவில்லை. பல நூறு பக்கங்கள் எழுதுவதால் மட்டுமே வரலாற்றில் ஒருவர் இடம் பெற்று விட முடியாது என்பதை உலகிற்கு உணர வைத்தவர்.

socrates 421சாக்ரடீஸ் எப்படி இருந்தார் என்பது குறித்துத் தெளிவான சான்றுகள் இல்லை. அவரது உருவச் சிலைகள் தோராயமாகவே உருவாக்கப்பட்டுள்ளன. அவரைப் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் அவரது சீடர்களான பிளேட்டோ மற்றும் ஜெனோபோன் ஆகியோரின் எழுத்துக்கள் மூலமே நமக்குக் கிடைத்துள்ளன. ஜெனோபோனின் "மெமரோபிலியா" (Memorabilia) என்ற சிறு நூலை ஒரு பழைய புத்தகக் கடையில் மதுரையில் நான் பல ஆண்டுகளுக்கு முன் வாங்க முடிந்தது. யாரோ ஒரு முதியவர் தன் வீட்டில் விட்டுச் சென்ற இந்த அரிய சொத்தை அடுத்த தலைமுறைப் பழைய புத்தகக் கடையில் கொண்டு சேர்த்திருக்க வேண்டும் என யூகித்தேன். அதை ஆர்வத்துடன் வாசித்துப் பார்த்ததில் சாக்ரடீஸ் ஒரு நீதிபோதகராகவும், மற்றும் இயற்கை வழிபாட்டாளராகவும் நான் அறிய நேர்ந்தது.

மறுபுறம், அரிஸ்டோபனீஸின் "மேகங்கள்" எனும் நாடகம் சாக்ரடீசைக் கேலி செய்கிறது. அரிஸ்டோபனீஸின் நாடகத்தில் சாக்ரடீஸின் உண்மையான "தேவதைகள்" பாரம்பரிய ஒலிம்பியக் கடவுள்கள் அல்ல, மேகங்கள்தான். அதாவது, பாரம்பரிய மத நம்பிக்கைகளைச் சாக்ரடீஸ் கேலி செய்கிறார் என்று அரிஸ்டோபனீஸ் சித்தரிக்கின்றார். அவரை “வானில் தொங்கும் தத்துவஞானி" என்று கேலியாகச் சித்தரித்து அவர் காற்றில் தொங்கியவாறே "உயர்ந்த சிந்தனைகள்" பற்றிப் பேசுகின்றார் என்றும், அவர் "பூமியிலிருந்து விலகி நிஜ வாழ்வுக்கு ஒத்துப்போகாத சிந்தனையாளன்" என்றும் தனது கருத்தை முன்வைக்கின்றார். ஆனால் மாறாக சாக்ரடீஸ் ஒரு வகையில் விண்ணில் மிதந்து கொண்டிருந்த மெய்யியல் சிந்தனைகளை, கற்பனைகளைப் பூமிக்கு இழுத்துக் கொண்டு வந்தார் என்பதே உண்மை.

பிறப்பு மற்றும் இளமை வாழ்க்கை

கி.மு. 469-ல் ஏதென்ஸ் நகரத்தில் பிறந்த சாக்ரடீஸ், ஒரு சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை சோப்ரோனிஸ்கஸ் ஒரு கல் தச்சர்; தாய் பேனரத்தே ஒரு செவிலியர். தந்தையின் தொழிலையே முதலில் சாக்ரடீஸும் கைக்கொண்டார். பின்னர், தன் தாயின் தொழிலுக்கு ஒப்புமை கற்பித்து, தான் ஒருவகையில் தத்துவக் கருத்துக்களைப் "பிரசவம்" செய்விக்கும் செவிலியர் என்று குறிப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தனது 40-வது வயதில் ஜாந்திப்பே என்பவரை மணந்த இவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். பொருளீட்டல் இல்லாததால், மனைவியுடன் எப்போதும் முரண்தான். தன் வாழ்நாளில் ஏதென்ஸ் நகரத்தை விட்டு வெளியேறாத சாக்ரடீஸ், அங்கேயே கணிதம், வானியல், வடிவியல், இசை, வரலாறு மற்றும் மொழியியல் போன்ற கல்விகளைக் கற்றார்.

