‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை... தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம். (சென்ற இதழ் தொடர்ச்சி)

கோயில்களுக்கு பெரும் கோபுரங்கள் கட்டப் படுவதும் அந்தக் கோபுரங்களின் சிற்பக் கலைகள் குறித்து தமிழர் கட்டிடக் கலைப் பெருமை பேசுவதும் ஒரு பக்கம் இருக்கட்டும். கோயிலுக்கு முன் கோபுரங்கள் ஏன் கட்டப்பட்டன? அது பக்தர்கள் அனைவரையும் கோயிலுக்குள் அழைக்கத் தூண்டுவதற்காகவா? அது அனைத்து மக்களையும் கோயிலுக்குள் வாருங்கள் என்று வரவேற்கும் சிற்பக்கலை அலங்காரமா? நிச்சயமாகஇல்லை; பின் எதற்கு இந்தக் கோபுரங்கள்?

vocவரலாற்று ஆய்வாளரும் பல மன்னர்களின் வரலாற்றை நூலாக எழுதியவருமான இரா.சிவ. சாம்பசிவ சர்மா எழுதிய ‘இராஜராஜசோழன்’ நூலில் கோபுரங்கள் ஏன் கட்டப்பட்டன என்பதை இவ்வாறு விளக்குகிறார்:

“வர்ணாஸ்ரமங்களைக் கடை பிடித்தொழுகும் இந்துக்களில் சில ஜாதியார், கோயிலுக்குள் பிரவேசித்து, இறைவன் உருவினைக் கண்டு தொழுவதற்கு இயலாதவராய் இருத்தலின், அன்னார் நெடுநிலைக் கோபுரங்களைக் கண்டு தொழுது நற்பெய்துந் திருப்பெறவே வானளாவுங் கோபுரங்கள் அமைக்ககப்பட்டன.”

கோபுரம் கட்டப்பட்டதன் தத்துவமே கோயிலுக்குள் நுழைய வேத மதத்தால் தடை விதிக்கப்பட்ட, ‘கீழ் ஜாதி’யினரான ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ வீதிகளில் நின்று தரிசிக்கவே உருவாக்கப்பட்டன. ‘கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம்’ என்று அதற்குப் பெருமையும் கற்பித்தது வேத மதம். அனைவருக்கும் கோயில் நுழைவதற்கான உரிமை வருவதற்கு முன்பு ‘கோபுர தரிசனம்’ தான் சூத்திரர் பஞ்சமருக்கான வழிபாடு; தமிழர்களை இப்படி அவமதித்தது வேத மரபு.

இந்த வர்ணாஸ்ரமக் கொடுமைகளை சுட்டிக்காட்டினாலே இந்துக்களின் விரோதிகள் என்று கூப்பாடு போடுகிறார்கள். ஆனால் கடவுள் நம்பிக்கையில் ஊறிய பார்ப்பனரல்லாத தமிழ் அறிஞர்களே இந்தக் கொடுமைகளைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள். பெரியார் மட்டும் கேட்கவில்லை. சைவநெறியில் ஆழமாக ஊறிப்போய் சன்மார்க்க நெறியையே வாழ்க்கையாகக் கொண்டு ‘தமிழ்த் தென்றல்’ என்று வரலாறு போற்றும் திரு.வி.கல்யாண சுந்தரனார் என்ற திரு.வி.க. அவர்களே வைதீகத்தை பார்ப்பனிய மதத்தைக் கடுமையாக சாடியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் பெரியாரோடு சமகாலத்தில் பயணித்தவர் திரு.வி.க. காங்கிரஸ் கட்சி நடத்திய ‘நவசக்தி’ பத்திரிகையின் ஆசிரியராகவும் சில காலம் பணியாற்றினார். அந்த ‘நவசக்தி’ பத்திரிகையில் அது ஒரு தேசிய கட்சியின் பத்திரிகை என்றாலும் துணிந்து வேதமதத்தைக் கண்டித்து எழுதியிருக்கிறார். உதாரணத்துக்கு ஒன்றை மட்டும் கூறுகிறோம்:

