மழைக் காலத்தில் ஒரு நாள் தொடர் மழையையே தாங்காத வண்ணம் மழை நீர் வெள்ளம் போல் எங்கும் தேங்கி மக்களின் போக்குவரத்தும், இயல்பு வாழ்வும் பாதிக்கப்படுகிறது. சூழலியல் விளைவுகளை அலட்சியம் செய்து தான் நம் நகரங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

மனித செயல்பாடுகள் இயல்பான நீர் சுழற்சியைத் தடுப்பதாலே வெள்ளமும், வறட்சியும், நன்னீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. நகர்புறங்களில் முறையானத் திட்டமிடல் இல்லாமல், நீர்நிலைப் பகுதிகளில், ஆறு, குளங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட தனியார் கட்டடங்களும், அரசு கட்டடங்களும், எண்ணிக்கையில் பெருகி விட்டன.. இந்த ஆக்கிரமிப்புகளை நீக்கி நீர் நிலைகளுக்கு இடம் விட்டு, இயல்பான நீர் சுழற்சிக்கு வழிவிட்டாலே வெள்ளமும், நீர்ப் பற்றாக்குறையும் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

ஆனால் இங்கு வெள்ளச் சீரழிவுகளுக்கு தற்காலிக நிவாரணமே தேடப்படுவதால் மீண்டும் மீண்டும் வெள்ளத்தால் அவதிக்குள்ளாகும் நிலைக்கே நாம் தள்ளப்படுகிறோம். வருமுன் காக்காமல் காலங்கடந்தே அழிவைப் பற்றி சிந்திக்கும் போக்கே இங்குக் காணப்படுகிறது. இதனால் விளிம்பு நிலை மக்களே வாழ்விடங்களை, வாழ்வாதாரங்களை இழந்து உயிர்ச் சேதத்திற்குள்ளாகி பெருமளவு பாதிக்கப் படுகின்றனர், வெள்ளத்தின் மூலம் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் எங்கும் பரவுவதால் நீரால் பரவும் நோய்கள் பெருகுகின்றன.

இயற்கையான சூழலில் மழை பெய்ந்தால் அது மண்பரப்பு வழியே ஊடுருவிச் சென்று நிலத்திற்கு அடியில் வடிந்து விடுகிறது. அகனால் நிலத்தடி நீர் மட்டமும் குறையாமல் பாதுகாக்கப் படுகிறது. ஆனால் நகரமயமாக்கலில் காங்கிரீட், சிமெண்ட் சாலைகளாலும் கட்டடங்களாலும் மழைநீர் நிலத்திற்குள்ளே செல்வது தடுக்கப் படுகிறது. மிகக் குறைந்த அளவு தண்ணீரே நிலத்திற்குள் வடிந்து செல்கிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து போகிறது.

காலநிலை மாற்றத்தால் இனி அடிக்கடி பேரிடர்கள் நேரிடும் வாய்ப்புள்ளதால், எதையும் எதிர்கொள்ளும் தயார் நிலைக்கு நம்மைத் தகவமைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை.

வெள்ளத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க எது முறையானத் தீர்வாக அமையும் என்பதைத் தொழில்நுட்ப ரீதியாக மட்டும் கருதாமல் சூழலியல் வலையமைப்பின் வழி நோக்கினால் சூழலியல் சார்ந்த தீர்வே நீர்நிலை சுழற்சியை மீட்பதற்கும், நீர்ப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் தீர்வுகளாகவும் அமையும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