சிறுவனாக இருந்தபோதே சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்து கொள்வதே சாக்ரடீஸின் வழக்கமாகும். நீதி, நியாயம், ஆத்மா, கடவுள், சமூகம், அரசு, வழக்கம் என எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தினார் சாக்ரடீஸ். தமது கேள்வியின் மூலம் உணரச் செய்த சாக்ரடீஸ், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் கேள்ு கொண்டனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். அதைப் போக்குவதற்குச் செய்ய வேண்டியவற்றையும் அவர்கள் உணர்ந்தனர். சாக்ரடீஸின் சொற்பொழிவுகள் மக்களைச் சிந்திக்க வைத்தன; செயல்களில் ஈடுபடவும் அவர்களைத் தூண்டியது.

வாழ்க்கை முறை மற்றும் போர் பங்கு

சாக்ரடீஸ் வாழ்வாதாரத்திற்காக உழைக்கவோ, அரசியலில் தீவிரமாக ஈடுபடவோ விரும்பவில்லை. வறுமையைத் தழுவியிருந்த அவர், கற்பித்தலுக்காகப் பணம் பெறுவதை வாழ்நாள் முழுவதும் வெறுத்து ஒதுக்கினார். தன்னை ஒரு "ஆசிரியர்" என்று அவர் ஒப்புக் கொள்ளவில்லை எனினும் அவரை நகரத்தின் இளைஞர்கள் சூழ்ந்து அவரை ஒரு ஆசிரியராகவே கருதி அவருடன் விவாதம் செய்தனர். சிலர் அவரது சிந்தனைகளைப் பின்பற்றினர். கி.மு. 431-ல் தொடங்கிய பெலோபொனேசியன் போரில், தன் நாட்டின் மீதான அன்பின் காரணமாக, ஏதென்ஸ் படையில் ஒரு வீரனாகப் போரிட்டார்.

போரில் ஸ்பார்ட்டா வெற்றி பெற்றபின், ஏதென்ஸில் முப்பது சர்வாதிகாரிகள் ஆட்சியைக் கைப்பற்றினர். அவர்கள் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த கொள்ளைகள் மற்றும் கொலைகளைச் சாக்ரடீஸ், அச்சமின்றி வெளிப்படையாகக் கண்டித்தார். இதன் காரணமாக, இளைஞர்களுடன் பேசுவதற்கு அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், சாக்ரடீஸ் அதை மீறி தனது தத்துவ உரையாடல்களைத் தொடர்ந்தார்.

சாக்ரடீஸின் தத்துவ முறை: உரையாடல் மற்றும் இயங்கியல்

சாக்ரடீஸ்தான் உலகின் முதல் தெரு முனை தத்துவ பிரசாரகர் எனலாம். கடைத்தெருக்களே அவரது அறிவுக்களமாக இருந்தன. மக்கள் கூடும் இடங்களில் சென்று, இளைஞர்களுடன் உரையாடுவதையே தன் இறைப்பணியாகக் கருதினார். அவருடைய கற்பிக்கும் முறை "இயங்கியல்" (Dialectic Method) அல்லது "உரையாடல் முறை" ஆகும். இம்முறையில், ஒரு விஷயத்தைப் பற்றி "தனக்கு எதுவும் தெரியாது" என்று பாசாங்கு செய்து (Socratic Irony), கேள்விகள் கேட்பதன் மூலம், மற்றவரைத் தானாகச் சிந்திக்க வைப்பார். கேள்விகளின் வழியே விடையை நோக்கி நடத்தி, இறுதியில் ஒரு பொதுவான வரையறைக்கு (Universal Definition) வருவிப்பார்.

ஏதென்ஸ் நகரின் அருகில் உள்ள டெல்ஃபி கடவுள் கோவிலில் ஒருவர் சென்று கிரேக்கத்தின் பெரும் அறிஞர் யார் என குறி கேட்டார். அதற்கு டெல்பியின் கடவுள் தெய்வ வாக்காக சாக்ரடீஸ்தான் கிரேக்கத்தின் மிகப் பெரிய அறிஞர் என்று கூறியது. அதை சாக்ரடீசுடன் அவருடைய சீடர் ஒருவர் சொன்னபோது சாக்ரடீஸ் ஏற்கவில்லை. “தனக்குத் தெரிந்தது எல்லாம் தனக்கு எதுவும் தெரியாது என்பதே" என்று கூறினார். தன்னுடைய அறியாமையை ஒருவர் அறிந்துள்ளார் எனும் போதே அது அவர் பல விடயங்கள் அறிந்தவர் என்ற புரிதலுக்கு நம்மை இட்டுச் செல்கின்றது. மேலும் அவர் தன்னுள் ஒரு “புனிதக் குரல்" (Daemon) வழிநடத்துவதாகவும் கூறுவார். பல சமயங்களில் மௌனமாகக் கொட்டும் மழையில் கூட அசையாமல் தியான நிலையில் அவர் அமர்ந்திருந்ததாகப் பிளேட்டோ சொல்லுவார்.

