மண்டலுக்கு முந்தைய மனு ஆணையம்

மண்டலுக்கு முந்தைய பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆணையம் 29.1.1953ஆம் ஆண்டில் காகா சாகேப் கலேல்கர் தலைமையில் அமைக்கப்பட்டது. சென்னை மாகாணத்தில் அமலில் உள்ள கம்யூனல் ஜி.ஓ விளைவால்தான் தனக்கு மருத்துவம் படிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லையென செண்பகம் துரைராஜ் என்பவரை கருவியாகக் கொண்டு ஒரு பார்ப்பனர் அளித்த வழக்கினால் ரத்து செய்யப்பட்ட கம்யூனல் ஜி.ஓ.விற்குப் பிறகு தந்தை பெரியாரின் போராட்டத்தினால் அரசியலமைப்புச் சட்டம் திருத்தம் செய்யப்பட்டதற்குப் பின்னரும் சுதந்திரத்திற்குப் பிறகுமான முதல் பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆணையம் அமைந்தாலும் அதன் வழியே எவ்வித மாற்றங்களும் ஏற்பட்டு விடாத படி மிக கவனமாக மனு நூலின் சாராம்சங்களுடன் வர்ண பாகுபாடுகளை நியாயப்படுத்தும் விதமாக ஒருவருடைய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட நிலைக்கு சாதி பாகுபாடு காரணமல்ல, தாழ்த்தப்பட்ட நிலையை அளவிட சாதி சார்ந்த அளவுகோலைப் பயன்படுத்துவதை தவிர வேறு ஏதேனும் அளவுகோலை நிர்ணயிக்கலாம் என பல அடுக்கடுக்கான மனு நூல் அம்சங்களை கொண்ட அறிக்கைகளை வெளியிட்டு காலேல்கர் ஆணையம். தன்னை மனுநூல் ஆணையமாக நிரூபணம் செய்து கொண்டது.

மனுவை மடித்த மண்டல்

பீகார் மாநிலத்தில் சமூக சீர்திருத்த வாதியாக வாழ்ந்த ராஷ்பிகாரி மண்டலின் மகனான பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது ஆணையம் இவரைத் தலைமையாகக் கொண்டு மண்டல் ஆணையமாக மலர்ந்தது தனக்கு முந்தைய கலேல்கர் ஆணையம் எனப்படும் மனு ஆணையத்தின் அடிப்படை அறிக்கையையே மாற்றி அமைத்தார் மண்டல்.

vp singh and rathinavel pandianஒருவருடைய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட நிலைக்கு சாதி அமைப்பே காரணமென ஆணித்தரமான ஆதாரங்களை முன்வைத்து ஒருவர் சாதி அமைப்பில் பெறுகின்ற படிநிலைக்கும் அவர்களது கல்வி, சமூக மதிப்பு, பொருளாதார நிலை போன்ற அனைத்திற்குமான நெருங்கிய வலைப்பின்னல் தொடர்பு உண்டு என்பதையும், இப்படிப்பட்டச் சமூக நிலையை இந்து மதம் மனநிறைவுடன் காலம்காலமாக கடைப்பிடித்து வருவதுடன் அழியாமல் பாதுகாக்க பல ஏற்பாடுகளை செய்துள்ளது என நாடு முழுவதும் கள ஆய்வுகள், பொதுக்கூட்டங்கள், கருத்துக்கேட்பு கூட்டங்கள் என அனைத்து ஆதாரங்களின் வழியே ஆய்வுகளை முன்வைத்து, கலேல்கர் ஆணையம் பிற்படுத்தப்பட்ட நிலைக்கான அளவுகோலையே அறியாமல் அதை பற்றிய அறிக்கையை அளித்திருக்கும் விநோதங்களையும் சுட்டிக் காட்டினார் பி.பி மண்டல்.

மண்டலுடன் வி.பி.சிங்

எத்தனையோ பார்ப்பனீயக் கெடுபிடிகளுக்குப் பின்னர் மண்டல் அவர்கள் தன்னுடைய ஆணையத்தின் நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி 31.12.1980இல் தனது அறிக்கையை அரசிடம் ஒப்படைத்தார். ஆனால் அவ்வறிக்கை பத்தாண்டுகளாக கிடப்பில் கிடந்தது. 27சதவீத இட ஒதுக்கீடு பரிந்துரைத்த ஆணைய அறிக்கை பத்தாண்டுகளாக கிடப்பில் கிடப்பதை காணப் பொறுக்காமல் பிரதமராக ஆட்சி பொறுப்பேற்றதும் வி.பி.சிங் அவர்கள்கையில் எடுத்தார். மண்டல் அறிக்கையை அமல்படுத்தினால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்பதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் 07.08.1990இல் நாடாளுமன்றத்திலேயே மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை அரசு ஏற்பதாக அறிவித்தார். காங்கிரஸ் கட்சி, ஜனதா கட்சி என ஒட்டுமொத்த கட்சிகளின் எச்சரிக்கை, எதிர்ப்புகளையும் புறந்தள்ளிவிட்டு தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, இந்திய வரலாற்றில் இட ஒதுக்கீட்டின் மூலமாக வர்ணாசிரம பாகுபாடு கட்டமைப்பையே உடைக்க முயன்று அதன் விளைவால் ஆட்சியையே இழந்த பிரதமர் என்ற மாபெரும் வரலாற்று சாதனை நாயகராகவும் இடஒதுக்கீட்டின் நாயகராகவும் விளங்கிவிட்டார் வி.பி சிங்.

