கடந்த 27.11.2023 அன்று, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி. சிங் சிலையைத் திறந்து வைத்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சிலையைத் திறந்து வைப்பதால் தமிழ்நாடு அரசு பெருமை கொள்கிறது என்று குறிப்பிட்டார். மண்டல் குழு பரிந்துரையை அமல்படுத்தியதற்காக இன்றுவரை நினைவுகூரப்பட்டு வருபவர் வி.பி. சிங். அதே நேரம் மண்டல் பரிந்துரைகள் அமல்படுத்தப்படுவதற்காகத் தமிழ்நாட்டின் முற்போக்கு இயக்கங்கள் எடுத்த முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை.

1978ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது மண்டல் குழு அமைக்கப்பட்டது. சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கியுள்ள வகுப்பினரை அடையாளம் காணும் நோக்கத்துடன் அமைக்கப்பட்ட இக்குழு தனது அறிக்கையை 1980 இல் சமர்ப்பித்தது.mk stalin and akilesh yadav at vp singh statue inagurationஎன்றாலும் ஒன்றிய அரசு அதனை உடனடியாக வெளியிடவில்லை. இதனை அடுத்து, 29.03.1981 அன்று கும்பகோணத்தில் திராவிடர் கழகம் வகுப்புரிமை மாநாட்டை நடத்தியது. இம்மாநாட்டில் மண்டல் குழுவின் அறிக்கை உடனடியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து கரூர், திண்டுக்கல், சாத்தூர் ஆகிய இடங்களில் இக்கோரிக்கையை வலியுறுத்தி மாநாடுகள் நடத்தப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கையை வெளியிடச் செய்யும் முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டு 17.11.1981 அன்று ஆசிரியர் கி. வீரமணி உறுப்பினர்களுக்குக் கடிதம் எழுதினார்.

இக்கோரிக்கையினைத் தமிழ்நாட்டிற்கு வெளியே கொண்டு செல்லும் நோக்கத்துடன், கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் கலந்து கொண்ட மாநாட்டை திராவிடர் கழகம் சென்னை சைதாப்பேட்டையில் 1982ஆம் ஆண்டு நடத்தியது. இந்த மாநாட்டில் ‘மண்டல் குழு பரிந்துரைகளைக் காலதாமதமின்றிச் செயல்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்வேறு தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பின்னர் 30.04.1982 அன்று மண்டல் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.

இதன் பின்னர், மண்டல் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து மாநில அரசுகளின் கருத்து கோரப்படும் என்ற ஒன்றிய அரசின் நிலைப்பாடு, பரிந்துரைகளை அமல்படுத்துவதைத் தாமதம் செய்யும் எண்ணமாகவே கருதப்பட்டது. இதனைத் தொடர்ந்து பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரும் அடுத்த கட்டப் போராட்டம் தொடங்கியது.

இதன் முதல்கட்டமாக, மண்டல் குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி திராவிடர் கழகம் தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது. சென்னை, கோவை, சேலம், திருச்சி, காஞ்சி, ஈரோடு, வேலூர், மதுரை ஆகிய நகரங்களில் பேரணிகளையும் நடத்தியது. இது தொடர்பாக குருதாஸ்பூர் (பஞ்சாப்), பாட்னா (பீகார்) ஆகிய இடங்களில் நடைபெற்ற மாநாடுகளிலும் ஆசிரியர் கி. வீரமணி கலந்து கொண்டு, மண்டல் குழு பரிந்துரைகள் குறித்த விழிப்புணர்வை அகில இந்திய அளவில் எடுத்துச் சென்றார்.

அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் இடம்பெற்றுள்ள எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரத்துடன் 14.03.1983 அன்று சட்டப்பேரவையில் பேசிய கலைஞர் கருணாநிதி மண்டல் குழு பரிந்துரைகளின் மீதான தமிழ்நாடு அரசின் ஆதரவு குறித்து அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மண்டல் குழு பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி, 09.08.1984 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் வீட்டிற்கு அணிவகுத்துச் செல்ல முயன்றபோது திராவிடர் கழகத்தினருடன் ஆசிரியர் கி. வீரமணியும் கலந்து கொண்டு கைதானார்.

1985ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளான டிசம்பர் 6 அன்று, மண்டல் குழு பரிந்துரைகளை நிறைவேற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பீகார், ஆந்திர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களுடன் ஆசிரியரும் பங்கேற்றார். பேரணி முடிந்த நாளன்று மாலை குடியரசுத் தலைவரைச் சந்தித்து மேற்கண்ட கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. 1986 இல் பிரதமர் ராஜீவ் காந்தியிடத்திலும் இக்கோரிக்கை நேரில் சந்தித்து வலியுறுத்தப்பட்டது.

1989ஆம் ஆண்டு மே 5ஆம் நாள், ஒன்பது ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள மண்டல் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற ஒன்றிய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை தி.மு.க. அரசு தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றியது.

மண்டல் குழு அமைக்கப்படுவதிலும், மண்டல் பரிந்துரைகள் அமலாக்கப்படுவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செலுத்தியவர் வே. ஆனைமுத்து. அவருடைய ‘பெரியார் சம உரிமைக் கழகம்’ அமைப்பின் சார்பாக மாநாடுகளையும், பேரணிகளையும் தொடர்ந்து நடத்தி இப்பொருள் குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தவர் அவர். பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு குறித்த புரிதலை ஏற்படுத்த, நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 160 உறுப்பினர்களுக்கு “பிற்பட்டோரின் கதி என்ன?” (Whither backward classes) என்ற தலைப்பிலான ஆங்கில நூலை எழுதி அச்சிட்டு அஞ்சலில் அனுப்பியவர். தமிழ்நாடு மட்டும் அல்லாது, பீகார், தில்லி, மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இட ஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை உணர்த்திடும் பரப்புரையைத் தொடர்ந்து மேற்கொண்டவர்.

1989-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய முன்னணி கூட்டணியில் தி.மு.க. அரசு இடம்பெற்றது. தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையில் மண்டல் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான உறுதி அளிக்கப்பட்டது.

இறுதியாக பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான அரசு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒன்றிய அரசிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் 27% இட ஒதுக்கீட்டை அறிவித்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை 21.08.1990 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்மொழிந்தபோது, “இந்திய வரலாற்றிலேயே புதியதோர் சகாப்தமாக சமூக நீதியை வழங்கிடப் புரட்சிகரமான முடிவெடுத்தவர் பிரதமர் வி.பி. சிங்” என்று குறிப்பிட்டார் அன்றைய முதலமைச்சர் கலைஞர்.

- வெற்றிச்செல்வன்

Pin It