கல்வித்துறையில் முசோலினி செய்த மாற்றங்களைத் தற்பொழுது நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். கல்வியைத் தனியார் மயமாக்குவதிலும், கல்வி நிறுவனங்களில் மத போதனைகளைப் புகுத்துவதிலும், ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்குவதிலும் முசோலினி அதிக முக்கியத்துவம் தந்தான். இவற்றைத்தான் ஆர் எஸ் எஸ் அமைப்பு இப்பொழுது இந்தியாவில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல, இந்துத்துவவாதியான டாக்டர் மூஞ்சே, முசோலினியை நேரில் சந்தித்ததோடு, பாசிஸ்டான முசோலினியின் கல்வி அணுகுமுறையை மிகவும் உற்சாகமாக வரவேற்றார் என்பதும், முசோலினியின் கல்வி முறையை இந்து ராஷ்டிரத்தில் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார் என்பதும் வரலாறு. இப்பொழுது பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியில் அதே வரலாறு திரும்புகிறது என்பதற்கான சான்றுதான் தேசியக் கல்விக் கொள்கை 2020ம், பல்கலைக் கழக நல்கைக்குழுவின் 2025 ஆம் ஆண்டு (University Grants Commission - UGC) வரைவறிக்கையும்.
பல்கலைக்கழக நல்கை (மானிய) குழுவின் தோற்றம்
அலிகார், பனாரஸ், தில்லி உள்ளிட்ட பல்கலைக் கழகங்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த 1945 ல் உருவாக்கப் பட்டதே இக்குழு. பின்னர் இது ஏனைய பல்கலைக் கழகங்களுக்கும் விரிவாக்கப் பட்டது. 1956 ஆம் ஆண்டில் பல்கலைக் கழக நல்கைக் குழுச் சட்டம் (UGC Act 1956) நிறைவேற்றப் பட்டு, சட்ட அங்கீகாரம் அதற்கு வழங்கப் பட்டது. அதைப் பயன்படுத்தி இக்குழு பல்கலைக் கழகங்களில் தேவையற்ற முறையில் தலையீடுகள் செய்தது. எனவே 1967ல் அமைக்கப்பட்ட கோத்தாரி கல்விக் குழு இது தேவையற்ற செலவுகளுக்கான குழு எனவும், இதைக் கலைத்து விடுவது நல்லது எனவும் பரிந்துரைத்தது. இந்திய ஒன்றியத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆட்சிக்காலத்திலும் இக்குழு குறித்துப் புகார்கள் இருந்தன. எனினும் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, ஏனைய நிறுவனங்களைப் போல், இக்குழுவும் ஒன்றிய அரசின் கைப்பாவையாக மாறிவிட்டது. இக்குழுவின் 2018 ஆம் ஆண்டு சட்டத்திலுள்ள சிறிதளவு சனநாயகக் கூறுகளும் 2025 வரைவு நெறிமுறையில் நீக்கப்பட்டு விட்டன.
பல்கலைக்கழக நல்கைக் குழு (யூஜிசி) 2025 வரைவு நெறிமுறைகள்
யூஜிசி தலைவர் எம். ஜெகதீஷ்குமார் 2025 சனவரி ஆறாம் நாள் புதுதில்லியில் இக்குழுவின் வரைவறிக்கையை வெளியிட்டார். இது குறித்த கருத்துக்கள் பிப்ரவரி 5 ஆம் நாள் வரை வரவேற்கப்படும் எனவும், மார்ச்சு மாதக் கடைசியில் இறுதி அறிக்கை வெளியாகும் எனவும் அறிவித்தார்.
