“பெண் விடுதலை” என்ற தலைப்பில், 336 கட்டுரைகளைத் தொகுத்து, 784 பக்கங்களைக் கொண்ட சிறப்பான தொகுப்பு நூலாகத் திராவிடர் கழகத் தலைவர், “கி. வீரமணி” அவர்களின் சிறப்பான முன்னுரையோடு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. பெரியாரியவாதிகளும், பொதுமக்களும் அறிந்திடாத பெரியாரின் கருத்துக்களை மட்டும் நூல் அறிமுகமாக எழுதலாம் என்ற எண்ணம் எழுந்தது. நீங்கள் இதுவரை அறிந்திராத, ஒரு பெண்ணாக இந்நாட்டில் பிறந்த என்னை பண்படுத்திய இந்நூலின் கருத்துக்களை இக்கட்டுரையில் காணலாம்.
பெரியார் யார்?
கடவுள், மதம், ஜாதி, சாஸ்திரம், சடங்கு, கலாச்சாரம், பண்பாடு, பழக்கம், வழக்கம் என்ற எந்த கட்டிற்குள்ளும் அடங்காத சுதந்திர சிந்தனையாளர் பெரியார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதனால் தான் தன்னைப் பற்றிக் கூறும் போது கூட “எனக்கு நாட்டுப்பற்று, மொழிப்பற்று போன்ற எந்தப் பற்றும் இல்லை; மனிதப் பற்று மட்டுமே உண்டு” என்று கூறியதோடு, நாட்டுப்பற்று, மொழிப்பற்று போன்ற மற்றப் பற்றுடையவர்கள் பகுத்தறிவுவாதிகளாக இருக்க முடியாது என்றும் கூறினார்.
பெண் கல்வி, பெண்களுக்குப் பணிகளில் 50% இட ஒதுக்கீடு, விதவைத் தன்மை ஒழிப்பு, உடன்கட்டை ஏற்றுதல் எதிர்ப்பு, மறுமண உரிமை, சொத்துரிமை, குழந்தைப் பெறாமல் இருக்க உரிமை என பல பெண் உரிமைக் கருத்துக்களைப் பேசியதோடு நிற்காமல், பெண்கள் முழு விடுதலை பெற்று ஆண்களைப் போல மனிதர்களாக வாழ்வதற்குத் தேவையான அனைத்தையுமே சிந்தித்துள்ளார் பெரியார் என்பது தான் பெரியாரியப் பெண்ணியத்தின் தனித்துவம். ஆணுக்குள்ள அனைத்து உரிமைகளும், சுதந்திரமும் பெண்களுக்கும் வேண்டும் என்ற பெரியார், எந்த மதமும், சாஸ்திரமும், பழக்கமும், வழக்கமும் பெண்களை மனிதர்களென்றே கருதவில்லை என்று பல மேடைகளில் வருத்தப்படுகிறார். தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, திருக்குறள், ராமாயணம் போன்றவற்றைப் பேசும் தமிழ்ப்புலவர்கள் பழைய குப்பைகளை கிளறுபவர்கள் தான் என்றும், பெண் விடுதலையில் அக்கறை இல்லாதவர்கள் தான் இவ்வனைத்தையும் ஆதரிப்பார்கள் என்றும் பேசியுள்ளார்.
காதல் & கல்யாணம்
“காதல் ஒருவர் மீது மட்டுமே ஏற்படும் உன்னதமான உணர்வு; காதல் புனிதமானது; ஒரு முறை மட்டுமே வாழ்வில் ஏற்படும்; அது தான் உண்மைக் காதல்” போன்ற அபத்தமான கருத்துக்களை இன்று வரை தமிழ்த் திரைப்படங்கள் பரப்பிக் கொண்டே இருக்கின்றன.
ஆனால் பெரியார் காதல் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் எல்லா புனிதங்களையும் சுக்குநூறாக உடைத்ததோடு காதல் என்பதற்கும் ஆசை, தேவை தவிர வேறு பொருள் இல்லை என்கிறார். உண்மைக் காதல் என்ற தத்தவத்தையும் கிழித்தெறிகிறார்.
