VOC 350பள்ளிக்குச் செல்லுமுன்பே பல பாடங்களைச் சொல்லிக்கொடுக்கவல்ல, கலை இலக்கிய அமைப்புகள் எங்கள் ஊரில் உண்டு. அவற்றுள் ஒன்று ‘வ.உ.சி. கலை மன்றம்’. சாதியம் கடந்த சமுதாயப்பார்வையோடு, ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சி.யைக் கொண்டாடிய ஊர் கிருங்கை எனும் கிருங்காக்கோட்டை. ஏதேனும் ஒரு திருநாளை மையமிட்டு, கவியரங்கம், உரையரங்கம், பட்டிமன்றம் என்று திட்டமிட்டு நடத்துவதோடு, சமுதாய விழிப்புணர்வு (அமெச்சூர்) நாடகங்களையும் உருவாக்கி அம்மன்றத்தினர் நடிப்பர். பகல் பொழுதுகளில் அவரவர் கடமைகளை ஆற்றிவிட்டு, எஞ்சிய பொழுதுகளில் இவ்வியக்கப்பணிகளைத் திறம்பட நடத்தியதோடு, ‘கப்பலோட்டிய தமிழன்’ திரைப்படத்தைப் பொதுவெளியில் திரையிடவும் செய்வார்கள்.

வாழும் காலத்தில் தோழர் ஜீவா, அறந்தை நாராயணன் உள்ளிட்டோர் வந்ததுபோல், தலைவர் வ.உ.சி. எமது ஊருக்கு வரவில்லை; ஆயினும் இந்த இயக்கம் அவர்களுக்குப் பின் வந்த கலை, இலக்கிய, அரசியல் சித்தாந்திகளையெல்லாம் எங்கள் ஊருக்கு அழைத்துப் பேசவைத்தும் இயங்கவைத்தும் உறவு கொண்டாடியும் மகிழ்ந்திருக்கிறது. என்னொத்த எங்கள் ஊர் அன்பர்கள் சிலரின் கலை, இலக்கியப் பின்புலங்களுக்கெல்லாம் தோன்றாத்துணையாக இருந்தது இந்த மன்றம் என்பதை எப்போதும் நினைத்துக்கொள்வதுண்டு.

செம்மல் சிதம்பரனார் எங்கள் ஊருக்கு வர வாய்ப்பின்றிப் போனாலும் சிவகங்கை மாவட்டத்துச் செட்டிநாட்டுப் பகுதிக்கு அவர் வருகை தந்து பெருமைப்படுத்திய வரலாற்றுச் சுவடுகளை அறிகிற போதெல்லாம் ஒருவிதப் பெருமிதம் பொங்கும்.

புதுவயலுக்கு வந்த புகழாளர் சிதம்பரனார்

எமது ஊருக்கு அண்மைய ஊரான மேலைச்சிவபுரி, ‘சன்மார்க்க சபை’வழியே கணேசர் செந்தமிழ்க் கல்லூரி அமைத்துத் தமிழ் வளர்க்கும் சிற்றூர். செம்மல்

வ.சுப.மா. போன்ற தகுதியாளர்களை ஈன்று புறந்தந்த இலக்கியப் பேரூர். அவ்வூரின் தமிழ்க்கல்லூரியில் பயிலப்போன எனக்கு முதல்வராய் வாய்த்தவர் முனைவர் பழ.முத்தப்பன். அவர்தம் ஊர் புதுவயல். அவர்களது முன்னோர், காரைக்குடிக்கு வந்த மகாகவி பாரதியாரால் ஈர்க்கப்பெற்று, புதுவயலில் ஸ்ரீசரசுவதி சங்கத்தை 22.07.1922 (சாலிவாகன சகம் 1845 கலி 5024 துந்துபி ஆண்டு ஆடித்திங்கள் 9 ஆம் நாள்) திங்கட்கிழமையன்று தோற்றுவித்தனர்.

