நதிக்கரைகள் அருகே நாகரிகங்கள் வளர்ந்தது வரலாறு. ஆனால் நவநாகரிக வாழ்க்கையில் அணைகள், பெருவிவசாயம், நீர் நிர்வாகச் சீர்கேடு காரணமாக, நதிகள் இறப்பின் வாசல்களாக மாறிவிட்டன. மேற்கத்திய தொழில்நுட்பத்தை படிக்கும் பொறியாளர்கள், நமது நாட்டின் சூழ்நிலை, பாரம்பரியம், அனுபவம் ஆகியவற்றை ஒதுக்கி வைத்துவிட்டுத்தான் பெரும்பாலான நேரம் சிந்திக்கிறார்கள்.

அதுவும் இரண்டு மாநிலங்களில் பாயும் நதிகள் என்றால் கேட்கவே வேண்டாம். அண்டை மாநிலத்துடன் மேற்கொள்ளும் மோதலின் ஒரு பகுதியாக அணை கட்டுவது, தண்ணீரை விடாமல் தேக்கி வைப்பது, தண்ணீர் வியாபாரம் மூலம் பணம் சேர்ப்பது தமிழக அண்டை மாநிலங்களின் வழக்கமாகிவிட்டது. முல்லைப் பெரியாறு பிரச்சினையே இன்னும் தீராத பட்சத்தில், தற்போது மற்றொரு அணைப் பிரச்சினை பூதாகரமாகத் தொடங்கியுள்ளது.

கொங்கு மண்டலத்தில் உள்ள ஆற்றுப்பாசனங்களில் பழைமையானது என்று காவிரியின் துணை ஆறான அமராவதியைக் குறிப்பிடலாம். அது மட்டுமின்றி கொங்கு நாட்டில் சமணர்கள் வாழ்ந்த வரலாற்றுச் சுவடுகள் அமராவதி நதிக்கரைக்கு மேலும் சிறப்பு சேர்ப்பவை. நதிகளை மலரச் செய்யும் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் 838 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அமைந்துள்ள ஆனைமுடி மலைத் தொடரில் இருந்து உருவாகும் பாம்பாறு, தேனாறு, சின்னாறு, இதர காட்டாறுகள் மூலம் அமராவதி அணை நிரம்புகிறு.

அமராவதி அணைக்கு நீர் கொண்டு வரும் ஆறுகளில் பாம்பாறே முதன்மையானது. பாம்பாறு கேரள மாநிலத்தில் உள்ள மூணாறு, மேல் வாகு நாரை, கீழ் வாகு நாரை, குண்டு மலை, சோத்தம்பாறை போன்ற பகுதிகளில் உற்பத்தியாகி வழியில் சங்கமிக்கும் சிறுசிறு காட்டு ஓடைகளையும் உள்வாங்கிக் கொண்டு, மறையூர் அருகேயுள்ள கோவில்கடவு என்ற இடத்தில் ஆறாகத் திரள்கிறது. அருகில் உள்ள தென் கைலாசநாதர் கோவிலை இந்த ஆறு கடந்து போவதால், இந்த இடம் கோவில்கடவு என்று பெயர் பெற்றதாக இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

அமராவதி அணையின் நீர் ஆதாரத்தை நம்பியே இந்த ஆயக்கட்டு பகுதியிலுள்ள தமிழக விவசாயிகள் கடந்த 54 ஆண்டுகளாக நெல் சாகுபடி செய்து வருகிறார்கள். முன்பு மூன்று போகம் விளைந்த நெல், தற்போது ஒரு போகமாக சுருங்கியதற்கு சமீபகாலங்கலில் அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையளவு குறைந்ததுதான் காரணம் என்கிறார்கள் இப்பகுதி மக்கள். ஆனால் மழையளவு குறைந்ததற்கான பின்னணி காரணம் என்ன என்பதை விரிவாக யோசிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இந்தப் பிரச்சினைகள் போதாதென்று, பாம்பாற்றின் குறுக்கே அணை கட்ட  கேரள அரசு உத்தேசித்து வருகிறது. அப்படிக் கட்டினால் 55 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களும், திருப்பூர், கரூர், தாராபுரம், மடத்துக்குளம் உள்ளிட்ட 5 நகரங்கள், நகரைச் சார்ந்து வாழும் 20 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிறது ஒரு கணிப்பு. கேரள அரசின் இந்த புதிய முயற்சிக்கு எதிராக இப்பகுதி மக்கள் போராட்டம் அறிவித்துள்ளார்கள்.

