கூன்விழுந் திருந்த நாட்டின்
      கூனலை நிமிர்த்த வந்த
வான்புகழ்த் தலைவ ரான
      வ.உ.சி. புரட்சி செய்ய
நான்வரு கின்றேன் என்று
      நவின்றவ ராவார். இன்பத்
தேன்சுவைக் கவிஞ ராவார்.
      தென்னாட்டுத் திலக ராவார்.

வடக்கே ஓர்திலகர்; தெற்கே
      வ.உ.சி. இல்லை என்றால்
விடுதலை வேக மிங்கே
      வீழ்ச்சியுற் றிருக்கும். மேலும்,
படிக்கட்டு தன்னில் குந்திப்
      பழங்கதை பேசும் நாட்டில்,
கொடுப்பதை வாங்கும் பிச்சைக்
      கொள்கைதான் வளர்ந்தி ருக்கும்.

கொட்டாவித் தலைவ ரெல்லாம்
      குனிந்துகொண் டிருந்த நாளில்,
வெட்டாத வாளும்; நன்கு
      விளையாத நிலமும்; கைக்கே
எட்டாத கனியும் காயும்
      இருந்தென்ன? வெள்ளைக் காரன்
பட்டாளம் என்ன செய்யும்
      பார்க்கின்றேன் ஒருகை என்றார்.

வெள்ளாட்டின் தலையைக் காட்டி
      ஓநாயின் கறியை விற்கும்
கள்ளிமுள் நெஞ்சம் கொண்ட
      கயவர்வாழ் உலகில், அந்தப்
பிள்ளையோ தூய்மை யான
      பிள்ளைப்பால் போன்றி ருந்தார்.
வெள்ளியா கறுக்கும், கட்டி
      வெண்ணையா நீரில் மூழ்கும்?

இன்றுள்ள தலைவ ரெல்லாம்
      ஏதேதோ செய்து செய்து,
குன்றுபோல் செல்வம் சேர்த்துக்
      குவிப்பதாய்ச் சொல்கின் றார்கள்.
அன்றைய தலைவர் பிள்ளை
      ஆதலால், பணமோ காசோ
ஒன்றுமே சேர்த்தா ரில்லை!
      உயர்ந்தவன் புகழ்தான் சேர்ப்பான்.

கனிதரும் மரங்கள், அந்தக்
      கனிகளைப் புசிப்ப தில்லை.
தனிச்சுடர் வழங்கும் தீபம்
      தனக்காக எரிவ தில்லை.
மனிதருள் சிறந்தோ ரெல்லாம்
      மற்றவர்க் காக வேண்டி
அனைத்தையும் இழப்பர். வாழ்வில்
      அனைத்தையும் இழந்தார் பிள்ளை.

தகுதியும் திறனும் கொண்ட
      தலைவனே வெற்றி காண்பான்.
அகரமே முதலில் நிற்கும்
      அவர்நின்றார். சிறந்த முத்து,
மகரமீன் தலையி லன்றி
      மற்றமீன் தலையில் என்றும்
அகப்பட்டு விடுவ தில்லை
      அவர்போன்றோர் இப்போ தில்லை!

- கவிஞர் சுரதா

Pin It