கீற்றில் தேட...

புதுடில்லி, இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து ஹிந்தி தொலைக்காட்சியில் விவாதம் நடந்து கொண்டிருந்தது. இதில் பீகார் மாநில ராஷ்டிரிய ஜனதா தள் சார்பாக கல்லூரி மாணவியும், ராஷ்டிர ஜனதா தள் மாணவர் அணியின் செய்தித் தொடர்பாளருமான பிரியங்கா பாரதியும் கலந்து கொண்டார். பாஜக சார்பில் தலைமை நிலைய செய்தித் தொடர்பாளராக இருக்கும் சுதான்சு திரிவேதி கலந்து கொண்டார்.

சுதான்சு திரிவேதி பேசும்போது “வி.பி.சிங்கை ஜாதியவாதிகள் கொண்டாடினார்கள். அவரால் பலன் கிடைக்காது என்று தெரிந்த பிறகு தூக்கி வீசி விட்டனர்" என்று பேசினார். "இதுதான் வி.பி.சிங்கிற்கு ஜாதியவாதிகள் (மண்டல்வாதிகள்) கொடுத்த மரியாதை” என்று பேசினார்.

அதுவரை அமைதியாக கேட்டு கொண்டு இருந்த பிரியங்கா பாரதி கடுமையான கோபம் கொண்டார். உடனடியாக சுதான்சுவைப் பார்த்து  “நீங்கள் இன்னும் ஜாதி வெறியோடு தான் திரிகிறீர்கள்.”

"வி.பி.சிங் எங்களது வழிகாட்டி போன்றவர், அவரது பெயரை உச் சரிக்கக் கூட உங்களுக்குத் தகுதி இல்லை. உங்களுக்கு முன்னால் சரிசமமாக நான் உட்கார்ந்து பேசுகிறேன் என்றால் அதற்கு எங்கள் தலைவர் வி.பி.சிங் தான் காரணம். ஒரு காலத்தில் சாலையில் நடக்கக்கூட உரிமையில்லாத நாங்கள் இன்று கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வந்து டில்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று பெரும் பதவிகளை அலங்கரிக்கிறோம். எங்களின் கைகளைப் பிடித்து அழைத்து வந்தவர் வி.பி. சிங் என்னால் உங்களின் முட்டாள் தனமான பேச்சை கேட்டு கடந்து போக முடியாது..முதலில் உங்களுக்கு வி.பி. சிங்க்கின் பெயரைக் கூட உச்சரிக்க தகுதி இல்லை. மற்றொரு முறை உங்களது அழுகிப் போன மூளையில் உதிக்கும் நாற்றமெடுக்கும் ஜாதிவெறிச் சொற்களை கொட்டினால் நீங்கள் நிற்கும் இடம் அதிர்ந்து விடும் அரங்கத்தை விட்டு வெளியே போக முடியாது என்று எச்சரிக்கிறோம்” என்று கடுமையாகப் பேசினார். இதனை அடுத்து பாஜக செய்தித் தொடர்பாளர் நிகழ்ச்சி முடியும் வரை பேசவே இல்லை.

விடுதலை இராசேந்திரன்