தற்பொழுது வெளியாகியுள்ள வரைவு அறிக்கையின்படி, துணை வேந்தராகத் தேர்வு செய்யப்படும் நபர் பேராசிரியராகத்தான் பணி செய்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. ஆராய்ச்சி அல்லது அகாடமி கல்வி நிர்வாக அமைப்புகளில் பதவியில் இருப்பவர்களாகவும் இருக்கலாம், தொழில், பொது நிர்வாகம், பொதுக் கொள்கை அல்லது பொதுத்துறை நிறுவனங்களை" சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். அதாவது தொழில் அதிபராகவும் இருக்கலாம், அதிகாரிகளாகவும் இருக்கலாம் என்று தகுதி விரிவாக்கம் செய்யப்படுகின்றது. இது கல்விப் பரப்பில் மிகவும் ஆபத்தானது. கல்வி நிறுவனங்களில் அதுவும் பல்கலைக் கழங்களில் அனுபவம் பெறாதவர்களைத் துணை
வேந்தர்களாக நியமிப்பது கல்வி மற்றும் நிர்வாகப்பரப்பில் பல்வேறு குழப்பங்களை உண்டாக்கும்.
ஒன்றிய அரசின் மூலம் நியமிக்கப்பட்ட ஆளுநர், தான் விரும்பும் எந்தக் கல்வியாளர் அல்லாத நபரையும் மாநிலப் பல்கலைக்கழங்களின் துணைவேந்தராக நியமிக்கும் ஆபத்து உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பல்கலைக் கழகங்களை மறைமுகமாகத் தாரை வார்க்க வழி வகுக்கும் திட்டமே இது. பணப் பற்றாகுறையால் பல்கலைக் கழகங்கள் தடுமாறும் வேளையில், கார்பரேட் நிர்வாகிகள் மிக எளிதாகப் பல்கலைக் கழகங்களைக் கைப்பற்றி, அவற்றைப் பணம் கொழிக்க வைக்கும் வணிக நிறுவனங்களாக மாற்றுகிறோம் என்ற பெயரில் எளியவர்களுக்களுக்கு உயர்கல்வியை எட்டாக் கனியாக மாற்றும் ஆபத்து உள்ளது.
மேலும் துணை வேந்தருக்கானத் தேடுதல் குழுவில் இது வரை பல்கலைக் கழக செனட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஒரு பிரதிநிதியும், ஆட்சிக் குழு எனப்படும் சிண்டிகேட்டிலிருந்து தேர்வு செய்யப்படும் ஒரு பிரதிநிதியும், ஆளுநர் சார்பாக ஒரு பிரதிநிதியும் இருந்தனர். ஆனால் தற்போது செனட் மற்றும் சிண்டிகேட்டில் ஏதேனும் ஒன்றிலிருந்து மட்டும் ஒரு பிரதி நிதி தேர்வு செய்யப்படலாம் என்று மாற்றப்பட உள்ளது. இது ஆசிரியர் பிரதிநிதிகள் செனட்டில் பங்கேற்று, தேடுதல் குழுவிற்கான பிரதிநிதியைத் தேர்வு செய்யும் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும். கூடுதலாக ".ஜி.சியின் பிரதிநிதி ஒருவர் தேடுதல் குழுவில் இடம்பெறுவார் என்பது தமிழ் நாடு அரசும் பல கல்வியாளர்களும் தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையாகும். தமிழ் நாட்டில் தகுதி வாய்ந்த ஒரு கல்வியாளரைத் தீர்மானிப்பதில் ".ஜி.சி பிரதிநிதியும் இருப்பார், இது தவிர ஆளுநர் பிரதிநிதி ஒருவரும் இருப்பார், எல்லாவற்றிற்கும் மேலாக ஆளுநர் யார் துணைவேந்தராவது என்பதைத் தீர்மானிப்பார் என்பது துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசுக்கோ, ஆசிரியர்களுகோ எந்த வகையிலும் பங்காற்ற அதிகாரம் இல்லை என்றாக்குகின்றது. கல்விப் பரப்பில் தங்கள் அரசியல் செல்வாக்கை நிலைநாட்ட நடுவண் அரசு இப்படிப்பட்ட சனநாயக விரோதத் திட்டங்களைக் கொண்டு வருவது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
உதவிப்பேராசிரியர் நியமனத்தில், இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளில் எந்தப் பாடங்களில் படித்திருந்தாலும், நெட் தேர்ச்சி வகுப்புகளுக்கும் அல்லது முனைவர் பட்டத்தைப் பெறும் வகுப்புகளுக்கும் அவர்களை ஆசிரியராக நியமிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளங்கலை, முதுகலை வகுப்புகளில் ஒரு பாடத்திட்டத்தைப் படிக்காமலேயே அப்பாடத்தில் நெட் தேர்வு எழுதலாம், முனைவர் ஆராய்ச்சியும் மேற்கொள்ளலாம் என்பதை மறைமுகமாக இது சுட்டுகின்றது. இளங்கலை, முதுகலையில் தான் கற்பிக்கப்போகும் பாடங்களைப் பயிலாதவர் எப்படி அந்தப் பாடங்களை மாணவர்களுக்கு அடிப்படைகளுடன் நடத்த இயலும்?.
