திராவிடர் கழகத் தலைவர் - தமிழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான கி.வீரமணி அவர்களின் நேர்முக பேட்டியை (மார்ச் 21, இரவு 10 மணி) ‘தந்தி’ தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் பலரும், அத்தொலைக்காட்சி பேட்டியாளரின் நேர்மை குறித்து கேள்விகளை எழுப்பவே செய்வார்கள். பாண்டே என்ற பெயரில் ‘தந்தி’ தொலைக்காட்சியில் விவாதங்களையும் நேர்முகப் பேட்டிகளையும் நடத்தி வரும் அவரது முதிர்ச்சியற்ற அரைவேக்காட்டுத்தனமான கேள்விகள், விவரமறிந்தவர்களை முகம் சுளிக்கவே வைக்கிறது.

‘பெரியார் ஒரு சகாப்தம்; ஒரு திருப்புமுனை’ என்று இரண்டே சொற்றொடர்களில் அறிஞர் அண்ணா படம் பிடித்தார். பெரியார் கொள்கைகளோடு முரண்பட்ட தலைவர்கள்கூட பெரியார் ஏற்றுக் கொண்ட இலட்சியத்தில் அவரது உண்மையான பங்களிப்பில் நேர்மையில் சந்தேகம் எழுப்பியது கிடையாது. பார்ப்பனர்கள் தங்களின் ‘பிதாமகராக’ ஏற்றுக் கொண்ட மறைந்த இராஜகோபலாச்சாரியாரையே இதற்கு உதாரணமாகக் கூற முடியும். பார்ப்பனரல்லாத வெகு மக்களின் மானத்துக்கும் உரிமைக்கும் களமாடியவர் பெரியார்.

மாறுபட்ட பல்வேறு அரசியல் சூழல்களில் தனது சமுதாய இலக்கை முன்னெடுப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு சூழலுக்கேற்ற நிலைப்பாடுகளை மேற்கொண்டு வந்தவர் பெரியார். பெரியாரை விமர்சிக்கும் அறிவாளர்கள், சமூக ஆய்வாளர்கள், சிந்தனை முதிர்ச்சியாளர்கள், இயங்கியல் பார்வையோடு பெரியாரை மதிப்பீடு செய்கிறார்கள். ஆனால் சமூகம் பற்றியோ அரசியல் குறித்தோ எந்த ஆழமான பார்வையும் இல்லாமல் ‘ஏட்டிக்குப் போட்டி’ பேசிக் கொண்டு பார்வையாளர்களுக்கு ‘வித்தை காட்டும்’ குடுகுடுப்பைக்காரராக பாண்டே என்ற பார்ப்பனர் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியிடம் ‘விதண்டா வாதம்’ செய்து, தன்னைத் தீவிர ‘ஆர்.எஸ்.எஸ்.’ பக்தராக அடையாளம் காட்டிக் கொள்ள பாண்டே துடிப்பது பற்றி நமக்கு கவலை இல்லை. ஆனால், பேட்டியை ஒளிபரப்புவதில் நேர்மை இருக்க வேண்டும் அல்லவா?

வீரமணி அவர்களின் பேட்டி பதிவு செய்யப்பட்டு, பிறகு ‘தணிக்கை’ செய்து ஒளிபரப்பப்பட்டிருக்கிறது. ‘நேர் அலை’ நிகழ்ச்சி அல்ல. பேட்டியில் வீரமணி அவர்கள் தெரிவித்த கருத்துகளை உண்மைக்கு மாறானவையாக சித்தரிக்க முயற்சித்திருக்கிறார். அதற்கு ஒரு நயவஞ்சக நாடகத்தை அரங்கேற்றினார். இடையிடையே ‘பெரியார்-அம்பேத்கர்’ கருத்துகளை வெட்டி சிதைத்து, எழுத்துகளாக பின்னணி குரல்களுடன் ‘கிளிப்பிங்’ ஆக போட்டார்.

உண்மையில் பேட்டி அளித்த வீரமணி அவர்களுக்கு தனது கருத்தை மறுக்கும் எழுத்து வடிவங்கள் ‘கிளிப்பிங்குகளாக’ ஒளிபரப்பப்படுகிறது என்பதே தெரியாது. பேட்டியாளருக்கு நேர்மை இருக்குமானால், இதே பெரியார்-அம்பேத்கர் கருத்துகளை பேட்டியின் போதே எடுத்துக்காட்டி, பேட்டியாளரின் கருத்தையும் கேட்டிருக்க வேண்டும். அதுதான் ஊடக அறம்; நேர்மை. இப்படி எழுத்து வடிவங்களில் போடப்பட்டவை கூட திரிபும்-புரட்டலுமாகவே இருந்தது. உதாரணத்துக்கு இரண்டை சுட்டிக் காட்டுவோம்.

‘பார்ப்பனர்களையும் பாம்பையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி’ என்று பெரியார் கூறியதாக ஒரு தவறான தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. உண்மையில் பெரியார் அப்படி எங்கேயும் சொல்லவில்லை; அது ஒரு வடநாட்டு பழமொழி என்று வீரமணி விளக்கம் அளித்தார். அப்போது, “பார்ப்பனர்களை தமிழ்நாட்டிலிருந்து விரட்டி அடிக்க வேண்டும்” என்று பெரியார் பேசியதாக ஒரு ‘கிளிப்பிங்’ போடப்பட்டது.

