தமிழின் செழுமைக்கும், வளர்ச்சிக்கும் பெருந்தொண்டாற்றியவர்கள் ஈழத் தமிழறிஞர்கள், அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், தெய்வத் தமிழ் வளர்த்த ஆறுமுக நாவலர், ‘யாழ்நூல்’ படைத்தளித்த சுவாமி விபுலானந்தர், பண்டைத் தமிழ் நூல்களைப் பதிப்பித்து வழங்கிய ‘பதிப்புச் செம்மல்’, சி.வை.தாமோதரம்பிள்ளை, ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.க.வை உருவாக்கிய கதிரை வேற்பிள்ளை முதலியவர்களாவர். அந்த வரிசையில் ந.சி. கந்தையாபிள்ளையும் இடம் பெற்றவர்.

na c kandaiyapillaiசிறந்த நூலாசிரியர், மொழி ஆய்வாளர். அகராதித்துறை முன்னோடி. பொது அறிவுத் துறையில் முத்திரைப் பதித்தவர். சமூக சீர்திருத்த எழுத்தாளர். தமிழ் மொழி, தமிழ் எழுத்து, தமிழிலக்கியம், தமிழர் கலை, தமிழர் வரலாறு, தமிழர் நாகரிகம், தமிழர் பண்பாடு முதலிய பல துறைகளில் ஆராய்ச்சிப் படைப்புகளை வழங்கிய பெருமைக்குரியவர் ‘நற்றமிழ் அறிஞர்’ ந.சி.கந்தையாபிள்ளை!.

யாழ்ப்பாணத்தின் அருகிலுள்ள கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டு நன்னியர் சின்னதம்பி என்பவருக்கு மகனாகப் பிறந்தார். கந்தரோடைப் பள்ளியில் கல்வி கற்றுத் தேர்ச்சி பெற்றார். தாம் பயின்ற பள்ளியில் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.

தமிழ்ப் பணியில் மிகுந்த ஈடுபாடும், ஆர்வமும்; கொண்டு தமிழிலக்கிய, இலக்கண நூல்களை ஆழ்ந்து கற்றார். பின்னர் ஆசிரியர் பணியிலிருந்து விலகி மலேயா நாட்டிற்குச் சென்று, பிரித்தானியா தொடர் வண்டிச் சேவையில் சிறிது காலம் பணிபுரிந்தார்.

மலேயாவிலிருந்து இலங்கை திரும்பி தமிழ்மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இரத்தினம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

சங்க காலத் தமிழின் இலக்கிய வளத்தை, தமிழரின் பண்பாட்டு வாழ்வை அனைவரும் அறிந்து பயன் பெற வேண்டுமென்ற உயரிய நோக்கில், சங்க இலக்கியங்களை உரைநடையாக எழுதும் பணியை மேற்கொண்டார். பத்துப்பாட்டு, அகநானூறு, பதிற்றுப்பத்து, கலிங்கத்துப்பரணி, பரிபாடல், கலித்தொகை முதலிய சங்க நூல்கள் பலவற்றை உரைநடையில் எழுதி முடித்தார்.

தமிழகத்திற்குச் சென்று தங்கி பல நூல்களை எழுதி வெளியிட்டார். தமது நூல்களைப் பதிப்பித்து வெளியிட இலங்கையில் போதிய அச்சக வசதிகள் இல்லாததால், தமிழ் நாட்டிற்கு வருகை புரிந்தார். ‘முத்தமிழ் நிலையம்’, ‘ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம்’, ‘திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்’ முதலிய பதிப்பகங்கள் கந்தையா பிள்ளையின் நூல்களை வெளியிட்டுச் சிறப்பித்தன.

தமிழின் மீது தணியாத பற்றுக் கொண்ட இவர் தமது ஆங்கிலப் புலமையின் துணை கொண்டு தமிழர் வரலாற்றை நன்கு ஆராய்ந்தார். உலகின் மிகப் பழைய நாகரிகம் திராவிட நாகரிகமென்றும், ஆரியர்களின்; பொய் புனைவுகளைத் தமிழர்கள் புறந்தள்ள வேண்டுமென்றும் வரலாற்றுச் சான்றாதாரங்களுடன் எடுத்துக்காட்டினார். இவர் படைத்த நூல்களை தமிழ் மொழி, தமிழ்நாடு, ஆரியம், மகளிர், தமிழ் இலக்கிய அறிமுகம், அகராதி, நீதிநெறி, பொது அறிவு என அறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.

