“தமிழில் பலர், புதுக்கவிதை என்ற வெளியீட்டு சாதனத்தை, உயிரற்றதாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் எழுதியவை, தங்களால் பிதற்றப்பட்டவை எல்லாமே கவிதைகள் என்று சொல்லி வருகிறார்கள். உள்ளர்த்தம், படிமம் ஏதும் கவிதைக்கு வேண்டாம்; உயிர், பொருள், அவசம் எதுவும் வேண்டாம்; ஏனென்றால் இவர்கள் யாவருக்கும் இவை சுட்டுப் போட்டாலும் வராது. கம்யுனிசம், மார்க்சிசம் என்ற லேபிலை ஓட்டிக்கொண்டு எழுதப்பட்டவை எல்லாம் அந்த வட்டாரத்தில் இலக்கியமாவது போல, எல்லாமே இந்த வட்டாரத்தில் கவிதையாகிவிடுகிறது.” - பிரமிள் (2004, 192)

1

மேற்கொண்ட குறிப்பைப் பிரமிள் எழுதிய ஆண்டு 1989. தற்போதுவரை இக்குறிப்பில் கூறப்படுபவை தமிழ்ப் புதுக்கவிதைகளில் ஒரு மெய்மையாக உள்ளது. அதாவது, கவிதையின் சீரியத்தன்மை குறித்து எந்த அக்கறையுமற்று பிரமிள் கூறுவதைப்போல “வசனத்தை உடைத்துப் போட்டுக் கவிதையைச் சாதித்துவிட முடியாது” (2004, 101). இக்குறிப்பில் முற்போக்கு மார்க்சிய இயக்கங்களுடன், கலை கலைக்காகவே எனப் பேசும் தூய இலக்கிய வட்டாரங்களையும் விமர்சிக்கிறார். அதற்குச் சான்றாக கலை உன்னதத்தை முன்வைக்கும் டி.எஸ். எலியட்டின் ஒரு கவிதை வரியையும், முற்போக்குக் கவிஞரான பாப்லோ நெருடாவின் ஒரு கவிதை வரியையும் சுட்டிக் காண்பித்து இரண்டிலும் உள்ள கவித்துவத்தை எடுத்துக் காட்டுகிறார் (2004, 110). அதாவது அடிப்படையில் “தர்சனம்” என்கிற அகக் காட்சியாதல் என்பதே கவிதையின் அடிப்படை என்பதாக இவரது கவிதைக் கோட்பாடு அமைந்துள்ளது.pramilகவிதை குறித்துப் பல்வேறு “வியாக்கியானங்களை” அதாவது விவரணைகளைத் தனது கட்டுரைகளில் தருகிறார். அவற்றை தொகுத்துப் பார்க்கும்போது சாரமாக அமைந்திருப்பது கவிதை என்பது ஓர் அகத்தெழுச்சி, உள்விழிப்பு, நிரந்தர உண்மை அதாவது சத்தியத்தை பேசுவது, படிமங்களை எழுதுவது, அகமுரண்களை வெளிப்படுத்துவது, உண்மைக்கு நேர்மையாக இருப்பது, நுண்ணுணர்வை வெளிப்படுத்துவது, தீண்டுதல் தன்மைக் கொண்டது, காலாதீதமானது, அதீதத்துவமானது இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். பொதுவாக சிருஷ்டி என்கிற படைப்பு நிலைக்கும், உள்ளுறையான இறைத்தன்மைக்கும் ஆன ஓர் உறவுநிலையாகக் கவிதையை முன்வைக்கிறார். இவரது கட்டுரைகளை வாசிக்கும்போது கவிதை ஓர் அதி உயர்ந்த கலை வடிவமாகவும், அதை எழுதுபவனே உயர்ந்த ஞானமடைந்த மனிதனாகவும் கருதும்படி ஆகிவிடுகிறது. ஒருவகையில் கவிதையை ஒரு மதமாக படிமப்படுத்தினால் அதுதான் பிரமிளின் கவிதைக் கோட்பாடு. இப்பொழுது இதனைக் கட்சிப் பிரிந்து விவாதிப்பது, குழுவாகி ஆதரிப்பது, எதிர்ப்பது என்கிற நிலை மதம் குறித்த ஒருவரது நிலைபாட்டோடு உறவுடையதாகிறது. கவிதை மத உணர்வுடன் இறுக்கமாக பிணைந்து ஓர் ஆன்மீகப் பயணமாக அமைவதும், “இக்கணம்” என்கிற உண்மையை உணர்வதுமே இவரது கவிதையின் விளைவு. இதை ஏற்பதும், மறுப்பதும் அவரவர் அரசியல் நிலைபாடு சார்ந்தது. காரணம், தனது கவிதைகள் குறித்துத் தன்னையே முதல் விமர்சகனாக, உரையாளனாகக் கருதும் பிரமிளின்

எழுத்துக்கள், பிறரின் கருத்துக்களுக்கான சுதந்திர வெளியை மறுத்து, எல்லோரும் பிரமிளாக மாறி அவரது கவிதையை வாசித்து விமர்சிக்க வேண்டும் என்ற மனநிலையை அல்லது அவரது பாணியில் கூறினால் மனோதருமத்தை அடைய வேண்டும் என்று கருதுகிறார். மனோதருமம் என்பதும் இவரது கவிதைக் கோட்பாட்டின் ஒரு முக்கியமானக் கூறு. மற்றமைக்கான இடமே அவரது கருத்துலகில் இல்லை. அனைத்தையும் போலிகள் என்று தாரதம்மியமற்ற முறையில் அடித்து நொறுக்குகிறார். சான்றாக கோவை ஞானியோ, கோ. இராஜாராமோ அவரது “கண்ணாடியுள்ளிருந்து” என்ற காவியக் கவிதையை விமர்சித்தால் அதற்கான பதிலாக அவரது பார்வையைத்தான் அவர்கள் சொல்ல வேண்டும் என்றும், தான் இந்தவகையான பார்வையில்தான் எழுதினேன். அதைக் கண்டுணரும் திராணியற்றவர்கள் என்றும் அவர் கருத்தை முன்வைக்கிறார். பிரேதா- பிரேதன் எழுதிய கிரணம் கவிதைகள் தன் “கண்ணாடியுள்ளிருந்து' “மண்டபம்” போன்ற வேறுசில கவிதைகளில் அவர் எடுத்தாண்ட “பின்னலான செறிவுமிகுந்தப் படிமவியல் பிரயோகங்களை” காமாசோமாவாக எடுத்தாண்டு எழுதியதான குற்றச்சாட்டை முன்வைக்கிறார் (2004, 200). ஆனால் “கண்ணாடியுள்ளிருந்து' கவிதைகளின் சிக்கலானப் படிமப் பிரயோகம் எப்படி பிரேதோ கவிதைகளில் வந்துள்ளது என்பது குறித்த விரிவான விளக்கம் இல்லை. ஓரிரு வரிகளைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளது. இரண்டு பிரதிகளையும் ஒப்புநோக்கி ஆராய்ந்தால் மட்டுமே பிரமிளின் குற்றச்சாட்டின் பின்னணியைப் புரிந்துகொள்ள முடியும்.

