வழக்கறிஞர் அ.அருள்மொழி - நேர்காணல் – தொடர்

? 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டை பிற மொழியாளர்கள் ஆளுகிறார்கள், தமிழர்கள் ஆளவில்லை, இதற்கு திராவிட இயக்கம் தான் காரணம் என்று ஒரு குற்றச்சாட்டு உலவுகிறதே. அது உண்மையா? தமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டும் என்று கூறுவது தவறா?

எத்தனை விதமான குற்றச்சாட்டுகள், எவ்வளவு குழப்பமான சிந்தனை? வெறுப்பை வளர்க்கும் விதைகள் இவை என்று ஒதுக்கிவிட்டுப் போய் விடலாம். ஆனால் இந்த நச்சு விதைகள் நல் வயல்களில் தூவப்பட்டுள்ளன என்பதைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கிராமத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு. சித்தம் கலங்கிய மாதிரி அலைந்து கொண்டிருப்பவர்களைப் பார்த்து "மந்திரிச்சுவிட்ட கோழி" மாதிரி அலைகிறாயே என்பார்கள். அப்படியே சிலர் மாறி வருவதை படிப்படியாகப் பார்க்கின்றோம். அதற்காக அவர்களை அப்படியேவிட்டு விடலாமா? கூடாது. மேலும் இன்னும் பலர் அதற்கு இரையாகிவிடாமல் காப்பாற்றுவதும் நம் கடமையே. எனவே இந்தத் ‘தனித்தமிழர்’ அல்லது "தமிழர் மட்டும்" என்ற தத்துவத்தைக் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து கொள்வது நல்லது. ஒவ்வொரு குற்றச்சாட்டாகப் பார்ப்போம்.

1. தமிழ்நாட்டை 50 ஆண்டுகளாக தமிழர்கள் ஆளவில்லை என்கிறார்கள். அது ஏன் 50 ஆண்டுகள். 1967-இல் தி.மு.க சட்டமன்றத் தேர்தலில் வென்று தமிழ்நாட்டின் முதல்வராக பேரறிஞர்.அண்ணா அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்றதே அந்த 50 ஆண்டு வரலாற்றுக் குறியீட்டின் அளவுகோல். அந்த வரலாற்றில் கலைஞர்.கருணாநிதி அவர்கள், திரு.எம்.ஜி.ஆர். அவர்கள், செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் மூவரும் அண்ணாவைத் தொடர்கிறார்கள். இந்த வரிசையில் இடையில் சில மாதங்கள் முதல்வராக இருந்த திருமதி.வி.என்.ஜானகி அவர்களும், பொறுப்பு முதல்வராகவும் தற்காலிக முதல்வராகவும் இருந்த திரு.ஓ.பன்னீர்செல்வம், இன்றைய முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் அடங்குவர். இவர்களில் ஜெயலலிதா அவர்கள் கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர் என்றும், எம்.ஜி.ஆர் அவர்களும், வி.என்.ஜானகியும் மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் என்றும் அவர்களே கூறியிருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் தமிழ்நாட்டு மக்களால் வாக்குமுறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். பேரறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதி அவர்களும் தங்களைத் தமிழர்கள் என்று தான் பெருமையுடன் கூறியிருக்கிறார்கள். அவர்களது உறவினர் யாரும் வேறு மொழி பேசுபவர்கள் இல்லை. உறவினர் என்றால் அவர்கள் வீட்டிற்கு வந்த மருமக்கள் அல்லர். அண்ணா, கலைஞர் இவர்களின் தாய் தந்தை வழி உறவினர்கள். ஆனால் அவர்கள் தெலுங்கு வம்சா வழியினர் என்றொரு மானுடவியல் ஆய்வை மேற்கொண்ட சிலர் கண்டுபிடித்து விட்டதாக அவர்களே அறிவித்துக் கொண்டனர். அதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அவர்களுடையது.

