கே. பாஷ்யமய்யங்காருக்குப் போலீஸ் தடியால் ஓர் அடி வீழ்ந்ததும் பார்லிமெண்ட் முதல் பட்டிதொட்டி வரையில் அண்ட சராசரங்கள் அத்தனையும் அதிர்ந்தனவே, ஞாபகமிருக்கிறதா?
இதோ பாருங்கள்! பக்கிங்ஹாம் மில் தொழிலாளர் குடும்பங்கள் எத்தனை மாதம் அரைப் பட்டினியாக கிடந்தன? அப்போதெல்லாம் அச்சத்தில் கிடைக்காத பெரிய எழுத்து இப்போது தேடி யெடுக்கப்பட்டிருக்கிறது. “ஸ்ரீ கே. டி. பாஷ்யத்திற்கு நேற்றிரவு உணவில்லை,” இந்தத் தலைப்பு 14 பாயிண்ட் ‘டைப்பில்’ கால் அங்குல உயரத்திற்கு 12-9-47 ‘தினமணியில்’ 2 -ம் பக்கத்தில் காணப்படுவது!
கே. டி. பாஷ்யம் மைசூர் சமஸ்தான காங்கிரஸ் தலைவர். அதுவும் ஓமந்தூராரைப் போல சாமான்யரல்ல! சாட்சாத் பிராமணர்! அவருக்கு நேற்றிரவு சிறையில் உணவு அளிக்கப்பட வில்லையாம்! இதுதான் செய்தி!
என்ன கிராதகனய்யா, அந்தஜெயில் நிர்வாகி! இராத்திரி முழுதும் ஒரு மனுஷன் பட்டினியாகவா கிடந்தார்? நினைத்தாலே இரத்தம் கொதிக்கிறதே! பரம்பரைப் பட்டினியாகவோ, பஞ்சத்தால் பட்டினியாகவோ, கிடந்தாலும் பொறுத்துக் கொள்ளலாம்! அந்த மாதிரிப் பட்டினியாக எத்தனையோ லட்சம் பேர் கிடக்கிறார்கள். அவர்கள் ‘தலைவிதி’ அது! ஆனால் ஒருவேளைப் பட்டினி என்றால் எப்படியிருக்கும் என்பதையே பிறந்தது முதல் அறியாமலும், யார் எக்கேடு கெட்டாலும் வயிறு நிறைய உண்டு, ஜீரணத்திற்காக பூர்ணாதி லேகியம் சாப்பிட்டும், தொந்தி மெருகு குறையாமல், நகம் கருப்பாகாமல், சந்தன வாடை தவிர வியர்வை நாற்றமே காணாத மேனியாய், பரம்பரை பரம்பரையாக, “போஜனமே பொதுஜன சேவை” யென்று வளர்ந்தவரும் பூசுரர் கூட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ பாஷ்யம் ஓர் இராத்திரி முழுதும் பட்டினியாய்க் கிடப்பதென்றால், கொட்டை எழுத்துத் தலைப்புத்தானா போடுவது, தரித்திரம்? அதுவும் சிவராமய்யரை ஆசிரியராகக் கொண்ட பத்திரிகையில்! தலையங்கமல்லவா தீட்டியிருக்க வேண்டும்?
ஒரு பிராமணச் சிசு இறந்ததற்காக ஒரு திராவிடன் தலையையே இராமன் வெட்டிய இந்தப் புண்ணிய பூமியில், இன்றுள்ள ராமராஜ்யத்தில் ஒரு பாஷ்யமய்யங்கார் இரவு முழுவதும் பட்டினி போடப்பட்டார் என்றால், இதென்ன அக்கிரமம்!
ஏ! ஆபத் பாந்தவா! கருணாமூர்த்தி! வைகுண்ட வாசகா! புறப்பட்டு வாரும், கருட வாகன மீதேறி!
- குத்தூசி குருசாமி (13-09-1947)
நன்றி: வாலாசா வல்லவன்