குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் சிக்கல்களை எதிர்கொள்ளும் தாய்மார்களுக்கு உதவ உருவாக்கப்பட்டது தான் மார்பகப் பம்ப். ஆரம்பத்தில், வேலைக்குச் செல்லும் தாய்ப்பாலூட்டுபவர்கள் தங்கள் தாய்ப்பாலினை சேமித்து வைப்பதற்காக, அதனை வெளியேற்றும் பொருட்டு தங்கள் கைகளை உபயோகித்தனர். இதனைச் செய்வதற்கு நேரம் நிறைய ஆகும் என்பதாலே தான் பெரும்பான்மையானோர் குழந்தைகளுக்கான செயற்கை உணவுகளை கொடுக்க ஆரம்பித்தனர். அது தாய்ப்பாலுக்கு நிகரானது என்று சொல்லப்பட்டாலும் அதன் தன்மை அப்படியானது அல்ல. குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து குணநலன்களையும் கொண்டிருப்பதால் தான், வல்லுநர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கின்றார்கள்.

வேலை செல்லும் பெண்களில் பலர் வேலையில் இருக்கும் நேரத்தில் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலினை எவ்வாறு தருவது என்ற கவலையோடு இருக்கின்றனர். அதோடு தாய்ப்பாலினை வெளிக்கொணரும் மார்பகப் பம்பினைப் பயன்படுத்துவது சரியா என்ற கேள்வியோடு மார்பகப் பம்பினை எப்படி, எந்நேரத்தில் பயன்படுத்துவது போன்ற தொடர் கேள்விகளுக்கு விடை தேடுகிறார்கள்.

மார்பகப் பம்ப் பயன்பாட்டின் ஆக முக்கிய காரணம் குழந்தையினைப் பிரிந்து இருக்கும் நேரத்தில் பால் சுரப்பினை ஊக்குவிக்கவும் சுரப்பு அளவினை தக்க வைப்பது. காரணம், பால் புகட்ட புகட்டத்தான் பால் சுரப்பின் அளவும் மேம்படும்.

மார்பகப் பம்பின் வழி, தாய் தன் குழந்தைக்கு பால் புகட்ட முடியாத வேளையில் மார்பில் இருந்து தாய்ப்பாலினை வெளிக்கொணர முடிகிறது. தற்பொழுது சந்தையில் பல்வேறு விதமான மார்பகப் பம்புகள் உள்ளன என்ற போதும் எல்லா மார்பகப் பம்புகளும் எல்லா பெண்களுக்கும் பொருத்தமானதல்ல என்பதனை கவனம் கொள்ள வேண்டும். அதன் தேர்வென்பது ஒவ்வொருவரின் தேவைக்கேற்றது. சந்தையில் உள்ள பல மார்பகப் பம்ப் வடிவங்கள் ஒரே நேரத்தில் இரண்டு மார்பகங்களில் இருந்து பாலினை வெளிக்கொணருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது

மார்பகப் பம்பின் பயன்பாடென்பது ஒரு நாளில் பல முறை இருக்கலாம். ஆனால் அது மாத்திரம் பால் சுரப்பினை தக்க வைக்க முடியாது. குழந்தைக்கு நேரடியாக தாய்ப் பால் புகட்டுவதும் சுரப்பினைத் தக்க வைப்பதில் அவசியமாய் இருக்கின்றது.

இம் மார்பகப் பம்ப்களில் மூன்று வகைகள் இருக்கின்றன. கையினால் இயக்கக்கூடியது, பேட்டரிகளால் இயக்கக்கூடியது மற்றும் மின்சாரத்தால் இயக்கக்கூடியது.

ஆக, இப் பம்பினை இயக்குவது எப்படி?