மொழிக்கு பல்வேறு - அவர் பயன்படுத்தும் சமஸ்கிருத பாஷாவில் கூறினால் - வியாகரணங்கள், பாஷியங்கள் இருக்கும் என்பதையே மறுக்கிறார். அவர் எந்த சத்தியத்தை, உள்ளுணர்ச்சியை, மெய்மையை, மெய்யியலை.. இன்னபிறவற்றை முன்வைத்து எழுதினாரோ அதையே ஒரு வாசகனும் விமர்சகனும் கண்டுகொள்ள வேண்டும் என்கிறார். அவரைப் பொறுத்தவரை கவிதை கைளால் எழுதி, கண்களால் வாசிக்கப்படுவதில்லை. இதயத்தால் எழுதி இதயத்தால் வாசிக்கப்படுவது. அதாவது “ஹிருதயப்பூர்வமானது” என்கிறார். “பிரக்ஞை எப்பவும் தொழிற்பட்டுக் கொண்டிருக்கும் சக்தி வாய்ந்த உள்ளத்துக்குத்தான் புதுக்கவிதை உள்ளோட்டம் தெரியும். ஒரு சொல்லென்றால் அதன் அகராதி அர்த்தத்துக்கு மேல் ஓடாத மரத்த உள்ளங்களின் பிரக்ஞை இப்படிச் செயல்படப் போவதில்லை” (2004, 76) எனும் பிரமிள் பல்வேறு பொருள் (அர்த்த) சாத்தியங்கள் இருப்பதால்தான் ஒரு கவிதைக்குப் பல்வேறு கருத்துக்கள் திறனாய்வாளர்களால், வாசகர்களால் முன்வைக்கப்படுகிறது என்பதை மறுக்கிறார். பொருளைக் கொண்டு கவிதை பிறப்பதில்லை என்றும் அது ஒரு எழுச்சியின் விளைவு என்றும், கவிஞன் பொருளைக் கொண்டு கவிதை படைக்கமுடியாது அது கட்டமைக்கப்பட்ட கவிதை. அது கவிதையாகாது என்கிறார். அதாவது கவிதை என்பது உள்மனப் பிரக்ஞையின் அவசத்தால், எழுச்சியால் வெளிப்படும் ஒரு “மாந்த்ரீகம்” போன்ற செயல்பாடு. ஒருவகையில் இது உண்மைதான் என்றாலும், அதற்குக் காரணம் மொழியின் சமூவயப்பட்டத் தன்மையே.

ஒரு கவிஞன் சமூகம் உருவாக்கிய மொழிப்புலத்தில்தான் புழங்குகிறான். அதனால் அவனையறியாமல் மொழியானது அவனுக்குள் கட்டமைந்து விடுகிறது. அதாவது அவனது புலனுணர்வால் உள்வாங்கப்பட்டு அவனது மொழிப்பயிற்சியால் அல்லது அனுபவத்தினால் உருவாகும் நுண்ணுணர்வால் படைப்பாக வெளிப்படுகிறது. அதனால்தான் ஒவ்வொரு காலத்திற்குமான இலக்கிய வடிவங்களும் வெளிபாட்டு வடிவங்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன. அப்படி வெளிப்படும் இலக்கியங்களை அந்தந்தக் காலச் சமூகமும் தனக்கான பொருளில் மாற்றிப் புரிந்துகொள்ளுதலும் நடக்கிறது. அவ்வகையில் உரை அல்லது திறனாய்வு (விமர்சனம்) என்பது ஓர் இலக்கியத்தைச் சமூகவயப்படுத்தும் ஒரு நிகழ்வுப் போக்காகும். இலக்கியப் படைப்பை வாசகத்தளத்தில் உள்வாங்குவதற்கான திறப்பாக அமைகிறது. ஆனால் படைப்பாளியின் மனவோட்டத்தை ஒரு படைப்பு வெளிப்படுத்துவதாக சொல்வது, இவரது இந்த அகத்தெழுச்சிக் கோட்பாட்டிற்கே எதிரானது. இவரது கவிதைகள் பொருள் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை என்றால், இவரால் எப்படிப் பொருள் கூற முடிகிறது? இவரது பல கவிதை வரிகள் தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது என்றும் இவர் இன்ன பொருளில் எழுதினேன் என்பதையும் கூறுகிறார். இது இவரது தன்னெழுச்சி தத்துவார்த்தக் கவிதைக் கோட்பாட்டிற்கே எதிரானதாக இல்லையா? இவர் இவரது கவிதைகளை தன்னெழுச்சியாக எழுதி இருந்தாலும் இவரே அதற்கு பொருள் தரும்போது ஒரு வாசகராகிறார் என்பதே. அப்படித்தான் ஒரு திறனாய்வாளன் இவரது கவிதைகளை அவனது பிரக்ஞா ஓட்டப்படி, மனவெழுச்சிப்படி பொருள் கூறுவான். அதை மறுக்க இவர் யார்? என்கிற கேள்வி உள்ளது.

இவரது கூற்றுப்படி சங்க இலக்கியத்தை எழுதியவர்கள் மட்டுமே விளக்கம் எழுதித் தந்திருக்க வேண்டும். மற்ற உரைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட வேண்டும். அவரது கவிதைகள் குறித்து அவர் முன்வைக்கும் கருத்துக்களை ஒரு விமர்சகன் எப்படி முன்வைக்க முடியும்? அல்லது ஒரு படைப்பாளியின் படைப்பை அப்படியே படைப்பாளியாக வாசித்து உள்வாங்குதல் சாத்தியமா? ஆக, பிரமிளின் படைப்புகள் குறித்த கருத்துக்கள் ஓர் ஒற்றைப் பார்வையை வேண்டுவதாக, அதிலும் அவரது பார்வையை மட்டுமே முன்வைப்பதாக இருக்க வேண்டும் என்பதே அவரது விமர்சனக் கோட்பாடாக உள்ளது. அதாவது ஒரு படைப்பும், அதன் வாசிப்பும் வேறுபடலாம் என்பதை அவர் ஏற்பதாகத் தெரியவில்லை. பிறர் கவிதைகளைப்பற்றிய அவரது விமர்சனங்கள் மிக முக்கியமானவை. காரணம் ஒரு கவிதையை ஒரு வாசகனாக, விமர்சகனாக அனுபவித்து எப்படி வாசிப்பது? என்பதை நயம்பட எடுத்துரைக்கிறார். அதன் பன்முக அர்த்த பரிமாணங்களை. வடிவ உத்திகளை, மொழிக் கூறுகளை ஆராய்ந்து எழுதுகிறார். அவை புதுக் கவிதைகளை அதன் நவீனத்துவ வெளிப்பாடுகளைப் புரிந்துகொள்ள, திறனாய்வாளர்களுக்கும், கவிதை வாசகர்களுக்கும் புதிய திறனாய்வுப் பார்வையைத் தரக் கூடியவை. அவ்வகையில் இரசனைவாத விமர்சனமுறையைத் தாண்டிய ஒரு அறிவார்ந்த விமர்சனத் தளத்தை முன்வைப்பவராக உள்ளார்.

“ஒவ்வொரு கவி வரிக்கும் அர்த்தம் பிளந்து காட்டுவது வாசக அறிவை அவமதிப்பதாகும்” (2004, 73) என்று எழுதும் பிரமிள் ஒரு திறனாய்வாளன் அல்லது அவருக்கு பிடித்த சொல்லான விமர்சகன் ஒரு படைப்பை தனது பார்வையில், தான் கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையில், தன் அனுபவம் சார்ந்த உணர்வுத் தளத்தில், தன் கருத்து சார்ந்த அறிவுத்தளத்தில் கருத்துக்களை முன்வைத்தால் அதனைக் கடுமையாக எதிர் கொள்கிறார். அவர் எதைக் கருதினாரோ அதையே கூற எதற்கு வாசிப்பு? இங்கு தெரிதா முன்வைக்கும் படைப்புதான் நமக்கு முன் பிரசன்னமாகிறது (பிரசன்னம் என்பதை நவீனத் தமிழில் முன்னிருப்பு அல்லது தொல்தமிழில் முன்னம் எனலாம்), படைப்பாளி அல்ல என்பதே நினைவிற்கு வருகிறது. படைப்பாளி என்பவன் படைப்புடன் மறைந்து போகிறான் அல்லது படைப்புக்குள் மறைந்து போகிறான். பூஃக்கொ கூறுவதைப்போல ஆசிரியன் என்பவன் ஒரு alilonsor (function). வினை முடிந்தவுடன் ஆசிரியனுக்கு அங்கு வேலை இல்லை. பிரமிளின் திறனாய்வுமுறையில் உள்ள மற்றொரு சிக்கல் இந்த ஆசிரியப் பிரக்ஞை என்ற ஒன்றைப் படைப்பில் தேடுவது. உண்மையில் படைப்பில் வாசிப்பவர் அல்லது திறனாய்வாளர் உருவாக்குவதே ஆசிரியப் பிரக்ஞை. இதனைக் கடுமையாக மறுப்பதாக உள்ளது, இவரது படைப்புகள் குறித்து வந்த விமர்சனங்களை இவர் தடாலடியாக மறுப்பது.

