பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில் 9-2-2020 அன்று கோவையில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
வீரவணக்கத் தீர்மானங்கள்
1. சாதிக் கொடுமைகளை எதிர்த்தும், சாதி ஆதிக்கத்தை ஒழிக்கும் நோக்கத்தோடும் களமாடி, 1957 ஆம் ஆண்டு சாதி ஒழிப்புக்காக சாதியைப் பாதுகாக்கின்ற சட்டத்தைத் தீயிட்டுக் கொளுத்திச் சிறை சென்றதோடு மட்டுமின்றி, அப்போராட்டக் காலச் சூழலில் ஈகியர்களான எண்ணற்ற தோழர்கள் உள்ளிட்ட 20 - ஆம் நூற்றாண்டின் சாதி ஒழிப்புப் போராளியர்களாக முனைந்து எழுந்த அறிஞர்கள், இயக்கச் செயற்பாட்டாளர்கள், களப் போராளியர்கள், முன்னின்ற பொதுமக்கள் என அனைவருக்கும் மற்றும் அண்மையில் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்த நிலையில் மறைவுற்ற பதினேழு ஏதுமறியா மக்களுக்கும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு வீரவணக்கம் செலுத்துகிறது.
2. தமிழ்நாட்டிற்கு வெளியே பார்ப்பனிய சாதிய வெறிகளுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த அறிஞர்கள் எழுத்தாளர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான போராளியர், வெகு மக்கள் என அனைவருக்கும் இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.
3. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகத் தன்னுயிர் ஈந்த எண்ணற்ற போராளிகளுக்கும் ஈகம் செய்திருக்கின்ற தமிழீழ மக்களுக்கும் ஆதரவு தெரிவித்து உயிரை ஈந்த தமிழ்நாட்டுத் தமிழர்கள் அப்துல் ரகூப், முத்துக்குமார், செங்கொடி உள்ளிட்ட அனைவருக்கும் இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.
கொள்கைத் தீர்மானங்கள் :
4. சாதிவெறி, மதவெறியைத் தூண்டி மக்களிடையே ஒரு பக்கம் பகை உணர்வுகளை உருவாக்கிக் கொண்டிருப்பதோடு ஒரே மக்கள், ஒரே சட்டம், ஒற்றைப் பண்பாடு, ஒற்றை அடையாளம் என்கிற வகையில் பார்ப்பனிய அதிகார வெறி கொண்டு இயங்குகிற இந்திய அரசு, இந்தியாவிற்குள் உள்ளடக்கப்பட்டுள்ள பல்வேறு மொழித் தேசங்களின் வரலாற்றையும், பண்பாட்டையும், அடையாளங்களையும் மறுக்கிறது. தமிழ் ஈழ ஏதிலியர்களுக்குக் குடியுரிமை வழங்க மறுப்பதோடு, மதச் சிறுபான்மை மக்களுக்கும் குடியுரிமை வழங்க மறுத்து, இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றுகிற முயற்சி செய்கிற நோக்கில் உள்ள இந்திய அரசை இம் மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்நிலையில் மக்கள் தங்கள் இன அடையாள உரிமைகளையும், மொழித் தேச அளவில் தங்களைத் தமிழர்கள் என்றே பதிந்து கொள்ளவும், தமிழக மக்களைக் குடியுரிமையோடு இங்கு வாழ வைக்கவும், மதச் சிறுபான்மையினருக்கு எவ்வகை இடர்களும் ஏற்படாத வகையில் குடியுரிமை வழங்கவும் இம் மாநாடு வலியுறுத்துகிறது..
5. தமிழகத்தில், சாதி ஆணவப் படுகொலைகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிக் கொண்டே வருகின்றன. சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்குச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றமே வலியுறுத்தி உள்ளது. தவிரவும் இந்தியச் சட்ட ஆணையம் மற்றும் இந்திய மகளிர் ஆணையம் ஆகியவையும் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளன. இந்நிலையில் சாதித ஆணவப் படுகொலைகள் குறித்து இதுவரையில் தமிழக அரசு ஏதும் கருத்தறிவிக்காமல் இருப்பது சரியன்று. எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டும், நடப்பு நிலையைக் கருத்தில் கொண்டும் சாதி ஆணவப் படுகொலையைத் தடுக்கச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும், சாதிமறுப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்தவும், சாதிமறுப்புத் திருமணங்களை நடத்தி வைக்கவும், சாதிமறுப்புத் தம்பதிகளுக்குச் சட்ட, சமூகப் பாதுகாப்பு வழங்கவும் அவர்களின் வாரிசுகளைச் சாதியற்றவர்களாகப் பதிவு செய்து அவர்களுக்குச் சிறப்புரிமை வழங்கவும் சாதிமறுப்புத் திருமணப் பாதுகாப்பு ஆணையம் என்கிற பெயரில், ஒரு தனி ஆணையம் அமைத்திட வேண்டும் எனவும் தமிழ்நாடு மற்றும் இந்திய அரசுகளை இம் மாநாடு வலியுறுத்துகிறது.
