kuthuoosi gurusamyதலைவர் என்று சொன்னால் என்னவோ சப்பென்று இருக்கிறதல்லவா? அதற்காகத்தான் சில தமிழ் மேதாவிகள் “ராஷ்ட்ரபதி” என்று சொல்லி வருகிறார்கள்!

கடலெண்ணெய் என்று சொன்னால் பெரிய மனுஷாளில் யார் வாங்குவார்கள்? அதற்காகவே வனஸ்பதி என்ற பெயர்!

வனஸ்பதி சச்சரவை காந்தியார்தான் முதன் முதல் கிளப்பி விட்டார். வனஸ்பதி உற்பத்தி முதலாளிகள் அத்தனை பேரும் கிட்டத்தட்ட வடநாட்டுக்காரரே என்பதையறிந்ததும், அவர் அதைக் கடுமையாகக் கண்டித்தார்.

“நெய்” உருவத்தில் டப்பிகளில் அடைப்பதால் மாட்டு நெய்யுடன் கலந்து ஏமாற்றுவதற்கு வசதியாயிருக்கிறதென்று கூறி, அந்த உற்பத்தியையே எதிர்த்து வந்தார்.

பிறகு காங்கிரஸ் பண மூட்டைகளில் சில கண்ஜடை காட்டின! “எப்படியோ நாசமாய்ப் போங்கள்!” என்று வெறுத்துப் போய்க் கூறிவிட்டு சும்மாயிருந்து விட்டார்!

பிறகு பிரபல டாக்டர்களில் பலர் வனஸ்பதி உடலுக்குக்கெடுதி என்று தீர்ப்புக் கூறினார்கள்! வெறும் கடலெண்ணெயைப் பயன்படுத்தினால் நல்லது; அதைவிட்டு அத்துடன் தீமையான சரக்கைக் கலந்து கெட்டியாக்கி உண்பதுதான் தப்பு என்பது இந்த டாக்டர்கள் கருத்து.

இதனால் கொஞ்சம் கொந்தளிப்பு ஏற்பட்டது. வனஸ்பதி முதலாளிகள்! ஒன்று கூடி ஆலோசித்தனர். இறுதியில் கடந்த ஒரு மாத காலமாக ஒரு விளம்பரம் வந்து கொண்டிருக்கிறது!

ஆராய்ச்சி நிபுணர்கள் கூறிவிட்டார்களாம், வனஸ்பதியினால் கெடுதல் இல்லையென்று! இந்தத் தீர்ப்பை உணவு இலாகா மந்திரி பார்லிமெண்டில் படித்தாராம்! யு. பி. சுகாதார மந்திரியும் இதை ஆமோதித்து விட்டாராம்!

சென்னை சட்ட சபையில் வனஸ்பதி உற்பத்தித் தடை மசோதா ஒன்றைக் கொண்டு வரப்போகிறார், ஓர் உறுப்பினர். அது பற்றி வழக்கம் போலப் பொது மக்கள் கருத்தைக் கேட்டிருக்கிறார்கள், சர்க்கார். எண்ணெய் வித்து வியாபாரிகள் சங்கம் தன் கருத்தைத் தெரிவித்திருக்கிறது.

தடை மசோதாவை எதிர்த்திருக்கிறது. இந்தச் சங்கம்!

வனஸ்பதி ஏழைகளுக்குப் பயன்படுகிறதாம்! ஏழை பங்காளரான இந்த வியாபாரிகள் சங்கம் கூறுகின்ற காரணங்களில் இதுவும் ஒன்று! நியாயந்தானே! வனஸ்பதி மட்டுமா? ராஷ்ட்ரபதி கூட ஏழைகள் பிரதிநிதி என்று தானே கூறிக் கொள்கிறார்? டால்மியா கூட அப்படித்தான் கூறுகிறார்! 3 லட்சம் ரூபாய்க்கு நம் வரிப் பணத்தில் மாஸ்கோவில் தட்டு முட்டு சாமான்கள் வாங்கிய விஜயலட்சுமி பண்டிட் கூட ஏழைகள் பிரதிநிதிதானே?

ரேஷன் அரிசி வாங்கவே ஏழைகளிடத்தில் காசைக் காணோம்! வனஸ்பதியாம், வனஸ்பதி!

இது ஒரு இமிடேஷன் வைரம்! வனஸ்பதி ரங்கூன் டயமண்ட்! உடலுக்கு நல்லதா? கெட்டதா? அல்லது இரண்டுக்கும் நடுவிலா? என்பது ஒருபுறமிருக்கட்டும். அதை நெய் மாதிரிச் செய்வானேயப்பா?

அசல் கடலையெண்ணெயை அவ்வப்போது வாங்கிச் சமைப்பதை விட்டுவிட்டு, அதை நெய்யாக்குவானேன்? வர்ண மேற்றுவானேன்? ‘டின்’னில் அடைப்பானேன்? எட்டணா பெறும் படியான சரக்குக்கு மூன்று ரூபாய் கொடுப்பானேன்? தேங்காய்ப் பிண்ணாக்கை வெள்ளிக் காகிதத்தில் சுற்றி “செக்கு சாக்லெட்” என்ற பெயரால் விற்றா ஏமாற்ற வேண்டும்?

கடலெண்ணெய் உடலுக்கு நல்லது என்ற உண்மையை வனஸ்பதி மூலமாகவா பிரசாரஞ் செய்ய வேண்டும்?

காந்தியார் இன்று உயிருடனில்லை. ஆதலால் காங்கிரஸ் சர்க்கார் வனஸ்பதி உற்பத்தியைத் தடை செய்யப் போவதில்லை. மக்கள் ஏமாந்து போனாலென்ன? நல்ல நெய்யில் வனஸ்பதியைக் கலந்தாலென்ன? எது எப்படி யானாலென்ன? காங்கிரஸ் எலெக்ஷனில் வெற்றி பெற வேண்டும்; மீண்டும் அதிகாரஞ் செலுத்த வேண்டும்! இதுதானே இன்றுள்ள பிரச்னை? எல்லா சங்கதிகளும் இந்த உரைகல்லில் தானே உரைக்கப்படுகின்றன? எலெக்ஷன் பைத்தியம் முற்ற முற்ற இன்னும் எத்தனையோ துணிகளைக் கிழிக்கப் போகிறார்கள், அதிகார நாற்காலியில் அமர்ந்துள்ள தியாகிகள்!

 - குத்தூசி குருசாமி(22-5-50)

நன்றி: வாலாசா வல்லவன் 

Pin It