தாய்வழிச் சமூகம் படிப்படியாக மறைந்து உடைமைச் சமூகம் உருவான காலத்தில் ஆண் என்ற ஆளுமைக்கு சமமான சக்தியாக விளங்கிய பெண் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டாள். நிலவுடமைச் சமூகத்தில் குடும்பம் என்கிற அமைப்பு நிறுவனமயமாக ஆன போது பெண்குலத்தின் மீது கட்டுக்கடங்காத கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டன.
"வீடு" என்பது விடுதலை கிடைக்காத பிரதேசமானது. அவள் மீது கற்பு என்கிற புனிதப் போர்வை போர்த்தப்பட்டு ஆணின் தனியுடமையாக ஆக்கப்பட்டாள்.
கற்பு கோட்பாட்டை போற்றிய சமூகத்தில்தான் பரத்தைமையும் அங்கமானது. பெண்ணைச் சிந்திக்கவும் செயலாற்றவும் விடாமல் அடிமைகளாகவே வைத்திருப்பதில் புராணங்களுக்கு பெரும்பங்குண்டு. மதம், சாதி, குடும்பம் போன்ற நிறுவனங்கள் இத்தகைய ஆதிக்கத்துக்கு பேருதவியாயிருந்தன என்றால் அது மிகையாகாது.
நவீனக் கவிதை, பழைய வரலாறுகளை, புராணங்களைப் புதிய வெளிச்சம் பாய்ச்சி வினாச் சாட்டை சொடுக்குகிறது.
நம்பி அணைத்திருந்த
யசோதரையின்
கையைப் புறந்தள்ளி நடந்தவர்
ரகசியமாகக் கூட
சொல்லிச் செல்லவில்லை
ஓர் ஆறுதல் மொழி
வரலாற்றை மறுவாசிப்பு செய்ய மகுடேசுவரன் (காமக் கடும் புனல்) முற்படுகையில் புத்த புனிதங்களின் மீதும் கேள்வி எழுகிறது. திருமணமென்பது இன்றைய சூழலிலும் பெண்ணின் மீதான ஆணின் கைப்பற்றும் அதிகாரத்தின் மமதை! அதனால்தான் புருஷ உத்தமனான இராமனுங்கூட தன் துணையைத் தீக்குளியலுக்கு கட்டளையிட முடிகிறது.
அப்பாவுக்கு
அறுபதினாயிரம் மனைவிகள்
இருந்தும் ஒரு சந்தேகம் இல்லை.
ராமனுக்கு
ஒரு மனைவி
ஆயிரம் சந்தேகங்கள்
கபிலனின் சின்னஞ்சிறு கவிதை பேருண்மைகளைச் சொல்லி, புனிதப் பாத்திரங்களின் மீது இடியாய் இறங்குகிறது.
இல்லறம் என்ற சொல் இல் + அறம் எனப் பிரித்து பெரியதொரு அர்த்தம் சொல்வது. ஆனால் நடைமுறையில் அறத்துக்கு எதிரான திசையில் நகர்கிற சூழலில் ஆறுதலாய் ஓர் குரல் ஸ்ரீ நேசனுடையது.
நீங்கள் கூட பார்த்திருக்கலாம்
நள்ளிரவில் கிராமத்துச் சாலையில்
தன் சைக்கிளின் பின் புறத்தில்
இயேசு
ஓர் இளம் பெண்ணை
அமர்த்திச் செல்வதை
(காலத்தின் முன் ஒரு செடி)
போர்களையும், யுத்தங்களையும் தமிழனின் வீரம் பெருமையாக பார்க்கும் பெருமித மரபொன்று தமிழில் உண்டு. ஆனால் மகுடேசுவரனின் ஆக்ரோஷமான கேள்வி புறநானூறுகளைப் புரட்டிப் போடுகிறது.
வாய்யா வா
வரலாற்றறிஞரே வா
சரித்திரத்தின்
பழுப்புத்தாள் புரட்டிச் சொல்லு
போர்க்களத்தில் வென்ற படை
தோற்ற தேசத்து மகளிரை
என்ன செய்தது
'அமைதிப்படை' என்று பெயர் சூட்டிக் கொண்ட இராணுவ மிருகங்கள் ஈழத்து பெண்டிர் பலரை பாலியல் பலாத்காரம் செய்ததையும், சமகாலத்தில் மணிப்பூரில் இந்திய இராணுவம் பழங்குடி பெண்களின் மீது ஆடிய வெறியாட்டத்தையும் மணிப்பூர் பெண்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தையும் இக் கவிதை நினைவு படுத்தவில்லையா...?