ந.சி. கந்தையாபிள்ளை எழுதி அளித்துள்ள நூல்கள் : பதிற்றுப்பத்து வசனம், பத்துப்பாட்டு உரைநடை, கலித்தொகை உரை, அகநானூறு வசனம், புறப்பொருள் விளக்கம், கலிங்கத்துப் பரணி வசனம், விறலிவிடு தூது வசனம், பெண்கள் புரட்சி, பெண்களும் சமூகமும் அன்றும் இன்றும், பெண்கள் உலகம், உங்களுக்குத் தெரியுமா?, பொது அறிவு, பொது அறிவு வினாவிடை, நூலகங்கள், அறிவுக் கட்டுரைகள், அறிவுரை மாலை, அறிவுரைக் கோவை, தமிழர் சமயம் எது?, சைவ சமய வரலாறு, இந்து சமய வரலாறு, சிவன், தமிழர் பண்பாடு, தமிழ் - பழமையும் புதுமையும், முச்சங்கம், நமது தாய்மொழி, திராவிட மொழிகளும் இந்தியும், நமது மொழி, நமது நாடு, ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா?, ஆரிய வேதங்கள், தமிழ்க் கடவுளுக்கு ஆரியப் பாடலா?, திராவிட நாகரிகம், திராவிடம என்றால் என்ன?, மறைந்த நாகரீகங்கள், திராவிட இந்தியா, பாம்பு வணக்கம், ஆதி மனிதன், ஆதி உயிர்கள், மரணத்தின் பின், மனிதன் எப்படித் தோன்றினான்?, தமிழர் யார்?, சிந்து வெளித் தமிழர், உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு, தென்னிந்திய குலங்களும் குடிகளும், தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், திருவள்ளுவர், திருக்குறள், திருக்குறள் அகராதி, தமிழ்ப் புலவர் அகராதி, தமிழ் இலக்கிய அகராதி, காலக்குறிப்பு அகராதி, அகத்தியர், தமிழ் ஆராய்ச்சி, நீதி நெறி விளக்கம் மூலமும் உரையும் (ஆங்கில மொழி பெயர்ப்பு) தமிழ் மொழி, தமிழர் வரலாறு, தமிழர் நாகரிகம், தமிழகம், தமிழ் இந்தியா, திராவிட நாகரிகம், சிவ வழிபாடு, முச்சங்கங்கள், பரிபாடல், மறைந்த நாகரிகம், செந்தமிழ் அகராதி, கலிவர் யாத்திரை, இராபின்சன் குரூசோ, தமிழ்விளக்கம்.

“சங்க நூல்களின் பொருள் புலவர்களுக்கும் எளிதில் விளங்குவதன்று. அதற்குக் காரணம் அந்நூல்கள் செய்யப்படுகின்ற காலத்து வழங்கிய சொற்களிற் பெரும்பாலான சொற்கள் இன்று வழக்கு வீழ்ந்து விட்டமையேயாகும். பொருள் விளங்குதற் கருமையுடைய இந்நூல்கள் வித்துவான். பண்டிதர், புலர்வகளால் மாத்திரம் பயிலப்பட்டு வருகின்றன. பொது மக்கள் சங்க நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் பொருள்கள் எவை என்பதை அறியமாட்டார்கள். அவர்கள் சங்க நூற்பொருள்களை எளிதில் அறிந்து கொள்ளும் முறையில் அவற்றை உரைநடைப்படுத்த வேண்டுமென்னும் உணர்ச்சி இன்றைக்குப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் எமது உள்ளத்தெழுந்தது. ஆகவே, சங்க நூற்களிற் பலவற்றை உரைநடைப் படுத்தலாயினோம்”. என ‘பத்துப்பாட்டு உரைநடை’ என்னும் நூலின் முகவுரையில் சங்க இலக்கிய நூல்களை உரைநடைப்படுத்தியதன் அவசியத்தைக் ந.சி.கந்தையாபிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

“அகப்பொருள் புறப்பொருள் இலக்கணங்கள் மற்ற மொழிகளில் காணப்பெறாது தமிழ் மொழி ஒன்றனுக்கு மாத்திரம் உரிமை பூண்ட தனிப்பெரும் பொருள்களாம்” என ‘புறப்பொருள் விளக்கம்’ என்னும் நூலின் முகவுரையில் ந.சி.கந்தையாபிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