நிச்சயமற்ற தன்மையின் சவால்களை இயற்கை, சூழலியல் சார்ந்த தீர்வுகளால் மட்டுமே எதிர் கொள்ள முடியும். பன்மயத்துவம் நீடித்தமைக்கு இட்டுச் செல்லும், இது வெள்ள நிவாரணத்திற்கும் பொருந்தும். பன்மயத் தன்மையும் மீள்தன்மையும் கொண்ட இயற்கை சார்ந்த வெள்ள மேலாண்மை நடைமுறைகளை பரவலாக்கப்பட்ட சிறியக் கட்டமைப்புகள் மூலம் பின்பற்ற வேண்டும். சிறியக் கட்டமைப்புகளாக இருக்கும் போது தேவைக்கேற்ப மறுசீரமைப்பதும் எளிது. மையப்படுத்தப்பட்ட மற்றும் பரவலாக்கப்பட்ட திட்டங்களை தேவைக்கேற்ப ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும் வெள்ளத்தை வெளியேற்றுவதற்கு பதிலாக அதன் மூலம் நிலத்தடி நீரை உயர்த்தவும், மறுசுழற்சிக்குப் பயன்படுத்தும் அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். வெள்ள மேலாண்மைக்கு ஆக்கிரமிக்கப்பட்ட நீர் நிலைகளை மறுசீரமைத்து, நீர் நிலைகளை ஆழப்படுத்த வேண்டும், நீர்த் தேக்கங்களை உருவாக்க வேண்டும், நிலத்தடி நீரை அதிகப்படுத்த உறை கிணறுகள், அகழிகளை ஏற்படுத்த வேண்டும்.

வெள்ள மேலாண்மைக்கு இயற்கை சார்ந்தத் தீர்வாக நீடித்த வடிகால் அமைப்பே (Sustainable urban designs–SUDS) பரிந்துரைக்கப்படுகிறது.

இத்தொழில்நுட்பம் வரிசையாய் பல நிலைகள் கொண்ட ஒரு மேலாண்மை அமைப்பு. இதில் பின்வரும் நிலைகளில் வெள்ள மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது.

1. மூலக் கட்டுப்பாட்டு முறை மூலம் வடிகால், ஆற்றுப்பகுதியில் செல்ல இருக்கும் தண்ணீரை இடைமறித்து மறுபயன்பாட்டிற்குப் பயன்படுத்தல், ஊடுருவக்கூடிய நிலக்கீல், (porous asphalt) சாலைகளை, நடைபாதைகளை ஏற்படுத்துதல், பசுங்கூரைகளை நிறுவுதல், பொதுவெளியில் மழைத் தோட்டங்கள், பசுங்கூரைகள் ஏற்படுத்துதல்.

2. முன்-சுத்திகரிப்பு முறைகள்: தாவரங்களுடன் கூடிய சரிந்த சதுப்பு நிலத்திலோ (bioswales), வடிகட்டும் அகழிகளிலோ செலுத்தி மழை நீரின் மாசுக்களை நீக்குதல்.

3. தேக்கும் முறைகள்: மழை நீரைத் தேக்கி அதை வளமாகப் பயன்படுத்தும் அமைப்புகளை ஏற்படுத்துதல். குளங்களில், நீர்த் தேக்கங்களில், நீர்நிலைகளில், நீர்நிலங்களில் மழை நீரை சேமித்தல்.

ஒவ்வொருப் பகுதிக்கும் நீர் ஊடுருவும் தன்மையும், நிலத்தின் உறுதித்தன்மையும், நீரின் தன்மையும் மாறுபடுவதால் அதற்கு தகுந்த முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

சூழலுக்கியைந்த நீடித்த வடிகால் அமைப்புகள் மூலம் மேல்பரப்பு நீரை, சேமிக்கவும், மறுபயன்பாட்டிற்கு உபயோகிப்பதன் மூலம் நீர் மாசுபாட்டைக் குறைத்து, நீரின் தரத்தை மேம்படுத்தலாம். பசுந்தீர்வுகளால் வெப்பநிலை குறையும். பசுங்கூரைகளும், பசுஞ்சாலைகளும் நீர் தேங்குவதைத் தடுத்து, நீரைத் தக்க வைத்துக் கொள்ளும்.

உலகளவில் மற்ற நாடுகளில் சிறப்பாக மேற்கொள்ளப்படும் வெள்ள மேலாண்மை நடைமுறைகளைப் பற்றி சுருக்கமாகக் காண்போம்.