மேலும் முனைவர் பட்டம் என்பது கல்லூரிகளில் பாடம் நடத்துவதற்கு அவசியமானது அல்ல. அது ஒரு சிறப்பு அம்சம் அவ்வளவுதான் எனும் ".ஜி.சி யின் அணுகுமுறை கற்பித்தலின் அடிப்படையையே தகர்க்கிறது. இன்று முனைவர் பட்டம் பெற ஒரு துறையில் பதிவு செய்து கொண்டு, பிறகு அதில் பல துறைகளையும் ஒருங்கிணைத்து (Interdisciplinary) முனைவர் பட்டம் பெறுகின்றனர். இத்தகைய முறை ஆய்வுக்குத்தான் பொருந்தி வரும். ஆனால் பாடங்களை நடத்துவதற்கு இது பொருந்தாது. எனவே இந்த முன்வைப்பை ".ஜி.சி. கண்டிப்பாகத் திரும்பப் பெற வேண்டும்.
கல்லூரி மற்றும் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத்தில் பல விதப் பிரிவுகளை ".ஜி.சி. அறிமுகப்படுத்துகின்றது. உதவிப் பேராசிரியர் பணிக்கு பலவித நிலைகளை குறிப்பிடுகின்றது. ஊதிய நிர்ணயத்தில் இது பல வேறுபாடுகளைக் குறிக்கும். இது ஆசிரியர்கள் நலனுக்கு எதிரானது. ஆசிரியர்களைப் பழி வாங்க நிர்வாகங்களுக்கு வழங்கப்படும் சக்தி வாய்ந்த ஆதேம் இது.
காலிப்பணியிடங்களை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தகுதியானவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்பதில் யூஜிசி சிறிதும் அக்கறை காட்டவில்லை என்பது ஏற்கத்தக்கதல்ல! இளநிலை மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கையிலும் நுழைவுத் தேர்வு நடைபெறும். தேசியக் கல்விக் கொள்கை 2020 ஐ புதிய கல்விக் கொள்கையை வலியுறுத்தும் வகையில் யூஜிசி யின் நெறிமுறை இருக்கும். இந்நெறிமுறையை ஏற்காவிட்டால், யூஜிசி சார்பாகப் பல்கலைக் கழகங்களுக்கு நிதி ஏதும் வழங்கப்படாது; அத்தகைய பல்கலைக் கழகம் வழங்கும் பட்டங்கள் செல்லாதவையாகக் கருதப்படும்.
பல்கலைக் கழகப் படிப்பை விட்டு எப்பொழுது வேண்டுமானாலும் வெளியேறலாம், விருப்பம் போல் மீண்டும் வந்து படிப்பைத் தொடரலாம் என்பன போன்ற வழிமுறைகள் ஒரு பருந்துப் பார்வையிலேயே பல்கலைக் கழகச் சனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானவை என்பதை எளிதில் உணர முடியும்.