ஆனால், அவர் பிறர் கவிதைகளை வாசித்துக் காட்டுவதில் மிகவும் ஆழ்ந்ததொரு புதிய பொருளை உருவாக்கித் தருகிறார். அதேவேளையில், அவரது கவிதைகள் குறித்து பிறிதொரு பொருளைத் தரும் உரிமையை மறுப்பது எப்படி சரியானதாகும்? வாசகன் கவியாக வேண்டும் என்றும் வாசகனே முதன்மையானவன் என்றும், ஆயிரம் வாசகர்கள்/வாசிப்புகள் சாத்தியம் என்றும் டி.எஸ்.எலியட், ஜெ.கே. ஆகியோரின் குறிப்புகளுடன் (2004, 76) முன்வைக்கும் பிரமிள், தன் கவிதைகளுக்கு மட்டும் அதைத் தடையாக மாற்றுவதைத்தான் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது என்பதுடன் அவரது இலக்கியக் கோட்பாட்டின் அகப் புறசிக்கலாகக் கருத முடிகிறது. “வானமற்ற வெளி” என்ற கட்டுரையில் பசுவய்யாவின் புகழ்பெற்ற “அறைகூவல்” கவிதையை மிக மிக நுட்பமாக ஆராய்ந்து அதன் தன் அனுபவ சாத்தியங்களை முன்வைத்து எப்படி அது ஒரு புறச்சக்திக்கு எதிரான அகச்சக்தியின் விடுதலையாக அகந்தையை ஒழித்து எழுகிறது என்பதை விளக்குகிறார். அகச்சக்தி புறச்சக்தியை மீறி “அதாவது புறமனிதன் எட்டவியலாத ஒரு வானமற்ற வெளியில்” பறக்கும் எனது கொடி என்பதில் தன் அனுபத்தை மீட்டெடுக்கிறார். அதில் விமர்சனம் குறித்து “ஒரு உயர்ந்த கவிதை, விமர்சனத்தை மீறிய எதிரொலிகளைக் கிளப்ப முடியும் என்பதையே இக்கட்டுரையின் தூண்டுதலாக நிரூபிக்கக் காத்திருந்தேன்” (2004, 117) என்று எழுதுகிறார். ஆனால் கெடுவாய்ப்பாக இந்த அருமையானதொரு விமர்சனத்தைப் பசுவய்யா என்கிற சுந்தரராமசாமி படுக்கையில் படுத்துக் கொண்டே உங்கள் விமர்சனம் இப்படி மல்லாக்க கிடக்கிறது என்று கையை விரித்து கட்டிலில் மல்லாக்க படுத்துக் காட்டியதாக ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். இவரது விமர்சனக் கோட்பாட்டின் அடிப்படையில் சுந்தரராமசாமி செய்தது நியாயம்தானே? அதை விமர்சிக்கிறார். இங்கு படைப்பாளியின் படைப்பிற்கும், விமர்சகன் உருவாக்கும் வியாக்கியானத்திற்குமான முரண்பாடு தெட்டத் தெளிவாக வெளிப்படுவது ஒரு சான்று. ஆக இவரது படைப்புக் கோட்பாடும், விமர்சனக் கோட்பாடும் அடிப்படையில் இவருக்குள் முரண்பட்டு நிற்கிறது.

பொதுவாக படைப்பு உயர்ந்தது, விமர்சனம் தாழ்ந்தது என்கிற இருமையில் விமர்சனத்தை கீழாக வைத்து பார்க்கும் பார்வையாக அவரது பார்வை உள்ளது. தனது தொடக்ககாலக் கவிதைகளை அவரே விமர்சிக்கிறார். அதேபோல் விமர்சனம், விமர்சகர்கள் என்பவர்கள் இரண்டாம் பட்சம் என்றும், படைப்பிற்கு பின்பே விமர்சகர்கள் வருகிறார்கள் என்றும் வாதிடுகிறார். ஆனால் எந்த ஒரு படைப்பும் விமர்சனத்தை உட்கிடையாகக் கொண்டே படைக்கப்படுகிறது. தெரிதிய வார்த்தைகளில் சொன்னால் படைப்பிற்கு முன்பே விமர்சனம் பிரசன்னமாகி (முன்னமாக) உள்ளது. அப்படிப் படைத்தால் அது படைப்பாகாது என்று கூறும் பிரமிள் தனது கவிதைகள் குறித்துச் சரியான விமர்சன அணுகுமுறைகள் இல்லை என்பதை உட்கிடையாகக் கொண்டே பல கருத்துக்களை முன்வைப்பராக உள்ளார். இது அவரது மற்றொரு முரண். விமர்சகளை வெறுத்தொதுக்கும் ஒரு படைப்பாளி எனது நூலைப் பற்றி யாரும் எதுவும் பேசவில்லை என்றும் “தமிழில் விமர்சனம் செத்துவிட்டது” என்றும் கருமாதி நோட்டீஸ் அடிப்பது ஏன்? என்ற கேள்விக்கு பிரமிளிடம் பதில் இல்லை.

ஒரு படைப்பு உருவாக இரண்டு தளங்கள் முக்கியமானவை. ஒன்று பிரதியூடக வெளி (inter-textual space), மற்றது ஒரு வாசகத்தளம் (reader’s space). பிரமிள் சென்ற நூற்றாண்டிலோ சங்க காலத்திலோ பிறந்திருந்தால் அவர் ஒரு வர கவியாகவோ, ஆசு கவியாகவோ அல்லது அவர் விரும்பிய இளங்கோ, கம்பன், “மர்மப்பாட்டி' ஓளவையார் போன்ற உயர்ந்த காப்பியக் கவிஞராகவோ, காளமேகம் போலத் தனிப்பாடல் புலவராகவோ வந்திருக்கலாம். இவர்களைப் பற்றியும், இவர்களது பாடல்கள் குறித்தும் மிக அருமையான ஓர் உரையைத் தருகிறார் பிரமிள். அவை தமிழ் மரபறிவின் அசாத்தியத்தை வெளிப்படுத்துவதாக உள்ளன. “கண்ணாடியுள்ளிருந்து”, “கைப்பிடியளவு கடல்”, “மேல்நோக்கிய பயணம்”, “தெற்கு வாசல்” போன்ற காப்பியத்திற்கு நிகரானதாக அவர்கூறும் அவரது கவிதைகளை எழுதியிருக்க முடியுமா? அகச்சக்தி, அகச்சக்தி என்று ஒரு கட்டுரைத் தவறாமல் எழுதும் பிரமிள், அந்த அகச்சக்தி என்பது எப்படி காலத்தால், இடத்தால், வரலாற்றால் அதாவது புற உலகு என்ற புறச்சக்தியால் உருவாக்கப்படுகிறது என்பதைக் குறித்து நீண்ட மெளனம் அல்லது தெளிவற்றவராக உள்ளார்.

நவீனக்கவிதை அல்லது புதுக்கவிதை என்பது காலத்தால் புற உலக வாசகத் தளத்தால், பிரதியூடக வெளியால் நிர்ணயிக்கப்பட்டது. பிரதியூடக வெளி என்பது ஒரு காலத்தின் பிரதியியல் வடிவங்களைத் தீர்மானிக்கும் மரபுத் தொடர்ச்சியில் வருவது. அதாவது பிரமிள் தனது கவிதைகளைப் பற்றிக் கூறும்போது ந. பிச்சமூர்த்தி (2024, 75), பாரதி, புதுமைப்பித்தன் போன்றவர்களின் கவித்துவ ஆற்றலையும், படிமங்களையும் உள்வாங்கி, தான் வேறுபடும் இடங்களைக் குறிப்பிடுகிறார். (மரபு குறித்து அவரது அறிவு பிரமிப்பு ஊட்டுவதாக உள்ளது. குறிப்பாக “காளமேகம் டிரிப்” (2004, 227) என்ற கட்டுரையில் காளமேகப்புலவரின் தனிப்பாடலுக்கு அவர் தரும் விளக்கம் அற்புதமமான உரையாக உள்ளது.) இதைத்தான் பிரதியூடக வெளி என்கிறோம். ஒரு பிரதி மற்றொரு பிரதியை உருவாக்குகிறது என்பதும், பிரதிகள் ஒன்றோடு ஒன்று ஊடாடி உரையாடக் கூடியவையாக அமைந்துள்ளன என்பதும் இதன் அடிப்படை. ஒரு பிரதியின் வடிவத்தை அது செய்யுளா? கவிதையா? நாவலா? கதையா? புராணமா? காப்பியமா? என்பதைத் தீர்மானிப்பது பிரதி உற்பத்திக்கான வடிவத்தை தருவது அந்தக்காலப் பிரதியூடக வெளியே.