சீனா:

2012ல் சீனாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டு 79 பேர் இறந்தனர். இப்பேரழிவு வெள்ள மேலாண்மை என்ற பிரச்சினையை முன் நிறுத்தியது. இப்பிரச்சினைக்கானத் தீர்வாகவே சீன அரசு பஞ்சு நகரங்கள் (Sponge cities) என்றத் திட்டத்தை முன்னெடுத்து 2015லிருந்து மும்முரமாக செயல்படுத்தியது. வெள்ளம் ஏற்படும் போது நகரம் பஞ்சு போல் அந்த நீரை உறிஞ்சித் தக்க வைத்துக் கொண்டு வெள்ளந்தாங்கிகளாக செயல்படும், தேவைப்படும் போது சேமித்த நீரை வெளியிடும் என்ற பொருளிலே பஞ்சு நகரம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இத்திட்டமானது நீரின் தரத்தைப் பாதுகாக்க இயற்கையை ஒத்த வளர்ச்சி கட்டமைப்புகளை ஏற்படுத்தும் வட அமெரிக்காவின் குறைந்த தாக்க வளர்ச்சி (Low impact development-LID) என்ற செயல்முறையை ஒத்ததே என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ள அபாயத்தை குறைப்பதற்கான, முதலில் செய்யவேண்டிய இயற்கையான வழி இயற்கையான நீர் நிலைகளை மீட்டெடுப்பதும், பாதுகாப்பதுமே. லிங்காங் என்ற சீனாவின் கடலோர நகரத்தில், உறிஞ்சக்கூடிய சாலைகளை ஏற்படுத்தி, பசுங்கூரைகளை, மழைத் தோட்டங்களை பசும் கட்டமைப்புகளை, நீர்நிலைப் பகுதிகளை, டிஸ்புல் என்ற செயற்கை ஏரி , நீர்த் தேக்கம் உருவாக்கப்பட்டதால் லிங்காங்கில் கனமழையால் நீர் தேங்குவது தடுக்கப்பட்டது.

பஞ்சு நகரம் குறித்து பேராசிரியர். கொங்கீயன் யு கூறுவதைக் கேட்போம். பஞ்சு நகரத்தின் அடிப்படைக்கருத்து எளிது. காங்கிரீட் சாலைகள் மழைநீர் நிலத்தால் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. நீர் ஊடுருவ முடியாதக் கடினமான பாதைகளால் இயல்பான நீர் சுழற்சி தடைபடுகிறது. 20-30% நீரே நிலத்தை அடைகிறது. காங்கிரீட் மூலம் மழை நீரை நீக்குவதற்குப் பதிலாக, நாம் இயற்கையே மழை நீரை உறிஞ்சவும், தூய்மையாக்கவும், பயன்படுத்தவும் விட்டு விடுகிறோம். வெள்ளங்கள் நம் எதிரி அல்ல, நாம் வெள்ளங்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம், நாம் நீரோடு நண்பர்களாகி விடலாம். இதுவரை நாம் செய்து வந்தது முற்றிலும் தவறு. கடந்த காலத்தில் நாம் நீர்நிலைகளிடமிருந்து அபகரித்த நிலங்களை மீண்டும் நீர்நிலைகளுக்கே கொடுக்க வேண்டும். இதன் மூலமாக சுற்றுச்சூழல் மாசுபடுவதும் குறைக்கப்பட்டு நம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.

இயற்கையை எதிர்த்துப் போராடுவதை விட்டு அதனுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே அவர் முன் வைக்கும் தீர்வு.

