மனித உயிரியல் மற்றும் இயற்பியல் இயங்கு விதிகளுக்குக் கட்டுப்படாத சில அதீத நம்பிக்கைகளில் பேய், பிசாசுகள் குறித்த நம்பிக்கையும் ஒன்று. பேய், பிசாசுகள் குறித்த நம்பிக்கைகளுக்கும் மதங்களுக்கும் இடையறாத தொடர்பு உண்டு. ஆன்மா, பாவம், புண்ணியம், மறுபிறப்பு முதலான கருத்தாக்கங்களின் பின்னணியிலேயே பேய் நம்பிக்கை உயிர் வாழ்கிறது. இறந்தவர்களின் ஆன்மாவே ஆவி. அகால மரணத்தால் உடலைவிட்டு நீங்கிய உயிரே ஆவியாக உலவுகிறது. இத்தகு ஆவிகளே பேய்கள். இறந்தவர்கள் தமது வாழுங்காலத்தில் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள ஆவியுருவில் அலைந்து திரிவர் என்ற நம்பிக்கை மக்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. பழங்குடி மனிதர்கள் தொடங்கி, நாட்டுப்புற, நகர்ப்புற மனிதர்கள் வரையிலும் இத்தகு பேய் நம்பிக்கைகள் நீட்சி பெற்றுள்ளன. உலகப் பழங்குடியின மக்களின் கதைகளில் வேர்விட்ட பேய் நம்பிக்கைகள் நாட்டுப்புறக் கதைகளில் கிளைத்து வளரத் தொடங்கி இன்றைய நகர்ப்புற மனிதர்களின் கதைகள் மற்றும் ஊடகங்களின் துணையோடு பெருமரமாய்த் தழைத்து நிற்கின்றன. எல்லாக் காலங்களிலும் இத்தகு பேய் நம்பிக்கைகளுக்கு நீர்பாய்ச்சி ஊட்டம் அளித்து வளர்த்த பெருமை மதங்களுக்கும் மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்கும் உண்டு.
பேய் குறித்த நம்பிக்கை தமிழ்ச் சமூகத்திலும் தொல்பழங்காலம் தொட்டே இருந்து வந்துள்ளது. தொடக்கத்தில் பேய்கள் அச்சத்திற்குரியனவாகக் கருதப்பட்டுப் பின்னர்க் காலப் போக்கில் வணக்கத்திற்குரியனவாக மாறிய நிலையை நமது பழந்தமிழ் இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. சங்க இலக்கியங்களில் பேய் என்பது பேஎய், கழுது, அணங்கு முதலான பெயர்களில் குறிப்பிடப்படுகின்றது. பொதுநிலையில் பேய் என்ற சொல் அச்சம் என்ற பொருளிலும் சங்க இலக்கியத்தின் பல இடங்களில் கையாளப்பட்டுள்ளது.
சங்க இலக்கியங்கள் பேய்களை இடுகாடு மற்றும் சுடுகாடுகளோடும் போர்க் களங்களோடும் தொடர்புபடுத்திப் பலபடப் பேசுகின்றன. சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பேய்கள் குறித்த பதிவுகளைப் பின்வருமாறு பட்டியலிடுவார் ஞா.ஸ்டீபன்:
பேய்கள் நள்ளிரவில் நடமாடும், கோட்டான்களும் பருந்துகளும் விரும்பும் இடுகாட்டில் உறைந்திருக்கும், இடுகாட்டில் நரிகளுடன் சுற்றித் திரியும், பிணம் தின்னும், போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களின் உடல்களைத் தேடிவரும், நிணவாடையை விரும்பும், பலி ஏற்கும், மனித உடலில் நுழையும், சடங்குகளுக்குக் கட்டுப்படும், வீரர்களின் இரத்தத்தைக் குடிக்கும் (பண்டைத் தமிழர் சமய மரபுகள், பக்.69-70).