காலம் புகழ்வித்தியா சாலை புதுவயலில்

சாலச் சிறந்து தழைக்குமே- சீலமிகு

தக்கார் பெரியர் சரசுவதி சங்கத்தார்

எக்காலும் போற்ற இனிது.1

- என்று கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் பாடல்பெற்ற இச்சங்கம் அன்று தொடங்கி, இன்றுவரை சிறப்புற இயங்கிவருகிறது. இங்கு ஆண்டுதோறும் நிகழும் விழாக்களுக்கு வந்து பெருமை சேர்த்த வரலாற்று ஆளுமைகள் மிகப்பலர். அவர்களுள் ஒருவர், பெருமைக்குரிய வ.உ.சிதம்பரனார் என்பதை அறிந்து எழுந்த வியப்பு அடங்குமுன்பே, அவர்தம் வாழ்த்துக்குறிப்போடு கூடிய கையெழுத்துப் படிவத்தைக் காட்டினார்கள். மெய்சிலிர்த்துப் போனேன். அவருடையது மட்டுமா? அவர் ஒத்த எத்தனையோ ஆன்றோர்தம் வாழ்த்துக்குறிப்புகளும் அவர்கள் வசத்தில் இருந்தன. பாதுகாக்கிற பண்பும் வரலாற்றைப் பேணி வைக்கிற, வளர்க்கிற மாண்பும் செட்டிநாட்டாருக்கு வாய்த்த சிறப்புப்பண்பு என்பதை இனிவருந் தலைமுறையினர் உணரவேண்டும் என்பதை அங்குக் கற்றுக் கொண்டேன். இச்சங்கத்தின் 13 ஆவது ஆண்டுவிழாவிற்குத் தலைமையேற்றுச் சிறப்பித்தவர் வ.உ.சிதம்பரனார். அச்சங்கத்தின்கீழ் இயங்கும் ஸ்ரீசரசுவதி வித்தியாசாலையின் மூன்றாம் ஆண்டுவிழாவும் அப்போதுதான் நிகழ்ந்தது. அதில் பங்கேற்று நடித்த, பாடிய இளையபாரதத்தின் எழுச்சிமிகு ஆற்றலைக் கண்டு மிக மகிழ்ந்து அவர் எழுதிய வாசகங்கள் பின்வருமாறு.

1935 ஏப்ரல் 28-ஆம் நாள் நடைபெற்ற புதுவயல் ஸ்ரீ சரஸ்வதி சங்கத்தின் பதிமூன்றாம் ஆண்டு நிறைவு விழா, ஸ்ரீ சரஸ்வதி வித்தியாசாலையின் மூன்றாம் ஆண்டு நிறைவுவிழா அவையின்கண் தலைமை வகிக்கும் பாக்கியம் பெற்றேன்.

வித்தியாசாலையின் மாணவ, மாணவிகள் அவையின்கண் நடாத்திய சம்பாஷணைகளும், நடிப்புகளும், பாடிய பாடல்களும் எனது தெய்வ பக்தியையும், தேசாபிமானத்தையும், மொழிப்பற்றையும் ஒரே நாளில் மிக வளர்த்துவிட்டன.

 மாணவிகள் நடாத்திக் காட்டிய பெண்கள் சீர்திருத்த மகாநாட்டின் நடவடிக்கைகள் என் மனத்தையும், அவையினர் மனங்களையும் பூரணமாகக் கவர்ந்தன. சுருங்கக்கூறின், அம்மாணவ, மாணவிகளின் சொற்களால், பாடல்களால், நடிப்பு முதலியவற்றால், யானும் அவையினரும், “அறனறிந்தேம் ஆன்ற பொருளறிந்தேம் இன்பின் திறனறிந்தேம் வீடு தெளிந்தேம் - மறனெறிந்த வாளார் அறிஞர்காள் மாணவர்கள்தம் வாயால் கேளாதன வெல்லாம் கேட்டு” என்று கூறுதல் மிகையாகாது.

 இம்மாணவ, மாணவிகளுக்கும், அவர்களைப் பெற்ற தாய் - தந்தையர்களுக்கும், அவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், ஸ்ரீ சரஸ்வதி வித்தியாசாலைக்கும், அதன் போஷகர்களுக்கும், அதன் அங்கத்தினர்களுக்கும், அதற்கு ஆதாரமான ஸ்ரீ சரஸ்வதி சங்கத்தினர்க்கும், அதன் அங்கத்தினர்களுக்கும், அவர்கள் குடும்பத்தார்கள் முதலியவர்களுக்கும் எல்லா நன்மைகளையும் எல்லாம் வல்ல இறைவன் அளிப்பானாக!

 - வ.உ.சிதம்பரம் பிள்ளை, 29.4.1935.2

சிராவயலுக்கு வந்த சீலர் சிதம்பரனார்

‘காரைக்குடியில் ஜீவா’ நூல் குறித்துத் தேடத் தொடங்கியபோது, அவர் சிராவயலில் நடத்திய குருகுலத்திற்கு, வ.உ.சிதம்பரனார் வந்த குறிப்பும் கிட்டியது. ‘வாளும் நூலும்’ என்ற தலைப்பின்கீழ், ‘ஜீவாவின் கருத்தை வ.உ.சி.ஏற்றார்’ என்ற குறிப்புடன் வெளிவந்த பதிவு இது.