சாக்ரடீஸின் மாணவரான பிளேட்டோ தன்னுடைய உரையாடல் எனும் தொகுப்பின் முழு நாயகனாகச் சாக்ரடீசையே வைத்திருப்பார். அந்த நூல் ஓர் உரையாடல் பாணியில், நாடகக் காட்சிகள் போல அமைத்து எழுதப்பட்டிருக்கும். அக்காலத்திலேயே இவ்வளவு கற்பனை வளத்துடன், கருத்துச் செறிவுடன், உரையாடலை எழுதியிருக்கின்றார் என்றால் அன்றைய ஏதென்சின் அறிவுப் பண்பாடு எவ்வளவு செழுமையாக இருந்திருக்க வேண்டும் என்பது புரிகின்றது. இந்த உரையாடல் தொகுப்பை மூன்று பிரிவாகப் பிரிப்பார்கள். சாக்ரடீஸ் உயிரோடு இருந்தபோது எழுதப்பட்ட தொகுப்பில் அவரைப் பற்றிய உண்மை நிகழ்வுகளை அப்படியே பதிந்திருக்கின்றார் என்றும், பின்னர் அவர் எழுதியுள்ளவற்றில் சாக்ரடீஸ் எனும் உருவத்திற்குள் பிளேட்டோ புகுந்து கொண்டு பேசியிருக்கின்றார் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லுவார்கள். அப்படிப் பார்க்கும் போது சாக்ரடீஸ் நடத்திய மாலை மற்றும் இரவு நேர உரையாடல்கள் அனைத்தையும் பிளேட்டோ பதிவு செய்துள்ளார் எனலாம். சாக்ரடீஸ் மீதான வழக்கு விசாரணையைக் கூட அவர் விளக்கியுள்ளார். மீனோ, ஜெனோபோன், அரிஸ்டோகிரிடீஸ், பீடோ, கிரீட்டோ, அரிஸ்டோபனீஸ், அனக்ஸகோரஸ், அனக்சிமாண்டர், குளோக்கோன், அடிமாண்டஸ், தியேட்டிடஸ் போன்ற பலர் சாக்ரடீசைச் சூழ்ந்திருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பிரபுக்கள் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத் தகுந்தது. பிளேட்டோ தன் நூலின் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் தலைப்பாக சாக்ரடீசுடன் உரையாடல் செய்தவர்கள் பெயரையே சூட்டியுள்ளார்.

அவர் உரையாடலின் சாரத்தில் சில:

மீனோ (Meno) என்ற உரையாடலில் சாக்ரடீஸ் நற்பண்பு என்பது கற்றுத் தரக்கூடியதா? அல்லது அது பிறப்பிலேயே வரக்கூடியதா? என்பது பற்றி மீனோவிடம் உரையாடுகின்றார். தன் உரையாடல் முறை மூலம் சாக்ரடீஸ் மீனோவிடம் கேள்விகளைக் கேட்டு இது பற்றிய அறிவு பிறப்பிலேயே மனிதனுக்குள் உள்ளது என்ற கருத்தை ஏற்க வைக்கின்றார்.

தியேட்டிடஸ் என்ற ஒரு இளம் கணித மேதையுடன் அறிவு என்றால் என்ன? என்பது பற்றி அவர் நிகழ்த்திய உரையாடல் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகின்றது. நானும் கூட இந்தியத் தத்துவ ஆராய்ச்சி மையம் (ICPR) லக்னோவில் தியேட்டிடஸ் பற்றி நிகழ்த்திய பதினைந்து நாள்கள் சிறப்புப் பயிலரங்கில் பங்கு பெற்ற போது இந்தத் தலைப்பின் ஆழம் புரிந்தது.

தியேட்டிடஸ் "அறிவு என்பது உணர்வு" என்று முதலில் கூறுகிறார். சாக்ரடீஸ் அதைக் கேள்வி கேட்டு, உணர்வு பல நேரங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் வாய்ப்புள்ளது, அதனால் அது அறிவுக்கு சமமாக இருக்க முடியாது என்று நிரூபிக்கிறார். பின்னர் தியேட்டிடஸ் பிற வரையறைகளை முன்வைக்க, சாக்ரடீஸ் அனைத்தையும் தர்க்கரீதியாகப் பகுப்பாய்வு செய்கிறார். இறுதியில் ஒரு நிலையான விடை கிடைக்காவிட்டாலும், விவாதம் மிகவும் ஆழமான தத்துவ யோசனைகளைத் தருகிறது.