6. சாதி ஆணவப் படுகொலைகள் நடந்தால், அதற்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரும் பொறுப்பு ஏற்க வேண்டும் என நீதிமன்றங்கள் வலியுறுத்தி உள்ளன. எனவே சாதி ஆணவப் படுகொலைகள் அதிகமாக நடக்கும் மாவட்டங்களில் அம் மாவட்ட ஆட்சியரும், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம் மாநாடு கோருகிறது.
7. சாதி, மத மறுப்புத் திருமணம் செய்யும் இணையருக்குக் குறிப்பிட்ட காலம் வரை பாதுகாப்பு வழங்கப் பாதுகாப்பு இல்லங்களைப் பஞ்சாப் அரசு நிறுவி உள்ளது. அதைப் போன்ற பாதுகாப்பு இல்லங்களைத் தமிழக அரசு உருவாக்க வேண்டும் என இம்மாநாடு பரிந்துரைக்கிறது.
8. சாதி, மத மறுப்புத் திருமணம் செய்து கொண்ட இணையர்களை நாட்டின் சிறந்த குடிமக்களாக அறிவிக்க வேண்டும். மேலும் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், காவல் உயரதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் பங்கேற்கும் அரசு விழாக்களில் அவர்களைப் பாராட்டிச் சிறப்பிக்க அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றும், சாதிமறுப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்தவும், நெருங்கிய இரத்த உறவுத் திருமணங்கள் செய்வதைத் தவிர்க்கப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்றும், குறிப்பாக நெருங்கிய இரத்த உறவுத் திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை மற்றும் உடலியல் குறைபாடுகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவியல் அடிப்படையிலான விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
9. தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009, அனைத்துத் திருமணங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. மேலும் திருமணம் நடந்த இடத்தில்தான் திருமணம் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற சலுகையையும் அது வழங்கி உள்ளது. அச்சட்டப்படி சாதி குறித்து எதுவும் கேட்கப்படுவதில்லை. ஆனால் தற்பொழுது அச் சட்டத்தின் கீழ்த் திருமணம் செய்ய இருப்பவர்களின் மதம் பற்றிக் கேட்கப்படுகிறது. சாதி / மதம் குறித்து எவரும் தெரிவிக்க வேண்டியதில்லை என 1973 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எனவே தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டத்தில் மதம் பற்றிக் கேட்கக் கூடாது என்பதோடு, எந்த வகைக் கால வரையறையும் இருக்கக் கூடாது என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.
10. சாதி மறுப்புத் திருமணம் செய்யும் இணையருக்குச் சிறுதொழில் நடத்த வட்டியில்லாக் கடன், தொழில் நடத்த அனுமதி வழங்குவதில் முன்னுரிமை, இலவச வீட்டுமனைப் பட்டா, வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு போன்றவை அனைத்துப் பிரிவு சாதியினருக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும், சாதி மறுப்புத் திருமணம் செய்த இணையரின் குழந்தைகளுக்கு அனைத்து நிலைகளிலும் கட்டணமில்லாக் கல்வியும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறப்பு இடஒதுக்கீடும் வழங்க வேண்டும் எனவும் இம் மாநாடு வேண்டுகிறது.