பேய்கள் குறித்த மேற்குறித்த பதிவுகள் ஒருபுறமிருக்க பேய்மகள் என்றொரு தனிவகைப் பேய்கள் குறித்த செய்திகளும் சங்க இலக்கியத்தில் விரிவாகப் பேசப்படுகின்றன. இவ்வகைப் பேய்மகள் குறித்த பதிவுகளைத் தொகுத்துக்கூறும் அ.கா.பெருமாளின் குறிப்புகள் பின்வருமாறு:
பேய்மகள் கள்ளி மிகுந்த கூகைகள் உலாவும் பிணம் எரியும் சுடுகாட்டில் இருப்பாள். இவள் அகன்ற வாயையும் கொழுத்த சதையையும் கொழுப்பையும் தின்பதால் புலால் நாறும் தேகத்தை உடையவள். குருதியை அளைந்த நகத்தால் பிணத்தின் கண்ணைத் தோண்டுபவள். இவள் கழுத்தில் குடல் மாலையைப் போட்டிருப்பாள். சுடுகாட்டுப் பிணம் எரியாமல் அரைகுறையாக எழுந்து நடனமாடும்போது இவள் கூடவே ஆடுவாள். துணங்கைக் கூத்தும் குரவைக் கூத்தும் ஆடுவாள். போர் வந்தால் மகிழ்ச்சி யடைவாள் (புறம். 356, 359, 371, மது. 24-28) இவள் போர்க்களத்தில் பகைவரின் தலையால் செய்யப்பட்ட பானையில் குடலைப் பொங்குவாள். வன்னிமரம் செருகிய மண்டையோட்டு அகப்பையால் துழாவுவாள். உணவைக் கொற்றவைக்குப் படைப்பாள் (புறம். 7, 71, 82, 89, 372).
(பண்டைத் தமிழர் சமய மரபுகள், பக்.10-11)
சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பேய், பேய்மகள் என்ற இருவகைக் கருத்தாக்கங் களையும் நாம் வேறுபடுத்திப் பார்க்கமுடியும். பேய் தொடர்பான நம்பிக்கையைப் பழங்குடி இனவாழ்க்கைத் தொடர்ச்சியின் மிச்சசொச்ச மனப்பதிவுகள் என்று விளங்கிக்கொள்ள முடியும். ஆனால் பழந்தமிழ் இலக்கியங்கள் தொடங்கி, பக்தி இலக்கிய, இடைக்காலச் சிற்றிலக்கியங்கள் வரை நீளும் பேய்மகள் தொடர்பான நம்பிக்கை என்பது ஒருவகைப் புனைவியல் பாங்கிலானது. இவ்வகைப் புனைவியல் என்பது ஒருவகை கவிதை மரபாகப் புலவர்களால் ஆக்கிக் கொள்ளப்பட்டது. பேய்மகள் தொடர்பான இத்தகு புனைவுகளும், பேய்கள் தொடர்பான பழங்குடி இனவாழ்வின் மனப்பதிவுகளிலிருந்தே கட்டமைக்கப் பட்டுள்ளன. இதனைத் தொல்காப்பியக் கவிதையியல் கோட்பாட்டின் அடிப்படையில் விளக்கமுடியும். அதாவது,
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம் (தொல். : அகத். : 53)
என்ற கோட்பாட்டின் அடிப்படையில், பேய் நம்பிக்கை என்ற உலகியல் வழக்கும் பேய்மகள் தொடர்பான அதீதப் புனைவியலும் இணைந்ததாகப் புலவர்களால் படைத்துக்கொள்ளப் பட்டதோர் புலனெறி வழக்கே சங்க இலக்கியங்கள் தொடங்கிச் சிற்றிலக்கியங்கள் வரை நீளும் பேய்மகள் என்ற கருத்தாக்கம்.
