யாரும் ஒரே மாதிரி விளம்பரஞ் செய்து கொண்டிருக்கக் கூடாது. அடிக்கடி விளம்பர முறையை மாற்றிக் கொண்டேயிருக்க வேண்டும்.
சுயவிளம்பரத்துக்கும் இந்தத் தத்துவம் முக்கியம்) பத்திரிகை விளம்பரத்தில் கூடப் பார்த்திருக்கலாமே! திடீரென்று ஒரு விளம்பரம் தலை கீழாக வரும்! அதை நிச்சயம் எல்லோரும் படித்துப் பார்ப்பார்கள்! (மனிதன் தலைகீழாக நின்றால் வேடிக்கை பார்க்கிறார்களே, அதுபோல!) விளம்பரத்துக்காக வென்று ஒரு இடத்தை ஒதுக்கிவைத்து, அதை முதலில் சில நாட்களுக்குக் காலியாகவே விட்டுவைப்பார்கள்.
சிலசமயம் வெறும் கேள்விக் குறிகள் மட்டும் போட்டு வைப்பார்கள்! அதே இடத்தை வாசகர்கள் கூர்ந்து கவனித்துவந்து, பிறகு அதில்வரும் அசல் விளம்பரத்தைப் படிப்பார்கள்! இது விநோத விளம்பர வகையைச் சார்ந்தது!
ஆச்சாரியார் 1938 -ல் முதலமைச்சராயிருந்தபோது, படம் எடுக்கிற வரைக் கூப்பிட்டு வீட்டில் வைத்துக் கொண்டு வேட்டி துவைத்தார்! அடுத்தநாள் மெயில் பத்திரிகையில் ஆச்சாரியார் வேட்டி துவைக்கும் காட்சி வந்தது! பல காங்கிரஸ் பக்தர்கள் அதைக் கத்தரித்து வைத்துக் கொண்டார்கள்! சலவைத் தொழிலாளி கூட தினம் நூற்றுக்கணக்கான வேட்டிகளைத் துவைத்துக் கொண்டுதானிருக்கிறார்.
அவர் படம் பத்திரிகையிலாவருகிறது? நேரு பூணூல் சகிதமாக தன் தகப்பனார் சாம்பலை ஆற்றில் கரைத்தார்! உடனே பத்திரிகையில் படம் வந்தது! நாட்டில் எத்தனையோ சவுண்டிகள் பூணூலுடன் பிணச் சாம்பலைக் கரைத்துக் கொண்டுதானிருக்கின்றன! ஆனால் அவைகள் படமெல்லாம் எப்படி வரும்?
மனுஷன் காலில் மனுஷன் விழுவது அநாகரீகந்தான்! எந்த நாட்டிலும் இல்லாததுதான்! என்றாலும் சங்கராச்சாரி - பண்டார சந்நிதிகள் - கால்களில் தினம் எத்தனையோ பரமபக்தர்கள் விழுந்து கொண்டுதானிருக்கிறார்கள்! அவர்களை யார் படம் பிடிக்கப் போகிறார்கள்? ஒருவருமில்லை.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் ஆச்சாரியார் திருவடிகளில் தூத்துக்குடி துரைசாமி நாடார் என்பவர் விழுந்து, ஆச்சாரியாரின் திருச் செருப்புகளைத் தமது திருக் கண்களில் ஒத்திக் கொள்கிற மாதிரி “ஹிந்துஸ்தான்” மலரில் படம் வந்தது!
சென்னை கவர்னர் பவநகர் மகாராஜா சிறிது தூரம் ஏரைப் பிடித்து உழுது உணவு உற்பத்தியைத் துவக்கி வைத்தாராம்! பவநகர் மகா ராணி விதையைத் தெளித்தாராம்! நேற்றைய பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது. விரைவில் படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கிறேன்!
எத்தனையோ வயல்களில் எத்தனையோ குப்பன்கள் ஏன் உழுகிறார்கள்! எத்தனையோ சுப்பிகள் விதை தெளிக்கிறார்கள்! அவர்கள் படத்தை எந்த நாட்டிலாவது (ரஷ்யா தவிர) பத்திரிகைகளில் வெளியிடுகிறார்களா? பவநகர் தம்பதிகள் வருங்கால வாழ்க்கையை எதிர் பார்த்து இப்போதே முன் கூட்டிப் பழகிக் கொள்வார்களே யானால் பாராட்டக் கூடியதுதான்! வெறும் விளம்பரத்துக்காக என்றால், இதெல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான்!
சாதாரணமாக ஒரு தொழிலைச் செய்யாத பேர்வழி அதைச் செய்வதுதான் விளம்பர விநோதம்!
ராஜா முத்தய்யா செட்டியார் சைகிளில் போனால், அது ஒரு வேடிக்கை!
மந்திரி பக்தவச்சலனார் மரத்தில் ஏறி மாங்காய் பறித்தால் அது ஒரு விநோதம்!
பட்டேல் பந்தாடினால் அது ஒரு அதிசயம்!
விஜயலட்சுமி பண்டிட் பரத நாட்டியமாடினால் அது ஆச்சரியம்!
ராமசாமி முதலியார் ராட்டினத்தில் சுற்றினால் (கை ராட்டினம் அல்ல; ஆனால் அதுவும் பொருந்தும்!) அது ஒரு விநோதம்!
இவ்வளவு ஏன் யாராவது ஒரு அய்யர் பூணூல் மார்புடன் தெருவில் விறகு பிளந்து கொண்டிருந்தால் அதைப் பார்ப்பதற்காக எவ்வளவு கூட்டம் கூடும் தெரியுமா?
சங்கராச்சாரியார் கான்ஸ்டபின் வேலைக்குப் போய்விட்டார் என்றால் எவ்வளவுபேர் அவரைப் படம் எடுப்பார்கள்?
மந்திரிகளும், தலைவர்களும், பணக்காரர்களும் எத்தனையோ தடவை கட்டடத்துக்குக் கல் நாட்டுகிறார்கள். கையில் கொல்லர் கரண்டியைக் காண்கிறோம்.
அவர்களே நிரந்தரமாக அதே வேலை செய்வதென்றால் அவர்கள் படம் பத்திரிகையில் வராதே! இது ஏன்?
ஏர் உழுதல், வண்டி ஓட்டுதல், வேட்டி துவைத்தல், செடி நடுதல், கல் நாட்டுதல்- இவைகளெல்லாம் வருவது போல் மற்றத் தொழில்களும் ஏன் படமாக வரக்கூடாது?
கல்வி மந்திரி சுகாதார மந்திரிக்கு க்ஷவரம் செய்கிறார்!
நிதி மந்திரி ரிக்ஷா இழுக்கிறார்!
உணவு மந்திரி தவுல் வாசிக்கிறார்!
அட்வைசர் மந்திரி ஒத்து ஊதுகிறார்!
காமராஜர் கூடை பின்னுகிறார்!
அமிர்தகவுரி அரிசிமா அரைக்கிறார்!
சந்தானமய்யங்கார் சமையல் செய்கிறார்!-
-இவைகளைப்போல் செய்தி வரவேண்டும்!
- குத்தூசி குருசாமி (7-8-50)
நன்றி: வாலாசா வல்லவன்