11. சாதி மறுப்புத் திருமண இணையருக்கு இராசசுத்தான் அரசு ரூ.5 இலட்சம் உதவித் தொகை வழங்குகிறது. பல மாநிலங்கள் குறைந்தது ஒரு இலட்சம் ரூபாய் வரை உதவித் தொகை வழங்குகின்றன. ஆனால் இந்தியாவிலேயே மிகக் குறைந்த உதவித் தொகையைத்தான் தமிழக அரசு வழங்கி வருகிறது. அதிலும் பட்டம் பெற்ற பெண்களுக்கு அதிக உதவித் தொகையும், பட்டம் பெறாத பெண்களுக்குக் குறைவான உதவித் தொகையும் வழங்குகிறது. எனவே இந்தப் பாகுபாட்டைக் களைந்து, சாதிமறுப்பு இணையருக்கு இராசசுத்தான் அரசு வழங்குவதுபோல் ஐந்து இலட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும் என இம்மாநாடு வேண்டுகிறது.
12. சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட இணையரின் குழந்தைகளுக்கு மருத்துவம். மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு இடங்களைத் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. ஆனால் 69 விழுக்காட்டிற்கு மேல் இந்த இட ஒதுக்கீடு வருவதால், அதை வழங்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. ஆனால் அந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. சாதிமறுப்புத் திருமண இணையரின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகையைப் பறிக்கும் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விரைவுபடுத்தி நீதியை மீட்டுத் தருமாறு இம் மாநாடு தமிழக அரசைக் கோருகிறது.
13. பட்டியலினத்தவர் மீதான வன்கொடுமைகள் குறித்துத் தொடர்ந்து மீளாய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனும் சட்டப் பொறுப்பு இருந்தாலும், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் அப்படிப்பட்ட கூட்டங்கள் நடைபெறுவதில்லை. எனவே இப்படிப்பட்ட மீளாய்வுக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் எனவும், அவற்றின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகள் பொதுவெளியில் பகிரப்பட வேண்டும் எனவும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.
14. ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளிலுள்ள காவல் நிலையங்களில், அதே சாதியைச் சார்ந்தவர்களை அந்தக் காவல் நிலையத்தில் உயர் அதிகாரிகளாக எக்காரணம் கொண்டும் நியமிக்கக் கூடாது என இம்மாநாடு வற்புறுத்துகிறது.
15. கல்வி நிலையங்களில் சாதியை வெளிப்படுத்தும்படி வண்ணக் கயிறுகளை அக் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் கட்டி வரக் கூடாது என்ற தெளிவான ஆணையை வெளியிட வேண்டும் என இம் மாநாடு தமிழக அரசைக் கோருகிறது.
16. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்களுக்கான பள்ளிகளில், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும், அப் பகுதியிலுள்ள கல்வி நிலையங்களின் அடிப்படைக் கட்டமைப்பை விரைந்து மேம்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசை இம்மாநாடு வேண்டுகிறது.
17. கல்வி நிலையங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயரை நீக்க வேண்டும் எனவும், தீண்டாமை மற்றும் சாதி ஒழிப்பு குறித்த செய்திகளைப் பாடத் திட்டத்தில் இணைக்க வேண்டும் எனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
18. அனைத்துப் பட்டியல் சாதி, பழங்குடியர்களின் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சாதியர்களின் வீடு, நிலமற்றக் குழந்தைகளுக்கு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான கல்வி உதவித் தொகைத் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.
19. நிலமற்ற பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக 1892 ஆம் ஆண்டு பிரிட்டிஷ்- இந்திய அரசால் பஞ்சமி நிலம் என்ற பெயரில் விவசாய நிலம் வழங்கப்பட்டது. தற்போது அந்த நிலத்தின் பெரும்பகுதி வசதி படைத்த பட்டியல் மற்றும் பழங்குடிகள் அல்லாதவர்கள் அரசியல் மற்றும் சாதி செல்வாக்கைப் பயன்படுத்தி பஞ்சமி நிலத்தை அபகரித்துக் கொண்டனர். தொடர் பஞ்சமி நில மீட்புப் போராட்டங்களின் விளைவாக கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் அனைத்து பஞ்சமி நிலங்களையும் மீட்டு உரிய பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களையும் உறுப்பினராகக் கொண்டு ஒரு மத்திய கமிட்டி அமைத்து ஆறு வார காலங்களுக்குள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இன்றுவரை எந்த நடவடிக்கைகளையும் தமிழ்நாட்டு அரசும், நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட பஞ்சமி நில மத்தியக் கமிட்டியும் எடுக்கவில்லை. இதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் பஞ்சமி நிலங்களை மீட்டு உரிய பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என இம் மாநாடு வலியுறுத்துகிறது.