சுத்த சுயம்புவாக ஒரு படைப்பு சாத்தியமில்லை. படைப்பு, காலத்தின், வரலாற்றின் விளைபொருளாக அமைவதே.

அதேபோல் ஒரு பிரதி எதைப்பேச வேண்டும் என்பதையும் அந்தக் கால வெளியே தீர்மானிக்கும். நவீன காலத்தில் பிரமிளுக்கு ஓர் ஆன்மீக உள்ளடக்கத்துடன் பேசுவதற்கான நவீன வாழ்வனுபவங்களைத் தருவது புறச் சூழலே. பிரமிளின் இந்த ஆன்மீகத் தேட்டம் எங்கு உருவாகிறது என்றால் புறச்சூழலின் லெளகீக வாழ்வின் துயரத்திலிருந்தே. அத்தகைய வாழ்வைப் புறக்கணிப்பதும், அதைப் போலியானது என்றும் தொடர்ந்து அவரது கட்டுரைகளில் குறிப்பிடுகிறார். உண்மையில் அத்தகைய வாழ்வின் துயரத்திற்கான ஓர் ஆன்மீக விடுதலையை இவர் நவீனத்துவத்தை ஏற்றவர் என்ற முறையில் மதம்தாண்டி கலாதீதம் என்றும், நித்தியமான சத்தியம் என்றும் முன்வைக்கிறார். அவரைப் பொறுத்தவரை அரசியல் என்பதற்கான ஒரு வெளியோ இடமோ படைப்பில் இல்லை. அவர் புறச்சக்தி என்பதை எள்ளளவும் மதிப்பதில்லை. அதை ஒரு எதிர்சக்தியாக, படைப்பு மனநிலைக்கு எதிரானதாக முன்வைக்கிறார். அதற்குக் காரணம் அவர் வரித்துக்கொண்ட படைப்புக் கோட்பாடே. அல்லது அக்கோட்பாட்டிற்கான அவரது மெய்யியல் மற்றும் கருத்தியல் பின்புலங்கள். அதை மேற்கத்திய மெய்யியலில் அல்லது மார்க்சிய மெய்யியலில் கூறினால் அகநிலை கருத்துமுதல்வாதம். இந்திய மெய் யியலில் கூறினால் அத்வைத மாயாவாதம்.

பிரமிள் ஒரு வைதீக எதிர்ப்பாளராகவும், சாதீய மனோபாவங்களுக்கு எதிரானவராகவும், ஆஷாடபூதித்தனத்திற்கு எதிரானவராகவும் தொடர்ந்து பல விமர்சனங்களைத் தமிழ் இலக்கியத்தின் உள்சட்டகத்தில் இயங்கும் மனோபாவங்களை முன்வைத்து வெளிப்படுத்தி உள்ளார். அதுதான் அவரது மொழியில் கூறினால் நவீனத்துவ மனோதர்மத்தின் வெளிப்பாடு. அவரது படைப்புகளில் அதற்கான தடத்தைக் காணலாம். (அது தனியாக எழுதப்பட வேண்டிய ஒன்று.) இது ஒரு முற்போக்கான மனநிலையின் வெளிப்பாடு. ஆனால், அதனை அவர் ஏற்பதில்லை. ஒருவேளை இக்கட்டுரையை அவர் வாசித்தால் மிகக் கடுமையான எதிர்வினையை ஆற்றுவார். அது மார்க்சிய ஜடவாத மெய்யியல் பார்வை என்றும், மனித வியக்தியை அறியாத மானுடத்தின் அகத்தெழுச்சியின் பிரக்ஞையை அறியாத ஒரு மூடவாதம் என்றும்கூட அவர் சொல்லக்கூடும்.

ஆனால் இதனை அவர் தர்க்கரீதியாக எதிர்கொள்வதைவிட, உணர்வார்ந்த தளத்தில் மட்டுமே எதிர்கொள்வார். அதுதான் அவரது இலக்கியக் கோட்பாடும் கூட. உணர்வு என்பது பதப்படாத அறிவு. அறிவு என்பது பதப்படுத்தப்பட்ட உணர்வு என்பதால், அறிவில் உணர்வின் கூறுகளும், உணர்வில் அறிவின் கூறுகளும் இருக்கும். அவரது இலக்கியக் கோட்பாட்டில் படைப்பில் உணர்ச்சியும், விமர்சனத்தில் அறிவும் தர்க்கமும் தனித்தனியாக தன்னிச்சையாக, சுயேச்சையாக இயங்குவதாகக் கூறுவது மற்றொரு முரண்.

2

பிரமிள், கவிதை குறித்து மிகவும் சீரிய முறையிலும், அதன் படைப்பியக்கத்தைக் குறித்தும் தமிழில் கவலைப்பட்டவர்களில் குறிப்பிடத் தகுந்தவர். அவரது கவிதை குறித்துக் கோட்பாட்டுப் பார்வையில் பல முரண்கள் இருந்தாலும், மிகவும் காத்திரமான முறையில் இரசனைவாத விமர்சனத்தை வளர்த்தெடுத்தவர் தமிழ் நவீனத்துவத்தின் முன்னோடிகளில் ஒருவருமான தருமு அரூப் ஜீவராம் பிரமிள். இவர் இப்பெயரின் பலக் கூட்டமைப்பு மற்றும் உச்சரிப்புகளில் தனது புனைப்பெயர்களை மாற்றி மாற்றி எழுதியவர். எண்பதுகளில் நான் இலக்கிய உலகில் நுழைந்த காலங்களில் தினமும் இன்று இவருடைய பெயர் என்ன? என்று அடிக்கடி தோழர் பொதியிடம் கேட்டுக் கொண்டிருப்பேன். பிரமிளின் படைப்புலகையும், விமர்சன உலகையும் இன்றுவரை தமிழ்ச் சூழலில் முன்னின்று வாதாடி காத்து வருபவர்கள் தோழர் பொதியும், லயம் இதழாசிரியரும் பிரமிளைக் கடைசிக் காலங்களில் பாதுகாத்தவருமான கால சுப்ரமணியம். இருவரும் என்றும் பிரமிளுடன் நினைவுகூரத்தக்கவர்கள். பிரமிள் ஒருவேளை பெயரற்ற அதாவது அடையாளமற்ற மனநிலையில் இப்படிப் பெயரை மாற்றி மாற்றி வைக்கிறாரா? என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால், அதன்பின் இருந்தது அவரது எண்கணித நம்பிக்கை. அக்காலத்தில் எண்கணித ஜோதிடம் தமிழ்நாட்டில் பரவலாகக் கவனத்தைப் பெற்று வந்தது. இளமையில் எனக்கும் அந்தப் பைத்தியம் இருந்தது. எண்கள் ஓர் அரூபமான குறியீடுகள். காரணம் 1 என்ற எண்ணிற்கு ஏதேனும் பொருள் உள்ளதா? அதன் பொருள்

நமது மனக்கண்ணால் அறியப்படுவது. பொதுவாகக் கணிதம் என்பதே இருண்மைத்தன்மைக் கொண்டது. அது புற உலகில் ஒரு பொருளின் எண்ணிக்கையைக் குறிப்பது. அறிவியலுக்கான அடிப்படைகளை உருவாக்கியது எண்கள்தான். “எண்ணும், எழுத்தும்” என வள்ளுவர் கூறுவதுகூட அறிவியலையும், மொழியையும்தான். இது ஒருபுறமிருக்க, எண்கணிதம் என்பது வழக்கமான ஜோதிடத்தைப் போல ஒவ்வொரு எண்ணையும் ஒரு கிரகத்துடன் இணைத்து அதிலிருந்து பலனைக் கூறும் முறை. இரண்டிற்கும் உள்ள வேறுபாடு பிறந்த நேரத்தை (லக்கனம், ஜனனம்) ஜோதிடமும், பிறந்த தேதியை எண்கணிதமும் அடிப்படையாகக் கொள்கிறது என்பதே.