மேலும் இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த ஆறு மாதத்திற்குள் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும், தக்க மாற்றங்களைக் கொண்டு வரும் நடவடிக்கைகளை எடுக்க
வேண்டும். இந்த விதிகளை மீறும் உயர் கல்வி நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விதிமுறைகளில் ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டால், யூஜிசியின் முடிவுதான் இறுதியானதாக இருக்கும் என்பது போன்ற விதிமுறைகள் உயர் கல்வியை முற்றிலும் நாசமாக்கி விடும் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை.
பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு
யூஜிசி 2025 நெறிமுறைகளுக்குத் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், மேற்கு வங்காளம், தெலங்கானா, பீகார் போன்ற மாநிலங்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. யூஜிசி 2025 நெறிமுறைகளைக் கைவிடக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025 சனவரி ஒன்பதாம் நாள் தீர்மானம் நிறைவேற்றப பட்டது. மேலும் குழுவின் நெறிமுறைகளை எதிர்த்து ஏனைய மாநிலங்களும் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என வேண்டித் தமிழ்நாடு முதலமைசேர் ஸ்டாலின் அவர்கள் பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் தில்லி, இமாசலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகம், கேரளம் பஞ்சாப், தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஒன்பது மாநிலங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். மேலும் குழுவின் நெறிமுறைகளைத் திரும்பப் பெறுமாறு ஒன்றியக் கல்வி அமைசேர் தர்மேந்திர பிரதானுக்கும் சனவரி 20 அன்று கோரிக்கை விடுத்துள்ளார். ஒன்றிய அரசு தனது வரைவு மசோதாக்களைத் திரும்பப் பெறுவதோடு, உயர் கல்வித் தேவைகளுக்கு உகந்த முறையில் நெறிமுறைகளை மீளாய்வு செய்ய வேண்டும் எனவும் அக்கடிதத்தில் தமிழக முதலமைசேர் அலர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாண்புமிகு ஸ்டாலின் அவர்களின் கடித வேண்டுகோளை ஏற்று கேரள முதலமைசேர் பிரணாய் விஜயன் அவர்களும், யூஜிசி குழுவின் நெறிமுறைகளை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் எனக் கேரளசேட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்.
மேலும் ஆளும் பாரதீய ஜனதாக் கட்சியின் அணியிலுள்ள ஜனதா தளம் ( ஐக்கியம் ) தெலுங்கு தேசம், லோக் ஜன் சக்தி ( ராம் விலாஸ்) போன்ற கட்சிகளும் யூஜிசி அமைப்பின் வரைமுறைகளுக்குத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. யூஜிசியின் அத்துமீறிய செயல்கள் யூஜிசி குழுவின் பல்வேறு பரிந்துரைகள் கல்வித் துறை சனநாயகத்திற்கு முற்றிலும் முரணானவை. அதிலும் . இக்குழுவின் நிபந்தனைகள் மாநில அரசின் உரிமைகளைக் காலில் போட்டு மிதப்பவையாக உள்ளன. பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரை நியமிப்பதில் மாநில அரசுக்கு எவ்விதப் பங்கும் இல்லை என்பது உசே கட்டச் சர்வாதிகாரமாகும். பல்கலைக் கழகங்களுக்கு நிலம் வழங்குவது, கட்டடம் கட்டித் தருவது, பேராசிரியர்களுக்குச் சம்பளம் வழங்குவது என அனைத்தையும் செய்வது மாநில அரசுகள். ஏறக்குறைய பல்கலைக் கழகத்தின் 85% செலவினங்களை மாநில அரசுகள்தான் ஏற்றுக் கொள்கின்றன. அப்படியிருக்க மாநில அரசுகளுக்கு எவ்வித உரிமையும் வழங்காமல், ஒன்றிய அரசு பல்கலைக் கழக நிர்வாகத்தைத் திருட்டுத்தனமாகத் தன்வசப் படுத்த முயல்வது மிகவும் இழிவான செயலாகும். கரையான் புற்றெடுக்கக் கருநாகம் புகுந்த கதைதான்.