“காதலில் இரண்டு விதமாம். ஒன்று உண்மைக் காதலாம்! மற்றொன்று வெறும் காதலாம்! இல்லாத வஸ்துவிற்கு 2 பெயர்கள் இருந்தால் என்ன? 100 பெயர்கள் இருந்தால் என்ன? (1943)” என்றும் “காதலும் கடவுளும் ஒன்று என்றால் - காதலும் பொய், கடவுளும் பொய் என்றுதான் அர்த்தம் (1947)”. என்றும் பேசி, “இது தான் காதல்” என்று நாம் நினைத்து romanticize செய்யும் காதலைப் பகடி செய்கிறார்.
பொதுவாகத் திருமணம் என்பது 3 காரணங்களுக்காகத் தான் என்கிறார்.
1. ஜாதியை நிலை நிறுத்த
2. பெண்களை ஆண்களுக்கு நிரந்தர நிபந்தனையற்ற அடிமை ஆக்க
3. மக்களைக் காட்டுமிராண்டியாக்கி மூடநம்பிக்கையில் நிலைத்திருக்கச் செய்ய
இவற்றை மாற்றவே, கடவுள், ஜாதி, மதம், சடங்குகள், ஜோசியம், நேரம், தாலி, பார்ப்பான், வீண்செலவு என அனைத்தையும் புறக்கணித்து ஆணும் பெண்ணும் சம உரிமை உடையவர்கள் என்ற உறுதிமொழியை ஏற்று வாழ்க்கையில் செய்து கொள்ளும் ஒப்பந்தமாக சுயமரியாதைத் திருமணம் என்ற திருமண முறையை அறிமுகப்படுத்தினார். ஏராளமான சுயமரியாதைத் திருமணங்களை நடத்தியும் வைத்திருக்கிறார். தான் நடத்தி வைக்கும் திருமணங்கள் ஜாதி மறுப்பு திருமணமாக இல்லாமல் இருந்தாலோ, தாலி கட்டி நடந்தாலோ, மூட நம்பிக்கை அடையாளமான குத்துவிளக்கு, அம்மிக்கல் போன்றன மேடையில் இருந்தாலோ, பெண் ஆடம்பரமாக நகைகளும் அலங்காரமும் செய்திருந்தாலோ மேடையிலேயே விமர்சிக்கும் கொள்கை நேர்மையாளராகத் திகழ்கிறார். நகைகளுக்கும், அலங்காரத்திற்கும் உச்ச வரம்பு கொண்டு வர வேண்டும் என்றார். அப்போது தான் பெண்கள் அவற்றை விட்டொழிப்பார்கள் என்கிறார். சேலையைப் புறக்கணிக்க வேண்டும் என்றதோடு, ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரியான உடைகளை அணிய வேண்டும் என்கிறார்.
குழந்தைத் திருமண முறையை எதிர்த்தது; விதவைகள் துயருறும் நிலையைக் கண்டு அப்பெண்களுக்கு மறுமண உரிமை இருக்க வேண்டும் என்று போராடியது; சுயமரியாதைத் திருமண முறையை தோற்றுவித்தது; பெண்களுக்கு விவாகரத்து உரிமை வேண்டும் என்று கூறியது; என இவற்றோடு தன் சிந்தனையை நிறுத்திக் கொள்ளவில்லை. தன் சிந்தனையை எப்போதும் ஒரு எல்லைக்குள் பெரியார் வைத்துக் கொள்ளவே இல்லை என்பது பெரியாரை வாசித்த அனைவருக்கும் தெரியும்.