சிராவயலில், ஜீவா காந்தி ஆசிரமத்தைத் தோற்றுவித்து, அதற்குச் செயலாளராக இருந்து, நடத்திக் கொண்டிருந்தவேளையில், ஒரு நாள் தேசபக்த தியாகச்சுடரான வ.உ.சிதம்பரனார் ஆசிரமத்திற்கு வந்தார்.

பள்ளியில் சிறுவர்களும் சிறுமிகளும் ராட்டை சுற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும், அவரது இருவிழிகளில் இரத்தச் சிவப்பேறிற்று. ‘‘என்ன முட்டாள்தனமான ஸ்தாபனம்! வாளேந்த வேண்டிய கையை நூலேந்த வைப்பதை என்னால் சகிக்க முடியவில்லை’’ என்று எள்ளுக்காய்கள் வெடிப்பதுபோல் வ.உ.சி.பேசினார்.

ஜீவாவால் மனம் தாளமுடியவில்லை. அமைதியாக, ஆனால், உறுதியாக வ.உ.சி.யின் குற்றச்சாட்டுக்கு அவர் பதில் கொடுத்தார்.

‘‘தாங்கள் சொல்வது சரி. வீர வாளேந்தி இரத்தம் சிந்தினாலொழிய இந்தியாவுக்கு விடுதலையில்லை என்றால், என் போன்ற கணக்கற்ற காளைகள் களம் ஏகி, பிறந்த நாட்டிற்காகப் பெரும் தியாகங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால், இன்றைய நிலையில், வேறு வழியில்லாததால்தான் இந்தப் பணியில் இறங்கியுள்ளோம். இத்தகைய ஒரு ஸ்தாபனத்தைத் தாங்கள் ஒரேயடியாக அவமதித்துப் பேசுவது எங்களுக்கு மனவேதனை அளிக்கிறது’’ என்று கூறினார்.

உண்மையை உண்மை என்று ஒப்புக்கொள்ள அஞ்சாத வ.உ.சி. ஜீவாவின் இந்தக் கருத்தைக் கண்ணியத்தோடு ஏற்றுக் கொண்டார்.3

இந்தச் செய்தியை மேற்கோளிட்டுத் தன் ‘ஜீவா என்றொரு மானுடன்’ என்ற நூலில் பதிவிடும் தோழர் பொன்னீலன்,

“அன்று மாலை நடந்த பொதுக் கூட்டத்திலும் வ.உ.சி. முன்னிலையில் ஜீவா தன் கருத்துக்களை வலியுறுத்திப் பேசினார். அது வ.உ.சி. மனதில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திற்று. அதே கூட்டத்தில் பின்னர் பேசிய வ.உ.சி. ஜீவாவைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார். ‘‘அஞ்சுபவர்களும், கெஞ்சுபவர்களும் சுதந்திரத்தைப் பெற முடியாது. ஜீவானந்தம் போன்ற சிலர் இருந்தாலே போதும்.’’4

மானகிரியில் மாண்பாளர் சிதம்பரனார்

1928 ஆம் ஆண்டு, காரைக்குடிக்கும் நாச்சியார்புரத்திற்கும் இடையிலிருக்கும் ‘மானகிரி’ என்ற கிராமத்தில் ஒரு மன்றத்தின் ஆண்டுவிழா. அதில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரும் ஜீவாவும் கலந்துகொண்டனர். அது பற்றி ஜீவா,

‘‘எனது முறை வந்தது. ‘பெண்விடுதலை’ எனக்கு அளித்திருந்த பொருள். பேசினேன். பத்து நிமிடங்களே பேசினேன். அப்பால் பேச்சு வரவில்லை. அத்தனை ஆவேசம். அத்தனை உணர்ச்சிப் பெருக்கு. பேச்சு இடைமுறிய அமர்ந்துவிட்டேன். ‘தம்பி (பக்கத்திலிருந்த என்னைச் சுட்டிக்காட்டி) பேச்சைக் கேட்டபிறகு, தமிழன் வீரம் மங்கவில்லை, மங்கவும் மாட்டாது என்ற எண்ணம் உறுதிப்படுகிறது’’ என்று சிதம்பரனார் பாராட்டியதாகக் குறிப்பிடுகிறார். இங்குதான் கப்பலோட்டிய தமிழனை முதன்முதலாகச் சந்தித்தார்”5

என்கிறார் கே.ஜீவபாரதி.