பார்ப்பானையும் பாம்பையும் ஒப்பிட்டு பெரியார் எந்த கருத்தையும் கூறவில்லை என்ற வீரமணி அவர்களின் கருத்துக்கு இது எப்படி மறுப்பாக முடியும்! சரி; பார்ப்பனர்களை தமிழ்நாட்டிலிருந்து விரட்டி அடிக்க வேண்டும் என்று எந்தப் போராட்டத்தையாவது பெரியார் நடத்தியிருக்கிறாரா? அப்படித் தனது தொண்டர்களைத் தூண்டி விட்டதாக எந்த ஒரு சம்பவத்தையாவது எடுத்துக் கூற முடியுமா? காந்தியை கோட்சே என்ற பார்ப்பனர் சுட்டபோதுகூட வடமாநிலங்களில் பார்ப்பனர்களுக்கு எதிராக வன்முறைகள் வெடித்த காலத்தில் பெரியார் வானொலியில் பேசி, அமைதி காக்கச் சொல்லி, எந்த ஒரு கலவரமும் வந்துவிடக் கூடாது என்று பார்ப்பனர்களை தமிழகத்தில் பாதுகாத்த தலைவர். இந்த வரலாறு பாண்டேக்களுக்கு தெரியுமா?

அம்பேத்கர் - மாட்டுக்கறி சாப்பிட வேண்டாம் என்று தலித் மக்களிடம் கூறியதாகவும், தி.க. - அம்பேத்கர் பிறந்த நாளில் ஏன் மாட்டுக்கறி விருந்து நடத்துகிறது? என்றும் ஒரு கேள்வி மூலம் தனது அறியாமையை வெளிப்படுத்தினார் பாண்டே. ‘அம்பேத்கர், எப்போது அப்படி கூறினார்?’ என்று வீரமணி கேட்டார். உடனே, ‘கிளிப்பிங்’ போடுகிறார் பாண்டே. அதில், “செத்த மாடுகளை தூக்கச் சொன்னால் தூக்காதீர்கள்; செத்த விலங்குகளை சாப்பிடாதீர்கள்” என்று தலித் மக்களுக்கு அம்பேத்கர் கூறுவதாக எடுத்துக் காட்டப்பட்டிருந்தது.

செத்த விலங்குகளைக்கூட சாப்பிடும் நிலையில் அன்றைக்கு சமூகம் இருந்திருக்கிறது. அந்த நிலையில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு அம்பேத்கர் விடுத்த வேண்டுகோள் அது. ‘செத்த விலங்குகளை சாப்பிடாதீர்’ என்று அம்பேத்கர் பொதுவாக கூறுவதை, ‘மாட்டுக்கறியே சாப்பிட வேண்டாம்’ என்று கூறியதாக பாண்டே திரிக்கிறார்.

மூடநம்பிக்கைகளை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் பெரியார் இயக்கத்தின் மூத்த தலைவர் வீரமணி, ஏதோ, ‘எண் ஜாதகத்தில்’ நம்பிக்கை யுள்ளவர்போல, அவரது ‘கார் எண்’ குறித்து எல்லாம் பாண்டே கேள்வி எழுப்பு கிறார். இது, அவரது “சிறுபிள்ளைத்தனத்தையே” அம்பலப்படுத்துகிறது. “இராமனை எதிர்த்த பெரியார், ஏன் இராமசாமி என்று பெயர் வைத்துக் கொண்டார்; சாமியே இல்லை என்று கூறும் நீங்கள், அப்பா, அம்மா இல்லை என்று கூறுவீர்களா? இந்தியாவை எதிர்க்கும் நீங்கள் ஏன் இந்தியாவில் வாழ வேண்டும்?” - இப்படிப்பட்ட ‘மடத்தனமான’ கேள்விகளைக்கூட பாண்டே நேரமிருந்தால் கேட்டிருப்பார். அவரது கேள்வித்தரம் அவ்வளவுதான்! ஒரு முறை தொலைக்காட்சி விவாதத்தில் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது.

“சம்பூகன் என்ற சூத்திரன், கடவுளை நேரிடையாக தவம் செய்தான் என்பதற்காக, பார்ப்பனர்கள் வேண்டுகோளை ஏற்று சம்பூகன் தலையை இராமன் வெட்டினான். இதுதான் இவர்களின் இராமராஜ்யம்?” என்று கூறியபோது, ஒரு இந்து முன்னணி இளைஞர், இப்படி ஒரு கேள்வியை கேட்டார்: “இராமாயணத்தையே ஏற்றுக் கொள்ளாத நீங்கள், ஏன் இராமாயணத்திலிருந்து ஏன் உதாரணம் காட்டுகிறீர்கள்?” இப்படிப்பட்ட ஆட்கள்கூட தொலைக்காட்சி விவாதத்துக்கு வந்து விடுகிறார்கள்; என்ன செய்வது?

இந்து முன்னணி இளைஞரின் இந்த அபத்தங்களையும் விஞ்சி நிற்கிறார் பாண்டே.

பாமர மக்களுக்காக நாட்டு - உலக நடப்புகளை எளிமையான செய்திகளாக்கி, எழுதப் படிக்கத் திணறியவர்களையும் ‘தினத்தந்தி’ நாளேட்டுக்கு வாசகர்களாக்கிய பெருமை ஆதித்தனாருக்கு உண்டு. அவரது நிறுவனத்திலிருந்து வரும் ஒரு தொலைக்காட்சி - இத்தகைய நேர்மைக் குலைவையும், ஊடகச் சீரழிவுகளையும் அனுமதிக்கலாமா! வண்மையாகக் கண்டிக்கிறோம்.

Pin It