புதுமலர் பத்திரிகையின் மூன்றாம் ஆண்டு இதழ் சூழலியல் சிறப்பிதழாக இப்பொழுது வெளிவருகிறது. சாதிச் சிக்கல், மதச்சிக்கல், கார்ப்பரேட் கொள்ளைச் சிக்கல் போல, சூழலியலும் மனித குலத்திற்கு மிகப்பெரும் சிக்கலாக நம்முன் எழுந்து நிற்கிறது. புவி வெப்பமயமாதல், கனிம வளங்கள் சூறையாடல், பசுமைக்குடில் வாயு வெளியேற்றம், வேதியியல் உரம், மலட்டு விதை, பூச்சிக்கொல்லி மருந்து, குடிநீர்த் தட்டுப்பாடு எனத் திரும்பும் பக்கமெல்லாம் சூழலியல் பிரச்சனைகள் வரிசைகட்டி நிற்கின்றன.

சென்ற நூற்றாண்டைப் பொறுத்த வரை முதலாளிகள் செல்வ வளத்தைப் பெருக்குவதற்கு உழைப்பாளிகளைக் கசக்கிப் பிழிந்து உபரி இலாபத்தைப் பெற்று வந்தனர். இன்றைய கார்ப்பரேட் காலகட்டத்தில் அவர்களது இலாப வெறிக்கு இந்த அணுகுமுறை போதுமானதாக இருக்கவில்லை.  எனவே உழைப்பாளிகளைச் சுரண்டுவதோடு, இயற்கையைச் சுரண்டும் வேலையை நடைமுறைப் படுத்தி வருகின்றனர்.

இயற்கையைச் சுரண்டும் பொழுது ஊதிய உயர்வு, போனஸ், தொழிற்சங்க உரிமை என எந்தப் பிரச்சனையும் வருவதில்லை. முட்டுவளியும் குறைவு, எனவே பணத்தைக் குவிப்பதற்கு வேட்டை நாயைப் போல இயற்கையின் மீது பாய்கிறது மூலதனம்.

இயற்கை, மனிதனின் தேவைக்கு அனைத்தையும் வழங்கும். ஆனால் மனிதனின் பேராசைக்கு வேண்டியதை அது தராது. ஆனால், பணத்தாசை கண்ணை மறைப்பதால், பாலூட்டும் தாயின் மார்பகத்தை அறுக்கும் வேலையைக் கார்ப்பரேட்டுகள் தொடங்கி விட்டனர்.

ஆனால், இயற்கையின் வளங்கள் பூமியில் குறிப்பிட்ட அளவுதான் உள்ளன. அவை அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி அல்ல. அவற்றை வகை தொகையின்றிச் சூறையாடினால் அவ்வளங்கள் எத்தனை காலம்தான் தாக்குப் பிடிக்கும்?

குறிப்பாக மனிதனின் அடிப்படைத் தேவையான தண்ணீருக்கே இன்று தட்டுப்பாடு வந்துவிட்டது. மூன்றாம் உலகப் போர் வந்தால், அது தண்ணீருக்காகத் தானிருக்கும் எனக் கூறுமளவுக்கு இன்று நெருக்கடிகள் முற்றி வருகின்றன.

இயற்கையை நாசமாக்கும் இப்போக்கு குறித்த விழிப்புணர்வு கடந்த காலத்தில் மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால் தற்பொழுது விழிப்புணர்வு பெருகி வருவது வரவேற்கத் தக்கது. அதன் விளைவாகச் சூழலியல் போராட்டங்கள் உலகெங்கும் இன்று அலை அலையாக எழுச்சி பெற்று வருகின்றன.

இன்றைய காலகட்டத்தில் இரண்டு வகையான சூழலியலாளர்கள் இருப்பதை அவதானிக்க முடிகிறது. சூழலியல் குறித்து எழுதுவதும், பரப்புரை செய்வதுமாக இருப்பவர்கள் ஒரு வகை. பிறிதொரு வகையினர் சூழலியல் கொள்ளை குறித்து எழுதுவதோடு நின்று விடாமல், அதிகாரத்திற்கு எதிரான சூழலியல் போராட்டங்களில் நேரடியாக பங்கேற்று முன் உதாரணமாகத் திகழ்பவர்கள் . இவ்விருவரது சேவையும் முக்கியமானவையே! இருப்பினும், இயற்கையை நாசப்படுத்தும் கார்ப்பரேட்டுகளை, மக்கள் விரோத அரசுகளை எதிர்த்துத் துணிவுடன் போராடும் சமரசமற்ற போராளிகள் இன்றைய காலகட்டத்தில் மிக மிக அவசரமாகத் தேவைப் படுகின்றனர்.

அரசுகளின் சூழலியல் கொள்கையை மாற்றுவதில் இத்தகைய களப் போராளிகளுக்குக் கூடுதல் பொறுப்பு உள்ளது. ஏனெனில் தண்ணீருக்குள் இருக்கும் மீன்கள் போல இவர்கள் மக்களோடு பின்னிப் பிணைந்திருப்பதால், மக்களது தேவையை வேறு எவரைக் காட்டிலும். இவர்கள் நன்கறிவர். எனவே இப்படிப்பட்ட சூழலியல் ஞானமும், அனுபவமும் கொண்டவர்கள் மனித நேயச் சூழலியல் கொள்கையை வகுக்கப் பயன்மிக்க பரிந்துரைகளை வழங்க முடியும். அவற்றை ஆதரிக்கும் கடமை மக்களுக்கு இருக்கிறது. நிறைவேற்றும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

அத்தகைய முயற்சிகளையும், மாற்றுச் சூழலியல் பண்பாட்டையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய மிகப்பெரும் பொறுப்பு பத்திரிகைகளுக்கு உள்ளது.

சூழலியல் விழிப்புணர்வு ஊட்டும் இப்பொறுப்பினைப் புதுமலர் இதழ் அர்ப்பணிப்புடன் ஏற்கிறது.

இது ஒருவகையான பரப்புரை மட்டுமே! களச்செயல்பாடுகள் தொடரும் பொழுது, இப்பரப்புரை நிறைவு பெறும்.

- கண.குறிஞ்சி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.