கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

1972 அக்டோபர் மாதம், எம்.ஜி.ஆர்., தி.மு.க.விலிருந்து பிரிந்து தனிக் கட்சி தொடங்கினார். அதற்கு முன்னால், தந்தை பெரியாரைச் சந்தித்தார். “வேண்டாம், நீங்கள் தி.மு.க. வை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டாம். தொடர்ந்து கட்சியிலேயே பணியாற்றுங்கள்” என்று அவரைப் பெரியார் கேட்டுக்கொண்டார்.  அந்த நேரத்தில், எம்.ஜி.ஆரின் முடிவுக்கு ஆதரவாக, வலிமையாக ஒரு குரல் கேட்டது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் ராஜாஜி. “எம்.ஜி.ஆர் தனியாகப் போராடுகிறார். அவரைக் கைவிட்டு விடாதீர்கள். அர்ஜூணனைப் போல் வெற்றி வீரர் ஆக்குங்கள்” என்றார் ராஜாஜி.

periyar and rajaji

தி.மு.க.வும், எம்.ஜி.ஆரும் பிரிந்துவிடக் கூடாது என்று கருதினார் பெரியார். எம்.ஜி.ஆர் பிரிந்து போகட்டும் என்று கருதினார் ராஜாஜி. இரண்டும் வெறுமனே இரண்டு கருத்துகள் மட்டுமில்லை. அவற்றுக்குள், தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் அடங்கியிருந்தது.

கடவுளும் விதியும்

பெரிய விபத்துகள் நடைபெறும்போது அதில் பலர் இறந்து விடுவதையும், அதிலிருந்தும் சிலர் தப்பிப் பிழைத்து விடுவதையும் பார்க்கிறோம். பிழைத்துக் கொள்கிறவர்கள், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், உடனடியாகச் சொல்வது, “கடவுள் கருணையால் நாங்கள் பிழைத்துக் கொண்டோம்“ என்பதுதான். உங்களை எல்லாம் கடவுள்தான் காப்பாற்றினார் என்றால், விபத்தில் இறந்து போனார்களே அவர்களை எல்லாம் யார் கொன்றார்கள் என்ற கேள்விக்கும், சற்றும் தயங்காமல், “இல்லையில்லை, அவர்களின் விதி முடிந்து பொய் விட்டது, அதனால் இறந்து போய்  விட்டார்கள்”  என்று விடை சொல்வார்கள்.

பிழைத்துக் கொண்டால் அது கடவுளின் கருணை, இறந்து போய் விட்டால் அது விதியின் விளையாட்டு. கடவுள் இவர்களைக் காப்பாற்றுகிறாரோ இல்லையோ, கடவுளை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று மக்கள் துடியாய்த் துடிக்கிறார்கள்!

முதல் அபின் யுத்தம்

19ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், சீனப் பேரரசைப் பிரித்திஷ் சாம்ராஜ்யத்தால் கூட நெருங்க முடியவில்லை.ஆனால் இந்தியாவில் வணிகம் செய்துவந்த பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியார், வங்கத்தின் பருத்திக் காடுகளில் கஞ்சா செடி வளர்த்து, அதனைச் சீனாவில் கொண்டுபோய் விற்பனை செய்தனர். ஒரே ஆண்டில், 1400 டன் கஞ்சாவை அவர்களால், சீனத்தில்  விற்பனை செய்ய முடிந்தது அதற்குப்  பிறகு, சீனப் பேரரசே குலைந்து போயிற்று. 1839-&42 ஆண்டுக் காலகட்டத்தை, முதல் அபின் யுத்தம் என்று வரலாறு குறிக்கிறது.

1850களின் இறுதியில் இரண்டாவது அபின் யுத்தம் நடைபெற்றது.அப்போதுதான் ஐந்து துறைமுகங்களைச் சீனா, இங்கிலாந்துக்குத் திறந்துவிட்டது. அவற்றுள் ஒன்றுதான் ஹாங்காங். அதனையும் சீனா தாரை வார்த்துக் கொடுத்தது. அந்தத் தீவை 99 ஆண்டுகள் இங்கிலாந்து நாடு குத்தகையில் வைத்திருந்தது, 1997இல்தான்  அது விடுவிக்கப்பட்டது.

எந்த தேசம் போதைக்கு அடிமைப்படுகிறதோ, அந்த தேசம் அந்நியருக்கும் அடிமைப்படும் என்பதையே ஹாங்காங் நமக்கு உணர்த்துகிறது.