துணைவேந்தரை நியமிக்கும் தேடுதல் குழுவை மாநில அரசுதான் இதுவரை நியமித்து வந்தது. அக்குழு பரிந்துரைக்கும் மூவரில் ஒருவரை ஆளுநர் தெரிவு செய்யும் நிலைதான் 2018 நெறிமுறையில் இருந்தது. ஆனால் தற்பொழுது துணைவேந்தரை நியமிக்கும் அனைத்து அதிகாரங்களும் ஆளுநர் கைக்கு மாறிவிட்டது. மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு எவ்வித அதிகாரமும் இல்லாத நிலை உருவாகும். மாநில அரசிடம் மாதாமாதம் சம்பளம் வாங்கும் ஊழியராகிய ஆளுநரை அனைத்து அதிகாரங்களும் கொண்ட பீடத்தில் ஏற்றி வைத்திருக்கிறது மோடியின் ஒன்றிய அரசு. எவ்வளவு அயோக்கியத்தனம்!
இதைத்தான் தமிழக அரசின் சட்டமன்றக் கண்டனத் தீர்மானமும் சுட்டிக் காட்டுகிறது. மாநிலத்தின் உண்மையான இலட்சியங்களையும், மாநிலத்தின் கல்வித் தேவைகளையும், மாணாக்கர்களுக்கான உதவித் தொகைகளையும் உறுதிப்படுத்தப் பல்கலைக் கழகத் துணை வேந்தரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் மாநில அரசின் பங்கேற்பு மிகவும் முக்கியமானது எனவும், பல்கலைக் கழகத்திற்குத் தேவையான பேராசிரியர்களையும், பணியாளர்களையும் நியக்கும் குழுக்களில் மாநிலத்தைப் புறக்கணிப்பது ஏற்கத்தக்கதல்ல எனவும் தமிழக அரசு சுட்டிக் காட்டியுள்ளது.
அரசமைப்புச் சட்டம் சொல்வது என்ன?
கல்வி உரிமை பொதுப் பட்டியலில் இருந்தாலும், பல்கலைக் கழகங்கள் இன்னும் மாநிலப் பட்டியலில்தான் உள்ளது. இதைக் கேரள அரசின் கடிதமும் சுட்டிக் காட்டுகிறது. ".பிரிவு 66ல் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளவை தவிர, பல்கலைக் கழகத்திற்குத் தொடர்புடைய எதுவும் ஒன்றியப் பட்டியலில் இல்லை. குறிப்பாக உயர்கல்வி நிறுவனங்கள் அல்லது ஆய்வு மற்றும் அறிவியல் / தொழில்நுட்ப நிறுவனங்களின் தகுதியைத் தீர்மானிப்பதும், ஒருங்கிணைப்பதும் ஒன்றியப் பட்டியலில் இல்லை என அரசமைப்பின் ஏழாவது பட்டியலில் உள்ள மாநில மற்றும் ஒத்திசைவுப் பட்டியல் (State and Concurrent List) தெளிவாகக் குறிப்பிடுகிறது". எனக் கேரள முதலமைசேர் தெளிவு படுத்துகிறார்.