மேற்சொன்ன பேய்மகள் என்ற கருத்தாக்கமும் புலனெறி மரபும் சங்க இலக்கியங்களில் தொடங்கி காரைக்கால் அம்மையாரின் மூத்த திருப்பதிகத்தில் கிளைத்துப் பரணி இலக்கியங்களில் உச்சத்தை அடைகின்றது. பரணி என்பதோர் சிற்றிலக்கிய வகையாக நீட்சிபெற்றுப் புதியதோர் இலக்கிய வகையாக வளர்ச்சி பெற்ற இப்புலனெறி வழக்கின் தொடர்ச்சியில் முத்தொள்ளாயிரமும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
II
இந்திய அரசின் செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனம் பட்டியலிட்டுள்ள நாற்பத்தொரு செம்மொழி இலக்கண இலக்கியங்களில் முத்தொள்ளாயிரமும் ஒன்று. சங்க இலக்கியங்களோடு ஒருங்குவைத்து எண்ணப்படும் தகுதிவாய்ந்தது இந்நூல். வெண்பா யாப்பில் இயற்றப்பட்ட இந்நூல் சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்களின் புகழ்பாடும் ஓர் அரிய புதையலாகும். மூவேந்தர்களைப் பாடினாலும் குறிப்பிட்ட எந்த மன்னனையும் பெயர்சுட்டிப் பாடாமல் வேந்தர்களின் பொதுப் பெயர்களாலேயே அவர்களைச் சிறப்பித்துப் பாடும் வகையில் இந்நூலை யாத்துள்ளார் இந்நூலாசிரியர். அகம், புறம் என்ற இருவகைப் பாடுபொருளாலும் வேந்தர்களைச் சிறப்பிக்கும் இந்நூலின் ஆசிரியர் யாரென்று அறிய இயலவில்லை. நூலும் காலவெள்ளத்தில் காணாமல் போய்விட்டது. ஆயினும் புறத்திரட்டு என்னும் நூலின்வழியாக 108 பாடல்கள் முத்தொள்ளாயிரச் செய்யுள்களாக இன்றைக்குக் கிடைக்கின்றன. முத்தொள்ளாயிரம் என்ற முழுநூல் மூவேந்தர்கள் ஒவ்வொருவர் மீதும் முந்நூறு முந்நூறு பாடல்களாக மொத்தம் தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட பேரிலக்கியமாகத் திகழ்ந்திருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் துணிபு.
முத்தொள்ளாயிர நூல் முழுமையும் வெண்பா யாப்பில் பாடப்பட்டிருப்பதனைக் கொண்டு இந்நூல் பதினெண் கீழ்க்கணக்குக் காலத்தை ஒட்டியோ அதன்பிறகோ பாடப்பட்டிருக்க வேண்டும் என்று கருத வாய்ப்புள்ளது. தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் தம் பொருளதிகாரப் புறத்திணையியல் உரையில் முத்தொள்ளாயிரச் செய்யுள் ஒன்றினை மேற்கோள் காட்டுகிறார். அவரது காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு என்பர். எனவே அவர் காலத்திற்கு முந்தைய நூல் முத்தொள்ளாயிரம் என்பது தெளிவாகின்றது.
‘முத்தொள்ளாயிரத்தின் காலம்’ என்ற கட்டுரையில் இந்நூலின் காலம் குறித்துத் தனிப்பட ஆய்வுசெய்யும் வையாபுரிப்பிள்ளை அவர்கள் பல்வேறு அகப்புறச் சான்றுகளின் வழியாகக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முத்தொள்ளாயிரம் இயற்றப்பட்டிருக்க வேண்டுமென நிறுவுகிறார். (இலக்கிய தீபம், பக். 183-88) இக்கருத்தே வலிமையுடையதென்றால், மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடும் இந்நூல் கி.பி. 6 முதல் 8 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் கோலோச்சிய பல்லவப் பேரரசு குறித்து ஏதும் குறிப்பிடாமல் மௌனம் சாதித்திருப்பதற்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட வேண்டியதாகிறது.