நவீனக் கவிதைகளில் "பெண் மொழி" என்ற ஒன்று எப்படி பயன்படுத்தப்படுகிறதோ அதே போல "ஆண் மொழி" என்ற சங்கதியும் உண்டு. இது சிலநேரம் அருவருப்பூட்டுவது; வக்கிரம் நிறைந்தது.
அழகாயில்லாததால்
அவள் எனக்குத்
தங்கையானாள்
மிகச் சிறந்த கவிதைகளைத் தந்த கலாப்ரியா - விடமிருந்து இப்படியோர் விஷவரிகள்!
மிகச்சிறந்த கவிதைகளைத் தந்து "பழமலைத் தடம்" என்ற புதிய போக்கினை உருவாக்கிய பழமலயும்கூட சறுக்குகிறார்.
ஏறக்குறைய அரை முதுகுக்கு
இறக்கி அணிகிறார்கள்
இங்கு, வெயில் மழை படுவதில்
இருக்கிறதா ஏதாவது நன்மை?
....
....
எது எப்படியோ நம் பெண்களுக்கு
இதில், இவ்வளவு "இளகிய மனம்" கூடாது
(கொனராக் பாட்டியின் ஊன்றுகோல் பக் 21)
பெண்களின் ரவிக்கை அளவு குறித்து என்னே ஓர் அக்கறை?
வாமு.கோமு என்ற வக்கிரம் உருவாக்குகிற காட்சியைப் பார்த்தால் மனசில் அப்பிக்கிடக்கிற அழுக்கு அப்பட்டமாய்த் தெரியும்.
அவள் பெயர் எதுவாகவோ இருக்கட்டும்
அவள் குடும்பத் தலைவி
ஐந்து மணியிலிருந்து ஜெயா டீவியில்
சுப்ரபாதம் கேட்டு மகிழ்ந்து
புருஷனுக்கு முத்தமிட்டு அனுப்பி - தனது
பட்டு வண்ண மேனியைக் குளியலறைக்குள்
குளிப்பாட்டி பிங்கி ஆடையுடுத்தி
பிரார்த்தனைக் கூட்டம் சென்று
இறைவன் ஆசி பெற்று
நேரே மாதர் சங்க கூட்டமொன்றில்
மைக் பிடித்து, ஆடவர் கொட்டமடிக்கும்
அருமை வசனங்கள் பேசி கை தட்டல் பெற்று
கொக்கோ கோலாவை உதடு மீது பட்டும் படாமல்
குடித்து விடைபெற்று,
ரிஸ்ட் வாட்சில் மணி பார்த்து
கெனடிக் ஹோண்டாவை வீட்டினுள் தள்ளி
தனதறையில் நைட்டிக்குள் நுழைந்து
வேலைக்காரனை ஜாடையாய் அழைக்க
ஆடை அவிழ்த்து ஆசையாய் வந்தவனிடம்
சொல்வாள் "நான்தான் மேல்"!
பெண் விடுதலை குறித்த சரியான புரிதலின்றி மரபு மீறாத ஆணாதிக்க சிந்தனைகளுடன், மாற்றங்களைச் சகிக்காத வக்கிர வார்த்தைகளால் வனையப்பட்ட கவிதை இது. எல்லா இலக்கிய வரிகளுக்குப் பின்னும் அந்த வர்க்கத்தின், சாதியின், மதத்தின் பின்னணி அரசியல் ஒன்றுண்டு.
இத்தகைய ஆதிக்கம், வக்கிரங்களைக் கண்டு நெஞ்சு பொறுக்காமல் ஆயிரம் கோடி ஆண்களின் குற்ற உணர்வுடன் எழுதினான் மதியழகன் சுப்பையா
ஒன்று செய்
தினமும் காரி உமிழ்
ஆதிக்கச் சமூகம் நிறம்
கழுவி வெறுக்கிறேன் (மல்லிகைக் காடு)
பெண்குலத்தின் உமிழ்நீரில் கழுவிக் களைந்திட இயலுமோ ஆயிரமாண்டு ஆணாதிக்கக் கறைகளை... களங்கங்களை...?
வசந்த் செந்தில் வசதியான தீர்வொன்று தருகிறார் :
பின் மண்டையில்
துப்பாக்கியை அழுத்தி
சுட்டுக் கொல்
அகாலத்தில்
அம்மாவின் மார்பு வலிக்கு
மருந்து வாங்க சென்ற பெண்ணை
மூச்சடைக்க கற்பழித்தவனை
ஒரு கவிதை எழுதுகிற
நேரம்தான் அதற்கு ஆகும்!
யோசியுங்கள் நண்பர்களே!
கவிதை எழுகிற நேரமா இது?