அரசமைப்பு நிர்ணய அவையில் அண்ணல் அம்பேத்கரும் இதைச் சுட்டிக் காட்டியுள்ளார். "உயர் கல்வி கற்பிக்கும் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் / தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற சிலவற்றின் தரத்தைப் பாதுகாப்பதை மட்டுமே பிரிவு 57 A (தற்பொழுது பிரிவு 66 அதாவது ஒன்றியப் பட்டியல்) குறிப்பிடும்" என்பது அண்ணலின் வழிகாட்டுதல் ஆகும். இதையேதான் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களும் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். "மிகவும் அடிக்கடி மாற்றங்களுக்கு உள்ளாகும் யூஜிசி குழுவின் நெறிமுறைகள், அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் விருப்பத்திற்கு அப்பாற்பட்ட பல்வேறு பிரிவுகளை அறிமுகப்படுத்துகிறது"
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள்
யூஜிசி 1956 சட்டப்படி, மாநிலங்களின் உரிமைகளை மேலாண்மை செய்வதற்கு யூஜிசி அமைப்புக்கு எவ்வித உரிமையும் கிடையாது. மேலும் மாநிலப் பல்கலைக்கழகச் சட்டப்படி, யூஜிசி நெறிமுறைகள் மாநில உரிமைகளுக்குக் கீழானவைதான். மாநில அரசின் பல்கலைக்கழகச் சட்டங்களை மீற யூஜிசி செயல்பட முடியாது. இதைத்தான் Ch. Tika Ramji (vs) State of U P. 1956 எனும் வழக்கில் உசே நீதிமன்றமும் உறுதி செய்கிறது. மேலும் மாநில அரசின் ஆட்சி நெறிமுறைகளுக்கு ஏற்றாற் போல் வரையரைகளை மாற்றியோ அல்லது தழுவியோ அமைக்கத்தக்க தேர்வு முறை மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை P.J.Dharmaraj (vs) Church of South India 2024 எனும் உசே நீதிமன்ற வழிகாட்டுதலும் தெளிவு படுத்துகிறது. எனவே மாநிலச் சட்டங்களும், யூஜிசி வழிமுறைகளும் ஒன்றின் மேல் ஒன்று தெளிவற்ற முறையில் உரசிக் கொள்ளாதபடி அமைந்திட அரசமைப்பு ஆயம் (Constitutional Bench) ஒன்று அமைத்திட வேண்டும் எனும் கோரிக்கையும் தற்பொழுது எழுந்துள்ளது.
மாநில உரிமைகளுக்கும் கூட்டாட்சிக்கும் எதிரான யூஜிசி 2025
யூஜிசி 1956 சட்டப்படி, பல்கலைக் கழகத்தின் கட்டணத்தை முறைப்படுத்துதல், கல்வித்தரத்தைத் தீர்மானித்தல் மற்றும் நிதி நல்கை ஆகியவைதான் யூஜிசியின் கடமைகள்.
துணைவேந்தர்களைத் தேர்வு செய்யவோ, பணியில் நியமிக்கவோ யூஜிசி அமைப்புக்கு அதிகாரம் ஏதும் இல்லை என மிகத் தெளிவாக மேற்காண் சட்டம் குறிப்பிடுகிறது. எனவே யூஜிசி அமைப்புக்கு அளிக்கப்பட்ட அதிகார எல்லையை அது மீறுமானால், அது முறைப்படி செல்லாது.
மேலும், துணை வேந்தர்களை நியமிப்பதைப் பொறுத்தவரை, அது தொடர்புடைய பல்கலைக்கழகச் சட்டங்கள் மற்றும் மாநிலச் சட்டமன்றத்தின் விருப்பத் தேர்வாகத்தான் இருக்க வேண்டும் என Suresh Patilkhede (vs).The Chancellor, University of Maharastra, 2011 எனும் நீதிமன்றத் தீர்ப்பும் தெளிவு படுத்துகிறது.
துணைவேந்தரைத் தேர்ந்து எடுப்பதில் மாநிலங்களுக்குப் பங்கே இல்லை எனும் நிலை, கூட்டாட்சித் தத்துவத்திற்கே வேட்டு வைப்பதாகும். உயர்கல்வி அதிகாரங்கள் அனைத்தையும் மையப்படுத்தும் இத்தகைய போக்கு, சனநாயக விழுமியங்களுக்கு முற்றிலும் முரணானதாகும்.
கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் இருந்தாலும், மாநிலச் சட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பல்கலைக் கழகங்களின் உயர்கல்வி நிர்வாகத்தில், சட்டமன்றங்கள் குறிப்பிடத்தக்க சுயாட்சியைத் தக்க வைத்துக் கொள்ள அரசமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளிக்கிறது. சட்டமன்றங்கள் நிறைவேற்றும் சட்டங்களின் மீது ஒன்றிய அரசுக்குக் கூடுதல் அதிகாரம் இருக்கிறது என்றாலும், யூஜிசி போன்றவற்றின் வரைமுறைகளுக்கு மாநிலங்கள் பணிந்து போக வேண்டியதில்லை. எனவே யூஜிசி தனது எல்லை மீறி நடந்து கொண்டிருப்பதை ஏற்க முடியாது.