1988ஆம் ஆண்டில் பாம்பாற்றின் குறுக்கே சின்னாறு காட்டுயிர் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சுருளிப்பட்டியில் அணை கட்ட கேரள அரசு முயற்சித்தது. ஆனால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காததால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போது அந்தத் திட்டத்தை தூசி தட்டி புதிய வடிவத்தில் நிறைவேற்ற கேரள அரசு எடுக்கும் முயற்சி, தமிழக மக்களிடம் தேவையற்ற சச்சரவை உருவாக்கி உள்ளது.

கோவில்கடவு பகுதியில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் புதிய அணையும், பாம்பாற்றுக்கு நீர் கொண்டு வரும் நாச்சிமுத்து ஓடை பகுதியில் உள்ள தூவானம் அருவி அருகே நீர் மின்நிலையம் அமைக்கவும் கேரளம் திட்டமிட்டுள்ளது. இப்பணிகளுக்காக ரூ. 230 கோடியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ஒரு நாளைக்கு 40 மெகாவாட் மின்உற்பத்தி செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 170 மீட்டர் நீளம், 30 மீட்டர் உயரத்தில் அணை கட்டி 45 எக்டேர் வனப்பரப்பில் நீரைத் தேக்கி, நீரை அங்கிருந்து கொண்டு செல்ல மூன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் அமைக்கும் திட்டப்பணிக்கான காலம் 48 மாதங்கள் என்று கூறப்படுகிறது.

இந்த அணை உருவானால் 12.5 எக்டேர் அரிய வனப்பகுதியும், அவற்றைச் சார்ந்து வாழும் நூற்றுக்கணக்கான உயிரினங்களும், 10.5 எக்டேர் பழங்குடிகளின் நிலங்களும் மூழ்கப் போகின்றன. இதுபோன்று கட்டப்படும் பெரும்பாலான அணைகள் பெரு விவசாயிகளுக்கு பாசன வசதி தரவும், மேல்தட்டு வர்க்கம் பயன்படுத்துவதற்கான மின்சாரத்தை தயாரிப்பவையாகவே உள்ளன. சாதாரண மக்களுக்கு இந்த அணைகள் எப்படி உதவுகின்றன என்பது புரியவில்லை. நதியின் இயல்பான நீரோட்டத்தைச் சிதைக்காமல், அதை எப்படி பயன்படுத்த முடியும் என்ற அறிவியல்பூர்வமான சிந்தனை இக்கால அரசு பொறியாளர்களிடம் இல்லை.

இந்த அணையால் கிடைக்கும் பலன்கள் எவ்வளவு தூரம் உண்மையாகும் என்பது மிகப் பெரிய கேள்வி. இதற்கு நல்ல பதில் என்று அமராவதி அணையையே கூறலாம். அமராவதி அணை கட்டப்பட்டபோது, ஆண்டுக்கு மூன்று முறை அணை நிரம்பும், 10 டி.எம்.சி தண்ணீர் இருப்பு இருக்கும் என்று கணக்கிடப்பட்டது. ஆனால் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து தண்ணீர் குறைந்து கொண்டே வருவதால், ஒரு முறை அணை நிரம்புவதே பெரும்பாடாக உள்ளது. இந்த அணை காரணமாக உடுமலை வட்டத்தில் உள்ள தலைமடை பகுதியில் 25 கி.மீ. தொலைவுக்கு ஆறு மாதங்களுக்கு மட்டும் நீர்வசதி கிடைக்கிறது. எஞ்சிய 123 கி.மீ. பகுதிகளில் வறட்சிதான் நிரந்தரமாகக் குடிகொண்டுள்ளது. கோடை காலத்தில் இப்பகுதி மக்கள் மட்டுமின்றி, காலங்காலமாக இப்பகுதியில் வாழ்ந்து வரும் உயிரினங்களும் நீரின்றி செத்து மடிகின்றன.

