“இந்நாட்டின் உழைக்கும் மக்கள், பார்ப்பனியம், முதலாளியம் ஆகிய இரு எதிரிகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. பார்ப்பனியத்தை உழைக்கும் மக்களின் எதிரியாகப் பார்க்கத் தவறுவதால்தான் சில விமர்சகர்கள், நம் மீது குற்றம் சுமத்துகின்றனர். நாம் முறியடிக்க வேண்டிய எதிரி பார்ப்பனியமே என்று சொல்லும்போது, என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. ஒரு சமூகம் என்ற அளவில் பார்ப்பனர்கள் பெற்றுள்ள அதிகாரம், சலுகைகள் மற்றும் நலன்களைக் குறித்த பொருளில் நான் அந்த சொல்லைப் பயன்படுத்தவில்லை. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற உணர்வை அது மறுக்கின்றது என்ற பொருளில்தான் பார்ப்பனியம் என்ற சொல்லை நான் பயன்படுத்துகிறேன்... பார்ப்பனியத்தை வேரறுக்காமல் சமத்துவமற்ற தன்மையைப் போக்காமல் தொழிலாளர்களிடையே உண்மையான ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது.'' - டாக்டர் அம்பேத்கர்

தனியார் கல்வி நிறுவனங்களில் தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் 104ஆவது சட்டத்திருத்தத்தை, 21.12.2005 அன்று இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. அனைத்துக் கட்சிகளும் இதை ஆதரித்துள்ளன. நாம் இதை வரவேற்கும் அதேவேளை, இந்நாட்டில் உள்ள அனைத்து தனியார் துறைகளிலும், நீதித்துறை உள்ளிட்ட முக்கிய கேந்திரங்களிலும் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தத்தை, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு விரைவில் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். இடஒதுக்கீடு நாட்டைப் பிளவுபடுத்துகிறது என்று முன்பு கூறிய பா.ஜ.க., இன்று அதே இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுமையான இடஒதுக்கீட்டை, பல்லாண்டுகளாக மூர்க்கத்துடன் எதிர்த்து வந்த ஒரு கூட்டம், இன்று தங்களுக்கும் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வேண்டும் என்று மாநாடு நடத்தி, தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. முதலாளிகள் அனைவரும் ஒன்றிணைந்து தொழிற்சங்கம் அமைத்து, நாங்களும் வறுமையில் வாடுகிறோம்; எங்கள் உரிமைகளும் பறிபோகின்றன என்று கோரிக்கை எழுப்பினால் அது எந்தளவுக்குக் கொடூரமானதாக இருக்குமோ, அதற்கு ஒப்பானதுதான் இன்றைக்குப் பார்ப்பனர்கள் தங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று முன்வைத்துள்ள கோரிக்கையும்.

சென்னையில், டிசம்பர் 24, 25 (2005) ஆகிய இரண்டு நாட்கள் "பிராமணர் சங்க மாநாடு' என்ற பெயரில் இப்"பிறவி முதலாளி'கள் ஒருங்கிணைந்துள்ளனர். சாதியால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ள மக்கள், பிற்படுத்தப்பட்டோராகவும், தாழ்த்தப்பட்டோராகவும் சங்கங்களை உருவாக்கி தங்களுக்கான உரிமைகளைக் கேட்டுப் போராடும்போது அதைக் கண்டிப்பவர்கள், விமர்சனம் செய்பவர்கள், இன்றைக்குத் தங்களுக்கு (சாதி அடிப்படையில் அல்ல) வர்ணாசிரம அடிப்படையில் இடஒதுக்கீடு வேண்டும் என்று ஆர்ப்பரித்து அரிவாளைத் தூக்கியுள்ளனர். இதற்கு எதிராக எந்த ஏடும் தலையங்கம் தீட்டவில்லை; "தினமலர்' இதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடுகிறது. இதையெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்கள் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

மத்திய அரசுப் பணிகளில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற மண்டல் குழு பரிந்துரையின் ஒரு பகுதியை நடைமுறைப்படுத்தியதற்கே, "இந்து ஒற்றுமை' என்ற பெயரில் நாடெங்கும் ரத யாத்திரை நடத்தி வன்முறைகளைத் தூண்டினர்; அதன் மூலம் வி.பி. சிங் ஆட்சியையும் கவிழ்த்தனர். இன்று தனியார் துறைகளில் இடஒதுக்கீடு கோரிக்கை வலுப்பெற்று வரும் வேளையில், அதை வெளிப்படையாக எதிர்க்கத் திராணியற்று தங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று வெட்கமின்றி மாநாடு நடத்துகிறார்கள். இத்தகைய ஆதிக்கப் போக்குகள் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களால் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். இல்லை எனில், அது நம்மை மீண்டும் அடிமைப்படுத்துவதில்தான் முடியும். எச்சரிக்கை.

முதலாளித்துவ நாட்டில், முதலாளித்துவத்தையும் முதலாளிகளையும் எதிர்ப்பது எப்படி இன்றியமையாததோ, அதேபோல இந்திய சாதிய சமூகத்தில் பார்ப்பனியத்தையும் பார்ப்பனர்களையும் எதிர்ப்பது இன்றியமையாததாகிறது. பொருளை மூலதனமாக்கிச் சுரண்டுவது முதலாளித்துவத் தத்துவம் எனில், சாதியத்தை மூலதனமாக்கி அதையே இந்த நாட்டின் பண்பாடாகவும் மாற்றி, அனைத்து வாழ்நிலைகளிலும் தொல்குடி மக்களை அடிமையாக்கி, இங்கு சுரண்டல் நடத்தப்படுகிறது. ஆதிக்கத்திற்கான கருவியாக அவர்கள் இந்துப் பண்பாட்டை நம் மீது திணிக்கின்றனர். எனவேதான் பண்பாட்டுப் புரட்சியை வலியுறுத்திய புத்தரும், அம்பேத்கரும், பெரியாரும் பார்ப்பன எதிர்ப்பை முதன்மைப்படுத்தினர்.

சமத்துவ உணர்வை மறுக்கும் பார்ப்பனியத்தை வேரறுக்க, நமக்கான சமத்துவப் பண்பாட்டைத் தூக்கி நிறுத்துவதும், இந்து பண்பாட்டை ஏற்க மறுத்து, அதைக் கேள்விக் குள்ளாக்குவதன் மூலமே இது சாத்தியமாகும்.

 

Pin It