அப்படியே அவர்களின் சுரங்கப்பாதை கண்டுபிடிப்புகள் உண்மையாக இருக்குமேயானால் அதை அண்ணாவோ, கலைஞரோ ஏன் மறைக்க வேண்டும்? தமிழ்நாட்டு மக்கள் ‘மலையாளி’ என்று வெளிப்படையாகத் தெரிந்த எம்.ஜி.ஆர். அவர்களுக்கே தங்கள் ஆதரவை வாக்குகளாகக் கொட்டிக் குவித்தவர்கள் எனும் போது, அண்ணாவும் கலைஞரும் ஏதோ ஒரு தெலுங்கு வம்சத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக ஒதுக்கிவிட மாட்டார்கள் என்பது அவர்களுக்கும் தெரியும் தானே? தமிழர்களுக்கு அத்தகைய மனத்தடைகள் ஒரு போதும் இருந்ததில்லையே. ஏன் இந்தத் தமிழ்க் குருதி ஆய்வாளர்கள் எல்லாம் ஏற்றுப் போற்றுகின்ற தமிழ்ப் பேரரசன் ராஜராஜ சோழன் தன் அருமை மகள் குந்தவி நாச்சியாரை விமலாதித்தன் என்ற தெலுங்கு மொழி பேசும் இளவரசனுக்கு மணம் முடித்துக் கொடுத்தவர் அல்லவா? இத்தகைய வரலாறுடைய தமிழ்நாட்டில் ஒரு அரசியல் தலைவர் மூதாதையரின் மொழியை ஏன் மறைக்க வேண்டும்? இவ்வளவு லேசான காரணத்தைச் சொல்லி இரு பெரும் தலைவர்களைப் பற்றி என்ன சொல்ல வருகிறார்கள். இந்தத் ‘தமிழர் மட்டும்’ சிந்தனையாளர்கள் என்று கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

காவிரி நீர் முல்லைப் பெரியாறு, கச்சத் தீவு ஆகியவற்றின் மீது தமிழ்நாட்டின் உரிமைகளை இந்தத் தலைவர்கள் விட்டுக் கொடுத்துவிட்டார்கள் என்கிறார்கள். விட்டுக் கொடுத்தால் அது அரசியல் பிழைதான். அதை நாம் மறுக்க முடியாது. அவர்கள் விட்டுக் கொடுத்தார்களா என்பது விவாதத்திற்குரியது.

அதற்கும் அவர்களின் தாய் மொழிக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால் அவர்கள் தாய் மொழி தெலுங்கு அல்லது கன்னடம் அதனால் தான் அவர்கள் தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக் கொடுத்தார்கள் என்று பதில் வருகிறது. அதற்கு ஏன் ஒருவர் பிறப்பில் தெலுங்கராக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை வேகமாக நடத்திய முதல்வர் திரு.பக்தவச்சலம் அவர்களும், திருப்பதி ஆந்திராவுக்குப் போகக் கூடாது, தமிழ்நாட்டிற்குத் தான் வரவேண்டும் என்று குரல் கொடுக்காமல் நான் முதலில் இந்தியன். பிறகு தான் தமிழன் என்று சொன்ன முதல்வர் திரு.காமராசர் அவர்கள், அவ்வளவு ஏன் தமிழ்நாட்டைய இராணுவத் தாழ்வாரம் ஆக்குவதற்கு எட்டுவழிச்சாலை என்று ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள பச்சைப் பசும் நிலத்தை தாரை வார்க்கவும், அதை எதிர்ப்பவர்களின் உரிமைக் குரலை ஒடுக்கவும் முன்னால் நிற்கும் இன்றைய முதல்வர் திரு.பழனிச்சாமியும், துணை முதல்வர் திரு.பன்னீர்செல்வமும் தமிழர்கள், தமிழர்கள், சுத்தத் தமிழர்கள் அல்லவா? அவர்கள் இந்த மண்ணின் உரிமையை விட்டுக் கொடுப்பதற்கு என்ன பெயர் வைப்பீர்கள்? அரசியல் தவறுகளை யார் செய்தாலும் அதைத் தவறு என்று சொல்வதற்கு பதிலாக அவர்களது முன்னோர் வரலாற்றில் இருந்து காரணம் கண்டு பிடிக்க முயல்வது அறியாமையா?

இது ஒரு அரசியல். திட்டமிட்ட வெறுப்பு அரசியல். இதைப் பேசுபவர்கள் எல்லோரும் ஆர்.எஸ்.எஸ்.ஆல் கவரப்பட்டவர்கள் என்று சொல்ல முடியாது. இந்தக் கருத்தைப் பேசும் பலர் ஆர்.எஸ்.எஸ்.பார்ப்பன எதிர்ப்பாளர்களாகக் கூட இருக்கிறார்கள். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.போன்ற மதத் தூய்மை, இனத் தூய்மை, மொழித் தூய்மை என்னும் வலது சாரி தத்துவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லலாம்.

நேர்காணல் தொடரும்

- நேர்காணல்: மு.சி.அறிவழகன்

Pin It