பாம்பாற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு காவிரி ஆணையம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், நீர் வளத்துறை, மத்திய மின்வாரியம் ஆகியவற்றிடம் மட்டுமின்றி, தமிழக அரசின் அனுமதியையும் பெற வேண்டும் என்கிறார்கள் புதிய அணையை எதிர்க்கும் இப்பகுதி விவசாயிகள். ஆனால் இந்த நடைமுறை எதையும் பின்பற்றாமல் கேரள அரசு தன்னிச்சையாக நிதி ஒதுக்கீடு, நில அளவை, நில ஆய்வுப் பணிகளை "முல்லைப் பெரியாறு பாணி"யிலேயே நடத்தி வருகிறது.

பாம்பாற்றின் குறுக்கே கட்டும் அணையால் கிடைக்கும் கூடுதல் நீரை பயன்படுத்தும் உரிமையை கேரள அரசு குளிர்பான நிறுவனங்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அமராவதி பாசன விவசாயிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள். திட்டம் நிறைவேறும் பட்சத்தில் விவசாயம் மட்டுமின்றி, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக இருக்கும் அமராவதி அணையின் நீர் மொத்தமாக பறிபோகும்.

வழக்கம்போல் இரு மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பங்கீட்டு மோதலாக வெடிக்கக் காத்திருக்கிறது இந்தப் பிரச்சினை. காவிரி, முல்லைப் பெரியாறு போன்றவற்றிலேயே முறையாக செயல்படாத மத்திய அரசு, இதில் என்ன செய்யப்போகிறது? தமிழக அரசும் முன்னெச்சரிக்கையாக விழித்துக் கொண்டு இப்பொழுதே இந்த அணையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமா? அல்லது வழக்கம் போல் தும்பை விட்டுவிட்டு, வாலை விரட்டிப் பிடிக்க ஓடிக் கொண்டிருக்குமா?

அமராவதி ஆறும் தியடோர் பாஸ்கரனும்

 சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரனின் சொந்த ஊர் தாராபுரம். அமராவதி ஆறு பற்றி பல முறை அவர் எழுதியுள்ளார். அதிலிருந்து ஒரு சிறிய பகுதி:

எனது சொந்த ஊரான தாராபுரத்தில் ஜீவநதியாக ஓடிக் கொண்டிருந்த அமராவது ஆறு வரலாற்றிலேயே முதன்முறையாக 2002ஆம் ஆண்டு முற்றிலுமாக வறண்டு போயிற்று. காடுகள் அடர்ந்திருந்த அஞ்சநாடு பள்ளத்தாக்கில் உருவாகி, உடுமலைப்பேட்டைக்கு அருகே சமவெளியில் இறங்கும் அமராவதி, மலைகளைக் கவிந்திருந்த கானகங்கள் அழிக்கப்பட்டதால் நீரற்றுப் போயிற்று. பல்லாயிரம் ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருந்த நீரோட்டம் நின்று போனது. நதியுடன் அதில் வாழ்ந்திருந்த பல்லுயிரினங்களும் அழிந்துவிட்டன. இந்நிலை மழை பொய்த்ததால் ஏற்பட்டதொன்றல்ல. வருடாந்திர மழைப்பொழிவு பெரிய அளவுக்குக் குறைந்துவிடவில்லை என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மாறாக இந்நிலை மனிதரின் நெறியற்ற செய்கைகளால், பேராசையால் உண்டானதே.

("இன்னும் பிறக்காத தலைமுறைக்காக" புத்தகத்தில் உள்ள "நீர்ப்பூங்காக்களும் வறண்ட கிணறுகளும்" கட்டுரையில் இருந்து)

Pin It