kuthoosi gurusamy 300

சில வாரங்கட்கு முன்பு நான் ஒரு தன்மான முறைத் திருமணத்தில் சொற்பொழிவாற்றினேன். புரோகிதமும் மூட நம்பிக்கையும் ஒழிந்த திருமணத்தின் அவசியத்தையும் சிறப்பையும் பற்றிக் கூறிவிட்டு, எல்லோரும் கலப்பு மணத்தில் ஈடுபடவேண்டும் என்று பேசி முடித்தேன்.

எனக்குப் பிறகு பேசிய ஒரு தோழர் என்னை யொட்டியே கலப்பு மணத்தை ஆதரித்துப் பேசினார். அந்தச் சமயத்தில் கூட்டத்திலிருந்த ஒருவர் எழுந்து, உங்கள் சமூகத்தில் மட்டும் இதுவரையில் யாருமே கலப்பு மணஞ்செய்யவில்லையே, ஏன்? என்று கேட்டார். பேசியவர் திடுக்கிட்டுப் போனார்.

ஒரு சில விநாடி ஒன்றும் பேசாதிருந்து விட்டு, “அப்படியா! இது வரையில் எனக்குத் தெரியாது. ஆனால் பலர் முயற்சி செய்ததாகத் தெரியும். காமராஜ் நாடார் கூட கலப்பு மணம் செய்யப் போவதாகப் பலர் பேசிக் கொண்டனர்”, என்று பதில் கூறி முடித்தார்.

அப்போதுதான் பேசிய தோழர் நாடார் வகுப்பைச் சேர்ந்தவர் என்பது எனக்குத் தெரிந்தது. 10-12 ஆண்டுகளாக நெருங்கிப் பழகிவருகின்ற நூற்றுக் கணக்கான தோழர்களின் “ஜாதி” என்ன என்பது உண்மையாகவே இன்றுவரை எனக்குத் தெரியாது. ஒரு சிலர் ஜாதி மகாநாட்டில் கலந்து கொள்ளும்போதுதான், “ஓஹோ! இந்தப் பேர்வழி இந்த ஜாதியா?” என்று தெரிந்து கொள்வேன். இது நடந்து பல நாட்களுக்குப் பிறகு, அதாவது சென்ற ஞாயிற்றுக் கிழமையன்று மாயூரம் பொதுக் கூட்டத்தில் எனக்குப் பிறகு பேசிய தோழர் எம். ஆர். ராதா ஜாதி ஒழிப்பைப் பற்றிக் கூறிக்கொண்டே வந்து, “நாடார் சமூகம் மட்டும் இன்னமும் கலப்பு மணத்தில் ஈடுபடாமலிருப்பது சரியல்ல,” என்று திடீரென்று ஒரு போடு போட்டார். நான் பேச்சை ஊன்றிக் கவனித்தேன்.

“தாழ்த்தப்பட்டோரைக் காட்டிலும் சமுதாயத்தில் பின்னணியில் கிடந்த இந்தச் சமுதாயத்தை உயர் நிலைக்குக் கொண்டுவந்த பெருமை 100-க்கு 100 என் தலைவர் பெரியாரைச் சேர்ந்தது. ஆனால் இச் சமூகத்திலுள்ள ஒரு சிலர் தவிர மற்றவர்கள் ஜாதி வெறியை விட்டதாகவோ, பெரியார் இயக்கத்திற்குப் பேராதரவு தருவதாகவோ கூறமுடியாததற்கு வெட்கப்படுகிறேன்.

படிப்பு, வியாபாரம், அறிவு ஆகிய சகல துறைகளிலும் முன்னணியிலுள்ள தலைசிறந்த சமூகம், பெரியாரின் அடிப்படைக் கொள்கையான ஜாதி ஒழிப்பு விஷயத்தில் மட்டும் ஒதுங்கி நின்று கொண்டு கலப்பு மணம் செய்யாமலிருப்பது பற்றி வருந்துகிறேன். இந்த விஷயத்தில் பார்ப்பனர் கூட நாடார்களைவிட அதிகமாக முன்னேறி யிருக்கிறார்கள். நான் சொல்வது தவறு என்று நிரூபிக்கக் கூடியவர் யாராயிருந்தாலும் இம்மேடைக்கு வரலாம்,” என்றார்.

சுமார் பத்தாயிரத்துக்குமேல் கூடியிருந்தவர்கள் இதை அசைவற்றுக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

இதற்குப் பிறகு அடிக்கடி எனக்கு இதே யோசனை வந்துகொண்டிருக்கிறது. கலப்பு மணம் ஒன்று தவிர வேறு எதுவும் ஜாதியைக் கொல்லாது என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள். காமராசர் குறைந்த பட்சம் 100 கூட்டங்களிலாவது இது பற்றிக் கூறியிருப்பாரென்று நினைக்கிறேன்.

ஆனால் எந்தச் சமூகமும் அசைவதாகக் காணோம்! நாடார் சமூகம் மட்டுமல்ல. இன்னும் எத்தனையோ சில்லறைச் சமூகங்களுக்குக் கலப்பு மணம் என்றால் ஒரே நடுக்கம்! இதில் படித்தவன்- வீரன்- புரட்சிக்காரன்-பேச்சுக்காரன் - எழுத்தாளி - முன்னேற்ற வீரன் - ஆகஸ்ட் தியாகி - செப்டம்பர் ஸ்ரீமான்-அன்பே சிவம் என்னும் சைவன்- ஆழ்வார்களைக் காட்டும் வைணவன் -அவன்- இவன்- உவன்- எல்லோரும் ஒரு கூடைப் பிடாரியாகத் தானிருக்கிறார்கள்!

ஒரு ராஜகோபாலாச்சாரியார் தம் பெண்ணைப் பார்த்துப் பெருமைப்படலாம்!

ஒரு கோபால்சாமி அய்யங்கார் தம் மகனைப் பார்த்துப் பூரிக்கலாம்!

ஒரு வெங்கட்ராம சாஸ்திரி தம் மகனைப் பார்த்து வீரநடை நடக்கலாம்!

ஓரு ஆர். கே. எஸ்.-??

ஒரு ஏ. ஆர். -??

ஒரு பி. டி. ஆர்.-??

ஒரு பாண்டியன்-??

நம் திராவிட சமூகம் எப்படித்தான் உருப்படப் போகிறதோ! எனக்கு என்னமோ நம்பிக்கையில்லை! ஒரு சர்வாதிகாரி வந்து உத்தரவு மேல் உத்தரவு போட்டால்தான் முடியும்!

நம் நாட்டுக்குத் தேவை என்ன? ஜனநாயகமல்ல! அது ஜல்லி கட்டு விழா! வேண்டியது, ஒரு கமால் பாட்சா! ஒரு லெனின்! அதாவது, “மாறு அல்லது மாண்டுபோ! இதோ! துப்பாக்கிமுனை!” - என்ற உத்தரவுதான் தேவை!

- குத்தூசி குருசாமி (19-7-50)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It