6.5.1931 நாளிட்ட ‘நவசக்தி’ பத்திரிகையில் திரு.வி.க. எழுதிய துணைத் தலையங்கத்தின் ஒரு பகுதி இது:

“இன்னார் இந்து, இன்னார் இந்து அல்ல என்று வரையறுத்துக் கூறும் அதிகாரம் யாருக்கு உண்டு? வேதத்தை ஆதாரமாகக் கொள்பவர்கள் தான் இந்துக்கள் ஆவார்கள் என்று எங்கு சொல்லப்பட்டிருக்கிறது? இந்துக்கள் எல்லோருக்கும் வேதம் தெரியுமா? வருணாசிரம இந்து மதத்தில் எல்லோருக்கும் வேதம் தெரியுமா? வேதம் படிக்கவே உரிமையில்லாதவர்கள் வேதத்தை எப்படி ஒப்ப முடியும்? சங்கராச்சாரியார் எல்லா இந்துக்களுக்கும் குருவா?”

- என்று கேட்டார் திரு.வி.க.

அதே துணைத் தலையங்கத்தில் இன்னும் அழுத்தமாகவே எழுதுகிறார்:

“ஒருவன் கோவிலுக்குப் போவது, போகாமல் இருப்பது, மதச் சின்னங்கள் அணிவது, அணியாமல் இருப்பது, உருவத்தை வழிபடுவது அல்லது வழிபடாமல் இருப்பது, ஆத்திகம் பேசுவது, நாத்திகம் பேசுவது ஆகிய காரியங்களில் எது வேண்டுமானாலும் செய்து கொண்டும், செய்யாம லிருந்து கொண்டும் இந்துவாக இருக்கலாம்... வேதாந்த மதக் காரரான சங்கராச்சாரியார், வர்ணாஸ்ரமத்தில் ஏன் விழ வேண்டும்? வேதத்தை ஆதாரமாகக் கொண்டு இவர் இந்து, இவர் இந்துவல்ல என்று சொல்லும் சங்கராச்சாரியார், வேதத்தின்படி நடக்காதவர்களை எல்லாம் இந்து அல்ல என்று விலக்குவாரா? பார்ப்பன வக்கீல்கள் இந்துக்களாவார்களா? அவர்கள் இந்துக்கள் அல்ல என்று சங்கராச்சாரி ஏன் கூறவில்லை?”

- என்று கேட்கிறார் தமிழ்த்தென்றல் திரு.வி.க.

வேதம் படிக்கும் ‘தர்மத்தை’ப் பாதுகாக்க வேண்டிய ‘பிராமணர்’, வேத தர்மங்களுக்கு எதிரான ‘சட்டநீதி’களைப் படித்துவிட்டு வழக்கறிஞர் களாவது, வேத தர்மமாகுமா? என்ற ஆழமான கேள்வியை எழுப்பினார் திரு.வி.க. சங்கராச்சாரி களிடம் இதற்கு பதில் இல்லை.

வேத மதத்தை - தமிழ் மரபுகள் கடுமையாக எதிர்த்தன என்பதற்கு மற்றொரு உதாரணம் ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற பெருமை பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார், பிரிட்டிஷ் கம்பெனிக்கு எதிராக சுதேசிக் கப்பல் விட்டு பெரும் பொருளிழப்புக்கு உள்ளாகி, ஏழ்மைக்குத் தள்ளப்பட்ட சைவத் தமிழர் வ.உ.சி., அவரே தன்னை வேதப் பார்ப்பனர்கள் எப்படி அவமதித்தார்கள் என்பதை சென்னை நேப்பியர் பூங்காவில் ஆற்றிய உரை ஒன்றில் வெளிப்படுத்தினார்.