எண்கணிதத்தில் பிறந்த எண், பிறந்த தேதியின் கூட்டு எண், பெயரின் கூட்டு எண் மூன்றும், மூன்றுவிதப் பலனைத் தரக்கூடியது. பிறந்த எண் ஒருவரது குணத்தையும், தேதியின் கூட்டு எண் ஒருவரது எதிர்காலத்தையும், பெயரின் கூட்டு எண் ஒருவரது வாழ்வின் மாற்றத்தை உருவாக்குவதாகவும் நம்பப்படுகிறது. பிரமிள் பெயரை மாற்றியதன் பின்னணியில் தனது தினவாழ்வின் நெருக்குதலை பலனை மாற்றிக் கொள்ளும் தேட்டம் இருந்திருக்கலாம். அவரது எதிர்பார்ப்புகள் பெயர் மாற்றத்தால் நிறைவேறியதா? என்பதை அவரோடு பழகிய நண்பர்களே சொல்லமுடியும். அடிப்படையில் இது அரூபமான முறையில் காரணகாரியமற்று இணைக்கப்பட்ட ஒன்று. இதில் ஏதேனும் மிஷல் பூஃக்கோ கூறும் மனித அறிவை உருவாக்கும் ஆரம்பநிலை ஒப்புமை விதிகள் இயங்குகிறதா? என்பது மற்றொரு ஆய்விற்கு உரியது. எண்கணிதத்தில் உள்ள ஈடுபாடு மற்றும் ஆழ்ந்த அறிவின் காரணமாகத் தனது பெயரை மட்டுமின்றி, பல இலக்கிய நண்பர்களுக்கும் இவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

“நியுமராலஜி ஆலோசனையை 1979ல் தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் பெற்றுக்கொண்ட நாகர்கோவில் “பின்திண்ணைக் காட்சி'க்காரர், எனது நண்பரான சுப்ரபூஷங்கர் (இவர், என்னிடம் தமது கவிதைகளைத் தந்து திருத்தங்களை அநுசரித்த சில கவிகளுள் ஒருவர்) இடம் “இந்த மாதிரி (நியுமராலஜி) வேலை செய்வதற்கு இவர் (பிரமிள்) யார்?” என்று கேட்டதை சங்கர் என்னிடம் உளறிவிட்டார். உடனே நேர்க்கடிதங்கள் மூலமும் நண்பர்கள் மூலமும் நியுமராலஜிக்கான பில் ஒன்றை நாகர்கோவிலாருக்கு அனுப்பியிருந்தேன். பதிலில்லை.” (2004, 215) என்று தனது நியுமராலஜி குறித்த அனுபவங்களைக் குறிப்பிடுகிறார் பிரமிள்.

ஈழத்தைச் சேர்ந்த இவர் தமிழ்நாட்டில் தனது இளமைப் பருவத்தில் வந்து தமிழ் நவீனப் படைப்பியக்கத்தில் இயங்கிய காத்திரமான, கனமான எழுத்தாளர். மிகவும் சர்ச்சைக்குரிய எழுத்தாளரும்கூட. சிறுகதைகள், கவிதைகள், நாவல், கட்டுரைகள் என அனைத்து வடிவங்களிலும் தனது எழுத்தியக்கத்தை நிகழ்த்தியவர். தமிழ் மொழியின் நுட்பங்களை நன்கு அறிந்தவர் என்பதால் பல்வேறு மொழிவிளையாட்டுகளை தனது படைப்புகளில் நிகழ்த்தியவர். சான்றாக, “ராமன் இழந்த சூர்ப்பநகை' என்ற கவிதையில்

“ஆடையின் இரவினுள்

உதயத்தை நாடும்

பருவ இருள்.

நடையோ

ரடியொவ்வோ

ரடியில்

தசையின்

ஜ்வாலை நடுக்கம்.”

இக்கவிதையில் “நடை ஓரடி ஒவ்வோரடியில்' என்பதை மரபான மொழி நடையில் புணர்ச்சியிலக்கண அடிப்படையில் எழுதும்போது கவிதை வாசிப்பு தடைபட்டு அதைச் சிந்திக்க வைப்பது ஓர் உத்தி. அதேசமயம் சூர்ப்பநகையின் புணர்ச்சி வேட்கையில் தடுமாறும் நடையின் ஒவ்வொரு அடியின் வேகத்தையும் அதாவது அந்தக் கணநேரத்தையும் சுட்டுவதாக அமைந்துள்ளது. (இப்படி விளக்கம் சொல்லும்போது, பலவேளை இது அச்சுப் பிழையால் நிகழ்ந்திருக்கலாம் என்றாலும் இப்படி விளக்க சுவராஸ்யமாக உள்ளது என்பதே) இக்கவிதை காமார்த்தம் சார்ந்த ஒரு புராண நிகழ்வைக் கவிதையாக்குகிறது. சூர்ப்பநகைக்கு இராமன் மேல் விழுந்த தீராக் காதலை அதன் காம வேட்கையின் தீச்சுவாலைகளை, நடுக்கத்தைக் கவிதையாக வெளிப்படுத்தும் கவிதை.