20. தீண்டாமைச் சுவர்கள் சாதிய வன்கொடுமைகளை அதிகப்படுத்தும் நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு இழப்புகளை ஒடுக்கப்பட்ட மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசே முழுப் பொறுப்பெடுத்து தமிழகமெங்கும் அமைக்கப்பட்டுள்ள தீண்டாமைச் சுவர்களைக் கணக்கெடுத்து அவற்றையெல்லாம் தரைமட்டமாக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
21. தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆலயங்களில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்ற நடைமுறையைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் எனவும், இந்து சமய அறநிலையத் துறை என்ற பெயரைத் தமிழர்களின் சமய அறநிலையத் துறை என மாற்றிப் பெயரிட வேண்டும் எனவும், தமிழக ஆலயங்களில் சமசுக்கிருத பூசனை (அர்ச்சனை)க் கட்டணத்தில் பாதிக் கட்டணம் மட்டுமே தமிழ்ப் பூசனை (அர்ச்சனைக்கு)ப் பெறப்பட வேண்டும் எனவும் தமிழக அரசை இம் மாநாடு வேண்டுகிறது.
22. தமிழக உயர்நெறி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டுமென்று மிக நீண்ட காலமாகப் போராடி வருகின்ற வழக்கறிஞர்களின் கோரிக்கைகளை தமிழக உயர்நெறிமன்றம் சிறிதும் பொருட்படுத்தாமல் தட்டிக் கழிப்பதை இம் மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. மிக விரைவில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்கவில்லை என்றால் வெகுமக்களைத் திரட்டி அதற்கெனத் தனியே போராட வேண்டியிருக்குமென தொடர்புடைய துறையினருக்கு இம் மாநாடு வலியுறுத்திச் சொல்லிக் கொள்கிறது.
22. தமிழகத்தில் செயல்படுகிற ஐஐடி உள்ளிட்ட இந்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் முழுமையான அளவில் இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என இம் மாநாடு கடுமையாக வலியுறுத்துகிறது.
23. கேரள மாநிலத்தைப் போல, பூசகர் (அர்ச்சகர்)களாகப் பயிற்சி பெற்ற ஒடுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்களையும் கோயில்களில் பூசகர் (அர்ச்சகர்)களாகத் தமிழக அரசுப் பணி நியமனம் செய்ய வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
25. இந்திய அரசியல் சட்டத்தை யாத்தளித்த சிற்பி என்கிற பெருமைக்கும், சாதி ஒழிப்புப் போராட்டக் குறியீடாகவும் அறியப்படுகிற அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக் கோவை, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் நிறுவ காவல்துறை தொடந்து மறுத்து வரும் நிலையில் தமிழக அரசே பொறுப்பெடுத்துத் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நிறுவ வேண்டும் என இம் மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
26. அண்மைக் காலமாய்ச் சாதிவெறியோடும், மதவெறியோடும் பெரியார், அம்பேத்கர் எனக் குமுகத் தலைவர்களின் சிலைகளை உடைத்திடும் கயவாளிகளின் போக்கை இம் மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், அப்படியான குமுகப் பகைவர்களை அரசு கடுமையாக ஒடுக்க வேண்டும் என மாநாடு வலியுறுத்துகிறது.
27. கோவை மாவட்ட சிறுவாணி நீர்வளம் புகழ்பெற்ற நிலையிலிருக்க அதை இதுவரை கையாண்டு வந்த கோவை மாநகராட்சி கோவை மாநகருக்கும், கோவை மாவட்ட அளவில் பல ஊர்களுக்கும் தண்ணீரை நிறைவோடு வழங்கி வரும் நிலையில் பிரான்சு நாட்டைச் சார்ந்த சூயஸ் எனும் பன்னாட்டு நிறுவனத்திற்கு அப்படியே அக் குடிநீர் உரிமையை விற்றுவிட்ட கொடுமையை தமிழக அரசு செய்திருக்கிறது. இதன்மூலம் இலவயமாகவும், மிகவும் மலிவான விலையிலும் தண்ணீரைப் பெற்று வந்த கோவை மாநகர, மாவட்ட வெகுமக்கள் அனைவரும் பெரும் நெருக்கடிகளுக்குள்ளாகி அதிகப்படியான நீரைப் பெறக்கூடிய அவலமான சூழல் உருவாக இருக்கும் நிலையில், அந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் உறவிற்கும், அதை ஏற்படுத்திய தமிழக அரசின் நடைமுறைக்கும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. தமிழக அரசு உடனடியாக இவ் வொப்பந்தத்தை கைவிட்டுவிட்டு கோவை மாவட்டவாழ் மக்களுக்கு மாநகராட்சியின் பொறுப்பிலேயே தண்ணீரை வழங்க வலியுறுத்துகிறது.