அது போலவே, 1960 களில், தான் அறிமுகப்படுத்திய சுயமரியாதைத் திருமண முறையை, சுயமரியாதைத் திருமண மேடையிலேயே தேவை இல்லை என்று, தான் ஏற்படுத்திய தத்துவதையும் உடைக்க விரும்புகிறார். இன்னும் சில ஆண்டுகள் உயிரோடிருந்தால், அடிமை முறையைக் கிரிமினல் குற்றம் ஆக்கியது போல பெண்களை அடிமைப்படுத்தும் திருமணத் தத்துவத்தையும் கிரிமினல் குற்றம் ஆக்கப் பாடுபடுவேன் என்கிறார். ஆணுக்குப் பெண்ணை பலி கொடுக்கும் நிகழ்வே திருமணம். ஜாதி இழிவை விட பன்மடங்கு கொடுமையானது கணவன் மனைவி உறவு என்கிறார். திருமணம் என்ற அமைப்பு ஆண்களுக்கு லாபகரமாகத் தெரிந்தாலும், அவர்களின் சுதந்திரத்திற்கும் திருமணம் கேடானது என்கிறார்.
“இந்தக் கல்யாணமே கூடாது. இருந்தாலும் தொலைந்து போகட்டும். 5 வருடங்களுக்குத் தான். அதன் பிறகு ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்” என்று அமெரிக்கப் பெண் சாட்டின் பேசியதை எடுத்துக்காட்டியதோடு தானும் அக்கருத்தை வரவேற்பதாக 1967 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணத்தில் மணமக்களுக்கு எடுத்துரைக்கிறார்.
“திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்” என்ற கருத்தையே அனைவரும் பின்பற்றுக்கின்ற ஓர் பிற்போக்கான சமூகத்தில் விவாகரத்து உரிமை பெண்களுக்கு வேண்டும் என்று முதலில் போர்க்குரல் எழுப்பினார். ஆனால் உலக அளவில் இன்றும் மிகக் குறைவான விவாகரத்துக்கள் தான் இந்தியாவில் நடக்கின்றன. 1940 ஆம் ஆண்டு தான் நடத்தி வைத்த திருமணத்தில் “பிரியவே கூடாது என்கின்ற கருத்து தான் உலகத்தில் ஆண் பெண் இன்ப வாழ்க்கையைப் பாழப்படுத்தி வெறும் நிர்ப்பந்த சடங்கு வாழ்க்கையில் கொண்டு வந்து விட்டது. என்னைப் பொறுத்த வரையில் காதல் என்பதே பொருளற்ற வார்த்தை என்பேன். அதற்குப் பொருள் ஏதாவது இருக்கிறது என்று சொன்னால், அது ஆசை, அல்லது தேவை என்பதைத் தவிர வேறு இல்லை என்பேன். காதல் எண்பது பயனை எதிர்பார்த்தும் தனது திருப்தியை எதிர்பார்த்தும் தானே ஒழிய எப்போதும் மாறக் கூடாது என்பதானதல்ல” என்று கூறிவிட்டு, அப்படி ஓர் காதல் இருந்தால் அது பிணக்காதல் தான் என்றும், பிரியவே கூடாது என்ற தத்துவதைக் கொண்ட திருமணங்கள் சிறைவாசம் என்றும் கூறுயுள்ளார்.
திருமணம் என்ற ஆணாதிக்க அமைப்பைக் கேள்விக்குட்படுத்தும் live in relationship, Polyamorous relationship, open relationship போன்ற மாற்று வாழ்வியல் முறைகள் பல முன்னேறிய நாடுகளில் 1970 களுக்குப் பின் நடைமுறையில் இருக்கின்றன. ஆனால் பெரியார் 1930 களிலேயே ஒரே நபருடன் தான் காதல் இருக்க வேண்டும் என்றில்லை என்று polyamory பற்றி பேசியுள்ளார். 1948 இல் “தனியுடைமையும் பெண்ணடிமையும்” என்ற தலைப்பில் விடுதலையில் வெளியான கட்டுரையில் open relationship பற்றியும் பேசியுள்ளார். ஆணும் பெண்ணும் திருமணம் என்ற கட்டுப்பாட்டிற்குள் சிக்காமல், ஒத்து வரும் வரை இணைந்து வாழலாம் என்று live in பற்றியும் பேசி இருக்கிறார். இவை அனைத்தும் உலக அளவில் மாற்று வாழ்வியலின் முன்னோடி பெரியார் என்பதைக் காட்டுகின்றன.