பிளேட்டோவின் சகோதரர்களான குளோக்கோன் (Glaucon) மற்றும் அடீமாண்டஸ் (Adeimantus) எனும் இருவர் நீதி என்றால் என்ன என்பது குறித்து விரிவாகச் சாக்ரடீசுடன் உரையாடுவதாகப் பிளேட்டோ தன்னுடைய குடியரசு (The Republic) நூலில் எழுதுகின்றார். இந்த உரையாடல் மிகவும் விரிவானது. சாக்ரடீஸ் நீதியின் தன்மையை ஆராய ஒரு கற்பனை “நகர-அரசு" என்பதை கட்டமைத்து (குடியரசு) விவரிக்கின்றார். நீண்ட நேரம் விவாதித்து, நீதியானது வலிமையானவரின் நலனுக்காக மட்டுமே என்ற கருத்தைச் சாக்ரடீஸ் மறுக்கிறார். இந்த உரையாடலில் கல்வி, சமூகத்தில் தத்துவ ஞானியின் பங்கு, இசை, காவல் துறை, பெண்கள் பங்கு போன்ற பல தலைப்புகளும் விவாதிக்கப்படுகின்றன.

யூத்திப்பைரோ, ஒரு “மத நிபுணர்" என்று தன்னைக் கருதும் இளைஞர். அவர் விவாதித்த தலைப்பு பக்தி மற்றும் மதபோதனை என்றால் என்ன? (What is Piety?) என்பதாகும். சாக்ரடீஸ் யூத்திப்பைரோவை “பக்தி என்றால் என்ன?" என்று கேட்கிறார். யூத்திப்பைரோ சொல்லும் ஒவ்வொரு பதிலையும் சாக்ரடீஸ் கேள்விகள் கேட்டு, அவை தர்க்கரீதியாகச் சரியில்லை என்று காட்டுகிறார்.

பீடெரஸ், வாத்தியக் கலை மீது ஆர்வமுள்ள இளைஞர். அவருடன் விவாதித்த தலைப்பு: காதல், அழகு, அலங்கார சொல்லாடலின் தன்மை, மற்றும் ஆன்மாவின் அமரத்துவம் என்பதாகும். இந்த உரையாடல் அமைதியான ஒரு சூழலில், ஒரு நதிக்கரையில், ஒரு மரத்தின் நிழலில் நடக்கும் உரையாடல். சாக்ரடீஸ் பீடெரஸுடன் காதல் பற்றி விவாதிக்கிறார், மேலும் அலங்காரச் சொல்லாடல், பேச்சுக்கள் என்பன சத்தியத்தைக் காட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும், பிறரை மயக்கி ஆதிக்கம் செலுத்துவதற்காக அல்ல என்று அன்றே அவர் தெளிவு படுத்தியுள்ளார்.

சாக்ரடீசின் வயதான மற்றும் நம்பிக்கைக்குரிய நண்பர் கிரிட்டோவுடனான உரையாடலில் ஒரு நாட்டின் குடிமக்களின் கடமை, சட்டத்திற்குக் கீழ்ப்படிதல் மற்றும் பிற கடமைகள் பற்றி விவரித்ததாகக் குறிப்பிடுகிறார். ஆக இப்படிப் பல உரையாடல்கள் மூலம் சாக்ரடீஸ் முன்வைத்த தத்துவங்களின் முக்கியக் கூறுகளைக் கீழ்க்கண்டவாறு பட்டியலிடலாம்.

  • உன்னையே அறிந்து கொள் (Know Thyself) - இது அவரது முக்கியக் கருத்தாகும்.
  • கண்ணால் காண்பதை விடப் பகுத்தாய்ந்து அறிவதே உண்மையான அறிவைத் தரும்.
  • வாழ்க்கையில் மிக முக்கியமானது நற்பண்புகளை வளர்த்துக் கொள்வது என்பதாகும்.
  • சுய விசாரணைக்கு உட்படாத வாழ்க்கை வாழ்வதற்குத் தகுதியற்றது. (The unexamined life is not worth living)

அறிவு மற்றும் அறம் குறித்த கருத்துக்கள்

சாக்ரடீஸின் தத்துவம் மனிதனைப் பற்றியது. பிரபஞ்சம் பற்றி அல்ல. "உன்னையே அறிந்து கொள்" (Know Thyself) என்பது அவரது முக்கியக் கருத்தாகும். பரிசீலிக்கப்படாத வாழ்க்கை வாழத் தகுதியற்றது என்று முழங்கிய அவர் அறிவு என்பது தனிநபர் கொண்டிருக்கும் கருத்து அல்ல. அது பொதுவான, புறநோக்கான (Objective), சரியான வரையறைகளைக் கொண்ட கருத்தாக்கமாகும். எடுத்துக்காட்டாக, “நீர்" என்பதன் வரையறை H2O என்பதே. அதன் நிறம், சுவை மாறலாம், ஆனால் அதன் அடிப்படை வரையறை மாறாது.