மகாகவி பாரதி, வை.சு.சண்முகனாரையும், பரலிசு.நெல்லையப்பரையும் தம்பி என்று அழைத்ததுபோல், மகாகவி பாரதியாரைத் தன் வாழ்நாளில் காணக்கிடைக்காத கவலையில் இருந்த தோழர் ஜீவாவுக்கு, அவர்தம் உயிர்த்தோழரான வ.உ.சிதம்பரனாரைச் சந்தித்ததோடு, அவர்தம் பாராட்டைப் பெற்றதும் அரிய வாய்ப்பாக அமைந்துவிட்டது. அந்த நிகழ்வின் இனிமையைப் பின்னர் நினைந்து ஜீவா எழுதுகிறார்:

“ஆண்டு 1928 என்று நினைவு. ஒரு மன்றத்தின் ஆண்டுவிழாக் கூட்டம். காரைக்குடிக்கும் நாச்சியார் புரத்திற்கும் இடையிலிருக்கும் மானகிரி என்ற ஊர். விழாத்தலைவர், தமிழர் தலைவர் வ.உ.சிதம்பரனார். அதில் நான் ஒரு பேச்சாளன்.

விழாத் துவங்கியதும் சிராவயல் காந்தி ஆசிரமத்து மாணவர்கள் இருவரும் பாடினர். குரல் வளத்தோடும், உணர்ச்சிவீறோடும், ‘வந்தே மாதரம் என்போம்’ என்ற பாட்டைப் பாடினர்.

பாட்டில் சூடு ஏற ஏற, சிதம்பரனாரின் கண்களிலிருந்து நீர் வடிந்தமயமாக இருந்தது.

எனது முறை வந்தது. ‘பெண்விடுதலை’ எனக்கு அளித்திருந்த பொருள். பேசினேன். பத்து நிமிடங்களே பேசினேன். அப்பால் பேச்சு வரவில்லை. அத்தனை ஆவேசம். அத்தனை உணர்ச்சிப் பெருக்கு. பேச்சு இடைமுறிய அமர்ந்துவிட்டேன்.

உணர்ச்சி எழுச்சி உடம்பால் தாக்குப் பிடிக்க முடியாத அளவு மேலோங்கிவிடவே, பேச்சு வெளிப்பட முடியவில்லை. கடந்த 30 ஆண்டுகளில் உணர்ச்சிமயமாய் நின்று எத்தனையோ பேச்சுக்கள் பேசியிருக்கிறேன். ஆனால், அன்றுபோல் என் வாழ்நாளில் என்றும் உணர்ச்சி என்னை ஆட்கொண்டு பேசவிடாமல் குரல்வளையைப் பிடிக்கிற அளவுக்குச் சென்றதில்லை.

ஆகவே, பேசமுடியாமல் உட்கார்ந்துவிட்டேன். இறுதியாகத் தலைவர் முடிவுரை கூறினார்.

‘வந்தேமாதரம், பாரதி’ ஆகிய சொற்களைக் குறிப்பிட்டுத் தொடங்கியதும், தலைவர் வ.உ.சி.யின் அகம் உணர்ச்சி வசப்பட்டுக் கொந்தளிப்பதை, முகம் காட்டிற்று. கண்கள் நீர் மல்கின. தொண்டை கம்மிற்று. நாத் தழுதழுத்தது.

‘பாரதி இறந்துபோனான் என்று நினைத்தேன். இங்குச் சிறுவர்கள் பாடிய பாட்டைக் கேட்டபொழுது, பாரதி நேரில் பாடக் கேட்பது போன்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது. பாரதி சாகவில்லை. என்றும் இருப்பான்.”

குரலில் ஆழ்ந்த கனிவு ஒலித்தது. சிதம்பரனாரின் கண்கள் நீரால் நிறைந்தன. கூட்டத்தில் குழுமியிருந்த நாங்கள் எல்லாரும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தோம்.

“தம்பி, (பக்கத்திலிருந்த என்னைச் சுட்டிக்காட்டி) பேச்சைக் கேட்டபிறகு, தமிழன் வீரம் மங்கவில்லை. மங்கவும் மாட்டாது என்ற எண்ணம் உறுதிப்படுகிறது’’ என்று தொடர்ந்து கூறினார்.