குடும்பப் பெண் x விபச்சாரி
குடும்பப் பெண், விபச்சாரி என்ற இரு பெண் கதாப்பத்திரங்களை உருவாக்கி, அவர்களுக்கான இலக்கணங்களைப் படைத்தவர்கள் ஆண்கள்! “ஒருத்திக்கு ஒருவன்” என்ற சொல்லாடலை ஒரு கட்டுரையில் பெரியார் பயன்படுத்துகிறார். பெயரளவில் “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற “ஒருத்திக்கு ஒருவன்” கோட்பாடு மற்றும் “கற்பு” போன்றவை குடும்பப் பெண்களுக்கு இலக்கணம். இவ்வடிமைக் குணங்கள் போதாதென்று அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, பதிவிரதம் (கணவனையே தெய்வமாக வணங்குதல்) போன்ற இன்னும் எண்ணற்ற அடிமைப் புத்திகளைக் கொண்ட எதையும் சிந்திக்கத் திராணியற்ற, பயந்த, வெட்கப்படும், மடப் பெண்ணாக வாழ்பவள் பெயர் குடும்பப் பெண்.
கற்பு, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, பதிவிரதம் போன்றவற்றில் எதுவும் விபச்சாரிகளுக்குக் கிடையாது. இப்பெண்களைப் பயன்படுத்தும் திருமணமான ஆண்களும் உண்டு; திருமணமாகாத ஆண்களும் உண்டு. இக்கருத்திற்கு ஆதாரமாகப் புள்ளி விவரங்கள் உள்ளன. ஏனென்றால், பெண்களுக்கு அநியாயமாக பல (அ)நீதிகளையும், விதிகளையும் உருவாக்கிய ஆண்கள் தங்களுக்கென்று எந்த விதிகளையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.
பெரியார், தொல்காப்பியம் வகுத்த “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” போன்ற அடிமைக் குணங்களைக் கடுமையாக எதிர்த்ததோடு, ஆண்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க தனி வார்த்தை இல்லாமல் இருப்பதையும் சுட்டிக் காட்டி, “கற்பு, விபச்சார தோஷம்” போன்ற அடிமைத்தளையைத் தகர்க்காமல் பெண் விடுதலை இல்லை என்கிறார். இப்படியான கடுமையான கற்புக் கோட்பாடு உருவானதே தனியுடமை ஏற்பட்ட பின் தான் என்றும் தனியுடைமை ஒழியும் வரை பெண் விடுதலை இல்லை என்றும் கூறுகிறார். ஆகச் சிறந்த பத்தினிகள், பதிவிரதைகள் என்று புகழப்படும் பெண்கள் சிறந்த அடிமைகளாகவும், முட்டாள்களாகவும் தான் வாழ்கின்றனர் என்கிறார். (எ.கா: கண்ணகி, நளாயினி). “பத்தினன், பதிவிரதன்” போன்ற சொற்கள் ஏன் இல்லை என்றும், “ஆண்களுக்கு விபச்சார தோஷம் ஏன் இல்லை” எனவும் பெண்கள் சிந்தித்தால் பெண்களுக்கு (அ)நீதி உரைத்ததெல்லாம் ஆண்கள் என்பதை பெண்கள் உணரலாம் என்கிறார்.
பெண் விடுதலையைக் கண் துடைப்புக்காகவாவது ஒரு செயல் திட்டமாகக் கொண்டுள்ள பல சமூக அமைப்புகளும் கூட விபச்சாரப் பெண்களைப் பற்றி சிந்திப்பதில்லை. ஆனால், பெரியார் இவ்விருவகைப் பெண்களைப் பற்றியும் சிந்தித்திருக்கிறார். குடும்பப் பெண்களை விட விபச்சாரம் செய்யும் பெண்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்று பின் வரும் இடங்களில் கூறுகிறார்.