வட இந்தியாவின் வஞ்சம்

மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்க வேண்டாமென தடுத்தவர்கள் அடுத்தகட்டமாக மண்டல் ஆணையத்தின் பரிந்துரை ஏற்கப்பட்டதை எதிர்த்து பீகார், ஒரிசா, குஜராத், உத்திரபிரதேசம், இராஜஸ்தான், என வட மாநிலங்களில் வன்முறையை முன் நின்று நிகழ்த்தினர். வன்முறையின் ஒரு பகுதியாக 18.08.1990இல் வெளிவந்த டைம்ஸ்ஆஃப் இந்தியா பத்திரிக்கையின் தலையங்கத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கிளர்ச்சியை தேச நலனுக்கு ஆதரவான கிளர்ச்சி என எழுதியிருந்தது. இந்த வன்முறையில் சௌகான் என்ற இளைஞர் தீக்குளித்து இறக்கும் போது இறக்கும் தருவாயில் மண்டல் கமிஷனை உயிருள்ளவரை எதிர்ப்பேன் என சொன்னபடியே இறந்ததாகப் பொய்யானச் செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம் ஆஃப் இந்தியா போன்ற நாளேடுகள் சிறிதும் கூச்சமற்று எழுதின. இதையெல்லாம் விட கூடுதலானச் செய்தியாக சௌகான் தற்கொலை செய்ய முயன்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பல பத்திரிக்கைகளும் அடிப்படையான பத்திரிக்கை தர்மங்களையும் மீறி வன்முறை கனலுக்கு எண்ணெய் வார்ப்பது போல வெளியிட்டிருந்தன இதன் விளைவுகளால் உச்சநீதிமன்றம் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைக்கு இடைக்காலத் தடை விதித்தது .

தீர்ப்பும் இரத்தினமும்

பாபர் மசூதி இடிப்பையும் மண்டல் ஆணையத்தின் எதிர்ப்பையும் தேசியத்திற்கான முழக்கமாக முன்வைத்த பார்ப்பனீயத்தின் எண்ணத்திற்கு எதிராக 16.11.1992இல் 11 நீதிபதிகளை கொண்ட குழுவில் ஐந்து நீதிபதிகள் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான தீர்ப்பையும், ஆறு நீதிபதிகள் இட ஓதுக்கீட்டிற்கு ஆதரவானத் தீர்ப்பையும் அளித்தனர். இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த ஆறு நீதிபதிகளுள் ஒருவரே தமிழகத்தைச் சேர்ந்த பெரியார் தொண்டரான நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் அவர்கள். இவர் To What Extent Can the reservation be made என்ற தலைப்பில் 86 பக்கங்களுக்கு தனி தீர்ப்புரை ஒன்றையே எழுதினார். பொதுவாக குழு நீதிபதிகளின் தீர்ப்பில் தனி நீதிபதியின் தீர்ப்புகள் வெளியிடுவது வழக்கமில்லை என்றாலும் கூட இவ்வழக்கானது என்னுடைய மக்களின் இன உணர்வு சார்ந்தது எனக் கூறி தனித்த தீர்ப்பை எழுதினார்.

அதிலே கிரீமிலேயர் என்பதை பொருளாதாரம் சார்ந்து அளவீட்டால் குடும்பத்தின் செல்வம் எவ்விதமான நம்பகத்தன்மையுடன் அளவிட முடியும் என பொருளாதார அளவுகோல் மீதான கேள்விகளையும், அண்ணன் தம்பி சொத்து கதை, அரசு ஊழியரின் ஊதியமற்ற விடுப்புக்கதை, நிலத்தை தரிசாக போட்ட பண்ணையார் கதை, திடீர் திருமணமாகி பணக்கார மாமனாருக்கு மாப்பிள்ளையான வாலிபரின் கதை, அன்னக்காவடி கதை, என கதைகளின் எடுத்துக்காட்டு வாயிலாக தெள்ளத்தெளிவாக எவரும் மறுப்பதற்கு வாய்ப்பின்றி ஏற்கக்கூடிய தீர்ப்பை அளித்து மண்டலின் அரிய பணிக்கு மகுடம் சூட்டி நமது மனங்களில் நீங்காத இடம் பிடித்து இட ஒதுக்கீடு நாயகர்களாக மண்டலும், வி.பி.சிங்கும், இரத்தினவேல் பாண்டியனும் நிற்கிறார்கள். எனில் இவை அனைத்திற்கும் மூல காரணமான போராளியாக விளங்குபவர் தந்தை பெரியார் அவர்களே.

Pin It