இந்தியாவிலிருந்து பல்வேறு உலகநாடுகளுக்கு சென்று தங்களது சிந்தனையால் சிறந்து விளங்கிய அரசியல் செயல்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் போராளி என முத்திரை பதித்த வரலாற்றாளர்களை அறிவோம். அதேபோல புலம் பெயர்ந்து கூலித் தொழிலாளியாகவும், அடிமைகளாகவும், அகதிகளாகவும், கைதிகளாகவும் அவலநிலைக்கு ஆளாகி அவதிப்படும் இந்தியர்களைக் குறித்த தகவல்களும் காணக் கிடைக்கின்றன.
1938-ஆம் ஆண்டு ஜப்பானுக்கு எதிரான சீனாவின் தற்காப்புப் போரில், சீன மக்களுக்கு ஆதரவாகச் சென்ற இந்திய மருத்துவக் குழுவில் இடம்பெற்ற இந்திய டாக்டர் துவாரகநாத் சாந்தாராம் கோட்னிஸ் என்பவர். சீனாவில் ஐந்தாண்டுகள் போற்றத்தக்க மருத்துவப் பணிபுரிந்த இவரைப் பற்றி சீன மொழியில் ஷங் ஷியன்குங் எழுதிய நூலை தமிழில் எம்.பாண்டியராஜன் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். கோட்னிஸ் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை அழகிய ஓவியங்களுடன் வரலாற்று சித்திரமாகப் பதிப்பித்திருக்கிறது நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். அரிய மனிதரைப் பற்றிய அபூர்வமான தகவல்களைத் தெரிவிக்கும் இந்நூல் அரசியல் வரலாற்று நூல்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு உவப்பானதாகும்.
கோட்னிஸின் பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான நிகழ்வுகள் சுருக்கமாக இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 1910-ஆம் ஆண்டு தென் இந்தியாவில் உள்ள சிறு நகரான ஷோலாப்பூரில் பிறந்தவர் கோட்னிஸ். சிறுவயதிலேயே இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். மருத்துவராக பட்டம் பெற்ற பின் ஏழைகளுக்கு சேவை செய்வது குறித்த சிந்தனையில் இருந்தார்.
சீன மக்களின் ஜப்பானிய எதிர்ப்புப் போரை ஆதரிப்பதற்காக மருத்துவக்குழுவொன்றை இந்திய தேசிய காங்கிரசின் தலைவரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அழைப்பு விடுத்த தகவலும், இந்திய மருத்துவக்குழுவினர் மும்பையிலிருந்து வழியனுப்பி வைக்கப்பட்டபோது ‘இந்திய மக்களும் சீன மக்களும் சகோதரர்கள்’ என்று சரோஜினி நாயுடு புகழ்ந்து பேசிய விவரங்களும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் ராணுவ கமிஷனின் துணைத் தலைவரான சௌ என்லாய் என்பவர் கோட்னிஸை வரவேற்றபோது ‘சீன மற்றும் இந்திய மக்களிடையே நட்புடன் கூடிய பரிமாற்றத்தில் நீங்கள் கூடுதலாகவே பங்காற்ற முடியும்’ எனக் குறிப்பிட்டது போன்ற வரலாற்று முக்கியத்துவமான பல தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன,
இளம் வயதிலேயே அந்த மருத்துவக் குழுவில் தன்னை இணைத்துக்கொண்டு சீனாவில் ஏறத்தாழ அவர் வாழ்ந்த ஐந்தாண்டுகளில் ஆயிரக்கணக்கான படைவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் மருத்துவ சிகிச்சையளித்தார்.
1939-இல் போர்முனைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டபோது கோட்னிசுடன் தலைவர் மாசேதுங் நீண்ட நேரம் உரையாடியதும் அவரே சமைத்த உணவை கோட்னிசுக்கு பரிமாறிய விருந்து நிகழ்வும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டிருப்பதிலிருந்தே கோட்னிசின் இருப்பின் சிறப்பை உணர்த்துகிறது.
ஓய்வின்றி பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு தொடர்ந்து பணியாற்றிய கோட்னிஸ் தனது உடல் நலத்தில் போதிய அக்கறை காட்டாததால் கடுமையான வலிப்பு நோயால் அவதியுற்றார்.
சீன மக்களுக்காக ஏற்றுக்கொண்ட பணியை சிறப்பாக செய்த கோட்னிஸ் தனது 32-ஆவது வயதில் மரணமடைந்தபோது யுனான் நகர மக்கள் சீனமுறைப்படி அவரது இறுதிச்சடங்குகளை நிகழ்த்தி தங்களது நேச உணர்வை வெளிப்படுத்தியதையும் இந்நூல் பதிவு செய்துள்ளது.
இந்தியாவிலிருந்து சென்று சீன தேசத்து மக்களுக்காக நடந்த போரில் பணியாற்றி தன் வாழ்வையே அர்ப்பணித்த டாக்டர் கோட்னிஸின் புரட்சிகர வாழ்க்கையை உணர்ச்சிகரமான ஓவியங்களுடன் பதிவு செய்திருக்கும் இந்நூல் வாயிலாக, ஒரு அரும்பெருஞ் சாதனையாளரை தமிழுலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ள மொழிபெயர்ப்பாளர் எம்.பாண்டியராஜன் பாராட்டுதலுக்குரியவரே.
டாக்டர் கோட்னிஸ்
ஆசிரியர்: ஷங் ஷியன்குங்
தமிழில்: எம்.பாண்டியராஜன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை - 600 098
விலை: ரூ. .115/-