எழுத்தாளர் பூமணி அவர்கள் கிராமைவக் குறித்துச் சொல்லும்போது "அவரால் ஒரு நொடி கூடச் சும்மா இருக்க முடியாது. குப்பையைக் கிளறிக் கொண்டே இருக்கும் கோழியைப் போன்றவர்" என்று சொன்னதற்கு ஏற்பப் புதுச்சேரிக்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்த வாழ்விலும் (1998-2021) பலவிதமான செயல்பாடுகளைச் செய்த வண்ணமாகவே இருந்தார்.

ki rajanarayanan 450புதுச்சேரியில் இயங்கும் சாகித்ய அகாடமிக்கு வழிகாட்டும் பொதுக்குழு உறுப்பினர்களில் புதுச்சேரி மாநிலத்திற்கு இடமில்லையே என்று புதுச்சேரிக்காரர்களுக்கே தோன்றாத ஒன்று கிராவுக்குத் தோன்றியது. தோன்றினால் போதுமா? அதைச் செயல்படுத்திக் காட்ட வேண்டாமா? காரியங்களை நகர்த்தத் தொடங்கினார். ஒரு காரியத்தை எங்கே தொடங்குவது? எப்படிக் காயை நகர்த்துவது? என்ற நடைமுறைத் தந்திரத்தில் கிரா, கை தேர்ந்த நிபுணர். புதுச்சேரியில் உள்ள எந்த எழுத்தாளிடமும் இது பற்றி மூச்சு விடவில்லை. அப்பொழுது தமிழ்நாட்டின் சார்பாகப் பொதுக்குழு உறுப்பினர்களாகக் கவிஞர் தமிழன்பன் அவர்களும் சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சுந்தரமூர்த்தியும் இருந்தனர். அவர்களைப் பிடித்தார். அவர்கள் மூலமாக மார்ச் அல்லது ஏப்ரலில் டெல்லியில் பொதுக்குழு கூடும்போது புதுச்சேரி அரசாங்கத்திற்கென்று ஒரு உறுப்பினர் வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றச் செய்தார். நிறைவேற்றிய கையோடு புதுச்சேரி அரசாங்கத்தின் முதல் பொதுக்குழு உறுப்பினராக அவரே தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் சாகித்திய அகாடமியின் பொதுக்குழு உறுப்பினராகப் பணியாற்றினார். (1998 - 2002)

இதேபோல் ஒரு நாள் வாழ்த்துச் சாலையில் நடந்து செல்லும் நல்லதொரு மாலை வேளையில்

"பஞ்சு, நான் பல யோசனைக்குப் பிறகு ஒரு சிற்றிதழ் நடத்த முடிவெடுத்து விட்டேன். சாகித்திய அகாடமி மற்றும் சினிமாக்காரர்கள் கொடுத்த பணத்தை எல்லாம் அப்படியே செலவழிக்காமல் வங்கியில் போட்டு வைத்துள்ளேன். அதற்குக் கிடைக்கும் வட்டிப் பணத்தில் இந்தப் பத்திரிக்கையை விடாமல் கொண்டு வந்து விடலாம் என்று நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் பத்திரிக்கைக்கு ஒரு பெயர் சொன்னால் அடுத்த மாதமே வேலையைத் தொடங்கி விடலாம்" என்று சொன்னார். நானும் நடைப் பயிற்சி முடிந்து வீட்டிற்கு அருகில் வரும் பொழுது அவரை மனதில் வைத்துக் கொண்டுதான் "கதை சொல்லி" என்று பெயர் வைக்கலாம் என்று சொன்னவுடன் "நல்லா இருக்கு பஞ்சு. அதையே வைத்து விடுவோம்" என்று பத்திரிக்கையையும் தொடங்கி விட்டார். அவரை ஆசிரியராகவும் என்னையும் பிரஞ்சுப் பேராசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களையும் ஆலோசகர்களாகப் போட்டு முதல் இதழ் திருவள்ளுவர் ஆண்டு 2028 தைத்திங்களில் - ஜனவரி 1997 - இல் வெளிவந்தது. கூடவே அவருடைய பிறந்த நாளான செப்டம்பர் 16ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் சிறந்த சிறு பத்திரிக்கை ஒன்றைத் தேர்வு செய்து 5000 பரிசும் கொடுத்து வந்தார். "கரிசல் கட்டளை விருது" என்பது அதற்குப் பெயர். கதை சொல்லி குறித்து நிறையப் பேசலாம். இங்கே இந்த இடத்தில் நான் சொல்ல வந்தது பூமணி சொன்னது போலத் தனது இறுதிக் காலம் வரை ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டே இருந்தார் என்பதைத்தான். அப்படி அவர் தொடங்கியதுதான் "தாப்பு" என்ற இந்த அமைப்பும்.