2015லிருந்து மொத்தம் 16 பஞ்சுமாதிரி நகரங்கள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் வெள்ளத்திலிருந்து மக்களின் வாழ்வை பாதுகாத்து, பொருள் சேதத்தைத் தவிர்க்க முடியும். மத்திய சீனாவில் உள்ள ஹெபி ஒரு மாதிரி பஞ்சு நகரம். அங்கு முதலில் 30 ச.கிமீ அளவில் பஞ்சு நகரக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. நகரக் கட்டமைப்பில் உள்ள கடினமான நீர் ஊடுருவாத நடைபாதைகளை நீர் ஊடுருவும் வகையில் மென்மையாக்குவதன் மூலம் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்திய பேராசிரியர். கொங்கியன் யூ அவர்கள் உலகளவில் வெள்ளமும், அதீத மழைப் பொழிவும் அடிக்கடி நேரிடுகிறது, இவை 1980ல் இருப்பதை விட இப்பொழுது நான்கு மடங்கு அதிகமாயுள்ளது. நகரக் கட்டமைப்புகள் நீடித்த வருங்காலத்திற்காக நாம் சார்ந்துள்ள இயற்கை அமைப்பைக் கொல்வதாக உள்ளது. இயற்கை சார்ந்த தீர்வுகளே நமக்கு சிறந்த சேவைகளை வழங்குகிறது. பஞ்சு நகரம் என்றக் கருத்தாக்கம் இயற்கை அமைப்பு மீண்டும் உருவாக அனுமதிக்கவும், வழி வகுக்கவும் செய்கிறது. நீரை வெளியேற்றுவதற்கு பதிலாக நீர் நிலங்கள், பஞ்சு நகரங்களின் மூலம் தக்க வைத்துக் கொள்ளும். சூழலுக்கியைந்த மேற்பரப்புகளை உருவாக்க வேண்டும், மழைக்காலத்தில் அவை வெள்ளத்தை உறிஞ்சிக் கொள்ளட்டும், வெயில் காலத்தில் அதையே பூங்காவாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் கழிவுநீருடன் சேர்ந்து மழை நீர் மாசடைவது தடுக்கப்படுகிறது. காங்கிரீட் தளங்களுக்கு பதிலாக சூழலுக்குகந்த நீர் உறிஞ்சும் தரையமைப்புகள் நீர் நிலத்தோடு சேர்வதை அனுமதிக்கும். வறண்ட காலநிலையில், இப்பொதுவெளி பூங்காவாக இருக்கும், மழைக் காலத்தில் அது வெள்ளத்தை ஏற்றுக் கொள்வதால் வேறு வெள்ளத் தடுப்பு சுவரோ அணையோ தேவையில்லை என்கிறார்.

இதனால் வெள்ளத்திலிருந்து நகரங்கள் பாதுகாக்கப் படுவதோடு நம் வாழ்வும், தூய நீரும், பசுமையும், மீன்கள், பறவைகளுக்கான வாழிடமும் மீட்கப்படும், நகரின் மத்தியில் ஒரு பூங்காவை, நீர் நிலங்களையும், ஆறுகளையும் மீட்பது மட்டுமல்லாமல் பஞ்சு நகரம் நீர் ஊடுருவும் சாலைகளை, நடைபாதைகளை, பசுஞ்சுவர்களையும், பசுங்கூரைகளையும், பசுங்கட்டிடங்களையும் கொண்டிருக்கும். மக்களும் பசுந்தீர்வு பெறுவர். 2020க்குள் 80% நகர்பகுதிகள் 70% மழை நீரையாவது தக்க வைத்து மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்பதே சீனாவின் பஞ்சு நகரத் திட்டத்தின் இலக்காக உள்ளது. இந்த முறை, வெள்ளத்தைக் குறைப்பதற்கு மட்டுமல்ல, தண்ணீர்ப் பற்றாக்குறையை நீக்கி தண்ணீர்த் தேவையை நிவர்த்தி செய்கிறது.

ஷாங்காய் உள்ளிட்டு 30 பஞ்சு நகரங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. அவை சீனாவின் மற்ற நகரங்களை விட இனிமையாகவும், கண் கவர்வதாகவும் உள்ளது.. தற்பொழுது சீனாவில் 250க்கு மேற்பட்ட இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் அமெரிக்கா, ரஷ்யா, இந்தோனேசியாவிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உலகளவில் ஆறுகள் இதே பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இது சீனாவுக்கான பதில் மட்டும் அல்ல. உலகளாவிய சூழலியல் பிரச்சனைக்கும் தீர்வாகவும் அமையும். இயற்கை சார்ந்த, சூழலியல் சார்ந்த தீர்வு தான் உலகளாவிலான தீர்வாகவும் இருக்க முடியும். என்று கூறுகிறார் அந்தப் பேராசிரியர். 

சீன அரசு ஷாங்காய் நகரில் 520 கிமீ தூரத்திற்கு பாதுகாப்பான கடற்கரை சுவர் கட்டியுள்ளது. ரோட்டர்டாமில் இருப்பது போல் ஆற்று நீர் வெள்ளப் பெருக்கைத் தடுக்கும் கதவுகளையும் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நெதர்லாந்து:

நெதர்லாந்து பல நூற்றாண்டுகளாக வெள்ளத்துடனும் கடல் நீர் மத்தியிலும் வாழ்ந்து வருகிறது. நெதர்லாந்து எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது நீர் மேலாண்மையில் அதன் நிபுணத்துவம். பல புதிய நீர் மேலாண்மை தொழில் நுட்பங்களுடன் நிபுணத்துவம் பெற்று. உலகளவில் வெள்ளம், மற்றும் கடல் மட்ட உயர்வைக் கையாள்வதில் நெதர்லாந்து முன்னணியில் உள்ளது.

