வெள்ளையன் கப்பலாலே
வரிந்தஇந் நாட்டின் செல்வம்
கொள்ளை கொண்டோ டல்கண்டு
கொதிப்புற்ற சிதரம்பரன் பேர்
பிள்ளைதான் பேரூக்கத்தால்
பிழைக்கவந் தடிமை கொண்ட
நொள்ளையர் மாயச் செய்தான்
நோன்மைசேர் கப்பல் விட்டான்!

கடல்பிறக் கோட்டிச் சென்ற
கால்வழி வந்த எங்கள்
அடல்மிகு விடுதலைப் போர்
அரிமாக்கள் ஆயிரத்தை
தடந்தோளில் நெஞ்சில் சேர்த்த
தமிழனை நினைக்கும் வெள்ளைக்
குடலெலாம் கலங்கும் தூத்துக்
குடியதன் குடிமை காத்தான்.

இந்தியத் தலைவர் எல்லாம்
இந்திய வீரர் எல்லாம்
செந்தமிழ்ச் சிதம்பரத்தின்
செந்தணல் சிந்தனைக்கே
முந்தித்தம் செவி கொடுப்பார்
முடிவினை எடுப்பார் வெல்வார்.
அந்தமிழ்ப் பாரதிக்கும்
அவனன்றோ அரிய அம்மான்.

பகைவனைப் பரங்கிப் பேயைப்
பாரத நாட்டிருந்து
தகைப்பதும் உரிமை நாட்டில்
தலைநிமிர்ந் துயர்ந்து வாழ்தல்
வகையென வேங்கையாகி
வடக்கொடு தெற்கனைத்தும்
தொகை தொகை மறவர் கூட்டம்
தொகுத்தனன் வெடிமருந்தாய்!

விடுதலை மறவனுக்கு
வெள்ளையர் சுரண்டல் கூட்டம்
கெடுதலை கோடி தந்தார்
உலகினைக் கெடுக்க வந்தார்
படுகொலை வழக்கு நூறு
பாய்ச்சினர்; சிறைக் கோட்டத்துள்
கொடுதலை என்றார், வீரச்
சிறுத்தையா கோழை யாகும்?

கல்லுடைஎன்றார் வெள்ளைக்
காரரின் அதிகாரத்தின்
பல்லுடைப் பதனைப் போல
பாறைகள் உடைத்தார், நெஞ்சின்
மல்லுடைத் திட்டதில்லை
மறத்தமிழ் நெஞ்சம் இன்பச்
சொல்லுடை படாத பாக்கள்
சொல்லிடும் துயர் துடைக்கும்!

திக்கெலாம் திருடவந்த
சிவந்த தோல் பரங்கியர்கள்
வெட்கிட புரட்சித் தீயின்
வெடிகளாய்ச் சிதம்பரத்தின்
சுக்கு நூறாக்கும் தோழர்
தொல்லை கண்டிடிந்த போது
செக்கினை இழுக்கச் செய்தார்
சிதம்பரப் பெரியோன் தன்னை.

எண்ணெயைப் பிழிவதைப் போல்
ஏ வெள்ளைக் கார ரேநும்
மண்டையைப் பிழிவோம் என்று
மனத்தினில் எண்ணி எண்ணி
கண்ணீரைப் பொழிந்திடாமல்
கடுந்துயர் உள்ளம் கொள்ளும்;
திண்ணையில் பார்ப்பனர்கள்
தெருச்சோறுண் டுவகை பூப்பார்!

மூவாயுள் கடுஞ் சிறைக்குள்
மூடினார்சி தம்பரத்தைச்
சாவாயுள் விழுங்குதற்கும்
தவித்தது தமிழ் மானத்தை!
நோய்வாயில் புகுத்துதற்கும்
தோற்றது சிறை நொடிப்பு.
மாவாயில் திறந்ததோர்நாள்
மானவேள் வெளியில் வந்தான் .

உடல்பொருள் ஆவியெல்லாம்
உற்றநாட் டுரிமைப் போர்க்கு
கெடல்இல்லை என இழந்தோன்
கீழ்ப்பட்ட சிறையிருந்து
மடங்கலாய் வந்தான்; ஆனால்
ஆரிய மடியில் வாழ்ந்தோர்
அட்டவோ சிதம்பரத்தை
அணுகிடக் கூசினார்கள்,

நன்றி கெட்டுயிர் வாழ்கின்ற
காங்கிர சியக்கத்தார்கள்
பன்றிக்கும் கீழ்ப்பட்டோரே
பரங்கியன் சுரண்டற்குப்பின்
வென்றி என்றுவப் பதெல்லாம்
வெற்று வேட்டு ரிமை யாகும்
என்றிவர் வாழ்வார்? இல்லை
இடியுண்ட மரம்போல் வீழ்வார்.

 பாவேந்தர் பாரதிதாசன்

Pin It