"தாப்பு" என்ற இந்தக் கரிசல் வட்டார வழக்குச் சொல்லிற்கு நீண்ட பயணத்தின் இடையில் பறவைகள் தங்கி இருந்து கிளம்பும் இடம்; காதலர் சொல்லி வைத்து சந்திக்கும் இடம்; வேட்டையாளர் வேட்டைக்காகக் காத்திருக்கும் இடம்; மனிதப் பயணத்தின் இடையே பெளர்ணமி தோறும் நாம் சந்திக்கும் இடம்" என்று இதற்குக் கதை சொல்லியில் விளக்கம் அளித்தார் கி.ரா.

"பௌர்ணமி தோறும் அந்திப்பொழுதில் மாலை ஆறு முப்பதிலிருந்து எட்டு முப்பது வரை ஒத்த உள்ளம் கொண்ட ரசிக மனங்கள் வந்து கூடும் இடம். புதுவை வானூர்தி சாலை, நாவலர் நெடுஞ்செழியன் பள்ளியில் இந்தக் கூடல். இது இயக்கம் சார்ந்ததோ ஒரு அமைப்போ அல்ல. அதனால் நிறுவனர், நிர்வாகிகள் கிடையா.

நோக்கம்:

புதுச்சேரியில் இருக்கும் அறிஞர்கள், படைப்பாளிகள், கடையாளர்கள் போன்ற ரசிக உள்ளங்களை மாதம் ஒரு தடவையாவது சந்திக்க வைக்க வேண்டும் என்பதே.

படித்த நூல்கள், பார்த்த காட்சிகள், கேள்விப்பட்டு மனசில் அழுத்திக் கொண்டிருந்த விடயங்கள், நாட்டு நடப்பு - இப்படியான எதைப் பற்றியும் ஒருவரோடு ஒருவர் மனம் திறந்து கலந்து உரையாடலாம்.

திங்கள் தோறும் தொடர்ந்து அவசியம் வர வேண்டும் என்று கட்டாயம் இல்லை. நினைத்தால் வரலாம். நினைத்தவுடன் எழுந்து போய்விடலாம். எவர் வந்தாலும் வராவிட்டாலும் இந்தப் பௌர்ணமி சந்திப்பு ஒவ்வொரு முழு நிலவு அந்தி தோறும் நடந்து கொண்டே இருக்கும் தொடர்ந்து" என்று முதல் கதை சொல்லியிலேயே ஒரு அறிக்கையும் வெளியானது. முதல் தாப்புக் கூட்டம் 03.05.1996 அன்று நடந்தது.

அப்பொழுதெல்லாம் நாவலர் நெடுஞ்செழியன் உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் ஏதும் கிடையாது. ஒரு கொடிக்கம்பத்தின் கீழ் நல்ல ஆற்று மணல் சூழ்ந்து கிடக்கும். பள்ளி மாணவர்கள் விளையாடிக் களித்த அந்த மணலில் மாணவர்களின் கால் தடங்களும் விழுந்து புரண்ட தடங்களும் அழியாமல் கிடக்கும். அதில்தான் போய் உட்காருவோம். பெரும்பாலும் வருகிறவர்கள் கி.ரா வின் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்றுதான் வருவார்கள். ஆனால் கிரா மேன்மையான தந்திரத்தால் எல்லோரையும் ஏதாவது ஒன்று குறித்துப் பேச வைத்து விடுவார். சில நேரங்களில் கருத்து முரண்பாடுகளும் அதன் விளைவாகச் சூடான விவாதங்களும் ஏற்படத்தான் செய்யும். கிரா தலையிட மாட்டார். அமைதியாக இருந்து விடுவார். அவர் அமைதி மற்றவர்களையும் அமைதிப்படுத்தி விடும்.