அதைப் போல அறம் பற்றியும் வரையறுக்க முடியும் என்ற அவர் அறம் ஒன்றே (Virtue is One) ஆகும் என்றார். நீதி, வீரம், நிதானம், கருணை போன்ற பிற பல்வேறு நற்பண்புகள் அனைத்தும் ஒரே "அறத்தின்" கிளைகளாகும் என்றும் இந்த அறத்தைப் பகுத்தறிவின் மூலமே அறிய முடியும் என்றும் கூறினார். மேலும் நற்பண்புகளைப் பயிற்றுவிக்கவும் முடியும் என்றார். இந்த வகையில் இவர் பகுத்தறிவின் முன்னோடியாக மெய்யியல் வரலாற்றில் காணப்படுகின்றார்.

அறிவே அறம் எனும் இவர் மனிதர் அறியாமையின் காரணமாகத்தான் தவறு செய்கிறார்கள். அவர்கள் எது சரி, எது தவறு என்று முழுமையாக அறிந்து கொண்டு விட்டால், தவறு செய்ய மாட்டார்கள் என்றார். எனவே, அறிவே அறத்தை நோக்கி நடத்தும் என்பது அவரின் அறக்கோட்பாடாகும். இதைக் கூர்மையாகச் சிந்தித்துப் பார்த்தால், கடவுளின் மற்றும் மதத்தின் பெயரால் வழங்கப்படும் அறக்கோட்பாடுகளும், பண்பு நல வழிகாட்டல்களும் ஏற்க முடியாதவை என்ற புரிதலுக்கு இட்டுச் செல்லும்.

நீதி குறித்த பார்வை

சாக்ரடீஸ் நீதியை ஓர் இயற்கையான, உன்னதமான மனிதப் பண்பாகக் கருதினார். அது ஆன்மாவுக்கு இசைவு (Harmony) மற்றும் அமைதியைத் தரக்கூடியது. அவரது எதிராளிகளான திராசிமேக்கஸ் மற்றும் மற்றவர்கள், “நீதி என்பது வலிமையானவர்களின் விருப்பம்" அல்லது “பலவீனர்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட செயற்கையான கருத்து" என்று வாதிட்டனர். சாக்ரடீஸ் இதை மறுத்து, நீதி என்பது சமூகத்தின் அடிப்படை அஸ்திவாரம் என்றும், ஒரு நல்ல அரசு இந்த நீதியைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அரசின் நோக்கம், தனிநபர்களின் ஆன்மிக இசைவை (Individual Justice) சமூக அளவில் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும், அதாவது சமூகத்தின் ஒவ்வொரு பகுதியும் இணைந்து இசைவாகச் செயல்படுவதே “சமூக நீதி" என்றார். நீதி என்பது மனிதரின் ஒரு நற்பண்பு. ஒருவரைத் தன்னுள்ளும், சமூகத்தினருடனும் இணக்கமாகவும், கனிவுடனும் இருக்க வைக்கும் பண்பு. இதை அறிந்து விட்டால் மனிதர் இயல்பாகவே நல்ல காரியம் மட்டும் செய்வார்.

மனித மனம் என்பது பறக்கும் ஒரு குதிரை வண்டி. அதைக் கட்டுப்படுத்தி ஓட்டும் தேரோட்டிதான் பகுத்தறிவு. இந்தப் பகுத்தறிவு சுயம் பற்றிய தெளிவின் மூலமே கிட்டும். எது நீதி, எது அன்பு, எது அழகு, எது அறம், எது அறிவு, எது அறியாமை, எது சரியான அரசு, எது விவேகம் போன்ற வாழ்க்கை மதிப்பீடுகளை அவர் உரையாடல்கள் மூலம் தெளிவு படுத்தினார்.

அவர் நீதி குறித்து சொன்னதின் சாரம்:

  • நீதி என்பது உயர்ந்த குணம். அது பகுத்தறிவைக் கொண்டே வருவது. அநீதி என்பது குறைபாடுள்ள குணம். அது அறியாமையால் வருவது.
  • அதீதமான ஆசையும், வேட்கையும் முரண்பாடுகளைத்தான் உண்டாக்கும். அநீதியான செயல்களுக்கு இட்டுச் செல்லும்.
  • நீதியுடன் வாழ்பவன் வாழ்க்கை நிம்மதியானது, மகிழ்ச்சியானது.
  • ஆன்மாவின் முக்கியக் குணம் என்பதே அறத்துடன் செயல்படுவதே.
  • அறம் பற்றிய அறிவே அறிவு.
  • நற்பண்பு என்பதே நீதியின் அடிப்படை.
  • எந்த ஆன்மா அதிகமாக நீதியை நாடுகின்றதோ அந்த ஆன்மா பெரும் மகிழ்ச்சியோடு இருக்கும்.
  • பகுத்தறிவே வழிகாட்டி, திசைக் காட்டி. ஆன்மா பகுத்தறிவுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும், இந்த இரண்டும் ஒத்திசைய வேண்டும். அதற்கு உடல் மற்றும் மனப் பயிற்சிகள் தேவை. உடலின்ப வேட்கை அறிவையும் ஆன்மாவையும் ஆட்கொள்ள அனுமதிக்கக்கூடாது. நீதி என்பது மனிதரின் இயல்பான பண்பு. அரசு இந்த நீதியைப் பாதுகாக்கவேண்டும். சமூகத்தின் அடித்தளமாக நீதியே அமையும்.

வழக்கும், தண்டனையும், மரணமும்

சாக்ரடீஸ் இருக்குமிடங்களில் எல்லாம் எப்போதும் இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருப்பது சிலருக்கு எரிச்சலைத் தந்தது. சாக்ரடீஸ் நாள்தோறும் இளைஞர்களிடம் உரையாடியது கிரேக்க ஆட்சியாளர்களைக் கோபப்படுத்தியது. அவர் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அனிடஸ் என்ற அரசியல் வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுத்தனர். இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தனக்குப் பெருமை சேர்ப்பதற்காகச் சாக்ரடீஸ் தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதாகவும், அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் சாக்ரடீஸ் மீது அனிடஸும், லைகோனும், மெலிட்டஸும் குற்றம் சுமத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அவர் மீது சுமத்தப்பட்ட மூன்று முக்கிய குற்றச்சாட்டுகள்:

(1) அரசு அங்கீகரித்த கடவுள்களை நம்பாதது. (2) புதிய கடவுள்களை அறிமுகப்படுத்தியது. (3) இளைஞர்களைக் கெடுத்தது.

கிரேக்கர்கள் தொழுது வணங்கும் கடவுள்களைத் தூற்றி, ஒரு புதுக்கடவுளைத் தானே உருவாக்குகிறார், வானத்தைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார் (ஏனெனில் அக்காலக்கட்டத்தில் கிரேக்கர்கள் இயற்கையையே கடவுளாக வழிபட்டனர்). சந்திரனை மண் என்றும், சூரியனைக் கல் என்றும் சொல்கிறார். புதிய மதக் கோட்பாடுகளை

நீதிமன்றத்தில் சாக்ரடீஸ் ஆற்றிய உரையின் சுருக்கம்:

“டெல்பி தெய்வம் என்னை மானுடர்களிலே பேரறிவாளி என்று கூறியது. எனக்கு எல்லாம் தெரியாது என்பது பற்றித்தான் தெரியும். ஆனால் டெல்பி கடவுள் ஏன் அப்படிச் சொன்னார் என நான் யோசித்தேன். அப்படி யோசித்த பிறகு எனக்கு ஒரு யோசனை தோன்றியது. என்னை விடச் சிறந்த அறிவாளி எவரையேனும் தேடிக் கண்டுபிடித்து விட்டால் அந்தத் தெய்வத்திடம் போய் இதோ பார், என்னைவிடச் சிறந்த அறிவாளி ஒருவர் இருக்கிறார். நான்தான் எல்லோரையும் விட அறிவாளி என்றாயே என்று கேட்டு விடுவது என்று எண்ணினேன். ஆகவே சிறந்த அறிஞர்கள் பலரை அணுகிப் பேசினேன். ஆராய்ந்தேன். அவர்களுடன் நான் பேசிப் பார்த்ததில் அவர்கள் அறிவாளி அல்ல என்பதை அறிந்து கொண்டேன். நான் சோதித்துப் பார்த்ததால் அவர்களுக்கு என் மீது பகைமை ஏற்பட்டது. தெய்வவாக்கை உண்மைதானா என்று சோதித்துப் பார்ப்பதற்காகத்தான் நான் அவர்களிடம் வாதம் செய்து பார்த்தேன். சத்தியத்தை நான் சொல்லி ஆக வேண்டும். மிகவும் அறிந்தவர்கள் என்று புகழ் பெற்றவர்கள் எல்லாரும் மிகவும் அறிவிலிகளே! அறிவற்றவர்களே! அவர்களைப் போல புகழ் பெறாத ஒரு சிலர் உண்மையில் அறிவாளிகளாக இருப்பதையும் அறிந்து கொண்டேன். இதற்காக நான் அலைந்த அலைச்சலும் பட்ட துன்பமும் கொஞ்ச நஞ்சமல்ல. தெய்வ வாக்கைத் தேர்ந்தெடுக்கத்தான் இவ்வளவு கஷ்டத்தையும் பொறுத்துக் கொண்டேன்" என்று தொடங்கி நீண்டதோர் உரையை அவர் நிகழ்த்தினார்.