என்னதான் தீர்வு?
மாநிலங்கள் என்ற அமைப்பே இருக்கக் கூடாது. அவை வெறும் நிர்வாக அலகுகள் (Administrative Units) என்பதாக மட்டுமே மாற்றப்பட வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கியக் கொள்கையாகும். மேலும் மொழிவாரி மாநிலங்கள் அதற்கு ஏற்புடையது அல்ல. பல்வேறு மொழிகள், பல்வேறு பண்பாடுகள். பல்வேறு வரலாறுகள் கொண்டதாக இருக்கும் இந்தியாவை, அதிகாரங்கள் அனைத்தும் புதுதில்லியில் மட்டும் குவிக்கப்பட்ட ஒற்றைமயமான ஹிந்து ராஷ்டிரமாக மாற்றி அமைக்க வேண்டும் என்பதே ஆர் எஸ் எஸ் சங்கிகளின் நீண்ட நாள் கனவாகும். கூட்டாட்சி என பஜனை செய்து கொண்டே பல்வேறு மாநிலங்களை தேசிய இனங்களை ஒழித்துக் கட்டக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் பாரதீய ஜனதாக் கட்சியின் அரசியல் செயல்திட்டம்தான் தேசியக் கல்விக் கொள்கை (2020) மற்றும் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள யூஜிசி வரைவுத் திட்டங்கள். அதிலும் குறிப்பாகத் துணைவேந்தரை நியமிப்பதற்கு வேந்தராகிய ஆளுநருக்கு வரம்பு மீதிய அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. முதலில் வேந்தராக ஒன்றிய அரசு ஆளுநரை நியமிப்பதே தேவையற்ற வேலை. அதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைசேரே பல்கலைக் கழகங்களின் வேந்தராக இருக்க வேண்டும் எனச் சில மாநிலங்கள் தீர்மானம் இயற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆர் எஸ் எஸ் ஆளுநர் ரவி, தமிழக ஆளுநராக இருந்து கொண்டு செய்யும் அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. மாநில அரசுக்குத் தொல்லை கொடுப்பதையே இந்த இந்துத்துவவாதி முழு நேர வேலையாகச் செய்து கொண்டிருக்கிறார். தமிழகத்தின் உயர்கல்வியை முற்றிலும் ஒழித்துக் கட்டுவதையே தனது இலட்சியமாகக் கொண்டுள்ள இத்தகைய நபருக்கு, துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தைக் கொடுத்தால் என்ன நடக்கும் என்பது அனைவரும் அறிந்த செய்தியாகும்.
எனவேதான் யூஜிசியின் வரைவுத் திட்டத்தை எதிர்த்து உசேநீதிமன்றத்தை நாடவிருப்பதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் இது தற்காலிக நிவாரணம்தான். ஏனெனில் இப்பொழுதுள்ள சூழலில் நீதிமன்றத் தீர்ப்புகளை உறுதியாக நம்ப முடியாது. எனவே மாநிலத்தின் கல்வி இறையாண்மையைக் காவு கேட்கும் பாசிச பா.ஜ.க. ஆட்சியின் இத்தகைய சதித்திட்டம் குறித்த ஆபத்தைக் கல்வியாளர்கள், பாதிக்கப்படும் மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். முதலில் மாணவர்கள் தெருவில் இறங்க வேண்டும். பிறகு அப்போராட்டத்தை விரிவுபடுத்தி மக்கள் திரள் போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டும். ஆர் எஸ் எஸ் அமைப்போ, பாரதீய ஜனதாக் கட்சியோ வெல்ல முடியாதவை அல்ல. எத்தகைய கொடுங்கோலர்களையும் தோற்கடிக்கும் வல்லமை, மக்கள் சக்திக்கு உண்டு.
- கண. குறிஞ்சி