அந்தக் கூட்டத்திற்குக் கி.ரா எழுத்தின் மேல் உள்ள பிரியத்தினால் கடலூர், விருத்தாசலம் போன்ற தூரத்து ஊர்களில் இருந்து எல்லாம் மாதந்தோறும் நண்பர்கள் வந்து செல்வார்கள். நகரத்திலிருந்தும் முத்த தமிழறிஞர், இசைக்கலைஞர், தனித்தமிழ் அன்பர் திருபுருகனார் உட்பட அந்த மேட்டில் இருக்கும் பள்ளிக்கு மிதிவண்டியில் வந்து செல்லுகிற காட்சிகளைப் பார்த்திருக்கிறோம்.

கிராவுக்கும் அவருக்கும் கதை சொல்லி முதல் இதழ் வந்தபோது காரசாரமான விவாதங்கள் நடந்தன. "நீங்கள் தமிழைக் கொலை செய்கிறீர்கள்" என்று குற்றம் சாட்டியவர் தான் திருமுருகனார். ஆனால் தமிழ்ப் புலவர்கள் பலரிடமும் காணாத இசைப் புலமை மிக்கவர் திருமுருகனார் என்று அறிந்தவுடன் இசையில் நாட்டம் உள்ள கி.ராவும் அவரும் நண்பர்களாகி விட்டனர். அந்த நட்புதான் மேட்டில் நடக்கும் அந்தத் தாப்பு நிகழ்ச்சிக்கும் அவரை இழுத்து வந்தது என்று சொல்ல வேண்டும்.

இன்னும் தனித்தமிழ் அன்பர் இலெனின் தங்கப்பா, அவருடைய துணைவியார், இருமொழி எழுத்தாளர் நண்பர் ராஜா, திருமாவளவன், சிலம்பு செல்வர் ஆகிய முதலிய பலரும் வந்து தாப்பு நிகழ்ச்சியைப் பெருமைப்படுத்தினர்.

இவ்வாறு ஏறத்தாழ 10 ஆண்டுகள் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. அந்த நாவலர் நெடுஞ்செழியன் பள்ளிக்கூடத்திற்கு அரசாங்கத்தின் சார்பில் ஒரு காவலர் இருந்தார். அவர் கொஞ்சம் ஒவ்வாமை காட்டினார். ஆனால் கல்வித்துறையில் செல்வாக்கு மிக்க எனது மாணவ நண்பர் அமிர்தக் கணேசன் மூலமாக அவரையும் கூட்டத்தில் வந்து உட்காரும் அளவிற்கு அமைதிப்படுத்தி விட்டோம். ஆனாலும் மாலையில் மயக்க மருந்து சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்பதனால் "ஒவ்வொரு பௌர்ணமியும் இவங்க வந்து தொல்லை கொடுக்கிறார்கள்" என்ற நினைப்பில் தொடர்ந்து தொல்லை கொடுக்கத் தொடங்கி விட்டார். இதற்கு மேல் இது சரிவராது என்று கி.ரா நினைத்ததால் அத்துடன் தாப்புக்கூடலும் நின்றுபோனது. எங்களுக்கெல்லாம் வருத்தமாகப் போய்விட்டது. கடலூரிலிருந்து விருத்தாசலத்தில் இருந்தும் நண்பர்கள் இரண்டு மூன்று மாதம் விசாரித்துப் பார்த்துவிட்டுப் பிறகு அவர்களும் விசாரிப்பதை நிறுத்திவிட்டார்கள். ஒரு நல்ல காரியம் 10 ஆண்டு நடந்ததே பெரிது என்று நாங்களும் மனதைத் தேற்றிக் கொண்டோம்.

க.பஞ்சாங்கம்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.