நீரை சதுப்பு நிலத்திலிருந்து வெளியேற்றும் காற்றாலைத் தொழில்நுட்பம் அவர்களது பழமையான தொழில்நுட்பம் 15ஆம் நூற்றாண்டிலிருந்து அவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.. கடலிலிருந்து மீட்கப்பட்ட 3000 நிலப்பகுதிகளை (polders) உருவாக்கினர்.

நெதர்லாந்து நாட்டின் பெரும்பாலான பகுதிகள் கடல் மட்டத்திற்குக் கீழுள்ளன. நெதர்லாந்தில் 50 சதவீத நிலம் மட்டுமே கடலை விட ஒரு சில அடி உயர்ந்துள்ளது. அந்நிலையிலே நூற்றாண்டுகளாக வாழுவதால் தான் நீர் மேலாண்மையில் நிபுணத்துவம் பெறுவது அவர்களுக்கு அவசியமானது.. அப்படியிருந்தும் தடுப்பரண்களால் பாதுகாக்கப்பட்ட அம்மக்களின் பாதுகாப்புணர்வு 1853ல் வலுவிழந்தது 2000 ச. கிமீ நிலம் வடகடலின் வெள்ளத்தில் மூழ்கி ஓரிரவில் 1853 பேர் இறந்தனர். 1990களிலும் கடும் வெள்ளத்தால் அவர்கள் பாதிக்கப்பட்டனர். 1992ல் நெதர்லாந்து மக்களையும், நாட்டின் வளங்களையும் வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் தேசிய வெள்ளக் கொள்கையை ஏற்படுத்தினர்.

1997ல் கட்டப்பட்ட மேஸ்லாண்ட்கேரிங் என்ற நகரக்கூடிய தடுப்பணை நகரத்தையும், ரோட்டர்டாம் துறைமுகத்தையும் பாதுகாத்து வருகிறது. அவர்களது அரசியலமைப்பு சட்டம் வெள்ளத்திலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமையை அம்மக்களுக்கு வழங்கியுள்ளது. நெதர்லாந்து வெள்ளப் பாதுகாப்புக்கு உயர்ந்த தேசியத் தரத்தைக் கொண்டுள்ளது. அந்நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட தொழிற்மயமான மேற்குப் பகுதியை 10,000 ஆண்டுகளுக்கு வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் வண்ணம் கட்டமைக்கப்பட்டுள்ளது. குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் 4000 ஆண்டுகளுக்கு வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில் ஐக்கிய அமெரிக்கா 100 ஆண்டுகளுக்கு மட்டுமே வெள்ளப் பாதுகாப்பு தரும் விதத்தில் பாதுகாப்பு, மற்றும் காப்பீட்டுக் கொள்கையைக் கொண்டுள்ளது. பேராசிரியர். ஸெவென்பெர்க் அவர்களது நீர் மேலாண்மையைக் குறித்துக் கூறுவதைக் கேளுங்கள். அந்தக் காலக்கட்டத்தில், இயற்கையை முன்னறியவும் கட்டுப்படுத்தவும் முடியும் என நாங்கள் உறுதியாக நம்பினோம். இப்பொழுது நாம் பயணிக்கும் காலகட்டத்தில் நம்மால் இயற்கையைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட நிச்சயமற்றத் தன்மையை எதிர்கொள்ள வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து நெதர்லாந்தில் ஆற்றுக்கான வெளி (Room for the River) என்றத் திட்டத்தை வளர்த்தெடுத்தது செயல்படுத்தியது.. இது உண்மையிலே நீர் மேலாண்மையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

