பெண்கள், தங்களை அழகாக்கிக்கொள்ள ஒவ்வொரு காலகட்டத்திலும் அப்போதைய ட்ரெண்டில் உள்ள பழக்கவழக்கங்களை சோதித்துப் பார்ப்பது உண்டு. சாதாரண அழகுசாதனப் பொருட்களில் தொடங்கும் இந்த மோகம் சிலருக்கு படிப்படியாக நீண்டு எது எல்லையென்ற வரையறையே இல்லாது செல்லும். ஒவ்வொருவரும் தங்களை அழகாக வைத்திருப்பதோ அழகாகக் காட்டிக்கொள்வதோ பிரச்சினையே அல்ல. ஆனால் அந்த அழகு மேம்பாட்டால் வரும் ஆபத்துகளையும் பெண்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது ரொம்பவே முக்கியம். அந்த வகையில் தற்போது பெண்களிடையே புழக்கத்தில் இருந்து வரும் ஷேப்வேர்  (Shape wear) குறித்துப் பார்ப்போம்.

லாபம் சம்பாதித்து வந்த அழகு சாதன நிறுவனங்கள் உலகமயமாக்கல், தாராள மயமாக்கல்களுக்குப் பிறகு இந்திய நடுத்தரமக்களிடமும் நுழைந்தது. அதன் நீட்சியாக வெகுஜனத்தினிடையே அழகு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த வெவ்வேறு மெனக்கெடல்கள் அதிகரித்தன. அதில் ஒன்றுதான் இந்த உடலைக் கட்டுக்கோப்பானதாக வெளிக்காட்டும் shapeware.

shape wear 350சிக்ஸ் பேக், சைஸ் ஜீரோவைப் போலவே  ஒருசாரார் இதை கடுமையாக எதிர்த்தாலும் அழகியல் பேணுவதும், உடை நேர்த்தியில் சிரத்தை எடுத்துக்கொள்வதும் இயல்பே என்ற வாதத்தையும் இதை உபயோகிக்கும் பலர் முன்வைத்துக்கொண்டேதான் இருக்கின்றனர். தேவையில்லாத பாகங்களை மறைத்து அழகாக தோன்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த Shape wearகள் இன்று நேற்று தோன்றியதல்ல. அதன் வரலாறு அறிய சில நூற்றாண்டுகள் பின் செல்ல வேண்டும்.

ஆம். 16ஆம்  நூற்றாண்டு முதல் 20ஆம்  நூற்றாண்டு இறுதிவரை Corset என்ற உள்ளாடை பெண்களிடையே மிக பிரபலமாகப் பயன்பாட்டில் இருந்தது. Shape wearகளின் முன்னோடி என்று இதைக் குறிப்பிடலாம். Alice in wonderland, snow white கதாநாயகிகளை பார்த்திருப்போம். மார்பு இறுக்கி, ‘‘இடுப்பா? அது எங்க காணோம்?’’ என்பதுப் போல் உடை அணிந்து இருப்பார்கள் அப்பெண்கள். அத்தகைய உடலமைப்பை பெற சிறு வயது முதல் இந்த கார்செட் உள்ளங்கியை அணிந்திருக்க வேண்டும் அப்பெண்கள்.

மார்பு முடியும் இடத்தில் இருந்து ஆரம்பித்து இடுப்பு வரை அணியக்கூடிய இவ்வுள்ளங்கி வளையாத உலோகங்களால் தயாரிக்கப்பட்டவை. அந்தக் காலத்து அரசிகள் சுறாவின் எலும்பில் செய்த கார்செட் அணிந்ததாக மேற்கத்திய இலக்கியத்தில் குறிப்புகள் உள்ளன. கார்செட்டை உடலில் பொருத்தி கயிறுகளால் இறுக்கிக் கட்டி இடுப்பு மற்றும் மார்பு எலும்புகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி அதன் மூலம் தனக்கு பிடித்த உடல் வடிவத்தைப் பெற்றனர். தனது நடை, அசைவுகள், வேலைகளில் பெரிதும் அசௌகரியம் ஏற்படுத்தியிருந்தும் குறிப்பிட்ட அந்த தோற்றம் பெற்றிட அதைப்பயன்படுத்தினர். இதை ஆண்களும்கூட பயன்படுத்தினார்கள் என்பது உபரித்தகவல்.

இறுக்கமாக அணியப்படும் corset மார்புக்கச்சைகளால் மூச்சுவிடுதலில் துன்பமும், மார்பு எலும்புக்கூட்டில் வலியும், உணவு செரிப்பதில் குறைபாடும், முதுகுப்பகுதிகளில் தழும்புகளும் ஏற்பட்டுள்ளது. அழகு மோகத்தினால் 5 வயது பெண்குழந்தையாக இருக்கும்போதே அணிவிக்கப்பட்டுவிடுவதால் உடலின் மேல்பகுதி குறைக்கப்பட்டு எலும்பு வளர்ச்சி சரியாய் அமையாது பலபெண்கள் கர்ப்ப காலத்தில் மரணத்தை தழுவி இருக்கிறார்கள். சில பெண்களுக்கு நுரையீரலின் கீழ்ப்பகுதியை நெருக்கி மூச்சுக்கோளாறுகளுக்கு வழிவகுத்திருக்கிறது.

21ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் குட்டை பாவாடை பிரபலமான பிறகு மெதுமெதுவாய் வழக்கொழிந்த அந்த கார்செட்டைத்தான் தற்போது தூசு தட்டி திரும்பவும் Shape wear  எனும் பெயரில் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. குண்டாக இருக்கிறோமே, மார்பு அளவு சிறியதாக இருக்கிறதே எனக்கருதும் பொதுச்சமூக கேலிகளுக்கு ஆளானவர்கள் தகுதியான எந்த மருத்துவ பரிந்துரையும் இல்லாமல் இந்த வகை ஆடைகளை அணிவது எவ்வளவு ஆபத்தானது எனும் விஷயத்தை உணரவேண்டும்.

உடலரசியலைப் பற்றியும் உடையரசியலைப் பற்றியும் எவ்வளவு பேசினாலும் அதை சட்டை செய்யாமல் பொதுபுத்தியில் புழங்குபவர்களே அதிகம். கட்டுக்கோப்பாக உடலை வைக்க உடற்பயிற்சி தொடங்கி சரியான மருத்துவம் வரைக்கும் பல வழிகள் உள்ளன. அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அழகு, சமூகத்தில் நாம் கொண்டுள்ள மதிப்புகளை விட ஆரோக்கியம் முக்கியம். சொல்லப்போனால் சரியான  ப்ரா சைஸ் உபயோகிப்பது, மார்பை சுய பரிசோதனை செய்து அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதுதான் உண்மையான பெண்ணியமும்கூட. ஏனெனில் மார்பென்பது பாலூட்டி உயிரினங்களின் பொது உறுப்பு. பெண்ணுடல் என்பது காமம் தூண்டும் போகப்பொருள் மட்டுமே இல்லை என்பதை எதிர்பாலினத்தவர்களுக்கு புரியவைப்பதும் நம் கடமை. எனவே, உடல் கட்டுக்கோப்பு முக்கியம்தான் அதே சமயம் அதை நோக்கிய பயணத்தில் சில கட்டுக்கோப்புகளும் அவசியம் என்பதை பெண்கள் உணரவேண்டும் !                                  

Pin It