தென்னவர் பண்பை, வீரம்

     தேக்கிய போர்வாள்! நாட்டை

மன்னவர் ஆண்ட பாட்டை

     மறத்தமிழ் வெற்றிப் பாட்டை

கன்னலாய்த் தமிழை அள்ளி

     கவிதையாய் வடித்த பாட்டை

பொன்வரி பெரியார் பாட்டை

     புகழ்பட விரித்தார் நன்னன்!

கோபுரம் சாய்ந்த தம்மா!

     கொடிதமிழ் அறுந்த தம்மா!

யாவரும் போற்றும் பண்பில்

     இடியொன்று விழுந்த தம்மா!

மேவிடும் கருவூ லத்தை

     மின்னலும் கிழித்த தம்மா!

தேனடை எரிந்த தென்றால்

     தேற்றுவார் உண்டோ? உண்டோ?

வீறுடைத் தமிழு ணர்வில்

     விசைகொண்ட நடையும் எங்கே?

காருடைக் கருத்தைச் சுமந்த

     கனிமொழி நாவும் எங்கே?

பேருடைப் புகழ்சேர் தங்கம்

     பீரிட்ட ஒளியும் எங்கே?

வேருடைத் தமிழின் தேக்கு

     விசையென சாய்ந்த தம்மா!

பெரியாரை உணர்ந்தவரே! திராவி டத்தில்

     பெருங்கடலாய்க் கொள்கைஅலை முழக்கம் செய்தீர்!

நரியாரின் சூழ்ச்சிகளை அறுத்தெ றிந்தே

     நாடெங்கும் மேடையிலே முழக்கம் செய்தீர்!

அரிதாரம் பூசிவந்த அவாள்கள் கொண்ட

     ஆணவத்தை அன்றன்று வெட்டிச் சாய்த்தீர்!

பரியாக வலம்வந்தீர்! திராவி டத்தின்

     பைந்தமிழே! நன்னனாரே! மீண்டும் வாரீர்!

Pin It