பழைய வெள்ளத்தடுப்பு முறையானது தடுப்பணைகளை கட்டுவதும், உறுதிப்படுத்துவதும், ஆற்றின் போக்கைக் கட்டுப் படுத்துவதுமாக இருந்தது. ஆனால் புதிய முறையில் ஆறுகளுக்கு பெரும் பகுதிகளை விட்டு விட்டோம். எங்கள் நாட்டில் பெருமளவு நீர் பெருகிய போது ஆறு விரிவடைய விட்டு விட்டோம். அது நீரை எதிர்த்து சண்டையிடுவது அல்ல. நீருடன் வாழ்வது. நெதர்லாந்தின் பெரும்பகுதி கடலிலிருந்து மீட்கப்பட்டப் பகுதிகள் (polders) தாழ்நிலங்கள் கடலிலிருந்து மீட்கப்பட்டு தடுப்பணைகளால் பாதுகாக்கப் பட்டவை. அந்நாட்டின் மிகப் பெரும் நகரங்களும் இதில் உள்ளடக்கம். இந்தத் தாழ்நிலங்களில் வளர்ச்சி திட்டங்களை அரசு கைவிட்டு மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் முன்னெச்சரிக்கை தரும் அமைப்புகளை ஏற்படுத்தியது. அதனால் பொதுமக்களும், அலுவலர்களும் வெள்ளத்தை எதிர்கொள்ள முழுத் தயார் நிலையில் இருக்கும் நிலையைப் பெற்றனர்.

பூங்கா, பொது இடங்களையும் அவசரநிலை வெள்ளத் தேக்கிகளாகப் பயன்படுத்துகின்றனர். கடலிலிருந்து பெரும் புயல் வெள்ளம் வரும் போது அவர்களின் அணுகுமுறையைப் பாதுகாப்பு அமைப்பு என்பதிலிருந்து, பாதுகாப்பு அமைப்புகள் தோல்வியுற்றால் என்ன செய்ய வேண்டும் என்றே மாற்றிக் கொண்டுள்ளனர். முதல் நிலையாகத் தடுப்பணைகள், இரண்டாம் நிலையாக இடம் சார்ந்த திட்டமிடல் எனப் பல்நிலைப் பாதுகாப்பு முறைகளைக் கையாளுகின்றனர். எந்தெந்தப் பகுதிகளுக்கு எந்தெந்தத் திட்டமுறைகள் பொருத்தமாகும் என்பதைக் கண்டறிந்து பொருத்தமானதை செயல்படுத்த வேண்டும். அதற்கு எங்களுக்கு 10 ஆண்டுகள் ஆனது

வெள்ளப் பாதுகாப்பு அமைப்புகளை உலகில் வேறெங்கும் இல்லாதபடி மிகச் சிறப்பான முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளதால் அதில் தோல்வி ஏற்படுவதற்கு ஓரண்டில் 10,000ல் ஒரு முறையே வாய்ப்புள்ளது. அந்நாட்டின் பொருளாதாரம் மூன்றில் இரண்டு பங்கு இந்தத் தாழ்நிலங்களிலே உள்ளது என் கிறார் அந்தப் பேராசிரியர்.

வெள்ளத் தடுப்பில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு டாலரும் வெள்ள அழிப்பில் ஏற்படவிருக்கும் 7-10 டாலரை பாதுகாக்கும் என உலக வங்கி கணக்கிட்டுள்ளது.

வெள்ள அபாயத்தில் உள்ள நகரங்களுக்கு ஸெவென்பெர்கென் அவர்கள் தரும் அறிவுரை என்னவென்றால் அடுத்து வெள்ளம் வரும் வரைக் காத்திருக்காமல், வெள்ளத்தை எதிர்கொள்ளத் தயாராவதே. நாங்கள் வெள்ளம் வந்தபின் எதிர்வுனை புரிவதில்லை, நாங்கள் வெள்ளச் சீரழிவை எதிர்பார்த்திருந்து தயாராகிறோம்.

நெதர்லாந்தில் இயற்கை வெள்ளச் சமவெளிகள் மீட்கப்பட்டன அவை வெள்ள நேரத்தில் உறிஞ்சும் பஞ்சுகளாக, வெள்ளத் தாங்கிகளாகவும், மற்ற நேரத்தில் அதன் இயல்பான நிலையில் பொழுதுபோக்கிற்கும் பயன்படுத்தப்படுகிறது.