“பெண்கள் ஆண்களுக்கு அடிமைள்; அவர்கள் ஆடவருக்கு எல்லா வகையிலும் கட்டுப்பட்டு ஒழுகும் கட்டுப்பாடுடையவர்; பெண் பிறவி பாவமிகுதியினால் உண்டாவது என்பன போன்ற பொல்லாத கொள்கைகள் இன்றைய மக்களிடையே காணப்படுகின்றன. உண்மையில் பெண்களே ஆடவரிலும் உயர்ந்தவர்களாகவும், அவர்களைச் சீர்திருத்தியவர்களாகவும் காணப்படுகின்றனர். இன்று பெண்கள் ஆடவருக்கு அடிமைப்பட்டு இருப்பது பொருளாதார நிலை ஒன்றினாலேயேயாகும். பெண்கள் வாழ்க்கைச் செலவுக்கு ஆடவரின் கையை எதிர்பாராது தாமே பொருள் ஈட.;டும் நிலையில் இருப்பார்களேயாயின் அவர்கள் ஆடவருக்குக் கட்டுபட்டு நடக்கும் கட்டாயம் உண்டாகாது. தொடக்கத்தில் பெண்களே பயிர்த் தொழில், கைத்தொழில்கள் புரிந்து ஆடவருக்கும் உணவு அளித்து வந்தார்கள். அதனால் ஆடவர், மகளிரிக்குப் பணிந்து நடந்தார்கள். பெண்கள் ஆட்சியே ஆதியில் நடைபெற்றது. பிற்காலத்தில் ஆடவர் சுயநலங்கருதி அவர்களின் பொருளாதார நிலையைப் பறித்து அவர்களைத் தமக்கு அடங்கி நடக்கும்படி செய்தனர். பெண்கள் ஆண்களுக்கு அடங்கி நடத்தல் இயற்கை விதியன்று, ஆண்கள் பெண்களுக்கு அடங்கி நடத்தலே இயற்கை விதியாகும்” என ‘பெண்கள் புரட்சி’ என்னும் நூலில் ந.சி.கந்தையா பெண்களின் மாண்புகளை வரலாற்று முறையில் ஆராய்ந்து கூறியுள்ளார்.

“கந்தையாவின் சிந்தையும் செயலும்
செந்தமிழுக்குச் சேர்த்த நூல் ஒன்றா இரண்டா?
ஈட்டிய அறிவெலாம் ஊட்டினான்
காட்டுவோம் அவர்க்கு நன்றிக் கடனையே!{”

- என பாவேந்தர் பாரதிதாசன் ந.சி. கந்தையாபிள்ளையின் தமிழ்ப்பணியைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

“மக்கள் தோன்றிய காலத்தே தோன்றி இன்று வரையில் உலக வழக்கு ஒழியாது வருகின்ற தமிழின் புலமையையும் பெருமையையும் உணர்ந்து அம்மொழியை ஓம்புவது நம் எல்லோருடைய கடமையாகும்” என ‘நமது மொழி’ என்னும் நூலில் வலியுறுத்துகிறார்.

“தமிழர்கள் யாவரும் தமிழ் மொழியைப் பற்றி அதன் சிறப்பைப் பற்றி நன்கறிந்திருத்தல் வேண்டும்” என்பதை பெரு விருப்பமாகக் கொண்டு தமிழ் மொழியின் சிறப்பையும், பெருமையையும் விளக்கும் நூல்கள் பலவற்றை படைத்துள்ளார்.

தமிழில் தோற்றம் பெற்ற நவீன நூல்களில் அகராதிகள் முக்கிய இடம் பெறுகின்றன. அவற்றிற்கு மொழி வளர்ச்சியில் பெரும்பங்குண்டு. அய்ரோப்பியர்கள் இத்துறையில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள் அளவிடற்கறியது. அவர்களைப் பின்பற்றி ஈழத்துத் தமிழறிஞர்கள் பலர் அகராதி ஆக்கப்பணிகளில் ஈடுபட்டனர். அந்த வகையில் ந.சி.கந்தையாபிள்ளையும் தமிழிலக்கிய அகராதி, தமிழ்ப்புலவர் அகராதி, திருக்குறள் அகராதி, செந்தமிழ் அகராதி என அகராதிகளை அளித்துள்ளார்.

“திருக்குறளுக்கு அருஞ்சொல் அகராதி ஒன்று இருப்பின் அது திருக்குறள் மூலங்களைக் கையாளுவார்க்குப் பெரும்பயன் அளிப்பதாகும். இதுவன்றி எவ்வெச்சொற்கள் எவ்வெவ்விடங்களில் ஆளப்பட்டுள்ளனவென்று அறிந்து கொள்வதற்கும் அது துணையாகும்” எனத் திருக்குறள் அகராதி நூல் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார்.

