நிமிர்வோம், தனது ஓராண்டு பயணத்தை கடந்து வந்திருக்கிறது. 2016 டிசம்பர் 24இல் சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய வேத மரபு எதிர்ப்பு மாநாட்டில் முதல் இதழ் வெளி வந்தது. (இடையில் ஓர் இதழ் மட்டும் வெளி வரவில்லை) இது ஓர் இயக்கத்தின் இதழ்தான். ஆனாலும் இதன் உள்ளடக்கத்தை இயக்கத்தோடு குறுக்கி விடாது, பெரியாரின் கருத்தாயுதமாக விரிந்த தளத்தில் வளத்தெடுக்கவே விரும்புகிறோம். சமூக மாற்றத்துக்கான சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களுக்கு ‘நிமிர்வோம்’ தனது பக்கங்களை எப்போதும் திறந்தே வைத்திருக்கும். குறிப்பாக பெரியாரிய - அம்பேத்கரிய - மார்க்சிய சிந்தனைகளின் ‘உருத்திரட்சி’யான இளம் படைப்பாளிகளின் ‘அறிவுசார்’ அணியை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே நமது விருப்பம். இது காலத்தின் தேவை என்பதை கவலையோடு உணர்ந்திருக்கிறோம்.
‘உலக மயமாக்கல்’ வந்த பிறகு சமூகத்தில் நிகழ்ந்து வரும் அரசியல், பொருளியல், பண்பாட்டு சிதைவுகளுக்கிடையே சமூக மாற்றத்துக்கான பயணம், கடும் நெருக்கடிக்குள்ளாகி நிற்கிறது. இதைக் கடந்து செல்வதற்கான திட்டங்கள் செயல் உத்திகளோடு பயணத்தை முன்னெடுப்பதற்கான நடைமுறைகளை நாம் உருவாக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
ஜாதிய கட்டமைப்பு இறுகிப் போய் சமூகத்தில் ‘மேல் கீழ்’ இடைவெளி அதிகரித்து, ‘தேசபக்தி’, ‘வளர்ச்சி’ என்ற பொதுமைப்படுத்தப்பட்ட கருத்தியலுக்குள் அனைத்துப் பிரச்சினைகளையும் மூழ்கடித்துவிடும் ஆபத்துகள் சூழ்ந்திருக்கின்றன. இவ்வளவுக்குப் பிறகும் தமிழகத்தின் விழிப்புமிக்க இளைய தலைமுறை, பொது வெளிக்கு சமூக உணர்வுகளைத் தாங்கி வெளியே வந்திருப்பது நம்பிக்கை தரும் மாற்றம்.
திராவிட இயக்கத்தின் நிறைகுறைகளை மதிப்பிடும் உரிமை எவருக்கும் உண்டு. ஆனால், திராவிட இயக்கமே ‘சீரழிவுக்கு’ காரணம் என்ற பிரச்சாரம் அப்பட்டமான நேர்மையற்ற ‘அரசியல் சுயலாபத்துக்கான’ கூக்குரல் என்றே நாம் உறுதியாகக் கூறுவோம்.
திராவிட இயக்கத்தின் கடந்தகால வரலாறுகள், இன்றைய இளைய தலைமுறைக்குக் கொண்டு போய் சேர்க்கப்படவில்லை என்பதும் உண்மை. ‘நிமிர்வோம்’ அந்தப் பணிக்கு முன்னுரிமை தர விரும்புகிறது.
அண்மையில் முடிவெய்திய பேராசிரியர் நன்னன், பெரியாரியலுக்கு ஏராளமான நூல்களை எழுதிக் குவித்தார். ஆனால் தன் வரலாற்றை அவர் எழுதிடவில்லை. பெரியாரிஸ்டுகளுக்கே உரிய தன்னடக்கமான உயரிய பண்பு அது. ‘நிமிர்வோம்’, பேராசிரியர் நன்னனின் தன் வரலாற்றை நேரில் சந்தித்து பதிவு செய்தமைக்காகப் பெருமைப்படுகிறது.
இந்த இதழில் 1940ஆம் ஆண்டு முதல் திராவிட இயக்கத்திலும் அதன் பிறகு தி.மு.க.வின் தொடக்கக் காலத்திலிருந்தும் அதன் அதிகாரபூர்வ இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி, 91ஆம் அகவையில் வாழும் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் அவர்களின் அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறோம். வெளிச்சத்துக்கு வராமல் உயிரோடு இருக்கும் சுயமரியாதைக்காரர்களைத் தேடிப் பிடித்து அவர்களின் கொள்கைப் பணியை பதிவு செய்வது இளைய தலைமுறையிடம் நம்பிக்கையை விளைவிக்கும் என்று நம்புகிறோம்.
அஞ்சல் கட்டண சலுகைக்காக புதுடில்லி பத்திரிகைப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து அனுமதிக்காகக் காத்திருக்கின்றோம். அஞ்சல் கட்டணச் சலுகைக் கிடைத்தப் பிறகு, உறுப்பினர் சேர்க்கப்பட்டு இதழைப் பரவலாக்க இயலும் என்று நம்புகிறோம்.
இயக்கத் தோழர்கள் இதழை ஆதரவாளர்களிடமும் பொது மக்களிடமும் கொண்டு செல்வதில் முனைப்பு காட்டி செயல்படுவார்கள் என்று நம்பிக்கையுடன் ‘நிமிர்வோம்’ தனது பயணத்தைத் தொடருகிறது.
- ஆசிரியர் குழு