இக்கவிதை குறித்துக் கோவை ஞானி முன்வைத்த “இராமனைப் பகடி செய்கிறார்” என்ற விமர்சனத்தைக் கடுமையாக மறுத்து, தான் படைத்த இந்த இராமன் வால்மீகி இராமன் அல்ல. ஒரு மேதைக்கு எதிராகப் படைக்க ஒரு மேதமை வேண்டும் என்றும், தான் படைத்த இராமன் இன்றைய பிரதி இராமன் என்றும் கூறுகிறார் (2004, 164). இதைத்தான் முன்பு சுட்டியதைப்போல தனது கவிதையைத் தன்னைப்போல ஏன் வாசிக்கவில்லை என்ற கேள்வியாக முன்வைப்பது என்றோம். மேலும், கடுமையாக மார்க்சியத்தைக் கிண்டலடித்தும் எழுதுகிறார். “கவிஞனான நான்தான் எனது படைப்புகளின் மிகச்சிறந்த விமர்சகன்” (2004, 161) என்று கூறுவதும், “படைப்பின் நிழலுருவம்தான் விமர்சனம். பெரும்பாலும் அபூர்ணமான படைப்பாளிகள் அல்லது படைப்புத்திறன் அற்றவர்கள் தாம் விமர்சனத்தை மேற்கொள்கின்றனர். எழுத்துவில் விமர்சனங்களை எழுதியபோது நான் அபூர்ணமான படைப்பாளியாகவே இருந்திருக்கிறேன்.” (2004, 158) என்று சுயவிமர்சனமாக எழுதுகிறார் 1979ல். அப்படி என்றால் இந்த விமர்சனத்திற்கு மறுப்பு எழுதும் விமர்சகராக தன்னைக் கருதும் பிரமிள் பூர்ணமானவரா? அபூர்ணமானவரா? என்கிற கேள்வி எழுகிறது. விமர்சனம் என்பது படைப்பின் நிழலுருவம் என்றால் படைப்பு நிஜம் என்றும், விமர்சனம் அதன் நிழல் என்றும் தனது வழக்கமான கவித்துவ ஒளி, இருள், நிழல் படிமத்தை இங்கும் கொண்டுவருகிறார். பூர்ணம் என்ற முழுமை ஒன்று இருப்பது என்பது அபெளதீக நம்பிக்கைத் தவிர வேறு ஒன்றுமில்லை. பூர்ணத்துவம் என்ற முழுமை சாத்தியமில்லை என்கிறது நவீன குவாண்டம் எந்திரவியல், சார்பியல் மற்றும் எண்ட்ரபி கோட்பாடு. நவீன அறிவியல் குறித்து ஆழ்ந்த அறிவாற்றல் உள்ளவர் பிரமிள். அதை வெளிப்படுத்தும் பல கட்டுரைகள் மற்றும் கவிதைகள் (சான்றாக E=MC2 கவிதையைச் சொல்லலாம்) எழுதியவர். அவர் இதை அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் நவீன அறிவியலை ஓர் இறையியல் மெளடீகமாக மாற்றும் போக்கில்தான் அவரது வெளிப்பாடுகள் இருந்தது. பிரமிளின் பல கவிதைகள் இத்தகைய புராண, இதிகாச மற்றும் வேத உபநிடதங்களின் வழிநின்று பேசக்கூடியக் கவிதைகள். இவற்றில் உள்ள அவரது ஆழ்ந்த அறிவைக் கவிதைகளின் மொழிப்படிமங்களாக மாற்றுகிறார். “கோத்ரம்” என்ற கவிதை (2007, 58) ர௬க்வேதப் பாடல் வடிவிலேயே எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். ஆனால், அது நவீனப்பார்வையில் பிராமணர்களின் ரிஷி வம்சாவளியான கோத்ரம் என்பதை விமர்சிப்பதாக அமைந்த ஒன்று. காமார்த்தம் மற்றும் ஞானார்த்தம் என்ற இரண்டு எல்லைகளுக்குள் தான் அவரது பெரும்பாலான கவிதைகள் எழுதப்பட்டுள்ளது. அவ்வகையில், பிரமிள் இன்றைய இளம் படைப்பாளிகளுக்கு, தமிழ்ச் சிற்றிதழ் இயக்கத்தின் முக்கியமான கவனப்படுத்த வேண்டிய ஓர் எழுத்தாளர். இன்றைய புதிய தலைமுறை இலக்கியவாதிகள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு எழுத்தியக்கம் பிரமிளுடையது. கவிதைபற்றிய அவரது கவிதைகளும், கட்டுரைகளும் கவிதையை, இலக்கியப் படைப்புணர்வை ஒரு மெய்ஞானமாக மாற்ற முயல்பவை. அன்றாட அனுபவங்களை மெய்ஞானத்தின் வழியாக அறிய முற்படுபவை. வாழ்வின் புரிபடாதவற்றையும், அவை உருவாக்கும் தெளிவின்மையுமே அவரது கவிதைகளின் அரூபமான தெளிவற்ற வெளிப்பாட்டுக்கு காரணம். ஆனால், வலிந்து அது தனது அகசக்தியின் வெளிப்பாடாக அவர் கொள்வது அவரது படைப்புக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த வாதமே தவிர வேறொன்றுமில்லை.

தெருவில் விழுந்து

நிலவின் ஒளியைத் துடைத்தது

மின்சார வெளிச்சம் !

இப்படியான மெய்ஞானமும் இல்லாத விஞ்ஞானமும் இல்லாத அஞ்ஞானக் கவிதை வரிகளும் ஆங்காங்கே தலைகாட்டுகிறது அவரது பிரக்ஞையின் ஓரத்தில். “பிரதி” என்ற தலைப்பைக் கொண்ட இக்கவிதை இன்றைய இராமனின் பிரதியை, சீதாவைத் தொலைத்துவிட்டுத் தாசியைத் தேடும் மனித வேட்கையினை விமர்சிப்பதாக அமைந்துள்ளது. கவிதைகளில் ஒரு கட்டுக்கோப்பும் பொருண்மையும் கொண்டு எழுதப்பட்டவை இக்கவிதைகள். இதில் பிரக்ஞையின் சாயல்கள் என்ன? என்ற கேள்வி உள்ளது. அகலிகை, கோதமர், இந்திரன், இராமன் என்கிற புராணப் பாத்திரங்கள் பல கவிதைகளில் வலுவான படிமங்களின் வழியாக மறு விசாரணை செய்யப்படுகிறார்கள். காரணம் அகலிகை கதை பல எழுத்தாளர்களால் மாற்றி மாற்றி எழுதப்பட்ட ஒரு பிரதி. இதைதான் பிரதியூடக வெளியின் விளைவு என்கிறேன். ஏற்கனவே பிரதியாக்கப்பட்ட தொன்மங்கள், புராணங்கள், கதைகள், நம்பிக்கைகள், வழிபாடுகள் ஆகியவை

புற மெய்மையாக உள்ளன. அவை அகத்தில் புரண்டு வெளிப்படுகிறதே தவிர, இந்தப் புறக்கதையாடல்கள் இல்லாமல் எப்படி கவிதை ஊடாட்டம் நிகழும் என்பதே கேள்வி.

“முட்டித் ததும்பியென்ன?

மாலையில் பகல் வடிகிறது

ஒளி ஒதுங்கி இரவாகிறது”

- என்று தொடங்கும் “அடிமனம்” என்ற கவிதை ஆழ்மனதின் புணர்ச்சி வேட்கையைப் பாடு பொருளாகக் கொள்கிறது. முட்டித் ததும்பி, வடிகிறது போன்ற சொற்கள் தரும் படிமங்கள் காமத்தின் வாசனையை நுகரச் செய்பவை. இப்படியாக இக் கவிதைகளை காமார்த்தம் மற்றும் ஞானார்த்தம் என்பதற்கு இடையில் ஊசலாடும் ஒன்றாக வாசித்தறியலாம். இவரது கவிதைகள் ஆழ்ந்த வாசிப்பிற்கு உரியவை. அவற்றை சிதைவாக்கம் செய்வதன் மூலம் உள்ளார்ந்த பொருளை வெளிக்கொண்டுவரலாம். அது மற்றொரு பணியாகும்.

3

பிரமிள் பல்துறைச் சார்ந்த அறிவாற்றல் மிக்கவர். ராம்சுரத் குமார், ஜே.கே., இந்திய மெய்யியல், மேற்கத்திய மெய் யியல், உலக இலக்கியம், தமிழ் மரபிலக்கியங்கள் தொடங்கி குவாண்டம் எந்திரவியல் வரை ஆழமான தனது பார்வையில் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டிருப்பவர். எது குறித்தும் ஒரு தனியான பார்வைக் கொண்டவர் என்றாலும், அவரது அடிப்படைத் தேடல் ஆன்மீகம். அவரது ஆன்மீகத் தேட்டமே அவரது படைப்புகளாகவும், தீவிரமான மற்றும் கூர்மையான விமர்சனமாகவும் வெளிப்பட்டது. இருபது வயது முதல் கவிதை எழுதத் தொடங்கியவர். தொடர்ந்து தனது ஆன்மீகத் தேடலை நிகழ்த்திக் கொண்டே இருந்தவர். தீவிரமான படிமச் சிந்தனையாளராக இருப்பதை அவரது படைப்புகளை வாசித்தவர்கள் அறியலாம். அதன் பொருட்டே அவரது படைப்புகள் வாசிப்பிற்குக் கடினமான, புரியாத்தன்மை கொண்டதாக உள்ளது எனலாம். தனது கூர்மையான விமர்சனத்தை மொழி லாவகத்துடன் கையாள்பவர். அதுவே ஒரு படைப்பாக வெளிப்படும் தன்மை கொண்டது. அவரது கட்டுரைகள் வாசிக்கச் சுவராஸ்யமானவை.

