பழந்தமிழ் மன்னன் பூதப்பாண்டியன் இறந்துபட, அவன் மனைவியும் அரசியுமான பெருங்கோப்பெண்டு தீப்பாய முயல்கிறாள். சான்றோர்கள் அவளைத் தடுத்து நிறுத்த முயல்கின்றனர். அப்போது அந்த அரசி, உடன்கட்டை ஏறாமல் என்னைத் தடுப்பதன் மூலம், கைம்மைத் துன்பத்திற்கு என்னை ஆளாக்குகின்றீர்களா? என்று வினவுகிறாள்.

"துன்புறு வனநோற்றுத் துயருறு மகளிரைப்போல்

அன்பனை இழந்தேன்யான் அல்லல் கொண்டழிவவோ"

என்று அன்று அந்த அரசி கேட்டதைத்தான் பெரியார் இன்று நம் காலத்தில் கேட்டுள்ளார். தீயில் விழுந்து இறந்து போவதை விடக் கைம்மை நோன்பு கொடியது என்றால், பெண்களுக்குக் காலம் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமையை என்னென்பது!

கைம்மை நோன்பு பற்றி மட்டுமல்லாது, காதல், கற்பு, குழந்தை பெறுதல் உள்ளிட்ட எல்லா நிலைகளிலும், பெண்களின் பக்கம் நின்றே பெரியார் சிந்தித்துள்ளார். 'தீண்டாமை இழிவு நீங்க இஸ்லாமே இன்மருந்து என்று சொன்ன பெரியார், அந்த மதத்தில் உள்ள பர்தா, கோஷா போன்ற முறைகளை முற்றிலுமாக மறுத்துள்ளார். ஆண் - பெண் என்னும் இரு பிறப்பிற்கும் பொதுவான, சுயேட்சையான கற்பு முறை வேண்டும் என்கிறார்.

திருமணத்துக்குப் பிறகும் கூட ஒரு பெண்ணுக்கு காதல் வரலாம் என்று சொல்லும் பெரியார், கற்புக்காகப் புருஷனின் மிருகச் செயலை எல்லாம் பொறுத்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை என்று சமூகத்தின் பொதுப்புத்திக்கு எதிரான கருத்தை முன்மொழிகிறார். "கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு, காதலும், அன்பும் இல்லாதவனோடு இருக்க வேண்டும் என்ற சமூகக் கொடுமையும் ஒழிய வேண்டும்" என்று தனக்குச் சரியென்று பட்ட நியாயத்தை எவருக்கும் அஞ்சாமல் எடுத்துரைக்கின்றார்.

இன்னும் ஒரு படி மேலே போய், பெருந்துறை அருகில் ஒரு கிராமத்தில் 26.01.1931 அன்று பேசும்போது, "ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால், பெண் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக்கொள்ள முற்பட வேண்டும்" என்று மிகத் துணிச்சலாகக் கூறுகின்றார். அப்போதே இக்கூற்றுக்கு எதிர்ப்பு எழுந்தது. பெரியார் ஒழுக்கக் கேட்டிற்கு வழி வகுக்கிறார் என்றார்கள். அதற்கெல்லாம் பெரியார் அசைந்து கொடுக்கவில்லை. அப்படி ஒழுக்கம் பற்றிக் கவலைப்படும் பெரிய மனிதர்கள் முதலில் ஆண்களை ஒழுக்கமாக இருக்கச் சொல்லுங்கள் என்றார். இரண்டு பேரும் அப்படி நெறி தவறிப் போக வேண்டும் என்பது அவருடைய நோக்கமில்லை. "அப்போதுதான் நிலைமை சரிப்பட்டுப் போகும். உடனே உண்மையான சமரசம் தோன்றும்" என்று தன் நோக்கைத் தெளிவாக அவர் வெளிப்படுத்தினார்.

எப்போதுமே எதனையும் "ஓங்கிச் சொல்லுதல்" என்பது பெரியாரின் இயல்பு. அப்படிச் சொன்னால்தான், ஓரளவேனும் ஒத்து வருவார்கள் என்று அவர் கருதினார். உலகமே சிந்தித்துப் பார்க்காத காலத்தில், கர்ப்பத்தடை பற்றி பேசியவரும் பெரியார்தான்.

கர்ப்பத்தடை குறித்து 1930 ஏப்ரலில் குடிஅரசு இதழில் தலையங்கம் எழுதியுள்ளார். இந்திய அரசே, 1952இல் தான், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கொண்டு வந்தது. அதற்கான மருத்துவ முறைகள் கூடத் தோன்றியிராத காலத்தில், பெரியார் கருத்தடை குறித்துப் பேசியது பெரு வியப்பு என்றே கூற வேண்டும். அவர் கருத்தை ஏற்றுத்தான், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்,

"காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக்

கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன குற்றம்?"

என்று கேட்டார். அதிலும் மிகச் சிறப்பான செய்தி எதுவெனில், அதற்குப் பெரியார் சொன்ன காரணம்தான். "பெண்களின் உடல் நலத்தை உத்தேசித்தும், பிள்ளைகளின் நன்மையை உத்தேசித்தும், நாட்டின் தரித்திர திசையை உத்தேசித்தும்,குடும்பச் சொத்து குறையாமல் இருக்க வேண்டும் என்பதை உத்தேசித்தும் கர்ப்பத்தடை அவசியம் என்று (மற்றவர்கள்) கூறுகின்றார்கள்" என்று கூறும் பெரியார், "பெண்கள் விடுதலை அடையவும், சுயேட்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கூறுகிறோம்" என்று முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் தன் கருத்தை வெளிப்படுத்துகின்றார்.

பெண்கள் மறக்கலாமா பெரியாரை?

Pin It