தமிழகத்தில் மூவேந்தர்களும் எந்தக் காலத்திலும் இணைந்து செயல்படாத ஒரு வரலாற்றுச் சூழலில் மூவேந்தர்களையும் ஒத்த நிலையில் இணைத்துப் பாட்டுடைத் தலைவர்களாக்கி ஓர் இலக்கியம் படைக்கவேண்டுமென்ற முத்தொள்ளாயிர ஆசிரியரின் பெருவிருப்பம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களில் எவரேனும் ஒருவரோ, பலரோ செல்வாக்கோடு ஆட்சிபுரியும் காலத்தில் இவ்வாறு மூவேந்தர்களையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்துப் புகழும் இபோன்றதோர் நூலை ஒரு புலவர் பாடியிருக்க வாய்ப்பே இல்லை. இதனைத் தமிழக வேந்தர்களின் சங்க்கால அரசியலை உணர்ந்தவர்கள் நன்கு அறிவர். ஆக, மூவேந்தர்களின் வீழ்ச்சிக்குப் பிறகே இந்நூல் பாடப்பட்டிருக்க வேண்டும். அதிலும் மூவேந்தர்களைக் குறிப்பிடும் போதும் அவர்களின் வெற்றியைக் குறிப்பிடும் போதும் பகைவர்கள் மற்றும் சிற்றரசர்களைக் குறிப்பிடும் போதும் வரலாற்று அடையாளங்கள் தோன்றாமல் பொதுப் பெயர்களையே கையாண்டு நூலை அமைத்துள்ள நூலாசிரியரின் திறத்தை நுணுகி நோக்கும் பொழுதுதான் முத்தொள்ளாயிரம் என்ற இப்பிரதியின் நுண்ணரசியலை விளங்கிக்கொள்ள முடியும். சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் உருவாக்கிக் காட்டிய ஒன்றுபட்ட தமிழகம் என்ற கனவுநிலைக் கருத்தாக்கத்தின் வழியில் தமிழ்நிலத்தின் மீது அயலவர் ஆதிக்கம் நிலைபெற்றதோர் நெருக்கடியான சூழலில் மீண்டும் தமிழர்களை, தமிழ்நிலத்தை ஆட்சிசெய்ய தமிழ்மன்னர்கள் எழுச்சிபெற வேண்டும் என்ற அரசியல் கனவோடும் இலட்சியத்தோடும் உருவாக்கப்பட்ட ஒரு பிரதியே முத்தொள்ளாயிரம். எனவே, மூவேந்தர்களும் வலிமையிழந்து அந்நியர் ஆட்சியில் கீழ்நிலை உற்ற காலத்தில் தமிழ் வேந்தர்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கோடும் தமிழின எழுச்சியின் அடையாளமாகவும் முத்தொள்ளாயிரம் பாடப்பட்டிருக்க வேண்டும் என ஊகிக்க முடிகின்றது.
புலவர் மரபில் ஒரு புதுவகை இலக்கியமாக உருவான இம்முத்தொள்ளாயிரம் உள்ளடக்கத்தில் சங்க இலக்கிய மரபினைப் பின்பற்றி அகம், புறம் என்ற இரண்டு பொருண்மையிலேயே அமைந்துள்ளது. இதில் புகழ், நாடு, நகர், திறை, எயில் கோடல், குதிரை மறம், யானை மறம், களம், பகைப்புலம் பழித்தல், வெற்றி என்ற பகுதியில் அமையும் பாடல்கள் அனைத்தும் புறம் சார்ந்த நிலையிலும், கைக்கிளை சார்ந்த பாடல்கள் அனைத்தும் அகம் சார்ந்த நிலையிலும் அமைந்துள்ளன. அதிலும் குறிப்பாக புறம் சார்ந்த உள்ளடக்கங்களைக் கொண்டு எழுதப்பட்ட முத்தொள்ளாயிரப் பாடல்கள் பெரிதும் பழைய புறப்பொருள் மரபினை ஒட்டியே அமைகின்றன. அகவல் வடிவத்திலிருந்து வெண்பாவிற்கு மாற்றம் பெற்ற யாப்பு வேறுபாடு தவிர்த்து பாடல்களின் வெளிப்பாட்டுத் தன்மை பதினெண் கீழ்க்கணக்கு மரபை ஒட்டியும் முத்தொள்ளாயிரத்திற்கே உரிய தனித்தன்மைகளோடும் வெளிப்படுகின்றது. மேலும் திணை, துறைப் பகுப்புகளின்றி உரிப்பொருளையே முதன்மைப்படுத்திப் புறப்பாடல்களை அமைத்துக் காட்டும் முத்தொள்ளாயிரத்தின் புதிய மரபு புறப்பாடல்களுக்குப் புதிய பரிமாணத்தைத் தருகின்றது.
புலவர் மரபு என்பது உள்ளது கூறலும் இல்லது படைத்தலுமாக இரண்டின் இணைவால் பொலிவுபெறும் ஒரு புலமை வெளிப்பாடு. உள்ளதே சிறக்கும் சங்க இலக்கியப் பாடல் மரபில் புலனெறி வழக்காகப் புனைவியல் பாங்கில் படைத்துக் கொள்ளப்பட்டனவே பேய், பேய்மகள் என்ற கருத்தாக்கங்கள். பழங்குடி இனவாழ்க்கைத் தொடர்ச்சியின் மிச்சசொச்ச மனப்பதிவுகளாகத் தொடரும் பேய் நம்பிக்கையும் பேய் நம்பிக்கை யிலிருந்து புனைவியல் பாங்கில் புலவர் மரபால் உருவாக்கப்பட்ட பேய்மகள் குறித்த புனைவுகளும் சங்க இலக்கியங்களைப் போலவே முத்தொள்ளாயிரத்திலும் தொடர்கின்றன.