“விலைமகள் என்பவள் தனக்குள்ள இயற்கை உணர்ச்சியைத் தன் இஷ்டம் போல் அனுபவிக்கவும் அதற்கும் தன் இஷ்டம் போல் விலை பெறவும் வாழ்க்கையில் தன் இஷ்டம் போல் சுயேச்சையாகவும் சுதந்திரமாகவும் இருக்கவும் நமது சமுதாயத்தில் தாராளமாய் இடமளிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், வாழ்க்கையில் ஈடுபடுத்தப்பட்ட தெய்வீகம் என்று சொல்லத்தக்கதான கல்யாணம் செய்து கொண்ட நமது பெண்கள் வெறும் வயிறு வளர்ப்புக்காகவும் உடலை மறைக்கும் துணிக்காகவும் மாத்திரம் ஓர் அறிவும் உணர்ச்சியும் அற்ற நகரும் யந்திரம் போல் இருந்து கொண்டு இருக்க வேண்டியதாயிருக்கின்றது. (குடிஅரசு 10/3/1929)“
1968 ஆம் ஆண்டு நடைபெற்ற ஓர் சுயமரியாதைத் திருமண மேடையில் “மனித சமுதாயத்தில் யாருக்கு உரிமை கொடுத்தான் என்றால், பொட்டுக் கட்டிய தேவடியாளுக்குத் தான் உரிமை கொடுத்தான். சுதந்திரம் கொடுத்தான். அவள் தான் தன் இஷ்டப்படி சுதந்திரத்தோடு நடந்து கொள்ள முடியும். மற்றவள் வீட்டிற்குள் தான் கிடக்க வேண்டும். வெளியே வரக் கூடாது. ஜன்னல் பக்கம், கதவுப் பக்கம் எட்டிப் பார்க்கக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடு செய்து பெண்களை எதற்கும் லாயக்கற்றவர்களாக்கி விட்டார்கள்” என்கிறார்.
பொதுவாகவே, ஆணாதிக்க சமூகப் பொதுப் புத்தியில் இருந்து சிறிது விலகினாலும் கூட பெண்கள் “தே****” என்ற பெயரைச் சுமக்க நேரிடும் என்பது நாம் அறிந்ததே! அதையே பெரியார் சற்று தொலைநோக்கோடு, 1969 ஆம் ஆண்டிலேயே தான் நடத்தி வைத்த மற்றுமொரு சுயமரியாதைத் திருமண மேடையில், “இன்றுள்ள சமூக அமைப்பால் ஒரு பெண் தானாக சுதந்திரம் பெற வேண்டுமானால் “விபசாரி” என்ற பெயரோடு தான் சுதந்திரம் பெற முடியும்” என்கிறார்.
எல்லா தாய்மையும் புனிதமானதா?
ஆண்மை என்னும் பதமே பெண்களை அடிமைப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட அயோக்கியத்தனம் என்று எடுத்துரைத்ததோடு, தாய்மை என்ற மிகைப்படுத்தப்பட்ட கற்பிதமும் பெண்களுக்குக் கேடானது என சுட்டிக் காட்டினார். பெண்கள் சம்பளம் கொடுத்துப் புருஷனை நியமித்துக் கொண்டாலும், பிள்ளை பெற்றுக் கொண்டால் விடுதலையடைய முடியாது என்கிறார். இந்தியாவிலேயே முதன்முறையாக, கருத்தடை பற்றிய பல கட்டுரைகளை குடிஅரசு வெளியிட்டுள்ளது. “கர்ப்ப ஆட்சி” என்ற புத்தகத்தை 1930 இல் பெரியார் வெளியிடுகிறார். மற்றவர்கள் குடும்பத்தில் பிள்ளைகளைக் குறைக்க இம்முறையை ஆதரிக்கின்றனர். ஆனால் நான் இப்பிள்ளைப்பேறே பெண்கள் விடுதலைக்குக் கேடாக இருப்பதால் இதனை ஆதரிக்கிறேன் என்று தன் ஆதரவு நிலைப்பாட்டிற்குத் தெளிவான விளக்கம் அளித்தார்.