வெள்ளத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்களோடு, நீரில் வாழ்வதற்கான சோதனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மிதக்கும் பண்ணை, மிதக்கும் காடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீர் மேலாண்மை நெதர்லாந்தில் ஆண்டிற்கு 5.5 பில்லியன் டாலர் தொழிலாக உள்ளது. தண்ணீர் பொறியியல் தொழில்நுட்பத்தில் ஒரு மென்மையான அணுகுமுறை உலகெங்கும் உள்ள நிபுணர்களால் தற்போது முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. உலக வெப்பமயமாதலால் கடல் மட்டம் உயரும் நிலையில், உலகத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. உலகளவில் கடந்த 20 ஆண்டுகளில் 8 செமீ அளவிற்கு கடல் மட்டம் உயர்ந்துள்ளது. கடல் அரிப்பினால் தாழ்ந்த கடற்கரைகளை உயர்த்தவும் ஸேண்ட் ஸ்கேபிங் என்ற சிறந்தத் தொழில் நுட்பத்தை நெதர்லாந்து கொண்டுள்ளது.

‘ஸேண்ட் ஸ்கேபிங்' தொழில்நுட்பத்தில் மூலம் மணல் இயந்திரத்தின் மூலம் கரையல்லாத பகுதியிலிருந்து பல மில்லியன் கசமீ அளவிற்கு மணல் எந்திரங்கள் மூலம் சீரமைக்க வேண்டிய கடற்கரையில் சேர்க்கப்பட்டு பின் அரிக்கப்பட்ட கடற்கரைகள் உயர்த்தப்படுகிறது. தற்போது நெதர்லாந்துக்கு வெளியே முதன் முதலாக இங்கிலாந்து, நார்ஃபொல்கின் வடகடற்கரையில் இம்முறையின் மூலம் கரை உயர்த்தப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது. கடல் மட்டம் சில சென்டி மீட்டர் உயர்ந்தால் இம்முறை மூலம் கடற்கரையை உயர்த்தலாம். கணக்கிடப்பட்டது போல் இந்த நூற்றாண்டுக்குள் 2. 5மீ அளவிற்கு கடல் மட்டம் அதிகமானால் தொழில்நுட்பத்துடன் உடனுக்குடன் சரி செய்ய முடியாது. பொறியியல் தொழில்நுட்பம் என்பதைக் காட்டிலும் நெதர்லாந்து மக்களிடம் கற்க வேண்டியது அவர்களது அணுகுமுறையும், கலாச்சாரமுமே என்பதையும் நாம் உணர வேண்டும். நெதர்லாந்து மக்கள் புவி வெப்பமயமாதலுக்குத் தகவமைத்துக் கொண்டனர். அதைப் பற்றிய அறிவையும் நிபுணத்துவத்தையும் மற்ற அபாயத்தில் உள்ள நாடுகளுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

உலகெங்கும் பல நாடுகளும் நீர் மேலாண்மை உத்திகளையும், தொழில்நுட்ப உதவியை நெதர்லாந்திலிருந்து இறக்குமதி செய்கின்றனர். நெதர்லாந்தும் தங்கள் தொழில்நுட்பத்தையும், நிபுணத்துவத்தையும் ஏற்றுமதி செய்ய ஆர்வத்துடன் உள்ளனர். உலகளவில் எல்லாக் கடற்கரையோர நகரங்களும் கடல் மட்ட அதிகரிப்பதால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆசியாவில் கடற்கரையோரப் பகுதிகளில் மக்கள் தொகை பெருகியுள்ளது. இந்த நூற்றாண்டின் மத்தியில் கடல்மட்ட அதிகரிப்பால் பாதிக்கப்படக்கூடிய 5 பேரில் நான்கு பேர் ஆசியாவைச் சேர்ந்தவராகவே இருப்பர். உலக வெப்பம் 1.5 பாகை அதிகமாகும் போது 2100க்குள் கடல் மட்டம் 1.7 - 3.2 அடி அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தப் பேரழிவைக் கட்டுப்படுத்த கரியமில வாயு வெளியேற்றத்தைப் பெருமளவுக் குறைத்து புவி வெப்பமயமாதலைக் குறைக்க வேண்டும். தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் காலநிலை அவசர நிலையை பிரகடனம் செய்து, காலநிலை மாற்றத்திற்கான அரசியல், சட்ட அமைப்பை உருவாக்கி மும்முரத்துடன் செயல்படுத்தினாலொழிய இப்பேரழிவிலிருந்து நமக்கு மீட்சி இல்லை.

Pin It