மனிதர்களின் குணத்தை யாராலும் மாற்ற முடியாது. இது பேக்டிரியாவின் குணத்தைப் பற்றியது. எசரிக்கியா கோலை எனும் பேக்டிரியா சாதுவானது. வழக்கமாக வெப்ப இரத்தப் பிராணிகளின் குடலில் வாழும். மனிதர்களின் குடலில் கட்டாயம் இருக்கும். இல்லாவிட்டால்தான் பிரச்சனை.
அபூர்வமாக சில எசரிக்கியா கோலை பேக்டிரியா கொடும் நோய்க்கிருமியாக மாறிவிடுவதுண்டு. இந்த கொடிய குணத்திற்குக் காரணம் இதனிடமிருந்து வெளிப்படும் ஷிகா என்றொரு விஷம். ஷிகா விஷம் குடலில் பட்டுவிட்டால் கடுமையான இரத்த பேதி ஏற்படும், சிலருக்கு சிறுநீரகம்கூட பாதிப்படைந்துவிடும். இத்தனை மோசமான குணம் இதற்கு ஏற்படுவதற்கு இதனிடம் வேண்டிய ஜீன்கூட இல்லை.
நம்மைத் தாக்குவதுபோல பேக்டிரியாக்களைத் தாக்குவதற்கென்று வைரசுகள் சில உள்ளன. பேக்டிரிய ஃபாஜ் என்று அவற்றைக் குறிப்பிடுவார்கள். இவை ஒரு பேக்டிரியாவிலிருந்து இன்னொன்றுக்கு பரவி வளரும்போது ஷிகா விஷத்திற்கான ஜீனையும் கொடுத்துவிட்டுச் செல்கின்றன. கெமில்லா சக்ஸ் என்ற பெண் தனது பி எச்டி பட்டத்திற்காக செய்த ஆராய்ச்சி மூலம் இந்த விஷயம் தெரியவந்துள்ளது. நார்விஜியன் கால்நடை மருத்துவப் பள்ளியில் இந்த ஆய்வு நடந்தது.
- முனைவர். க. மணி
பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்