தாய்மை என்பது குடும்பப் பெண்களுக்குப் புனிதமானது; ஆனால் விபச்சாரியின் தாய்மை அருவருப்பானது. ஏனென்றால் அந்த தாய்மையால் ஆண்களுக்கு எவ்வித பயனும் இல்லை. அதனால் தான் “தே***** பயலே” என்ற வார்த்தையை இன்னொரு ஆணை சிறுமைப்படுத்தும் வசைச் சொல்லாக பெரும்பாலான ஆண்களும் (பெண்களும்) பயன்படுத்துகின்றனர் என்பதை நாம் அறிவோம்.
பெரியாரும் வெவ்வேறான தாய்மை பற்றிக் கவலை கொண்டு, “தன் மனைவி பெற்ற பிள்ளையைத் தனது பிள்ளையென்று உரிமை கொண்டாடுகின்ற ஆண், தனது ஆசை நாயகியின் பிள்ளையைத் தனது பிள்ளை என்று ஒத்துக் கொள்வது கிடையாது (1969)” என்கிறார்.
அப்பன் பெயர் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான் இவ்வளவு கொடுமையான ஒரு தலைக் கற்பு கோட்பாடும் பெண்ணடிமைத்தனமும் என்பதை நன்குணர்ந்து, “ஜப்பான், லண்டன் போன்ற இடங்களில் பல குழந்தைகள் அப்பா பெயர் தெரியாமல் இருக்கிறார்கள். அதனால் அந்த நாடோ அங்குள்ள மக்களோ மூழ்கிப் போய்விடவில்லை (1966)” என்கிறார்.
ஆண்கள் சுலபத்தில் பெண் விடுதலையை ஒப்புக் கொள்ள மாட்டார்கள் எனவும், பெண்கள் துணிந்தால் தான் பெண் விடுதலை சாத்தியம் என்றும் கூறுகிறார். புரையோடிய ஆணாதிக்க சமூகத்தில், பெண் விடுதலை பார்வையோடு தலைகீழ் புரட்சியை ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை ஆண்களும் பெண்களும் கூடும் சுயமரியாதைத் திருமண மேடைகளிலேயே பேசியுள்ளார். அது பெரியாருக்குப் பின், எந்த சுயமரியாதைத் திருமண மேடைகளிலும் நிகழவே இல்லை.
கணவனை, குடும்பத்தை, குழந்தைகளைப் பராமரிப்பது, சமையல் செய்வது போன்ற அடிமை வேலைகளுக்கே பெண்களைப் பெற்றோர் வளர்ப்பதால், பெண்கள் நகை, அலங்காரம், சேலை, திருமணம், குழந்தை வளர்ப்பு என எல்லா அடிமைத்தனத்தையும் விரும்பி ஏற்கின்றனர் என கவலை கொள்கிறார். பொது சமையல் கூடங்களும், பிள்ளை வளர்ப்பு விடுதிகளையும் அரசே நடத்த முன்வர வேண்டும் என்கிறார்.
இப்படி பாலின சமத்துவமின்மையின் எல்லா காரணிகளையும் அலசி ஆராய்ந்து பல பண்பாட்டு அதிர்வுகளை ஏற்படுத்தும் கருத்துகளை மக்களிடையே பேசிப் பெண்ணியம் பேசிய ஒரே ஆண் தலைவர் பெரியார் தான் என்றால் அது மிகையல்ல. வரலாற்றில், இக்கருத்துகளைப் பேசியுள்ள சில பெண் புரட்சியாளர்களை மட்டுமே காணலாம்.
முடிவுரை
பெண் விடுதலையில் அக்கறை கொண்ட ஆண்களும் பெண்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல். முற்போக்காளர்கள் என்று தங்களைக் கருதிக் கொள்பவர்கள் ஆழமாக வாசித்தால், பெரியாரின் சிந்தனைப் போக்கினை உள்வாங்கி, நம்முள் பல சுதந்திர சிந்தனையாளர்கள் உருவாக வாய்ப்பாக இருக்கக் கூடிய பல கருத்துக்களை உள்ளடக்கிய நூல் இது.
- யாழ்மொழி