“சாவு என்பது என்ன என்று அறிய இயலாதது. அறிய இயலாத ஒன்றை அறிந்து விட்டதாக எண்ணிக் கொண்டு எதற்காக அச்சப்பட வேண்டும்? நான் எப்பொழுதும் தத்துவ விசாரணை செய்பவனாகவே இருப்பேன். ஆண்டவன் கட்டளைக்குப் பணிந்து நடப்பேனே தவிர உங்கள் உத்தரவுக்குப் பணிய மாட்டேன். உயிரும் வலிமையும் உள்ள வரையில் இந்தத் தத்துவ விசார முறையைப் போதிப்பதை நான் நிறுத்தப் போவதில்லை. பெருமையும் வலிமையும் அறிவும் பொருந்திய ஏதென்ஸ் நகரில் வாழும் குடிமக்களே, ஞானம் சத்தியம் இவைகளைப் பற்றியும், ஆத்ம விசாரத்தால் உங்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருவது பற்றியும் துணியும் நீங்கள் கவலை இல்லாமல் ஏன் பணத்தையும் புகழையும் சேர்த்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்றுதான் கேட்பேன். குறுக்கு விசாரணை செய்து கொண்டே இருப்பேன். மதிப்பற்ற விஷயங்களை மதிப்புள்ளதாகப் பெரிதாக எண்ணி வாழும் உங்கள் அறியாமையை உங்களுக்கு உணர்த்துவேன். ஆண்டவன் இந்த நாட்டுக்கும் உங்களுக்கும் கொடுத்து அருளிய அரும்பொருள் நான். என்னைக் கொன்று விட்டால் எளிதில் என்னை போல் ஒருவன் கிடைக்க மாட்டான். இப்படிப் பேசுவதற்காக நீங்கள் நகைக்கலாம். அரசாங்கம் என்ற பெரிய குதிரை நிதானமாகச் செல்லும். அதைத் தட்டி வேகமாக ஓட வைக்கும் ஊசி நான்" - சாக்ரடீஸ் இவ்வாறாகக் கூறினார்.

இதன் பின்னர் நீதி மன்றத்தில் தீர்ப்பு கூறும் தருணம் வந்தது. மரணம், மன்னிப்பு என்ற இரண்டு வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டன. நீதிக் குழுவின் உறுப்பினர்கள் 501 பேர் வாக்குப்பதிவு செய்யத் தொடங்கினர். 220 பேர் சாக்ரடீஸை மன்னித்து விடுமாறும், 281 பேர் மரண தண்டனை அளிக்கவும் வாக்களித்தனர். சாக்ரடீஸ் மன்னிப்புக் கேட்டால் விடுதலை செய்வதாகச் சொன்னார்கள். அவர் மன்னிப்புக் கேட்கவில்லை. அவருக்கு விஷம் கொடுத்துக் கொல்ல வேண்டும் என்ற தண்டனையை வழங்கினார்கள்.

மரணம் சூழ்ந்த போது

மரண தண்டனை நிறைவேற்ற காலக் கெடு விதிக்கப்பட்டு சாக்ரடீஸ் சிறையிலடைக்கப்படுகின்றார். ஒவ்வொரு நாளும் அவரின் குடும்பத்தினரும், நண்பர்களும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அந்த நாட்களிலும் அவர் மெய்யியல் உரையாடல்களைக் கூர்மையாக நிகழ்த்தியதைப் பிளேட்டோ பதிவு செய்துள்ளார்.

கிரீட்டோ, சாக்ரடீஸின் நெருங்கிய நண்பர், அவரைக் காப்பாற்ற நினைக்கிறார். அதற்காக ஒத்துழைப்புத் தரச் சாக்ரடீசுடன் வேண்டி கிரீட்டோ பல்வேறு காரணங்களை முன்வைக்கிறார். சாக்ரடீஸின் நண்பர்கள் அவரைக் காப்பாற்றாவிடில், நண்பர்கள் அவரைக் காப்பாற்ற நினைக்காதவர்கள் என்ற களங்கம் நண்பர்களுக்கு ஏற்படும் என்றும், சாக்ரடீஸ் தன் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களை விட்டுவிட்டுச் செல்வது தவறு எனவும் கூறுகிறார். மேலும் சாக்ரடீஸின் மற்ற நண்பர்கள் அவரைக் காப்பாற்றுவதற்குத் தேவையான பணம் செலவிடத் தயாராக உள்ளனர் என்கின்றார்.

சாக்ரடீஸ் இதை உறுதியோடு மறுக்கின்றார். என்னைப் போன்றவர்கள் எந்த நாட்டிற்குத் தப்பி சென்றாலும் அங்கும் அரசாங்கத்தால் கொல்லத்தான் படுவோம் என்றார். மேலும் அவருக்கு நாட்டின் சட்டத்தின் மீதுள்ள ஆழமான மரியாதையைத் தெரிவிக்கின்றார். ஒருவரின் முதல் கடமையானது, சட்டத்தை மதிப்பது ஆகும். தன்னுடைய நாட்டின் சட்டங்களை மதிப்பது ஒரு குடிமகனின் அடிப்படைப் பணியாக இருக்க வேண்டும், ஏனெனில் அந்தச் சட்டங்கள்தான் குடிமக்களை ஆளும் முறையை உருவாக்குகின்றன என்று கூறுவது இந்த உரையாடலின் முக்கியமான புள்ளிகளில் ஒன்று. ஏனெனில் சாக்ரடீஸ் ஒருவகையில் சட்டங்களைத் தெய்வீகக் குரல் போல பாவிக்கிறார் என்பதாகும். ஆனால் மனிதர்களால் அவை உருவாக்கப்படுகின்றன என்பதையும் அவர் மறுக்கவில்லை. அவர் சட்டங்களை மனிதர்களால் உருவாக்கப்பட்டவை என்று மட்டுமல்லாமல், ஒரு சமுதாயத்தின் ஒழுங்கை நிலைநாட்டும் அடிப்படையான ஒழுக்கத்திற்கானவை எனவும் பார்த்தார். இதை வாசிக்கும் போது அந்தக் காலக் கட்டத்தையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இப்படியாக ஒவ்வொரு நாளும் மெய்யியல் உரையாடலில் ஈடுபட்ட சாக்ரடீசுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நாளும் வந்தது. அந்த மாலைப் பொழுதில் மனைவி, குழந்தைகளை வீட்டுக்குச் செல்லச் சொல்லுகின்றார். பிற நண்பர்கள் துக்கம் சூழ, சொல்ல இயலாத துயரத்துடன் அவரைச் சூழ்ந்தனர். ஹெம்லாக் (Hemlock) என்ற கொடிய விஷத்தை ஏந்தி வந்த அந்தக் காவலாளி கண் கலங்கி நின்றான். அவனிடம் தான் விஷத்தை அருந்த வேண்டிய முறை பற்றிச் சாக்ரடீஸ் வினவினார். அவனோ தழுதழுத்த குரலில் "இதுவரை நான் பலவந்தப்படுத்திதான் விஷத்தைக் கொடுப்பது வழக்கம். ஆனால் இன்று எனக்கு அதிசயமாகவே உள்ளது" என்று சொல்லி, “விஷத்தை விழுங்கிய சிறிது நேரம் நடந்து கொண்டே இருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக கால் மரத்துப் போகும். பிறகு எல்லாமே செயலற்றுப் போகும்" என்றான்.

சாக்ரடீஸ் விஷத்தை அருந்தினார். நடந்து கொண்டே அவர் உரையாடினார். யாரும் என் மரணத்திற்காக அழக்கூடாது என்று கண்டிப்பாகச் சொன்ன அவர் கிரீட்டோவிடம் இறுதியாகச் சொன்னார்,

“கிரீட்டோ, எனக்கு ஒரு உதவி செய்வாயா?"

“சொல்லுங்கள் சாக்ரடீஸ்! என்ன செய்ய வேண்டும்?" - கிரீட்டோவின் குரல் தழுதழுத்தது.

“நான் அசிலிபியஸ் (Asclepius) தெய்வத்திற்கு ஒரு கோழி கடன் பட்டுள்ளேன். அதைச் செலுத்திவிட மறந்துவிடாதே!"

"வேறு என்ன செய்ய வேண்டும் சாக்ரடீஸ்?”

சாக்ரடீஸிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

- இரா.முரளி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.