ஏழை முதல் பணக்காரர் வரை அனைவருமே ஏதேனும் ஒரு இடத்தை (இலக்கை) நோக்கிப் பயணித்துகொண்டே தான் இருக்கின்றோம்! நாம் பார்க்கும் இரண்டு வகையினருக்கும் இடையே பயண உத்திகள் மட்டும் மாறும். பேருந்துப் பயணத்தில் துவங்கி இரயில், விமானம் என தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது...

"கால்கடுக்க பொழுதுக்கும் வெயிலில் உழைப்பவன் நின்றே பயணிக்கிறான். காற்றோட்டமாகச் செயற்கைக் காற்றில் வேலை செய்பவன் படுத்து உறங்கும் நிலையில் பயணிக்கிறான்." பொருளாதாரத்தில் கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் மேலே மட்டத்தில் இருப்பவர்களைப் பார்த்தால் வியப்பு. ஆனால், பொருளாதாரத்தில் மேல் மட்டத்தில் உள்ளவர்களுக்கு கீழ் மட்டத்தில் உள்ளவர்களைப் பார்த்தால் அசிங்கம் இது இன்றைய நிலை...

travel bus 600ஒவ்வொரு துறையாகச் சென்றுபார்த்தால் கண்ணீருக்கு பஞ்(மிச்)சமில்லை :-

தொடர்வண்டி பயணம்

பெயரோ தொடர்வண்டிப் பயணம்!

பயணமோ தொலைதூரம்! தகுதிக்கு ஏற்ற பிரிவா! இல்லை தேவைக்கு ஏற்ற பிரிவா? புரியவில்லை ..!

முதல் வகுப்பு

செயற்கைக் காற்றோடு படுத்துச் செல்லும் வசதி 20 பெட்டிகள்!

இரண்டாம் வகுப்பு

முன்பதிவு இயற்கைக் காற்றோடு படுத்துச் செல்லும் வசதி 30 பெட்டிகள்.

மூன்றாம் வகுப்பு

திடீர் பயணம்! திட்டமிடா பயணம் அனைத்துமே இங்கே தான் நடக்கும்! மேலே, குறிப்பிட்ட இரண்டு வகுப்பிலும் நாம் பேசவும் ஒன்றுமில்லை அவர்கள் பேசிக்கொள்ளவும் ஒன்றுமில்லை! இங்கே பேசாமல் இருக்க ஒன்றும் இருக்காது! பேசினால் பயனும் இருக்காது.

அந்த நொடி பரபரப்புக்கு அளவே இருக்காது. டிக்கெட் எடுப்பதுமுதல் தொடர்வண்டியில் இருந்து வெளியே வரும் வரை...

மொத்தம் 4 பெட்டிகள் தான் ஆனால், 10 பெட்டியில் பயணம் செய்யும் அளவு நான்கே பெட்டியில் பயணிப்பார்கள்! வியர்வை நாற்றம் ஒருபக்கம், பல மொழிகள் ஒருபக்கம். கால் வைக்கவும் இடம் இருக்காது. தங்கள் உடமைகளை வைக்க வேண்டிய இடத்தில் மூன்று நபர்கள் அமர்ந்து இருப்பார்கள். இந்தி, கன்னடம், தமிழ் என அனைத்து மொழிகளும் ஒட்டி உரசிப் போகும் காட்சி பல வலிகளைத் தந்தாலும் பிரிவு இல்லா பாகுபாடு இல்லா உணர்வைக் கொடுக்கும். சில சமயங்களில் பயணம் முழுமையும் நின்றுகொண்டே பயணிக்க நேரிடும். அப்போது தோன்றும் இரயில்வே நிர்வாகம் செயல்படுகிறதா..? என்று...

சரி என்று நிலையம் மாறிப் பேருந்து பயணம் போவோம்!

இதிலும் பாகுபாடு உண்டு ஆனால், சிறு வித்தியாசம் தனித்தனிப் பேருந்து. ஆனால், அரசாங்கப் பேருந்து மட்டுமில்லை தனியார் பேருந்தும் உண்டு அவர்களைப் பற்றி நாம் பேச ஒன்றும் இல்லை, அவர்கள் முதலீடு!

அரசால் சில பேருந்துகள் இயக்கப்படுகின்றது எதற்கு இயக்குகிறோம் என்று தெரியாமலே இயக்கப்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும். மழைக்காலம் என்றால் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. வெளியே நனைவதும் பேருந்தின் உள்ளே நனைவதும் ஒன்றே! மேடு பள்ளத்தில் செல்லும்போது அமர்ந்து இருக்கும் சீட்டை விட்டு 1 அடி மேலே கீழே சென்று வருவது வாடிக்கை. ஆனால், இதே பயணத்தில் மனிதநேயத்தையும் காண முடியும். கர்ப்பிணி பெண், கைக்குழந்தை கொண்டுவரும் பெண், வயது முதிர்ந்தோர் வந்தால் இடம் கொடுத்தால் மனிதம் இருக்கும் என்று சொல்லலாம் இல்லாத போது எப்படிச் சொல்ல முடியும்...?

அரசாங்கம் நமக்கானப் பயணத்தை இலவசமாகக் கொடுக்கவில்லை! இருந்தும் ஏன் முறையானப் பயணத்தை அமைத்து கொடுப்பது இல்லை! அறிந்த வரை இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் இதுபோல பயணப் பிரச்சனைகள் வருவது இல்லை...!

"பயணங்கள் மாறும், திட்டங்கள் மாறும், பணிகள் மாறும், ஏழைக்கும் பணக்காரனுக்கும் பசி மாறாது என்பதை அரசாங்கம் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்."

Pin It