முத்தொள்ளாயிரம் பேய், பேய்மகள் குறித்து ஐந்து பாடல்களில் பேசுகின்றது. சோழ மன்ன்னின் போர்க்களக் காட்சிகளை விவரிக்கும் பாடல்கள் மூன்றும் (பா.எண்: 36, 37, 38) பாண்டிய மன்னன் போரிட்டழித்த பகைநாட்டின் அவலம் கூறும் பாடல்கள் இரண்டும் (பா.எண்: 88, 89) பேய், பேய்மகள் குறித்து வருணிக்கின்றன.
பாற்றினம் ஆர்ப்பப் பருந்து வழிப்படர
நாற்றிசையும் ஓடி நரிகதிப்ப – ஆற்ற
அலங்கலம் பேய்மகளிர் ஆட முத்: 36
உடைதலையும் மூளையும் ஊன்தடியும் என்பும்
குடருங் கொழுங்குருதி யீர்ப்ப – மிடைபேய்
பெருநடஞ்செய் பெற்றித்தே முத்: 37
முடித்தலை வெள்ளோட்டு மூளைநெய் யாகத்
தடித்த குடர்திரியா மாட்டி – எடுத்தெடுத்துப்
பேஎய் விளக்கயரும் முத். 38
ஓகை உயர்மாடத் துள்ளிருந்து – கூகை
படுபேய்க்குப் பாட்டயரும் பண்பிற்றே முத்.88
ஆன்போய் அரிவையர் போய் ஆடவர்போய் ஆயிற்றே
ஈன்பேய் உறையும் இடம். முத். 89
மேற்சுட்டிய ஐந்து பாடல்களிலும் இடம்பெற்றுள்ள பேய் தொடர்பான செய்திகளைப் பின்வருமாறு பட்டியலிடலாம்.
- பேய்மகள் போர்க்களத்தில் இறந்தவர்களின் குடலை எடுத்து மாலையாக அணிந்து கொண்டு நடமாடுவாள்.
- இரத்த வெள்ளத்தில் நிணமும், தசையும் எலும்பும் மிதந்துவரும் போர்க்களத்தில் பேய்க் கூட்டங்கள் மகிழ்ச்சியினால் கூத்தாடும்.
- மண்டையோட்டை அகலாகவும் மூளையை நெய்யாகவும் குடலைத் திரியாகவும் கொண்டு பேய்கள் விளக்கெரிக்கும்.
- போரில் அழிக்கப்பட்ட மாடத்தின் உச்சியிலிருந்து கூகை தாலாட்டு பாட அழிந்த நகரத்தில் பேய்கள் உறங்கும்.
- மன்னனின் கோபத்திற்குப் பகைவர் நகரம் விலங்குகள், மனிதர்கள் நீங்கிவிட தாய்ப்பேய் ஈன்ற இளம்பேய்கள் தூங்கும் இடமாகும்.
மேற்சுட்டிய பேய் தொடர்பான பாடல்களிலிருந்து கிடைக்கும் தரவுகளை இவ்வாறு வரிசைப்படுத்தலாம்.
- பேய், பேய்மகள் போர்க்களத்தில் வசிக்கும்.
- பேயும் பேய்மகளும் போர்க்களத்தில் பிணங்களின் பெருக்கம் கண்டு மகிழ்ந்து கூத்தாடும்.
- பேய்மகள் பிணத்தின் குடலை மாலையாக அணிந்துகொள்வாள்
- பேய்கள் மண்டையோட்டை அகலாகக் கொண்டு: விளக்கெரிக்கும்.
- பிணத்தின் மூளையை நெய்யாகவும், குடலைத் திரியாகவும் பேய்கள் பயன்படுத்தும்.
- போரால் அழிந்த நகரங்களில் பேய்கள் உறங்கும்.
- பேய்களில் தாய்ப்பேய் குட்டிப்பேய்கள் உண்டு.