பகடியும், தீர்க்கமான விமர்சனமும், சமரசமற்ற தன்மையும் அவரது வாழ்நாளில் பல எதிர்ப்புகளை அவருக்கு ஏற்படுத்தியது. ஓர் இலக்கியவாதியாகத் தமிழ்ச் சமூகம் தரும் பரிசான ஏழ்மை வாழ்வையும், அதன் கசப்பையம் அனுபவித்தவர். தமிழ் நவீனத்துவப் படைப்பியக்கத்தில் பாரதி, புதுமைப்பித்தன் போன்றவர்களுடன் வரிசைப்படுத்திப் பேசத் தகுந்த இலக்கிய ஆளுமை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அடிப்படையில் மார்க்சியம் மட்டுமின்றி அனைத்து “ஸ்தாபன” அதாவது நிறுவனங்களுக்கும் எதிரானவர். நிறுவனங்கள் சமரசத்தையும், கண்மூடித்தனமான நம்பிக்கைப் பற்றையும் உருவாக்கும் என்பதில் தீவிரமான கருத்தைக் கொண்டிருந்தார். அதனால் அடிப்படையில் ஒரு நிறுவன எதிர்ப்பாளராக இருந்தார். தான் நம்பும் நம்பிக்கைகள் தவிர்த்து பிறவற்றின்மீது கூர்மையான விமர்சனங்களை, எதிர்ப்பைப் பதிவு செய்பவராக இருந்தார். இலக்கியம் என்பதை ஓர் ஆன்மீகம் சார்ந்த காலாதீதம் மிக்க மதமாக அவரது நம்பிக்கை வெளிப்பட்டிருப்பதை அவரது படைப்புகள் மற்றும் கட்டுரைகளில் வாசிக்க முடிகிறது. இலக்கியத்தை ஒரு மதமாக பாவித்தார் எனபது மிகையான கூற்றாகாது. தமிழ்ச் சிறுபத்திரிகை மரபில் இலக்கியக் கலகக்காரராக இறுதிவரை இருந்தவர். இது அவரை நிராகரிக்கும் இலக்கியவாதிகள்கூட எதிர்மறையாகக் கற்றுக் கொள்ளவேண்டிய பாடம். அவரது வாசிப்புப் பரப்பு அகண்டமானது மட்டுமல்ல மிகவும் ஆழமானதும்கூட.

உலக இலக்கியத்தில் புதுக்கவிதைக்கான அடிப்படைகளை உருவாக்கி, நவீனத்துவத்தின் புதிய பாதையைக் கவிதைகளில் உருவாக்கிய எஸ்ரா பவுண்டு குறித்து இவர் முன்வைக்கும் வாதங்கள் முக்கியமானது. அவர் ஜெர்மானிய பாசிசத்தை ஆதரித்தவர் என்ற குற்றச்சாட்டிற்கு இவர் கூறும் சமாதானங்கள் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது. “நவீன வியாபார மனோபாவங்கள் கலையுணர்வையும், காலச்சூழலையும் பாதிப்பது கண்டு, இதன் காரணகர்த்தாக்கள் பெருந்தனவாதிகளான யூதர்களே என்ற தவறான முடிவிற்கு வந்தார் பவுண்டு. இம்முடிவு இவரை பாசிச அனுதாபியாக்கிற்று.” (2004, 194) என்று கூறும் பிரமிள் மற்றொரு கருத்தையும் இதற்குச் சாதகமாக எடுத்துவைக்கிறார். “ஆனால், அபாரமான கலைஞர்கள் இளமை யிலே மடியும்படி விட்ட பொதுவான நவீனவர்த்தகச் சூழலை நோக்கி ஒருகலைஞன் கொண்ட ஆவேசத்தின் விளைவு அவரது பாசிசம் என்றுதான் கருதவேண்டியுள்ளது.” (2004, 194) என்று கூறும் பிரமிள் அவர் கலைக்கு எதிரான பாசிஸ்டுகளையும் சாடினார் என்று குறிப்பிடுகிறார். அது குறித்து எந்த ஆதாரத் தகவலும் சுட்டப்படவில்லை. பிரமிள் அவர்களின் இலக்கிய இயக்கத்திற்கும் இது பொருந்தக் கூடியதே. அவரது காலத்தின் இலக்கியம் ஒருபுறம் வணிக நிறுவனமயமாகியது மற்றொரு புறம் பிராமணீய சாதியமாகியது. இலக்கிய பிழைப்பிற்கானதாக மாறுவதற்கான சமரசங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தது. இச்சூழல் அவரது இலக்கியக் கோட்பாட்டை இவற்றிலிருந்து விலக்கி இன்னும் தீவிரப்படுத்தியது.

ஒரு கலைஞனுக்கு காலாதீதத்தை தாண்டிய உண்மையான அக உணர்வின் தீட்சண்யம் உண்டு என்ற தனது இலக்கியக் கோட்பாடாக பல கட்டுரைகளில் வெளிப்படுத்தும் பிரமிள், எஸ்ரா பவுண்டின் அகஉணர்வு ஏன் அந்த உண்மை ஒளியில் புடமாகவில்லை என்பதை ஆராயாமல் விட்டுள்ளார். மேலும், பவுண்டு பதினைந்து வருடங்களாக ஜேம்ஸ் ஜாய்ஸ் அவர்கள் எழுதிய உலகப் புகழ் பெற்ற நாவலான “யுலிசஸ்”' எழுத முழுமையாக உதவியதைச் சுட்டிக்காட்டுகிறார். ஜாய்ஸ் ஒரு யூதர். ஒரு சிறந்த கலைஇலக்கியவாதி என்றமுறையில் அவர் யூதர்களின் பாசிச வெறுப்பைக் கொள்ளவில்ல என்கிறார். “கலைஇலக்கியத்தை உதாசீனம் செய்வதன் மூலம் அதை நசிவடையவும் அழியவும் விடுகிற பணவாதிகள்மீதும் போலிகள் மீதும் பவுண்டு செய்த இந்தத் தாக்குதல் கவிதைகளைப் படிக்க வேண்டும்” (2004, 194) என்று கோரிக்கை வைக்கிறார். அடிப்படையில் ஓர் ஆன்மீகவாதியான பிரமிள், தமிழ் கலைஜலக்கியம் திரண்டு செழித்த எழுத்து தொடங்கி பிந்தைய கசடதபற, நடை வரையிலான காலங்களில் நிகழ்ந்த தமிழ் இலக்கியச் சூழலின் விமர்சனமாகவும் இதனைக் காணலாம்.

கலைஇலக்கியம் அல்லாத எதையும் கவனப்படுத்தவோ, அதன் தர்க்க எல்லைகள் சமூகச் சலனங்கள் குறித்தோ எழுதியதைவிடப் பிரமிள் கலை இலக்கிய உண்மைத்துவத்தை, அகவுணர்ச்சியின் நேர்மையை, அதன் வெளிப்பாட்டு, உள்விழிப்பை அதிகமதிகம் எழுதி உள்ளார். அவரது யதார்த்த வாழ்வில் ஏற்பட்ட மன அவசங்கள் பல அவரது கவிதைகளில் இருண்மைகளாக, இருளாக, ஒளியற்ற தசைச்சுவர்களின் நிழல்களாக வெளிப்பட்டுள்ளது.

“வயிற்றில் குடியிருந்து

வாழ்ந்து பசிக்கிறது

நிகழ்காலம்

பசியில் அடைத்த

காதிலும் விழுகிறது

“நாளை புரட்சி

சரித்திரம் நமது கட்சி”

என்றேன்

பசியைக் கூட

ஜீரணிக்க முயற்சிக்கும்

ஏப்பக் குரல்கள்.

ஆனால்,

நாளைகள் ஒவ்வொன்றும்

நாள்தோறும் நேற்றாக

தன்பாட்டில் போகிறது

தான்தோன்றிச் சரித்திரம்.”

1973ல் எழுதப்பட்ட “நாளை புரட்சி” (2007, 75) என்ற தலைப்பிலான கவிதை, புறஉலகின் சிக்கலைப் பேசுகிறது. இப்படியான கவிதைகளும் அவரால் எழுதப்பட்டுள்ளது. இவற்றை அவர் எந்த அகத்தெழுச்சி வகையில் சேர்ப்பார்?