“நீதிக் கட்சி தோன்றிய பிறகுதான் தமிழர் களின் அந்தஸ்து உயர்ந்துள்ளது. நீதிக்கட்சி தான் தமிழ் மக்களிடத்துப் பிடிப்பும் - தமிழர் களின் வாழ்வில் ஒரு உருப்படியான சேவையையும் செய்துவிட்டது. உதாரணமாக நான் முன்பெல்லாம் ‘இந்து’ பத்திரிகை அலுவலகத்துக்குச் சென்ற போது திரு.கஸ்தூரி ரெங்க அய்யங்கார் (‘இந்து’ பத்திரிகையின் ஆசிரியர்), “வாடா, சிதம்பரம்” என்றழைத்துப் பேசுவார். ஆனால் நீதிக்கட்சிக் கொள்கை தமிழ் நாட்டில் கோலோச்சிய பிறகு ஒரு நாள் போனேன். “வாங்கோ, சிதம்பரம் பிள்ளை, சவுக்கியமா?” என்றழைத்தார்” - என்றார் வ.உ.சி.

வ.உ.சி. - சைவப் பற்றாளர். தேசத் துரோக வழக்கை பிரிட்டிஷ் ஆட்சி அவர்மீது போட்டபோது அவருக்கு உதவிட எந்த காங்கிரஸ் தலைவரும் முன்வரவில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக வ.உ.சி.க்கு சாட்சி சொல்லப் போவதாக தொடர் வண்டியில் புறப்பட்டுச் சென்ற பாரதி நீதிமன்றம் போகாமலேயே பாதி வழியில் இறங்கிவிட்ட வரலாற்றுக் குறிப்பும் உண்டு.

திரு.வி.க.வைப்போலவே வேத மதத்தைக் கடுமையாக எதிர்த்தவர் வ.உ.சி. 5.11.1927இல் சேலம் ஜில்லா அரசியல் மாநாட்டுக்கு தலைமை வகித்துப் பேசிய வ.உ.சி., ஒரு காலத்தில் பிராமணரல்லாத தமிழர்கள்தான் பிராமணர்களை - அவர்களின் உணவு முறை, யாகங்களைக் கண்டு ஒதுக்கி வைத்தார்கள் என்றும், ‘கண்டதைத் தின்பவர்கள்; நினைத்ததை செய்யக் கூடியவர்கள் பிராமணர்கள்’ என்று தமிழர்கள் கூறியதோடு, ‘நிகண்டு’ முதலிய நூல்களில் எழுதியும் வைத்தார்கள்” என்று கூறிய வ.உ.சி., “அந்த இழிவிலிருந்து தங்களை மீட்டுக் கொள்ளவே தங்களைப் பிராமணர்கள் என்றும் ஏனைய தமிழர்களை ‘சூத்திரர்’ என்று சொல்லவும், எழுதவும் தொடங்கினார்கள் என்று கூறினார். வேத மதம் பார்ப்பனரல்லாதாருக்கு வழங்கிய தண்டனை யிலிருந்து விடுவித்துக் கொள்ள வந்ததே வகுப்புவாரி பிரதிநிதித்துவம். அந்த அதிகாரத்தை மீட்டுத் தர வந்தவர்தான் ஈ.வெ.ராமசாமி என்றும் பேசியிருக் கிறார். அவரது உரை இது:

“தாங்கள் மேலான ஜாதியார்கள் என்று கொண்ட கொள்கை அழியாதிருக்கும் பொருட்டுப் பிராமணர்கள் மற்றைய ஜாதி யார்களுக்கு விதித்த, அபராதத் தண்டனையை மாற்றிக் கொள்வதற்குரிய அதிகாரம், பிராமண ரல்லாதார்கள் கையிலேயே இருக்கின்றதைக் கண்டுபிடித்து, நம் திருவாளர் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் அவர்கள், பிராமணரல்லாதார் களுக்குக் கூறி, அதனை உபயோகிக்கும்படி செய்து கொண்டு வருகிறார்கள். அவ்வதிகாரத்தைப் பிராமணரல்லாதவர்கள் ஊக்கத்துடன் உறுதியாகச் செலுத்தித் தங்கள் அபராதத் தண்டனையை மாற்றிக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்”

- என்று வீர உரையாற்றி, வைதிக - எதிர்ப்பு வீரர் என்பதை அடையாளம் காட்டினார்.

