கிழிந்த ரவிக்கைக்குள்குவிந்து கிடக்கும் இளம்பெண்ணின் வனப்பைப்பார்த்து வெறியேறுகிறது காமுகம்! அதன் வழிவெளிப்படும் வறுமையைப்பார்த்து நிலைகுலைந்து பதறுகிறது கவிமனம்.

வெறிக்கும் - உணர்வுக்கும் இடைப்பட்ட வேறுபாடு அங்குதான் வேரூன்றிக் கிடக்கிறது.

காட்சி ஒன்றே! இருவர் கண்களும் கூட ஒன்று போன்றே. ஆயினும் வேறுபாடு!

கவிமனத்தின் பெருமை சிறுமைகளை பிரதிபலித்து நிற்பன அவன் கவிதைகளே! அவனது சிறுமைக்கும் ஏனைப் பெருமைக்கும் அக்கவிதைகளே கட்டளைக்கல்.

வசந்தவல்லி பந்தாடும் அழகை எடுத்துரைக்கும் கவிஞன்

“கோடு பொருமுலைமூடு சலவையின் ஊடுமல்லாடும் காட்சியை வடிவமைப்பார். கவிதையை ருசிக்க முனையும் மனப்பந்தை மறக்கவும் பந்தாட்டத்தைப் புசிக்கவும் கூடிய மனநெருக்கடிக்கு ஆளாகாமல் தப்பிட முடியுமா?

இதற்கு நேரெதிராய் துய்ப்பவனை உன்னதத்தின் உச்சிக்குக் கொண்டு செல்லும் சொல்லோவியங்களுக்குப் பஞ்சமில்லை.

சித்திரச் சோலைக்குள்நுழையும் பாரதிதாசன் அதன் பேரழகைக் கண்டு பிரமித்து நிற்கும் வேளையில் திடீரென அப்பேரழகின் ஆணிவேரை நோக்கிப் பயணப்பட்டு விடுவார். அக்கணங்களில் அவன் கண்முன் நிற்கும் பெரும் மரங்கள் பூச்செடிகளும் கிளை மரங்களும் கானகமும் மனவெளியை விட்டு மறைந்தே போகின்றன. மறுநொடியும் உணர்வு பொங்க அந்த ஒட்டுமொத்த சோலையோடும் உரையாட ஆரம்பிக்கிறார்.

“சித்திரச் சோலைகளே

உமை நன்கு திருத்த இப்பாரினிலே

எத்தனைத் தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ

உங்கள் வேரினிலே” என்று முடிப்பதற்குள்

ஒவ்வொரு வார்த்தைகளும் ஊடுருவிப் பாயும், வெப்பத்தின் அளவையும் வேதனையின் அவலத்தையும் எந்தக் கருவியால் அளவிடுவது!

உலகின் ஆக்கங்கள் ஒவ்வொன்றின் அறிவிலும் உழைக்கும் பலகோடி மக்களின் வியர்வையும் ரத்தமும் உயிரும் கலந்தே காலவெளியை நிரப்பியிருக்கின்றன.

சோலைகள்! சாலைகள்! மலையின் மார்பைப் பிளந்து மலைப்பாம்பாய் நெளியும் பாதைகள், ஆலைகள், சிலைகள் நெடுநதிக்குறுக்காய் பேரணைகள் நெடுவயல் முழுவதும் மரகதப்பாய்கள்; விண்கலங்கள் வேற்றுக்கிரகத்தை ஆய்வு செய்யும் ஆயவகங்கள் என்று எதுவாகட்டும் எல்லாம் வியர்வையின் விளைச்சல். வெந்தும் நொந்தும் வினையாற்றி மடிந்த இலட்சோபலட்சம் தலைமுறையில் உழைப்பில் மட்டுமல்ல இழப்பிலும் வளர்ந்தவை!

படர்ந்த புவிபரப்பின் அடர்ந்து கிடக்கும் ஆலைகளை சோலைகளை ஆயிரங்கோடி கட்டிடங்களாய் பார்த்து பாரதிதாசன் கேட்பார்

“நீங்கள் ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பினால் உதித்தது மெய்யல்லவோ? என்று.

நீர்கனல், காற்று நல்ல நிலவெளி என நிறைந்த இயற்கையைக் கவர்ந்திழுக்கும் எதுவாயினும் அது உழைப்பின் வெளிப்பாடல்லவோ?

நெல்லினை நன்னிலமோ, நீரலைத் தடாகங்களோ மாமிகு பாதைகளோ மலையுச்சி நகரங்களோ எவையேயாயினும்அவையெல்லாம் கூட்டுழைப்பில் கொட்டப்பட்ட குருதியின் விளைச்சலன்றோ?

பரந்த இவ்வுலகின் ஒவ்வொருவருக்கும் பாமர உழைப்பின் காட்சிகள் அல்லவா?

ஆயினும் உழைத்தவன் நீயே?

பசிதீரும் என்று அடிவயிற்றையும் பிசைந்து நின்ற அவனுக்கு உறிஞ்சிய செல்வேந்தர் உரைக்கும் பதில்எது தெரியுமா? உயிர் போகும் என்பதே.

பணி செய்து கிடப்பதே உன் வேலை! பயன் கேட்டு நின்றால் உயிர்போகும், ஜாக்கிரதை!

ஆண்டாண்டு காலமாய் ஆண்டவனுக்கும் வேண்டுபவனுக்கும் இடைப்பட்ட உரையாடல் இதுதான்.

கடமையைச் செய்! பயனை பாராதே!

வசதியாகக் கட்டமைக்கப்பட்ட வக்கணை!

மானம், வெட்கம், சூடு, சொரணை, கற்பு எனப்படும் கற்பித்தல்களின் வரிசையில் பணி செய்து கிடப்பதே என்கடன் என பட்டியலிடப்படுவதே நரிகளின் தந்திரம்!

பாரதிதாசன் இறுதியாக எழுப்பும் கேள்வி இதுதான்.

எலிகள் புசிக்க/ எல்லாம் கொடுத்தே ஏறுகள் ஏங்கிடுமோ?

புலிகள் நரிக்குப் புசிப்பளித்தே புதரினில் தூங்கிடுமோ?

கேள்வியோடு நிறுத்தாமல் கிளர்ந்தெழும் நியாயத்தைக் கீழ்க்கண்டவாறு பதிவு செய்கிறார்.

“கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவாய் - இனி

கெஞ்சும் உத்தேசமில்லை!

சொந்த வலியுடையோர் - இன்ப வாழ்வுடையார்

வார்த்தைக்கு மோசமில்லை!”

Pin It