அவர் இறந்த (24.12.1973) அன்று, நான் சரபோசி கல்லூரி மாணவன். உணர்வுகளால் உந்தப்பட்டிருந்தேன். நேரடியாக சமூக் கொடுமைகளை அனுபவித்தன் விளைவு, பெரியார் கருத்துகளில் ஈர்ப்பு ஏற்பட்டது.
அதுவே பெரியாரின் மறைவு என் போன்றோரின் உள்ளத்தை மிகவும் பாதிக்கச் செய்தது.
நாள் முழுதும் சாப்பிடாமல், எங்கள் ஊரில் பெரியாரின் படத்தை வைத்து, அப்படத்திற்கு சிறிய அளவிலான மலர் மாலை ஒன்று அணிவித்து, அவரின் உடல், தற்போதைய பெரியார் திடலில் புதைக்கப்படும் வரையில், துக்கம் கடைப்பிடித்தோம்.
இது பழைய நினைவு.
இதுமட்டும் போதுமா? இன்றையச் சூழலில் அவரின் சிந்தனைகளில், கருத்துக்களில் ஏதேனும் சிலவற்றையாவது நினைந்துப் பார்ப்போம்.
பொதுவாக, பெரியார் என்றவுடன் ‘கடவுள் மறுப்பாளர்’ என்றுதான் சொல்லுவர். பெரியார், கடவுள் மறுப்பு என்னும் செய்தியை மட்டுல்ல, சமூக சீரழிவுக்கான காரணங்கள் அனைத்தையும், தன் வாழ்நாளில் பரப்புரை செய்தார்.
"சாதி ஒழிப்பது ஒன்று
நல்லத் தமிழ் வளர்ப்பது
மற்றொன்று" என்பது ‘பாவேந்தர்’ மொழி.
தமிழறிஞர்கள் பலரும் தமிழ் மொழியை மேம்படுத்த முயற்சித்தார்கள். சாதி இழிவு எனும் கருவியை போக்க எந்த ஆயுத்தையும் கையிலேந்தவில்லை; அரிதான சிலரைத் தவிர. அந்த சாதி இழிவை ஒழிப்பதற்கான வழிமுறைகள் பற்றி அறிய, ஆயுதத்தை கையிலெடுத்த அறிஞர்கள் ‘பெரியார், அம்பேத்கர்’ என இருவர்; இந்தியாவில் முதன்மைப் பெற்றவர்கள்.
சாதிய அமைப்பின் காரணமாக பெரியார், அம்பேத்கர் இருவருமே பாதிக்கப்பட்டவர்கள். தன்மை சற்று மாறுப்பட்டிருந்தது. அதன் பொருட்டு பெரியார், ‘சாதி ஒழிப்பு’ தன் வாழ்நாள் கடமையெனச் செய்தவர்.
பெரியாரின் நினைவு நாளாகிய இன்று, பெரியார் ,சாதி ஒழிப்புத் தொடர்பாக சொல்லிய செய்தி,10.01.1947 நாளிட்ட ‘விடுதலை’ நாளேட்டில் தலையங்கமாக வெளியானதை, நான் தற்போது ஒரு நூலின் வாயிலாகப் படித்தேன்.
தற்போது அச்செய்திகளை மீள்பார்வை செய்வது நன்று. சாதியை ஒழிப்பதற்கு பல அடிப்படையான முறைகள் இருக்கிறன. சாதிப்பட்டங்கள் சட்டப்பூர்வமாகத் தடுக்கப்பட வேண்டும்.
புதிய மணம் புரிவோர் அனைவருமே,சாதி மறுப்பு திருமணம் செய்ய சட்டப்படித் தூண்டப்பட சட்டம் செய்ய வேண்டும்.
ஒரே சாதியில் திருமணம் செய்பவர்களுக்கு சில நிபந்தனைகளையும், கட்டுத்திட்டங்களையும் விதித்து,சமுகத்தில் செல்வாக்கில்லாமல் செய்யவேண்டும்.
சாதிகளை குறிக்கும் நெற்றிக்குறி, உடை, பூணூல் போன்ற அடையாளங்களை சட்டப்படித்தடுக்க வேண்டும்.
இவை மட்டுல்லாது; சாதிக்கு அடிப்படையாக இருப்பது,இந்து மதம். இதை தாங்கி நிற்பவை வேத, இதிகாச, சாத்திர,புராண கட்டுக் கதைகளே. இவற்றை அடியோடு ஒழித்தாக வேண்டும்.
இவற்றை ஆணிவேருடன் பிடுங்கி எறிந்தாலொழிய, சாதி எனும் தீமையை ஒழிப்பதியலாது.
இவ்வளவையும் காப்பாற்றும் சமுதாயமான ஆரியர்களின், வைதிகர்களின் மனப்பான்மையை மாற்றியாக வேண்டும்.
இந்து மதம் ஒழிந்தால் ‘பார்ப்பனியம்’ அற்றுப்போகும். இதை பஞ்சமா பாதகம் செய்யும் பார்பான்கூட விரும்ப மாட்டான்; என்றார் பெரியார்.
இவ்விடத்தில், அயல் நாட்டு மேற்கோள் ஒன்று காட்டுகிறார். அஃதாவது, 'இங்கிலீஷ் அரசியலமைப்பு' எழுதிய ‘புரொபசர் டிசே’ என்பவர், 'புரட்சி மனப்பான்மையுடையவன் போப் ஆகவே மாட்டான்; போப் ஆகும் மனம் உள்ளவன் புரட்சி செய்ய விரும்பமாட்டான்' என்பதே ஆகும்; அஃது.
சாதியை ஒழிக்க விரும்புவோர் மேடைகளில் முழங்கினால் மட்டும் போதாது. தன் சாதி திருமணம் செய்யவேக்கூடாது என வலியுறுத்தி, ‘புத்தரும்’ ‘குரு நானாக்கும்’ கூறியுள்ளது போன்று, வேதமும் சாத்திரங்களும் முழுப்பொய் என்று வெளிப்படையாகவே கூறவேண்டும்.
இவ்வளவும் செய்யக்கூடிய ஆற்றலும் துணிவும் தியாக உணர்ச்சியும் படைத்த இளைஞர்களால்தான் சாதியை ஒழிக்க முடியும் என நம்பிக்கை வைக்கிறார்.
அத்தகைய நம்பிக்கை தற்போது மிகையாகாவே தொய்வடைந்துள்ளது. காரணம் படித்தவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பின்மை (Un employment). அவ்வாறு வேலை கிடைக்கப் பெற்றோருக்கு, உரிய ஊதியமின்மை (Under employment).
நிறைவான சம்பளம் பெறுவோர் மட்டும் ஊதியம் பெறுமளவு நிறைவான பணி செய்கின்றனாரா? கையூட்டுப் பெறுவதில்தான் முனைப்பு காட்டுகின்றனர்.
இவற்றையெல்லாம் நீக்கி ‘சாதி ஒழிந்த சமுதாயம்’ அமைய பெரியாரின் நினைவு நாளில் உறுதி ஏற்போம்.
குறிப்பு:
கோவில் சென்று வழிபாடு செய்ய பூ, பழம், தேங்காய் தட்டுடன் காத்திருக்கும் இறைப் பற்றாளர்களை, அங்குள்ள பூசகர்கள், கோத்திரம் கேட்பது ஒழிந்தபாடில்லை. இதுவே பெரியாரின் மேற்படி செய்தியை மீளாய்வு செய்யத் தூண்டியது.
- ப. தியாகராசன்