திரு.வி.க., வ.உ.சி.யைப் போலவே மற்றொரு தமிழ் அறிஞரும், வடமொழிக்கு எதிராகக தனித்தமிழ் இயக்கம் நடத்தியவருமான மறைமலையடிகளும் வைதிக மதத்தின் எதிர்ப்பாளர் என்பதையும் இளைய தலைமுறை புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களை ‘சூத்திரர்’களாக இழிவுபடுத்துவதற்காகவே பார்ப்பனர்கள் மனுஸ்மிருதி போன்ற ஸ்மிருதிகளை எழுதி, தமிழரை நான்கு வர்ணங்களாகப் பிரித்து, அந்த ஏற்பாடு கடவுளால் உருவாக்கப்பட்டது என தமிழர்களை நம்ப வைத்தார்கள் என்று வைதிகத்தைக் கடுமையாக சாடினார்.

“தம்மை எல்லாரினும் உயர்ந்த பிராமணர் எனவும், ஆரியரல்லாத தமிழரை சத்திரியர், வைசியர், சூத்திரர் எனவும் பிரித்து, இவ் வேறுபாடு கடவுளால் வகுக்கப்பட்டது என எழுதி மெல்ல மெல்ல வேதங்கள், உப நிடதங்கள் முதலியவற்றின்கண், பிராமணர்கள் அவ்வெழுத்தை நுழைத்து விடுவராயினர். களங்கமில்லாத உள்ளத்தினரான தமிழர் அவ்வாறு அவர் நுழைத்தபோது அவ்வேற் பாட்டினை உண்மையென நம்பத் தலைப்பட்டார். அதனை மேலும் மேலும் வலியுறுத்தி விரித்து மனு முதலான மிருதி நூல்களை எழுதி வைக்கலாயினர்”

என எழுதிக் காட்டினார். (மறை மலையடிகள் எழுதிய ‘வேளாளர் நாகரிகம்’ நூலிலிருந்து)

இது மட்டுமல்ல; வேத மதக்காரர்களின் இந்த பொய்யுரையை நம்பி தொல்காப்பியம் போன்ற பழந்தமிழ் நூல்களுக்கு உரை எழுதிய இளம்பூரணர், நச்சினார்க்கினியர் போன்ற உரையாசிரியர்களும், வேதமதப் பார்வையிலேயே ‘பிராமண தர்மத்தை’ உயர்த்தி உரை எழுதினர் என்றும், மறைமலையடிகள் அதே நூலில் சுட்டிக் காட்டியிருக்கிறார். வரலாற்று ஆசிரியர்களும் வரலாற்றை வேத பார்ப்பனியத்தில் மயங்கிய நிலையிலேயே எழுதியதையும் மறைமலையடிகள் அதே நூலில் குறிப்பிடுகிறார்:

“இவ்விந்திய நாட்டிற் சரித்திர நூல்களும் அவற்றின் வழியே மெய் இது, பொய் இதுவெனப் பகுத்துக் காணும் சரித்திர உணர்வும் இல்லாமையால் ஆரிய பார்ப்பனர் தமிழ் நன்மக்களைத் தாழ்த்துவதற்குச் செய்த இச்சூழ்ச்சிகளை அறியாமல், அவையெல்லாங் கடவுள் வகுத்த ஏற்பாடு, எனவே நம்பி அவற்றிற்கு மாறாக ஏதும் கூற மாட்டாராய், நூலாசிரியர் கருத்துக்கு முரணான அவர்கள் அங்ஙனம் பிழைபட்ட உரைகள் எழுதியது ஒரு வியப்பன்றென்க” - என்று எழுதுகிறார்.

வேத - பார்ப்பனிய பண்பாட்டை பெரியார் எதிர்த்ததால், ‘இந்து விரோதி’ என்று கூச்சல் போடு கிறவர்கள், திரு.வி.க., வ.உ.சி., மறைமலையடிகள் போன்றவர்கள் எதிர்ப்புக்கு என்ன பதிலைக் கூற முடியும்?

(அடுத்த இதழில் முடியலாம்)

Pin It