சரித்திரம் பயிலும் மாணவரும் பிறரும், அரசர், புலவர், புகழ் பெற்றவர்கள், பெரிய நிகழ்ச்சிகள், கண்டுபிடிப்புகள் போன்றவற்றின் காலங்களை வேண்டியபோது புரட்டிப் பார்த்து அறிந்து கொள்வதற்குத் தமிழில் ஒரு நூல் இதுவரை இல்லை. அக்குறையைப் போக்கும் பொருட்டு ‘காலக்குறிப்பு அகராதி’ என்னும் நூலை ந.சி. கந்தையாபிள்ளை வெளியிட்டு உள்ளார்.

“ந.சி. கந்தையாபிள்ளை எழுதியுள்ள ‘தமிழர் சரித்திரம்’ எனும் நூலானது மக்கள் தோற்றத்தைப் பற்றிய தொன்னூல்கள் பலவற்றின் ஆராய்ச்சியின் பயனாகவும், எகிப்தியர், சுமேரியர், பழைய சிந்து நாட்டினர் முதலிய பண்டை நாகரிக மக்களின் வரலாற்றினைப் பண்டைத் தமிழர் வரலாற்றினோடு ஒப்பிட்டு ஆராய்ந்ததன் பயனாகவும் அமைந்துள்ளது. இந்நூல் எளிய தமிழ் நடையில், தக்க முறையில் எழுதப்பட்டுள்ளது. ஐவகை நில மக்கள், சங்க நூற்றெய்வங்கள், பண்டைத் தொழில் வகைகள், தமிழர் - ஆரியர் கலப்பு என்பவற்றைப் பற்றிய அரிய கருத்துக்கள் கற்பவருக்கு புத்தறிவுப் பயப்பன” என பேராசிரியர் கே.சுப்பிரமணியப்பிள்ளை பதிவு செய்துள்ளார்.

“நாட்டு நிகழ்ச்சிகள், நாடாண்ட மன்னர் பெருமக்கள், சமுதாயத்தை நல்வழிப்படுத்திய புலவர் பெயர்கள் நம் அறிவு வளர்ச்சிக்கு இன்றியமையாதன இத்தகைய அரிய செய்திகளைத் தொகுத்துக் கூறும் இந்நூலை அறிவுக் களஞ்சியம் என்று சொல்லாம்” என ந.சி கந்தையா பிள்ளையின் ‘காலக்குறிப்பு அகராதி’ நூல் குறித்து தமிழறிஞர், பேராசிரியர் மா. இராசமாணிக்கனார் புகழ்ந்துரைத்துள்ளார்.

“மக்களிடையே கல்வியைப் பரப்புவதற்கு நூலகங்களும், வாசக சாலைகளும் சிறந்தவையாகும். நமது நாட்டிலும், பிற நாடுகளிலும் காணப்பட்ட பழைய நூலகங்களின் வரலாற்றைப் பயில்வதால் நம் வளர்ச்சிக்கு நூலகங்கள் எவ்வளவு இன்றியமையாதன என்பதை அறிய முடியும்” என்பதை வலியுறுத்தி ‘நூலகங்கள்’ என்னும் நூலை எழுதி அளித்துள்ளார்.

தமிழ் கற்கும் மாணவர்களின் உள்ளப் பாங்கையறிந்து உருவாக்கியதால், கந்தையா பிள்ளையின் நூல்கள் அனைத்தும், எவ்வித இடையூறுமின்றிப் பயிலும் எளிமை கொண்டவை” எனக் குடந்தைத் தமிழறிஞர் முனைவர் அ.ப.சத்தியமூர்த்தி, தமது ஆய்வேட்டில் குறிப்பிடுகிறார்.

உலக நாகரிகங்களில் உயர்ந்ததும், மிகத் தொன்மையானதும், திராவிட இனத்திற்குச் சொந்தமானதும் சிந்துசமவெளி நாகரிகம் என உறுதியான ஆய்வை, நூலாகப் பதிவு செய்துள்ளார். ‘இராமாயணம் நடந்த கதையா?’ என்னும் அவருடைய ஆய்வு நூல், பல புதிய செய்திகளின் தொகுப்புப் பெட்டகமாக அமைந்துள்ளது. ‘ஆரிய வேதங்கள்’, ‘இந்து சமய வரலாறு’ முதலிய நூல்கள், சமய உலகின் சரித்திர மெய்யறிவைத் தமிழர் நெஞ்சில் விதைத்தன.

காலவெள்ளத்தைக் கடந்து நிற்கும் நூல்கள் பல தந்த ந.சி. கந்தையாபிள்ளை 1967 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

- பி.தயாளன்

Pin It