நாடெங்கும் காஷ்மீரில் நடந்த கொடுமை பற்றிய ஒரே பேச்சு. எட்டு வயதுச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த கொடியவர்கள், எத்தனை கொடிய மனது கொண்டவர்கள்? நாடோடி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த சிறுமி என்பது தெரியவந்துள்ளதாம். அதுவும், பெரும்பான்மை மக்களால் நம்பப்படும் "கோவிலுக்குள் எத்தனை நாள் வைத்து" இந்தக் கொடுமை நடத்தப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். சிறுமியைக் காணவில்லையே என்பதாகத்தான் அப்போது, புலம்பலும், போராட்டங்களும், இருந்தன. எல்லா இடங்களிலும் தேடிய மக்கள், கோவிலுக்கு உள்ளே சென்று தேடுவது பற்றி சிந்திக்கவேயில்லை. எத்தனை கொடுமை பாருங்கள். கூட்டு பாலியல் வன்புறைச்சி நடத்தப்பட்டுள்ளது. சாகும்வரை சிறுமியை, பலாத்காரத்திற்கு உட்படுத்தி இருக்கிறார்கள். காவல்துறை அதிகாரிகளும், உதவி இருக்கிறார்கள். செய்தியை மறைத்து இருக்கிறார்கள். போராடிய மக்களை அடித்து துரத்தியிருக்கிறார்கள். அதே அதிகாரிகள் உட்பட இப்போது, எட்டு பேர் கைதாகியிருக்கிறார்கள். நீதிமன்றத்தின் தலையீட்டிலேயே இது வெளி வந்திருக்கிறது.

காஷ்மீரிலிருந்து செய்தி வந்ததாக ஒரு தோழி கூறினார். இதுபோன்று சிறுமிகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவது பொதுவாகவே அங்கே நடக்குமாம். ஆனால் வழமையாக ராணுவம் தான் அதைச் செய்யுமாம். இப்போது, சாதாரண கொடியவர்களே இதைச் செய்திருக்கிறார்கள். காவல்துறை ஒத்துழைப்புக் கொடுத்துள்ளது. கதுஹா மாவட்டத்தில் நடந்த கொடுமை இது. மாவட்ட, மாநில, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் கேள்விக்கு உள்ளாகிறார்கள். வழக்கறிஞர்கள், குற்றவாளிகளுக்கு ஆதரவாக, பாதிக்கப்பட்ட, கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக வழக்காட வந்த பெண் வழக்கறிஞரை மிரட்டியிருக்கிறார்கள். இதை வைத்து, உச்சநீதிமன்றம், "அகில இந்திய பார் கவுன்சில், மாநில பார் கவுன்சில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், கதுஹா மாவட்ட வழக்கறிஞர் சங்கம்" ஆகியவற்றிடம் விளக்கம் கேட்டுள்ளது. சிறுமி மீது வன்கொடுமை செய்தவர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு ஆதரவாக, காவல்துறையும், வழக்கறிஞர்களும் செயல்பட்டால், இது இந்த சமூகத்தின், "பெண்களுக்கு எதிரான" ஆணாதிக்க வெறி பிடித்த சிந்தனைப் போக்கின்றி வேறு என்ன ?

அடுத்து இதேபோல, உத்தரப் பிரதேசத்தில், உண்ணாவ பகுதியில், உள்ளூர் எம்.எல்.ஏ. ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அதற்காக அந்தப் பெண்ணும், அவரது தந்தையும் முதல்வர் முன்னால் போராடினால், காவல்துறை மூலம் தந்தையை அடித்து, கைது செய்து, அவர் இறந்துவிட்ட நிலை உருவாக்கி உள்ளது. காவி உடை தரித்த ஆளும்கட்சி எம்.எல்.ஏ. தொடர் போராட்டங்களுக்குப் பிறகு, நீதிமன்றத் தலையீட்டிற்குப் பிறகு, கைது செய்யப்படுகிறார். இவை எல்லாம் எதைக் காட்டுகிறது?. வெறி பிடித்து ஆணாதிக்க உலகம் ஆடுகிறது என்று காட்டவில்லையா? இதற்கு இனி அமைதி வழியில், சட்ட வழியில் மட்டுமே தீர்வு காண முடியுமா? பெரும் அளவு மக்கள் போர் நடத்தப்பட்டு ஆகவேண்டும் என்ற உண்மையை அல்லவா இந்த நிகழ்ச்சிகள் நிரூபிக்கின்றன?.

ஏப்ரல் 15ஐ தமிழ்நாட்டு திருநங்கைகள் தங்கள் தினமாகக் கொண்டாடுகின்றனர். அதற்காக, "சண்டைக்காரி" என்று ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள். அதில், "பொறியியல் கல்லூரிக்கு சட்டப் போராட்டம் மூலம் வென்று பொறியியலாளராக, வந்துள்ள கிரேசி பானு, போராடி மட்டுமே பிசியோ தெரபிஸ்ட்டாக அரசு பணி கிடைத்த செல்வி, போராடி காவல்துறை அதிகாரியான திருநங்கை, சட்டப் போராட்டம் மூலமே சித்தா மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்துள்ள தாரிகா போல பல திருநங்கைகளின் வாழக்கை வெற்றிகளை தொகுத்து வழங்கினார்கள். அதுவே, அவர்களது முன்னேற்றத்திற்கு, "நம்பிக்கை" ஊட்டுவதாக அமைந்தது. சாராம்சத்தில், திருநங்கைகளின் இந்த வெற்றிகளும், "ஆணாதிக்கத்தை எதிர்த்த வெற்றிகள்தான்". ஒருபுறம் வெற்றிச் செய்திகளும், மறுபுறம் வன்முறைச் செய்திகளும் கொண்டதாக நம் வாழும் பூமி உள்ளது வேதனைதானே?

- தொடரும்

Pin It