  1. பம்பினை இயக்குவதற்கு முன்பு கையினை சோப் மற்றும் நீர் கொண்டு நன்கு கழுவவும். மார்பினையோ அல்லது மார்பு காம்பினையோ கழுவ வேண்டிய அவசியமில்லை.
  2. பம்ப் மற்றும் தாய்ப்பாலினை சேகரித்து வைக்கும் பாட்டில் சுத்தமாக இருக்கிறதா என்று உறுதிசெய்துக்கொள்ளவும். ஆரோக்கியமான குழந்தைக்கு பால் சேகரம் செய்யும் போது பம்பினையோ பாட்டிலினையோ sterilize செய்ய வேண்டிய அவசியமில்லை. முக்கியமாக பம்பினைப் பயன்படுத்துவதற்கிடையே அதனை நீரினில் ஊறவைக்கக்கூடாது. பம்பில் இருக்கும் ட்யூபினை கழுவ வேண்டாம். காரணம் அது உலர நேரமாகும். ட்யூப்களில் ஈரம் கோர்த்தாலோ அல்லது பாலோ தங்கினால் வேறு ட்யூப் வாங்கவேண்டிவரும். நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்க பம்பின் பாகங்கள் நாளொரு முறை சுடு நீர் கொண்டு sterilize செய்து கொள்ளலாம்.
  3. பம்பினைக் கொண்டு தாய்ப்பாலினை வெளிக்கொணரும் முன் மார்பகங்களினை மெதுவாய் மசாஜ் செய்யவும். அதன் பின் ஈரமான வெதுவெதுப்பான துணியினை மார்பின் மீது பரப்பவும். பம்ப் செய்யும் போது அமைதியான, சற்று வெளிச்சம் குறைவான இடத்தில் இருத்தல் நலம். காரணம், கவனச்சிதறலினை மட்டுப்படுத்த. குழந்தையின் படத்தினையோ அல்லது அதன் ஸ்பரிசத்தினை நுகர, அதனைச் சுற்றி வைக்கும் துணியோ வைத்துக்கொள்ளுதல் வேண்டும். பயன்படுத்தும் முன் மார்பகப் பம்பின் விளிம்பினை சுடு நீர் கொண்டு வெதுவெதுப்பாக்கிக் கொள்ளவும்.
  4. பம்பினைப் பயன்படுத்தும் பெண்களில் பலர், அதனை உட்கார்ந்த நிலையிலேயே பயன்படுத்த விரும்புகின்றனர். மின்சாரத்தினால் இயங்கும் பம்பினைப் பயன்படுத்தும் போது பம்பின் உறுஞ்சு திறனை உறுத்தாத அளவில் வைத்துக்கொள்ளவும். சில பம்ப் வடிவங்களில் பம்பின் சுழற்சி வேகத்தினை நமக்கு ஏற்றார் போல் வைத்துக் கொள்ள வசதி தருகிறது. சில பெண்கள், ஆரம்பத்தில் அதிகமான சுழற்சி வேகத்தினை வைத்து பின்னர் பால் சீராய் வெளிவர ஆரம்பித்த உடன் பம்பின் சுழற்சி வேகத்தினைக் குறைத்துக்கொள்வார்கள்.
  5. மார்பின் மீதும் காம்பின் மீதும் பொருந்துமாறு இருக்கும் கூம்பு போன்ற மார்பகப் பம்பின் பகுதி, சரியான அளவாய் இருத்தல் வேண்டும். பம்பினை உபயோகிக்கும் போது, காம்பானது பம்பினுடைய கூம்பின் சுவர்களில் உராய்ந்து கொள்ளாமல் இருக்க வேண்டும். மார்பகங்களை முறையாய் பம்ப் செய்து பாலினை வெளிக்கொணர எதுவாக சரியான அளவிலான, பொருத்தமான கூம்பினை உடைய பம்பினை வாங்குதல் நலம்.