அவரது கவிதைகள் குறித்த அகப்பிம்பம் அல்லது சிந்தனைப் படிமம் (image of thought) என்பது அவரது மொழியில் கூறினால் காலாதீதமான ஒருவகை அதீதத்துவம் குறித்த அகவேட்கை எனலாம். காலத்தைக் கடந்த மற்றும் காலந்தாண்டிய அல்லது காலத்தால் தீண்டப்படாத அதீதமான உணர்வெழுச்சிகளுக்கான வேட்கை குறித்த படிமம். அடிப்படையில் காலத்தை வெல்வதற்க்கான அடிப்படை ஆன்மீக உணர்வாகக் கலை இலக்கிய மனவெழுச்சியைக் கொள்கிறார். அதனால் தொடர்ந்து அவர் மனவெழுச்சியே கவிதையின் வெளிப்பாடு என்பதையும், கட்டப்படும் கவிதைகளில் இருந்து இந்தக் கவித்துவ உத்வேகம் வேறுபட்டது என்கிறார். கலைஇலக்கியத்தின் வழி ஒருவகை ஆன்மீக உச்சநிலையை அடைய முனையும் வேட்கையே அவரது படைப்புகளின் ஊற்றுக் கண் எனலாம். அதனால்தான் மெய்யியல் சார்ந்து நிற்பதாக அவரது படைப்பியக்கம் உள்ளது. கவிதை அகண்ட பிரபஞ்ச விகசிப்பில் தன்னை இணைத்துக் கொள்ளும் ஒரு அகத்தின் பேரெழுச்சியில் உருவாகும் கணம் அதாவது அவரது சொல்லில் சொன்னால் “இக்கணம்”. அவரது ஆன்மீக வேட்கையில் “இக்கணம்” என்பது முக்கியமானது. அதனை புத்தம், ஜே.கே., அத்வைதம் உள்ளிட்ட மெய்யியல் சிந்தனைகளில் இருந்து பெறுகிறார்.

கவிதை ஒருவரை ஆன்மீக வயப்படுத்த வேண்டும் என்பதே அவரது படைப்புகளின் தேட்டமாக உள்ளது. புறவாழ்வின் அழுத்தங்கள் அனைத்தும் அவரது அகநெருக்கடிகளில் இந்த சாதாரண வாழ்வை நெட்டித்தள்ளி ஓர் ஆன்மீக கற்பனையான அகவாழ்வை அனுபவமாக்க முயல்கிறது அல்லது புறவாழ்வின் நெருக்கடிகளைக் கடக்க அது ஒரு சக்தியாக உள்ளது. பேரறிவு குறித்த கற்பனையும், அதை அடைவதற்கான பேருணர்வை உருவாக்குவதே கலை இலக்கியத்தின் ஆகப்பெரும் பணி என்கிற சிந்தனைப் படிமமே அவரது படைபியக்கத்தின் மையமாக உள்ளது. அதில் அவர் எந்த சமரமுமின்றி, இல்வாழ்வின் எல்லா நெருக்கடிகளையும் கடந்து புறங்கையால் ஒதுக்கி தனது அகக்கையால் எழுதப்பட்டதாக தனது கவிதை இயக்கம் குறித்து கவிதைகளில் தன் வாக்குமூலமாக வெளிப்படுத்துகிறார். கவிதையைப் பற்றியும் அதன் உருவாக்கம் பற்றியும் சில கவிதைகள் அவரால் எழுதப்பட்டுள்ளது. “தொழில் கவிதை” (2007, 82) என்ற கவிதையில் கவிதையை ஒரு மனைவியாக உருவகித்து எழுதுகிறார். “மனக்கண்ணின் மத்தளத்தில் கதிர்களின் கூத்தடிப்பு? என்று “மோகினியாக” இரவில் கவிதை உருவாக்கும் இனிமையான தருணத்தை எழுதுகிறார். இதுபோன்ற அவரது கவிதை உருவாக்கக் கணங்கள் குறித்துச் சில கவிதைகள் அவரது படைப்புக் கோட்பாட்டிற்கான சாட்சிகளாக அமைந்துள்ளன.

மொழி, அவருக்குப் புற மெய்யை விட அகமெய்யாகவே செயல்பட்டுள்ளது. அஞ்ஞானம், விஞ்ஞானம், மெய்ஞானம் என்ற முப்பரிமாண அறிதல்முறையைக் அவர் கைக்கொண்டுள்ளதை அவரது படைப்புகளின் வாசிப்பில் அறியமுடிகிறது. அதாவது யதார்த்தமான இயல் (லெளகீக) வாழ்வில் வாழ்பவர்களை அஞ் ஞானிகளாவும், யதார்த்த உலகை புரிந்து வாழ்பவர்களை விஞ்ஞானிகளாகவும் (விஞ்ஞானம் என்பது சமஸ்கிருத மெய்யியலில் பெளதீக இருப்பைக் குறிக்கும் சொல், தமிழில் அறிவியல் என்ற பொருளில் அது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது) இவற்றை மீறி உண்மை அறிவை உணர்பவர்களை மெய்ஞானிகளாகவும் பார்க்கிறது இவரது படைப்புலகம். இதிலிருந்து காமார்த்தம், ஞானார்த்தம் என்ற இரண்டு சொல்லாட்சிகளை இவர் உருவாக்குகிறார். காமார்த்தம் என்பது யதார்த்த உலகை அதில் உள்ள உடல் அதன் காமக் குரோதங்கள், அதன் வேட்கை ஈடுபாடுகள் ஆகியவற்றைக் குறிக்கிறது. இது புணர்ச்சி, உடல் இச்சை, உடலின் தசைகளின் செயல்பாடுகள் என நீள்கிறது. அவரது படைப்பியக்கம் இயங்கும் மொழிக் கூறுகளான சொற்களை யாராவது ஓர் ஆய்வாளர் தொகுத்தால் அவை தமிழின் வீச்சில் குறைவானதொரு அகராதியாகவே இருக்கும். பெரும்பாலான கவிதைகளில் இக்கணம், இருள், அதீதம், காலாதீதம், தசைச்சுவர், புழுதி, நக்ஷட்த்திரம், பரிதி, நிலவு, பாலை, கதிர், ஒளி, பிளவு, இருட்டு... இன்னும்பிற சொற்கள் அதிகம் திரும்ப திரும்ப ஒரு இருண்மையான அல்லது தெளிவற்ற. சிதறலான அனுபவத்தை, உணர்வைத் தரக்கூடியதாக அமைந்துள்ளது.

அவரது கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள், குறுநாவல்கள் என்கிற படைப்பியக்கம் குறித்ததொரு ஆய்வு விரிவாக செய்யப்பட வேண்டும். இங்கு அவரது இலக்கியக் கோட்பாட்டை அவரது விமர்சனக் கட்டுரைகளில் இருந்தும், அவரது கவிதைகளில் இருந்தும் வாசித்துத் தொகுக்க முயன்றுள்ளேன். அவரது மொத்த இலக்கிய உலகம் குறித்து விரிவான ஆய்வுகள் செய்யப்படும்போது இன்னும் துலக்கமாக அவரது படிமங்கள், உருவகங்கள் என இலக்கிய உத்திகள் தொடங்கி, அவர் உருவாக்க விரும்பிய விமர்சன மரபு குறித்த விசாரணையையும் நிகழ்த்த முடியும். அவர் கவிதைகளின் முக்கியக் குணமாக இந்த நிகழ்த்துதலை முன்வைக்கிறார். கவிதை நிகழ்த்தப்பட வேண்டும் வாசிப்பவரின் அகத்தில் என்பதும் அவரது இலக்கியக் கோட்பாட்டின் மற்றொரு அம்சம். “கவி வாழ்வோ பூரண வாழ்வு. அவ்வாழ்வில் கவி எழுதப்படாவிட்டாலும் கவித்துவம் உண்டு.” (2004, 85) என்கிற பிரமிள் தன் வாழ்வை ஒரு கவி வாழ்வாக வாழத் தலைப்பட்டவர் என்பதை அவரது எழுத்துக்களில் வெளிப்படும் கவித்துவ வேட்கையாக உணர முடிகிறது.

பயன்பட்ட நூல்கள்

1. வானமற்ற வெளி - கவிதை பற்றியக் கட்டுரைகள், 2004, பிரமிள் (தொகுப்பாசிரியர் கால சுப்ரமணியன்), அடையாளம்

2. பிரமிள் கவிதைகள் - பதிப்பு: கால சுப்ரமணியம், 2007, அடையாளம்

3. பிரமிள் படைப்புகள் - பதிப்பாசிரியர்: கால. சுப்ரமணியம், 2003, அடையாளம்

- ஜமாலன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.