முத்தொள்ளாயிரம் பதிவுசெய்யும் பேய் தொடர்பான தகவல்கள் பெரும்பாலும் சங்க இலக்கியங்கள் பதிவுசெய்யும் தகவல்களோடு ஒத்துப் போகின்றன. சுடுகாட்டோடும், போர்க்களத்தோடும், பிணங்களோடும் தொடர்படுத்திப் பேயையும் பேய்மகளிரையும் பாடுவது சங்க இலக்கியப் புனைவியல் மரபு. இத்தகைய பேய்மகள் தொடர்பான புனைவுகளில் முத்தொள்ளாயிரம் புதிதாக இணைக்கும் புனைவு தாய்ப்பேய் குட்டிப்பேய் தொடர்பான செய்தியே. ஈன்பேய் உறையும் இடம் என்று போரால் அழிந்த நகரத்தைக் குறிப்பிடும் முத்தொள்ளாயிரம் பேய்மகள் தொடர்பான புதிய புனைவைத் தொடங்கிவைக்க, பின்னால் வந்த காரைக்கால் அம்மையார் (கி.பி.ஆறாம் நூற்றாண்டு) அப்புனைவை விரிவுபடுத்தி மிகப்பெரிய தாய்சேய் உறவுச் சித்திரத்தையே படைத்து விடுகின்றார். அம்மையாரின் பாடல் பின்வருமாறு,
விழுது நிணத்தை விழுங்கி யிட்டு
வெண்தலை மாலை விரவப் பூட்டிக்
கழுதுதன் பிள்ளையைக் காளி யென்று
பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப்
புழுதி துடைத்து முலைகொ டுத்துப்
போயின தாயை வரவு காணா
தழுதுறங் கும்புறங் காட்டில் ஆடும்
அப்ப னிடம்திரு ஆலங் காடே (கா.அம். பதிகம் 1-5)
இப்பாட்டில் அம்மையார் விவரிக்கும் பேய்மகளாகிய பேய் சுடுகாட்டில் வாழ்கின்றது, அங்குக் குழந்தையைப் பெற்றுக் கொள்கின்றது. அதற்குப் பெயரும் இடுகின்றது. மனிதர்களைப் போலவே தாய்ப் பாசத்தோடு குழந்தைக்குத் தாய்ப்பாலும் நிணமும் ஊட்டிப் பேணி வளர்க்கின்றது. குழந்தையின் முகத்தில் உள்ள புழுதியைத் துடைக்கின்றது. அப்பேய்க் குழந்தை தூங்கும்போது சிறிது நேரம் தாய்ப் பேய் வெளியில் செல்கிறது.
முத்தொள்ளாயிரம் காரைக்கால் அம்மையார் காலம் என்று நம்பப்படும் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தைய படைப்பாக இருக்கலாம் என்பதற்குப் பேய்மகளாகிய பேயின் தாய் சேய் உறவு குறித்த புனைவு ஓர் அகச்சான்றாக அமையும் என நம்பலாம்.
முடித்தலை வெள்ளோட்டு மூளைநெய் யாகத்
தடித்த குடர்திரியா மாட்டி – எடுத்தெடுத்துப்
பேஎய் விளக்கயரும்
என்ற முத்தொள்ளாயிரப் பாடல் பரணி நூல்களில் இடம்பெறும் பேய்களின் கூழ்அடும் விவரிப்புகளுக்கு வழிசமைத்துக் கொடுத்தன என்று கருதவும் இடமுண்டு.
பேய், பேய்மகள் குறித்த புனைவுகளைத் தமிழ்ப் புலனெறி வழக்காக நிலைபெறச் செய்ததில் முத்தொள்ளாயிரத்திற்கும் பங்குண்டு என்பதனைக் கிடைக்கும் பேய் பற்றிய ஐந்து பாடல்களின் வழியாக உணரமுடிகிறது. ஒருகால் இந்நூல் முழுமையும் (தொள்ளாயிரம் பாடலும்) கிடைத்திருக்குமே யானால் பிற்காலப் பரணி நூல்களுக்கான முழு அடையாளத்தையும் இந்நூலிலேயே நாம் இனம் கண்டுவிட முடியும் என நம்பலாம்.
துணைநின்ற நூல்கள்:
1. கதிர் முருகு, முனைவர்
முத்தொள்ளாயிரம் மூலமும் உரையும்,
சாரதா பதிப்பகம்,
சென்னை-14,
2007
2. சிதம்பரம் மயில்வாகனன் (தொ.ஆ.),
காரைக்கால் அம்மையார்,
மெய்யப்பன் பதிப்பகம்,
சிதம்பரம்,
2003
3. பக்தவச்சல பாரதி (பதி.ஆ),
பண்டைத்தமிழர் சமயமரபுகள்,
புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்,
புதுச்சேரி,
2011
- முனைவர் நா.இளங்கோ, தமிழ்த்துறைத் தலைவர், தாகூர் கலைக் கல்லூரி, புதுச்சேரி - 605008