1. அது ஒன்றேதான் மக்கள் சமூகவாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது என்று கூறி சமதர்மத்துக்கு போராடுகின்றது.
2. அது ஒன்றேதான் மனித சமூகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன் ஏழை என்கின்ற வித்தியாசம் இல்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும் என்று கூறி சமதர்மத்துக்குப் போராடுகின்றது.
3. அது ஒன்றேதான் மனித சமூகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் சகல துறைகளிலும் சரிசமத்துவம் இருக்க வேண்டும் என்று கூறி சமதர்மத்துக்குப் போராடுகின்றது.
4. அது ஒன்றேதான் மனித சமூகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமூக நேய, ஒருமையே வேண்டும் என்று கூறி சமதர்மத்திற்குப் போராடுகின்றது.
5. அது ஒன்றேதான் உலகில் உழைப்பாளி என்றும், முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும் சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரிசமமாக அனுபவிக்க வேண்டும் என்று கூறி சமதர்மத்துக்குப் போராடுகின்றது.
6, அது ஒன்றேதான் ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும் எவ்விதத்தும் அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்க சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும் என்று கூறி சமதர்மத்துக்குப் போராடுகின்றது.
(புரட்சி - பெட்டிச் செய்தி - 17.12.1933)
***
வடநாட்டில் சுயமரியாதை வெற்றி
மத்திய மாகாணம், பீரார் ஆகிய இருமாகாணங்களின் தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சி (The workers and Peasants’ Party)யென்று சமதர்மத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரிய நிர்வாக கமிட்டி அங்கத்தினர்களாக பிரபல தொழிற் சங்கத் தலைவர்களும், சோஷியலிஸ்ட் தலைவர்களுமாக பலர் இருக்கின்றனர். முக்கியமாக குறிப்பிடத்தக்க நாகபுரி தோழர் ஆர்.எஸ்.ராய்க்கர் எம்.ஏ., எல்.எல்.பி. அவர்களும், அம்ரோதி பி.ஜி.தேஷ்பாண்டே அவர்களும் பெரிதும் இதில் அதிக ஊக்கமெடுத்து உழைக்கின்றார்கள். நமது சுயமரியாதை லட்சியத்தின் வெற்றிக்கு இதுவும் எடுத்துக் காட்டாகும்.
(புரட்சி - செய்தி விளக்கம் - 17.12.1933)
***
தமிழ் அன்பர் மகாநாடு அதிகாரிகள் மறுப்பு
தமிழன்பர் மகாநாடு என்ற பார்ப்பனர் சூழ்ச்சி மகாநாட்டு சார்பில் நடைபெறப் போகிற புத்தகக் காட்சியை திறந்து வைப்பதாக வெளியிட்டிருந்த கல்வி இலாக்கா தலைவர், டைரக்டர் ஆப் பப்பிளிக் இன்ஸ்ட்ரஷன் என்னும் அதிகாரியானவர் இப்போது மறுத்து விட்டதாக தெரிகிறது. ஆதலால் அவருக்கு பதிலாக இராமநாதபுரம் இராஜாவை அந்தக் காட்சியை திறந்து வைக்கக் கேட்டு அவர் ஒப்புக் கொண்டிருப்பதாக பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறார்கள். ஆகவே மிகச்சிறு வயதுள்ளவரான ஒரு பெரியாரைத் தேடிப் பிடித்தது மிக புத்திசாலித்தனமான காரியமென்பதற்காக பாராட்டுகிறோம்.
(புரட்சி - செய்தி விளக்கம் - 17.12.1933)