பம்ப் செய்யும் அளவு:

வேலை நேரத்தில் பாலினை வெளிக்கொணர பம்பினைப் பயன்படுத்தும் பொழுது, குழந்தையின் தாய்ப்பால் அருந்தும் நேரம் மற்றும் அளவிற்கு ஏற்றார் போல் இருந்தால் போதும். 8 மணிநேரத்தில் மூன்று முறை பம்ப் செய்தல், இயற்கையான தாய்ப் பால் சுரத்தலுக்கு ஏதுவானது.

தாய்ப் பால் சுரத்தலினை அன்றாடம் கவனித்தல்:

மார்பகப் பம்பினை மாத்திரம் பயன்படுத்தும் பெண்களும் வேலை நேரத்தில் தாய் பால் சுரத்தலினை உறுதிசெய்யும் பொருட்டு பம்பினைப் பயன்படுத்தும் பெண்களும் தங்கள் குழந்தைக்குத் தேவையான தாய்ப்பாலினை நாம் சுரக்கிறோமா என்ற கேள்வியோடு இருப்பார்கள். அதனை முறையாக கணிக்கும் பொருட்டு, எத்தனை முறை பம்ப் செய்கிறோம், எவ்வளவு பால் வெளிக்கொணரப் பட்டிருக்கின்றது என்பதனை அட்டவணை போடுதல் அவசியமானது. மார்பகப் பம்பினை மாத்திரம் பயன்படுத்தும் பெண்கள் இரண்டாவது வார இறுதியில் ஒரு நாளைக்கு 850 முதல் 900 மில்லி லிட்டர் அளவிற்கான தாய்ப்பால் சுரத்தலினைக் காணவேண்டும். குறைப்பிரசவத்தினில் பிறந்த குழந்தைக்கு ஆரம்பத்தில் தாய்ப்பாலின் அளவு குறைவாக இருந்தாலும் குழந்தை வளர வளர அதன் தேவை அதிகமாகும் என்பதனையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நமது சமூகத்தில் ஒரு புறம் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவதின் நன்மைகள் குழந்தைக்கு மாத்திரம் அல்ல பெற்ற தாய்க்கும் நலம் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறோம். அதே சமயம், வேலையிடத்தில் இருக்கும் பெண்களுக்கு வேலைக்கு நடுவே இடைவெளியென்றொன்று இருப்பதில்லை அல்லது அவர்களது கூலி ஒரு மணிநேரத்திற்கு இத்தனை என்று சொல்லப்பட்டிருப்பதால் இடையே இடைவெளி எடுத்துக்கொள்ளாமல் வேலை செய்கின்றனர். பிள்ளை பெற்ற நாட்களில் பணம் எத்தனை முக்கியம் என்று அனைவருக்கும் தெரியும், அதனால் தான் பல சமயம் குழந்தைக்குத் தாய்ப்பால் கூட கொடுக்காமல் வேலைசெய்ய சில பெண்கள் உந்தப்படுகின்றனர் என்பதும் புரிந்துக்கொள்ளக்கூடியதே. பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டு என்று சொல்லத்தெரிந்த சமூகம் புதியதாய் பிள்ளையைப் பெற்றெடுத்த தாயின் நேரத்தேவைகளை, தாயாய் அவள் செய்யும் கடமைகளை உணர்ந்துகொள்ள மறுப்பதால் தான், மார்பகங்களைப் பம்ப் செய்து தாய்ப்பாலினை வெளிக்கொணர்தல் என்றொன்று இன்று தாய்மார்களால் வழக்கப்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கின்றது. மாறி வரும் சமூக பொருளாதாரச் சூழலில் ஒரு தாய், தாயாய் இருப்பதனால் மேற்கொள்ள வேண்டிய கடமையினை முறையாய் மேற்கொள்ளும் தனிப்பட்ட போராட்டத்தின் ஒரு வெளிப்பாடு தான் இது.

ஒரு தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவது கடமையென்றால் அதை உணர்ந்து, அதற்கான சூழலினை அத்தாய்க்கு வழங்குவது சமூகத்தின் கடமை. இது சமூகத்தின் பொறுப்பு.                                          

Pin It