பாரதியிடம் தமிழ்நாட்டுத் திலகருக்கு இருந்த பேரன்பும், பெருமதிப்பும் அன்று முழு அளவில் வெளிப்பட்டது. ‘வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை வாழ்த்துவோம்’ என்று தமிழர் பெருந்தலைவரின் இதய மகாபக்தியைக் காணும் நல்வாய்ப்பு அன்று கிடைத்தது. புனிதமான நாட்டன்பு, பெருந்தகைமை உணர்ச்சிவசப்படல், உணர்ச்சியூட்டல் முதலிய அரும்பெரும் மனிதப்பண்புகள் முழுவடிவோடு அன்று சிதம்பரனாரிடம் காட்சியளித்ததைப் போல் நான் எந்தத் தமிழ்நாட்டுத் தலைவரிடமும் கண்டதுமில்லை; கேட்டதும் இல்லை.”6

அநேகமாக, இந்த நிகழ்வுக்குப் பின்னரே, தோழர் ஜீவா நடத்திய குருகுலத்திற்கு, வ.உ.சிதம்பரனாரின் வருகை நேர்ந்திருக்க வேண்டும். அப்போது கண்டு உரையாடிய செய்தியைத்தான் முன்னர்ப் பார்த்தோம்.

நமக்குக் கிட்டிய சான்றுகளின்படி, 1928 ஆம் ஆண்டில் முதன்முறையாகச் செட்டிநாட்டு மானகிரிக்கு வந்த வ.உ.சி., அதே காலக்கட்டத்தில் சிராவயல் காந்தியடிகள் குருகுலத்திற்கும் வருகை புரிந்திருக்கிறார்.

பின்னர் 1935ல் மீண்டும் செட்டிநாட்டுப் புதுவயல் ஸ்ரீசரசுவதி சங்கத்திற்கு வந்து சில நாட்கள் தங்கியிருந்த அவர் அந்தக் காலக்கட்டத்திலோ, அதற்கு முன்பின்னோ, காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்திற்கு வந்திருக்கிறாரா? என்பது தெரியவில்லை. இந்தக் காலக்கட்டங்களில் இவரைத் தம் பகுதிக்கு வரவழைத்த செட்டிநாட்டன்பர்கள் யாவர், வேறு எந்த நிகழ்வுகளில் எல்லாம் அவர் இப்பகுதிக்கு வந்து கலந்துகொண்டார் என்பனவெல்லாம் தேடிக் கண்டறிய வேண்டிய செய்திகள்.

இனிவருங்காலத்தில்...

மகாகவி பாரதியை, மாவீரர் வ.வே.சு.ஐயரை, விடுதலைக்கனல் சுப்பிரமணிய சிவாவை வரவேற்று, விரும்தோம்பிப் பன்னாட்கள் இருக்கவைத்துக் கொண்டாடிய செட்டிநாடு, நெல்லை தந்த தமிழர் தலைவராம் வ.உ.சிதம்பரனாரையும் வரவேற்று உபசரித்துப் போற்றியதில் வியப்பில்லை. அவர்தம் வருகைக்கான பின்புலத்தோடு, வருகை தந்து பங்கேற்று, உரையாற்றி மகிழ்ந்த மகிழ்வித்த நிகழ்வுகளையும் தேடித் தொகுத்து ஒரு நூல் எழுதத் திட்டம். கருணைபுரிய வேண்டியது காலம் மட்டுமல்ல, காரைக்குடி சார்ந்த பெரியவர்களும்தான்!

சான்றெண் விளக்கம்

 1. கிருங்கை சேதுபதி, காரைக்குடியில் பாரதி, ப.417.
 2. மேலது, பக்.417--_418.
 3. ..............., அரசியல் தலைவர்கள் பார்வையில் ஜீவா, ப.74.
 4. பொன்னீலன், ஜீவா என்றொரு மானுடன், பக்.26--_--27.
 5. கே.ஜீவபாரதி, தேசத்தின் சொத்து ஜீவா, ப.161.
 6. சேதுபதி, காரைக்குடியில் ஜீவா, பக்.126_127.

துணைநின்ற நூல்கள்

 1. அரசு.வீ (ப.ஆ) ப.ஜீவானந்தம் ஆக்கங்கள், இருதொகுதிகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, மு.ப.2007.
 2. கிருங்கை சேதுபதி, காரைக்குடியில் பாரதி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, மு.ப.2019.
 3. சேதுபதி, காரைக்குடியில் ஜீவா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, மு.ப.2016.
 4. சேதுபதி, காந்திவந்தால் ஏந்தும் கருவி, கபிலன் பதிப்பகம், புதுச்சேரி, மு.ப.2019.
 5. பொன்னீலன், ஜீவா என்றொரு மானுடன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2ஆம்.ப.2003.
 6. ஜீவபாரதி, கே., (தொ.ஆ), தேசத்தின் சொத்து ஜீவா, ராஜேஸ்வரி புத்தக நிலையம், சென்னை, மு.ப.2001.
 7. ..............., அரசியல் தலைவர்கள் பார்வையில் ஜீவா, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, மு.ப.2007.
Pin It