டம்ளரில் பால் குடிக்க குடிக்க வந்து கொண்டே இருக்கும் !

தேவையானப் பொருட்கள்

இரண்டு கண்ணாடி டம்ளர்கள், கொஞ்சம் பால்.

மேஜிக் செய்யும் முறை

பார்வையாளர்கள் மத்தியில் மேஜிக் செய்யும் போது வழக்கமாக கடைப்பிடிக்க வேண்டிய இடைவிடா பேச்சு அவர்கள் கவனத்தை, ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். பால் உள்ள டம்ளரைக் காண்பித்து “இதோ டம்ளரில் பால் இருக்கிறது. மந்திரத்தால் குடிக்க குடிக்க வற்றாமல் பால் வந்து கொண்டே இருக்கும்.” என சொல்லிவிட்டு டம்ளர் பாலை சிறிது குடிப்பது போல் வாயில் வைத்து பால் படும்படி செய்ய வேண்டும்.

பிறகு மந்திரம் போடுவது போல் முணுமுணுத்து ஒரு துணியால் பால் டம்ளரை மூடி விட்டு மந்திரக்கோலால் சுற்றிக் காண்பித்து துணியை எடுத்து விடவேண்டும். இப்போது பால் பழையபடி டம்ளரில் நிறைய இருக்கும். இதை மீண்டும் மீண்டும் செய்ய பால் வந்து கொண்டே இருக்கும்.

இது காண்போர் மனதை மிகவும் கவர்ந்து விடும் . அவ்வப்போது பால் விலை மாட்டின் வகைகள் போன்ற நடைமுறைச் செய்திகளை விளக்கலாம்.

மேஜிக் இரகசியம்

ஒரு கண்ணாடி டம்ளரில் சிறிது பால் ஊற்றி அதற்குள் செல்லும் படியான மற்றொரு சிறிய கண்ணாடி டம்ளரை உள்ளே போட்டு விட வேண்டும். இப்போது பால் நிறைய உள்ள அளவு சரி செய்து கொள்ள வேண்டும். டம்ளரை இரண்டு விரல்களில் பிடித்து உள்ளே உள்ள டம்ளரை சிறிது மேலே தூக்க பால் குறைந்து போய் இருக்கும். இதை குடித்து விட்டதாக சொல்லி துணியை மூடிவிட்டு உள்ளே உள்ள டம்ளரை விட்டதும் பால் டம்ளர் நிறைய மீண்டும் இருக்கும்.

இதை நாம் தனியே செய்து நன்கு பழகிக் கொள்ள வேண்டுவது அவசியம்.

Pin It