28. தமிழக மக்களின் எவ்வகை உரிமைகளுக்கும் குரல் கொடுக்காத திரைப்பட நடிகர் இரஜினிகாந்து, அண்மைக் காலமாகத் தமிழகத்தின் உரிமைகளுக்குப் போராடுகிற மக்களின் போராட்டங்களையும், போராடுபவர்களையும் இழிவுபடுத்தித் திமிரோடு பேசி வருவதை இக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. மக்கள் போராடி வென்றெடுத்த பல உரிமைகளை ஏற்று மகிழ்கிற அவரின் திமிர்பிடித்த பேச்சுகள் இனி தொடரக் கூடாது என்றும், அவர் நாவடக்கிப் பேச வேண்டும் என்றும் எச்சரிக்கிறோம்..
29. குடிமக்கள் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு போன்றவற்றை எதிர்த்து இந்தியா முழுவதும் தீவிரமான மக்கள்திரள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுத்து, தனது மக்கள் பகை நடவடிக்கைகளைச் செயல்படுத்தியே தீருவோம் எனும் பாசிச பாரதீய ஜனதாக் கட்சிக்குப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் சாதி / மத வேறுபாடுகளை ஊக்குவிக்கும் பார்ப்பனிய பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிராகத் தமிழக மக்கள் சமரசமற்ற போராட்டங்களை எழுச்சியுடன் முன்னெடுக்க வேண்டும் எனவும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு இம் மாநாட்டின்மூலம் அறைகூவல் விடுக்கிறது.
30. பெரியார் மண் எனப்படும் தமிழகத்தில் பகுத்தறிவு மற்றும் அறிவியலுக்கு எதிரான பரப்புரை, பார்ப்பன இந்துத்துவ அமைப்புகளால், ஊடகங்களால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல் மனப்பான்மையை (Scientific Temper) ஒவ்வொருவரிடமும் பெருமளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என அரசியல் அமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. எனவே பெருகி வரும் சாதி / மதப்பாகுபாடு மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகத் தமிழகம் எங்கும் தமிழ்ச் சான்றோர் திருவள்ளுவர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் மற்றும் பேராசான் கார்ல் மார்க்சு போன்றோர் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் பெயர்களில் படிப்பகங்கள், நூலகங்கள் போன்றவற்றைப் பெரியாரிய உணர்வாளர்கள் ஒவ்வோர் ஊரிலும் தொடங்க வேண்டும்.
போராட்ட அறிவிப்புத் தீர்மானம்:
31. சாதி ஆணவ வெறிகளுக்கு அடித்தளமாகவும், பார்ப்பனியக் கருத்தாக்கங்களின் தொகு மொத்த வெளிப்பாடாகவுமே மனுதர்மம் எனும் பார்ப்பனிய, சாதிவெறி பிடித்த நூல் உள்ளது என்பதைத் தமிழ் அறிஞர்கள் பலரும், தந்தை பெரியார் அவர்களும், அண்ணல் அம்பேத்கர் அவர்களும் அடையாளப்படுத்தியும், அதை மறுத்த செயல்பாடுகளை முன்னெடுத்தும் இருக்கின்றனர். அம்பேத்கரும், பெரியாரும் அக் கருத்துக்கும், செயற்பாடுகளுக்கும் முன்னோட்டமாக மனுதர்மத்தைத் தீயிட்டுக் கொளுத்தியும் இருக்கின்றனர். அவர்களின் வழிகாட்டலில் வெறிபிடித்த பார்ப்பனிய சாதிய ஆணவ நூலான மனுநுாலை எதிர்வரும் மே 20-ஆம் நாள் அதாவது அயோத்திதாசப் பண்டிதர் பிறந்தநாளில் தமிழகமெங்கும் தீயிட்டுக் கொளுத்தும் போராட்டத்தை முன்னெடுப்பது எனப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு, சாதி ஒழிப்பு மாநாட்டின்வழி அறிவிக்கிறது.
- பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு