கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

ghandhii 450காந்தியின் 150ஆவது பிறந்த நாளில் காந்திய சிந்தனைகள் விவாதப் பொருளாகியிருக்கிறது. காந்தியின் தீண்டாமை ஒழிப்பு, கதர், மதுவிலக்கு உள்ளிட்ட சமுதாயக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டதால் தான் பெரியார் காங்கிரசில் சேர்ந்து, அந்தக் கொள்கைகளுக்காக கடுமையாக உழைத்தார். அதே சமுதாயப் பார்வையில் காங்கிரஸ் வகுப்புவாதி பிரதிநிதித்துவம் என்ற சமூகங்களுக்கிடையிலான ஏற்றத் தாழ்வுகளைப் போக்கும் சம உரிமைப் பங்கீட்டுக்கு முன்வரவேண்டும் என்ற கொள்கைக்கு கட்சிக்குள்ளே போராடினார்.

பார்ப்பனப் பிறவி ஆதிக்கவாதிகள் அதற்கு உடன்படவில்லை. காந்தியார் திட்டவட்டமான நிலை எடுக்க முடியாத ஊசலாட்டத்தில் இருந்தார். காங்கிரசை விட்டு வெளியேறிய பெரியார், அதற்குப் பிறகும் காந்தியாரின் தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட சமுதாயக் கொள்கைகளை ஆதரித்தே வந்தார்.

1927இல் பெங்களூரில் காந்தியை நேரடியாக சந்தித்து உரையாடிய பிறகே காந்தியை எதிர்க்கத் தொடங்கினார். 

காந்தியின் சமூகச் செல்வாக்கு பார்ப்பனியத்தை வளர்ப்பதற்கு பார்ப்பனர்களால் பயன்படுத்தப்படுவதை உணர்ந்த பெரியார், காந்தியின் ‘பிம்பத்தை’ தகர்ப்பது பார்ப்பனிய எதிர்ப்புக்கான தேவை என்பதை உணர்ந்திருந்தார். 

சமூகத்தில் உரிமைகளைப் பகிர்ந்து கொள்ள மறுக்கும் பார்ப்பனியத்துக்கு எதிரான போராட்டங்களை பெரியார் முன்னெடுத்தார். அதைப் பாதுகாக்கும் ஆணி வேர்களான கடவுள், மதம், இதிகாசம், புராணங்களை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தினார். காந்தியார் எண்ணவோட்டமோ அதற்கு நேர்மாறாக இருந்தது.

பார்ப்பனர்களில் மாற்றத்தை விரும்புவோர் இருக்கிறார்கள் என்று தனி மனிதர்களை நம்பியதோடு பார்ப்பனர்கள் காலப்போக்கில் தங்களை மாற்றிக் கொண்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

இந்துமதத்தில் இருந்து கொண்டு பார்ப்பனர்களுக்கு எதிரான கருத்துகளைப் பேசினால் பார்ப்பனர்கள் உயிருடன் விட்டு வைக்க மாட்டார்கள் என்று பெரியார் காந்தியிடமே எச்சரித்தார். பெரியார் எச்சரித்ததே நடந்தது. கோட்சே என்ற மராட்டியப் பார்ப்பனர் வழியாக பார்ப்பனியம் காந்தியின் உயிரைப் பறித்தது. அதன் கோர முகத்தை நாட்டு மக்கள் உணர வேண்டும் என்பதற்காகவே காந்தி சுட்டுக் கொல்லப்பட்டவுடன் இந்த நாட்டுக்கு ‘காந்தி தேசம்’ என்று பெயர் சூட்டுங்கள் என்றார் பெரியார்.

காந்தியின் கொலையை பார்ப்பனர்களுக்கு எதிரான வன்முறைக் களமாக பெரியார் ஒருபோதும் மாற்ற விரும்பவில்லை. அவர் நினைத்திருந்தால் செய்திருக்க முடியும். மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அப்படித்தான் நடந்தது. தமிழ்நாட்டில் பார்ப்பனருக்கு எதிராக எந்தக் கலவரமும் வேண்டாம் என்று அமைதிப்படுத்தினார்.

காந்தி உயிரைப் பறித்த கோட்சேக்கள் பரம்பரை இப்போது காந்தியின் புகழ் பாடுகிறது; விழா எடுக்கிறது; அம்பேத்கரையும் அரவணைக்கிறது. ஆனால் அவர்கள் கையில் எடுக்க முடியாத ‘நெருப்புத் துண்டாக’ பெரியார் மட்டுமே இருக்கிறார். வாழ்வின் இறுதி காலங்களில் பார்ப்பபனியம் குறித்த காந்தியின் பார்வையில் மாற்றங்கள் நிகழ்ந்ததை நாம் காண முடிகிறது.

பாகிஸ்தான் பிரிவினையை முதலில் எதிர்த்த அவர், பிறகு ஆதரித்தார். இஸ்லாமியர்களுக்கு எதிரான ‘நவகாளி’ கலவரத்தையும் படுகொலைகளையும் கண்டித்தார். நேருவும், பட்டேலும் பாகிஸ்தானுக்கு உறுதியளித்தபடி இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்றார். ‘பிராமணர்கள்’ பிராமண தர்மப்படி செயல்படுகிறார்களா என்று கேள்வி எழுப்பினார். தனது ‘பிரார்த்தனை’யில் ஈசுவரனோடு அல்லாவையும் இணைத்துக் கொண்டார். அதனால் பார்ப்பனிய வெறுப்புக்கு உள்ளானார்.

பார்ப்பனிய பாசிச இருள் சூழ்ந்திருக்கும் இன்றைய சூழலில் காந்தியம் குறித்த மறுவாசிப்பு நமக்கு தேவைப்படுகிறது. பெரியார் காந்திக்கு தந்த எச்சரிக்கையில் அடங்கிய ஆழமான புரிதலும் வெளிச்சமும் நிச்சயமாக மறுவாசிப்புக்கு வழிகாட்டும்.